Sunday, 1 September 2013

டில்லிக்குப் போறேன்

(ஆசிரியர் தினத்தை முன்னிட்டு...)


ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடப்புத்தக வடிவில் சொல்லாமல் கொஞ்சம் இலக்கிய ரசனையோடும் சமூகப் பார்வையோடும் சொல்ல முயற்சிக்கும் கனவு ஆசிரியர்தொகுப்பு நூலை வாசித்து முடித்தபோது, நூலில் மிகச்சிறந்ததாகத் தோன்றியது பொன்னீலன் எழுதிய இந்தக் கட்டுரை. உபதேசங்கள் ஏதும் இல்லாமல், அற்புதமான கதைவடிவில் இலட்சிய வகுப்பறை ஒன்றை கண்முன் நிறுத்தியது. கனவு ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியாது. எனக்கு மிகவும் பிடித்துப்போன இந்தக் கட்டுரையை பதிப்பகத்தாரின் அனுமதி பெற்று பகிர்கிறேன்.

வாசித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.

* * *

ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பள்ளி அது. மேற்கத்திய சமயப் பிரச்சாரகர்கள் இந்தியாவின் தென்பகுதியில் கல்விப்பணி தொடங்கிய காலத்தில் முளைத்து வளர்ந்த முதல் பள்ளிகளில் ஒன்று. ... அந்த மேல்நிலைப்பள்ளி ஆய்வுதான் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் நாள் மத்தியானம் ஆயாச்சா, எல்லாருக்கும் சலிப்பு. எப்படா மணி மூணு ஆகும், ஆசிரியர் கூட்டம் நடக்கும், இந்தச் சனியன் பள்ளிக்கூடத்தை விட்டு எப்பப் போவான் என்ற எண்ணம்தான் ஆசிரியர் குலத்துக்கு. நானோ, பள்ளிக்கூடத்தின் இண்டு இடுக்கெல்லாம் தேவையில்லாமல் மோப்பம் பிடித்துக்கொண்டு அலைகிறேன்.
அய்யா.
நீலப்பட்டு சரசரக்க, பின்னால் வந்து கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அம்மாவின் கனிந்த குரல் என் தோளைப் பிடித்து நிறுத்துகிறது. 
என்னம்மா...? ”
மணி மூணாகுது பெல்லடிக்கச் சொன்னீங்கன்னா, ஆசிரியர் கூட்டத்துக்கு...
கொஞ்சம் பொறுங்கம்மா. 7சி ஒண்ணு மட்டும் பாக்கி. இந்தாப் பாருங்க, எல்லா வகுப்புகளும் பாத்தாச்சி. அந்த வகுப்புக்கும் அழைச்சிக்கிட்டுப் போங்க. அஞ்சே நிமிசத்துல வேல முடிஞ்சிரும்.
கிழக்கு மூலையில இருக்கே, அதுதான்யா 7 சி. சத்துணவுக் கூடத்த ஒட்டி ஒரு தற்காலிகக் கொட்டாயில் நடக்குது. புது வகுப்பறை கட்ட செக்கரட்ரிகிட்ட பலமுறை சொல்லியாச்சி. இந்த வருசம் எப்படியாவது கட்டிருவாங்க.
அதுக்கென்ன, சும்மா எட்டிப் பார்த்திட்டு வந்திருவோம் வாங்க.
ஐயா, செக்கரட்டரி மூணு தடவ ஞாபகப்படுத்திட்டாருய்யா... உங்க பேச்சக் கேக்கறதுக்காக எல்லாரும் ஆவலோட காத்துக்கிட்டிருக்காங்க.
அதெல்லாம் பிறகு, முதல்ல எனக்கு ஏழு சி வகுப்பு.
உடைஞ்ச சுவரு. ஒடிஞ்ச மேச நாற்காலி. அங்க எந்தப் புதுமையும் இருக்காதுய்யா. தயவுசெய்து வாங்க.
என் சந்தேகம் வலுக்கிறது.
முந்திய நாள் பிற்பகலில் நடந்த சிறிய சம்பவம் அது. எம்எஸ்சியில் தங்கப்பதக்கம் வாங்கிய ஒரு மிகச்சிறந்த இளம் ஆசிரியையின் வகுப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்என்று சொல்லி ஒரு ஒன்பதாம் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றிருந்தார் இதே தலைமையாசிரியர். வகுப்பறையை நெருங்கும்போதே தெரிந்துவிட்டது அங்கே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள் செய்யப்பட்டிருக்கிறது என்று. தோரணங்களும், வண்ண வண்ணப் படங்களுமாக வகுப்பறை அப்டீ சிலுசிலுத்தது. சுவர் பூராவும் அறிவியல் வரைபடங்களின் அணிவகுப்புகள். ஆசிரியரும் மாணவர்களும் செய்திருந்த ஒப்பனைகளோ, அதற்கும் மூணுபடி மேலே!
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லதும்மா, உங்க பாடத்த நடத்துங்கஎன்றேன். எல்லாமே தயாராக வைத்திருந்தார் அந்த அம்மா. சார்ட்டுகளைத் தொங்கவிட்டு, தேவைக்குக் கரும்பலகையையும் பயன்படுத்தி, ஒரு அறிவியல் சோதனை ஆலாபனையே செய்யத் தொடங்கி விட்டார். சோதனைக்குரிய கருவிகள் எல்லாம் மேசையில் தயாராக இருந்தன. அவற்றையும் மெச்சத் தகுந்த வகையில் பயன்படுத்தினார். நாற்சந்தியில் மோடி மஸ்தானைப் பார்த்துக்கொண்டு நிற்கும் அப்பாவி மக்களைப் போலக் கண்கள் வியந்து பிளக்க, மாணவர்கள் அந்த ஆசிரியையின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
ஐந்து நிமிடத்திற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஏம்மா, அந்தச் சாராய விளக்கைக் கொளுத்தறதுக்காவது ஒரு மாணவியை அழைத்திருக்கலாம்ல? ” என்றேன்.
அது சார்…” என ஆசிரியர் ஏதோ சொல்லத் தொடங்க, அதை நான் காதில் வாங்கிக்கொள்ளாமலே வெளியே வந்து விட்டேன். இவ்வளவு தண்டனை போதாதா அவருக்கு. பின்தொடர்ந்து வந்த தலைமையாசிரியர் அம்மா திரும்பத் திரும்பக் கேட்டார். வகுப்பு நல்லால்லையா அய்யா?”
நீச்சலடிக்கக் கத்துக் கொடுக்கிறதுக்கு வகுப்பறையில படம் போட்டு விளக்கினா எப்படி?” என்றேன் நான்.
இதை வைத்துக்கொண்டுதான் தலைமையாசிரியர் இப்போது இந்த வகுப்பைப் பார்வையிட விடாமல் என்னைத் தடுக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் வலுத்தது. அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்ற பிடிவாதமும் வளர்ந்தது.
ஏற்கெனவே தலைமை ஆசிரியர் காட்டிய திசையில், சுள்ளென்று விழும் வெயிலில் நடக்கத் தொடங்கி விட்டேன். பின்னால் வந்து கொண்டிருந்த தலைமையாசிரியர் இப்போது என்னைத் தாண்டி முன்னால் போக முயன்றார்.
அம்மா, என் பின்னாடி வாங்க,” தலைமையாசிரியரைச் சற்று அதட்டினேன். அந்த வகுப்ப நான் என்ன பண்ணப்போறேன்? பதட்டப்படாம வாங்க.
தலைமையாசிரியர் பதட்டப்பட்டது முற்றிலும் நியாயம்தான். நான் நினைத்ததைவிடப் பரிதாபமாகத் தோற்றமளித்தது அந்த வகுப்பறை. இடுப்புயரச் செம்மண் சுவரின் மேலே மூங்கில் தூண்களின் தாங்கலில், சாய்ந்து கிடந்தது கீத்துக்கூரை. வகுப்பறையிலோ ஒரே கூச்சல், யாரும் வந்து எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்கிற தைரியம் போல. குட்டை மண்சுவரின் அந்தப்பக்கம் மேசையைச் சுற்றிக் கூடிக் கிடந்தார்கள் மாணவர்கள். சிலர் நிமிர்ந்து நிற்க, பலர் முழங்கைகளை மேசையில் ஊன்றிச் சாய்ந்து கிடந்தார்கள். ஆசிரியர் எங்கே? பின்பக்கம் இருந்த உயரமான பூசப்படாத மண்சுவரில் சாய்ந்து கிடந்த நாற்காலியில் அவரும் சாய்ந்து கிடந்தார். கருப்பு முகம். தன் ஒற்றைச்சடையை ஒய்யாரமாக நெஞ்சில் போட்டுக்கொண்டு மாணவர்களோடு பேசிக் கொண்டிருந்தார் அவர். தலைமையாசிரியர் முகத்தில் கலவரம். மீண்டும் என்னைத் தாண்ட அவர் முயன்றார். நான் அவரைக் கையமர்த்தித் தடுத்துவிட்டு வகுப்பை உற்றுக்கவனித்தேன். ஏதோ ஒரு காரியத்தில் வகுப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது என்பது போலத் தெரிந்தது. வகுப்பின் கண்ணில் படாதவாறு ஒதுங்கி நின்று கொண்டு, என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். டீச்சரம்மாவின் கணீரென்ற குரலும் பளீரென்ற பல்வரிசையும் என்னைக் கூர்மைப்படுத்தின.
ஞாபகம் வச்சிக்கோ, வேற இடத்துக்குப் போனா திரும்பி வர முடியாது. அங்கேயே கிடக்க வேண்டியதுதான், புரியுதா?”
புரியுது டீச்சர்.
எங்கே போகணும், சொல்லுங்க.
டில்லிக்கு !கோரசாகக் கூச்சலிடுகிறார்கள் குழந்தைகள்.
யார் போறா?”
நான் போறேன் டீச்சர்.
டீச்சர் கையிலிருந்த பிரம்பை மாணவன் ஒருவன் வெடுக்கெனப் பிடுங்கினான். மெலிந்த உருவம், கால்சட்டையின் பின்பக்கம் கிழிசல். நான் படித்த காலத்தில் இம்மாதிரிக் கிழிசலைத் தபால் பெட்டியாக்கிக் கடிதம் போட்டு விளையாடியது நினைவு தட்டியது.
எதிலடா போற?”
பிளேன்ல டீச்சர் !
குச்சியை உயர்த்தி விமானம் போல் உம்ம்ம் என இரைந்தபடி வகுப்பறையில் அங்குமிங்கும் ஓடுகிறான் மாணவன். இரண்டு மூன்றுமுறை சுற்றிவிட்டு ஆசிரியர் பின்பக்கம் இருக்கும் சுவருக்கு ஓடுகிறான். அப்போதுதான் சுவரைக் கவனிக்கிறேன். டீச்சருக்கு இடப்பக்கம், நைந்துபோன ஒரு தேசப்படம், சொரசொரப்பான அந்த மண்சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது. டில்லிக்குப் போகும் சிறுவனைக் குழந்தைகள் மூச்சுவிட மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிரார்கள். சிறுவன் விமானத்திலிருந்து இன்னும் இறங்கவில்லை. விமானத்தின் ஓசையும் குறையவில்லை. கையிலிருந்த கம்பு தேசப்படத்தில் அங்குமிங்கும் ஓடி, கடைசியில் ஒரு இடத்தைத் தொடுகிறது.
சேகர் கல்கத்தாவுல இறங்கிட்டான் டீச்சர் !ஒரு பெண் குழந்தை கூச்சலிட, மற்ற குழந்தைகளின் தொடர்கூச்சலும் கேலிச்சிரிப்புமாகக் கொந்தளிக்கிறது வகுப்பறை.
அட முட்டாளே, எப்படிடா இனி ஊருக்குத் திரும்புவ? அங்கேயே கிட !
அதற்கும் மேலாகச் சத்தம் போட்டபடி டீச்சர் அவனிடமிருந்து குச்சியைப் பிடுங்குகிறார். இனி யாரு?”
நான் போறேன் டீச்சர்கையைத் தூக்குகிறாள் ஒரு சிறுமி
உம், போ.டீச்சர் அனுமதி தரவும், அவர் கையிலிருந்து கம்பைப் பிடுங்கிக்கொண்டு பயணத்துக்குத் தயாராகிறாள். பின்னப்பட்ட அவள் சடை, தேள்கொடுக்குப்போல மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. அதன் நுனியில் கட்டப்பட்ட ரிப்பன் மீன் வால் போல இரண்டு பக்கமும் விரிந்தபடி ஆடுகிறது.
எதுல போறடீ ?”
ரயில்ல போறேன் டீச்சர்.
குப் குப் குப் குப் ரயில் கிளம்புகிறது. வகுப்பறையில் அந்தப் பக்கமாகவும் இந்தப்பக்கமாகவும் வளைந்து நெளிந்து இந்தியாவையே இரண்டுமுறை சுற்றிவிட்டு, மூன்றாவது முறை ரயில் திடீரென தேசப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றே விடுகிறது. குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
டீச்சர் சோபியா டில்லியில இறங்கிட்டா.
சரி, எல்லாரும் ஜோராக் கை தட்டுங்க.
காணக் கிடைக்காத அற்புதம். மனம் நிறைந்து பொங்குகிறது எனக்கு. கதவில்லாத வாசல்வழி மெதுவாக நுழைகிறேன். என்னைப் பார்த்துவிட்ட குழந்தைகள் தங்கள் இடங்களுக்கு ஓடுகிறார்கள்.
வணக்கம் அய்யா !
அப்படி ஒரு பூரிப்பு அதுகள் முகத்தில். ஆசிரியரைப் பார்க்கிறேன். மேசையைப் பிடித்தபடி நாற்காலியை முன்னே சாய்த்து நிலைப்படுத்தி இவ்வளவு சிரமப்பட்டு எழுந்து நிற்கிறாரே, கால் ஊனமுற்றவரோ? அவர் எழுந்ததும் அந்த நாற்காலி திரும்பவும் சுவரில் சடக்கென்று சாய்ந்து விழுகிறது. ஓஹோ, நாற்காலிதான் பின்னங்கால் ஒடிந்ததா? இதனால்தான் அப்படிச் சாயந்து கிடந்தாரா டீச்சர்?
வணக்கம் அம்மா. வகுப்பு பிரமாதம் !இரண்டு கையையும் கூப்பி வணங்கினேன்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன அந்தக் காட்சியை நான் பார்த்து. இன்றும் அந்த டீச்சரின் கருப்பு முகமும் கருந்திராட்சைக் கண்களும் வலது தோள் வழியே மார்பில் கிடந்த ஒற்றைச் சடையும் வட்ட முகத்தில் பொலிந்து நின்ற உற்சாகமும், அடேயப்பா !

எத்தனையோ பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். நூலகம், ஆய்வகம், அந்த அகம், இந்த அகம் எல்லா அகமும் இருக்கும், பயன்படுத்தப்படாமல் சிலந்திவலை படர்ந்து இருக்கும். பயன்படுத்த வற்புறுத்தினால் முகஞ்சுழித்துக்கொண்டு செய்வார்கள் ஆசிரியர்கள். இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள். அவற்றைத் தன்வயப்படுத்திக்கொண்டு, நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? மாணவர்களைப் பயன்படுத்தாமல் வசப்படுத்தி, வழிப்படுத்தி, அறிவு வளர்ச்சியில் எத்தனைபேர் ஈடுபடுத்துகிறார்கள்? உருவாக்கப்பட்ட அறிவை மீறி வளர மாணவர்களின் அறிவைப் பயன்படுத்தித் திறன்களை வசப்படுத்தி எத்தனைபேர் அவர்களை வடிவைக்கிறார்கள்?

* * *

இந்நூல் ஆசிரியர்களுக்கு மட்டுமானதல்ல, பெற்றோருக்கும் பயன்தரக்கூடியது. நூலை வாசிக்க வாசிக்க, ஒவ்வொருவரும் தன் ஆசிரியர்கள், பள்ளி அனுபவங்கள், வாங்கிய அடிகள், வகுப்பறைச் சம்பவங்கள், சக நண்பர்கள் பற்றிய உங்கள் அனுபவங்களும் இணையாக மனதுக்குள் ஓடுவதை உணர்வீர்கள். உங்கள் கடந்த காலத்தை மறுபடி வாழ்ந்து பார்ப்பீர்கள். நீங்கள் அறியாமலே உங்கள் இதழ்களில் புன்னகை நெளிவதை உணர்வீர்கள். அந்த அனுபவத்துக்காகவும் இதைப் படிக்கலாம்.

* * *


கனவு ஆசிரியர், க. துளசிதாசன், பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, சென்னை-18. 978-93-81908570. ரூ. 90.

யுவா இந்தியா

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்கள் அணி ஒன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்துப்போட்டியில் வெண்கலம் வென்ற செய்தி பல ஊடகங்களின் கவனத்தைப்பெற்றது. என்றாலும், கிரிக்கெட் மோகம் மட்டுமே அதிகமாக இருக்கிற நம்நாட்டில் இவர்கள் மீது கவனம் கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லை.ஸ்பெயின் நாட்டில், விக்டோரியா கேஸ்டீஜ் நகரில், கேஸ்டீஜ் கோப்பைக்கான கால்பந்துப்போட்டி நடைபெற்றது. பதினான்கு வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இந்தப்போட்டியில், யுவா இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். ஒன்பது அணிகளுக்கு எதிராக விளையாடி, மூன்றாம் இடம் பெற்று, சர்வதேசப்போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய இந்தப் பெண்களைப்பற்றியும், யுவா இந்தியா பற்றியும் கொஞ்சம் அலசுவது சுவையாக இருக்கும்.

பிரான்ஸ் கேஸ்ட்லர் 30 வயது இளைஞர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், ஹார்வேர்டு சட்டக் கல்லூரியில் சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையில் சான்றிதழும் பெற்றவர். ஜுடோ, ஐஸ் ஹாக்கி, ஸ்கையிங் ஆகியவற்றில் பயிற்றி பெற்றவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றியவர். 

2008 மே மாதத்தில், தன் நண்பரின் அழைப்பின்பேரில், ஹுதுப் என்னும் கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் பெண் கல்வியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிப்பை பாதியில் நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை 67 சதவிகிதம். எனவே, பெண்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால், அவர்கள் தம்மை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு தேவை என்று கருதுகிறார். அதே சமயத்தில், தம் குழந்தைகளுக்கு வீடுதேடி வந்து கற்றுத்தருமாறு பெற்றோர் வேண்டுகின்றனர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் செல்வது சாத்தியமில்லை என்பதால், அனைவரும் வரக்கூடிய வகையில் ஒரு மையம் துவங்குகிறார். அதுதான் பிற்பாடு யுவா இந்தியா என உருப்பெறுகிறது. கடந்த ஐந்த ஆண்டுகளாக ஜார்க்கண்டில் கிராமத்தில் வசித்து தொண்டாற்றி வருகிறார் இவர்.

அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்கள் துணையுடனும், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடனும் நிதி திரட்டி, ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களுக்கு கால்பந்து பயிற்சியளிக்க கிராமங்களிலேயே வசிக்கத்துவங்கினார். ஏற்கெனவே இந்திய கால்பந்து அணியில் பழங்குடியினர் நிறையவே இருப்பது நேயர்களுக்கும் தெரிந்திருக்கும்.

வெளிப்புற மக்களோடு பழகத் தயங்கும் பழங்குடியினரைக் கொண்டு கால்பந்து அணி உருவாக்குவது எளிதல்ல. முதலில் சுமன் என்ற பெண் அவரிடம் கால்பந்து பயிற்சி அளிக்குமாறு கேட்டிருக்கிறாள். ஓர் அணிக்குத் தேவையான அளவுக்கு பெண்களையும் சேர்த்துக்கொண்டு வந்தால் பயிற்சியளிக்கிறேன் என்றார் பிரான்ஸ். இப்படி பல அணிகள் பல கிராமங்களில் உருவாயின. ஒரு பெண் நான்கு மாதங்கள் வரை தவறாமல் பயிற்சியில் பங்கேற்றால், காலுக்கு ஷூவும் சாக்சும் கிடைக்கும். அதுவும், ஷூவுக்கான விலையில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பெண்தான் தர வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் பொறுப்பும் ஆர்வமும் வரும் என்பதே இதன் காரணம். ஓராண்டுக்குள் யுவா அமைப்பின் 13 பெண்கள் பயிற்சி பெற்று, தேசியத் தரவரிசையில் 20ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறினர். இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்பந்துப் பயிற்சியாளர்களாக உருவாகிறார்கள். 

காலுக்குச் செருப்புமில்லை, கால்பந்தில் குறையுமில்லை
5 முதல் 17 வரையான பெண்கள்தான் இதற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் பெண்கள்தான் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றால், பழங்குடி இனத்தவர்களில் 43 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாகி விடுகிறார்கள். படித்த ஒரு பெண், தன் வருமானத்தில் 90 சதவிகிதத்தை குடும்பத்துக்காகச் செலவு செய்வாள், ஆணோ 35 சதவிகிதம்தான் குடும்பத்துக்குத் தருவான். பெண்கள் கல்வி கற்பதால் ஊட்டச்சத்துக்குறைவு விகிதம் 43 சதவிகிதம் குறைகிறதாம். இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

ஏன் வேறு விளையாட்டுகளை விட்டுவிட்டு கால்பந்தைத் தேர்வு செய்ய வேண்டும்? கால்பந்து என்பது குழுவிளையாட்டு. இதில் பங்கேற்பவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி, அர்ப்பணிப்பு, ஒற்றுமையுணர்வு ஆகியவை பற்றிய புரிதல் கிடைக்கிறது. மைதானத்தையும் அவர்களே தேர்வு செய்கிறார்கள். ஆக, இந்த அணிகளின் வெற்றியும் தோல்வியும் அவர்களுக்கே உரியது.

இவ்வாறு உருவான யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் தேவை. பழங்குடியினக் குழந்தைகள் எல்லாமே வீட்டில் பிரசவித்தவர்கள். எனவே சான்றிதழ் இல்லை. கிராமப் பஞ்சாயத்து ஊழியரிடம் கேட்டபோது, அவர்களை அடித்தும், அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கச் செய்தும் அவமானப்படுத்தியிருக்கிறார். தினேஷ் சாஹு என்ற அந்த அலுவலர், சான்றிதழ் வழங்க லஞ்சமும் கேட்டிருக்கிறார். ஸ்பெயினுக்கு அழைத்துப்போய் உங்களை விற்றுவிடுவார் என்றும் மிரட்டியிருக்கிறார். காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால் ஒருவழியாக சான்றிதழ்களைப் பெற்றார்கள். 

ராஞ்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தம் கிராமத்துக்கு வெளியே இதுவரை சென்று விளையாடாத இந்தப் பெண்கள்தான் ஸ்பெயினுக்குச் சென்றார்கள், கேஸ்டீஜ் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றார்கள், வெண்கலம் வென்றார்கள். வந்தார்கள். இவர்களுடைய கதை இப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.

யுவாவில் பயிற்சிபெறுகிற எந்தப் பெண்ணும் 18 வயதுக்கு முன்னால் திருமணம் செய்யவில்லை. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவாவைச் சேர்ந்த புஷ்பா முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும், மனிஷா திர்க்கியும் இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றனர். 

இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், இவர்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதபோது நான் என்ன செய்ய முடியும் என்கிறார். கோப்பைக்கான கால்பந்துப்போட்டி என்பது இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல என்று கைகழுவுகிறது கூட்டமைப்பு. யுவாவுக்கு இப்போது விளையாட்டுக்கு மைதானம் கிடைப்பதும்கூட சிரமமாக இருக்கிறது. விளையாட்டு அமைச்சகச் செயலரிடம் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதாம். இதுவரை மைய அரசும் சரி, மாநில அரசும் சரி, எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ திறமைகள் எத்தனையோ கிராமங்களில் ஒளிந்து கிடக்கின்றன. 

ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஏராளமான பதக்கங்களை அள்ளிச் செல்லும் சீனத்தில், விளையாட்டுத் திறமை உள்ளவர்களை ஆரம்பப்பள்ளி நிலையிலேயே கண்டறிகிறார்கள். கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி, இந்தத் திறமை கண்டறியும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

இதுபோல இந்தியாவும் முனைப்பாக திறமைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா, மாஸ்கோவில் நடைபெற்ற உலகத் தடகளப்போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது குறித்து கவலைப்பட்டுப் பயனில்லை. 


மேலும் தகவலுக்கு - http://yuwa-india.org/ வலைதளத்தைப் பார்க்கவும்.