Sunday, 1 September 2013

யுவா இந்தியா

அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்கள் அணி ஒன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்துப்போட்டியில் வெண்கலம் வென்ற செய்தி பல ஊடகங்களின் கவனத்தைப்பெற்றது. என்றாலும், கிரிக்கெட் மோகம் மட்டுமே அதிகமாக இருக்கிற நம்நாட்டில் இவர்கள் மீது கவனம் கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லை.



ஸ்பெயின் நாட்டில், விக்டோரியா கேஸ்டீஜ் நகரில், கேஸ்டீஜ் கோப்பைக்கான கால்பந்துப்போட்டி நடைபெற்றது. பதினான்கு வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இந்தப்போட்டியில், யுவா இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். ஒன்பது அணிகளுக்கு எதிராக விளையாடி, மூன்றாம் இடம் பெற்று, சர்வதேசப்போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய இந்தப் பெண்களைப்பற்றியும், யுவா இந்தியா பற்றியும் கொஞ்சம் அலசுவது சுவையாக இருக்கும்.

பிரான்ஸ் கேஸ்ட்லர் 30 வயது இளைஞர். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், ஹார்வேர்டு சட்டக் கல்லூரியில் சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையில் சான்றிதழும் பெற்றவர். ஜுடோ, ஐஸ் ஹாக்கி, ஸ்கையிங் ஆகியவற்றில் பயிற்றி பெற்றவர். இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பில் ஆலோசகராகப் பணியாற்றியவர். 

2008 மே மாதத்தில், தன் நண்பரின் அழைப்பின்பேரில், ஹுதுப் என்னும் கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் பெண் கல்வியில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிப்பை பாதியில் நிறுத்தும் பெண்களின் எண்ணிக்கை 67 சதவிகிதம். எனவே, பெண்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால், அவர்கள் தம்மை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு தேவை என்று கருதுகிறார். அதே சமயத்தில், தம் குழந்தைகளுக்கு வீடுதேடி வந்து கற்றுத்தருமாறு பெற்றோர் வேண்டுகின்றனர். ஒவ்வொருவர் வீட்டுக்கும் செல்வது சாத்தியமில்லை என்பதால், அனைவரும் வரக்கூடிய வகையில் ஒரு மையம் துவங்குகிறார். அதுதான் பிற்பாடு யுவா இந்தியா என உருப்பெறுகிறது. கடந்த ஐந்த ஆண்டுகளாக ஜார்க்கண்டில் கிராமத்தில் வசித்து தொண்டாற்றி வருகிறார் இவர்.

அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்கள் துணையுடனும், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடனும் நிதி திரட்டி, ஜார்க்கண்ட் பழங்குடி பெண்களுக்கு கால்பந்து பயிற்சியளிக்க கிராமங்களிலேயே வசிக்கத்துவங்கினார். ஏற்கெனவே இந்திய கால்பந்து அணியில் பழங்குடியினர் நிறையவே இருப்பது நேயர்களுக்கும் தெரிந்திருக்கும்.

வெளிப்புற மக்களோடு பழகத் தயங்கும் பழங்குடியினரைக் கொண்டு கால்பந்து அணி உருவாக்குவது எளிதல்ல. முதலில் சுமன் என்ற பெண் அவரிடம் கால்பந்து பயிற்சி அளிக்குமாறு கேட்டிருக்கிறாள். ஓர் அணிக்குத் தேவையான அளவுக்கு பெண்களையும் சேர்த்துக்கொண்டு வந்தால் பயிற்சியளிக்கிறேன் என்றார் பிரான்ஸ். இப்படி பல அணிகள் பல கிராமங்களில் உருவாயின. ஒரு பெண் நான்கு மாதங்கள் வரை தவறாமல் பயிற்சியில் பங்கேற்றால், காலுக்கு ஷூவும் சாக்சும் கிடைக்கும். அதுவும், ஷூவுக்கான விலையில் மூன்றில் ஒரு பங்கு அந்தப் பெண்தான் தர வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் பொறுப்பும் ஆர்வமும் வரும் என்பதே இதன் காரணம். ஓராண்டுக்குள் யுவா அமைப்பின் 13 பெண்கள் பயிற்சி பெற்று, தேசியத் தரவரிசையில் 20ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறினர். இங்கு பயிற்சி பெற்ற பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்பந்துப் பயிற்சியாளர்களாக உருவாகிறார்கள். 

காலுக்குச் செருப்புமில்லை, கால்பந்தில் குறையுமில்லை
5 முதல் 17 வரையான பெண்கள்தான் இதற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் பெண்கள்தான் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்றால், பழங்குடி இனத்தவர்களில் 43 சதவிகிதப் பெண்கள் 18 வயதுக்குள் திருமணம் செய்து குழந்தைகளுக்குத் தாயாகி விடுகிறார்கள். படித்த ஒரு பெண், தன் வருமானத்தில் 90 சதவிகிதத்தை குடும்பத்துக்காகச் செலவு செய்வாள், ஆணோ 35 சதவிகிதம்தான் குடும்பத்துக்குத் தருவான். பெண்கள் கல்வி கற்பதால் ஊட்டச்சத்துக்குறைவு விகிதம் 43 சதவிகிதம் குறைகிறதாம். இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

ஏன் வேறு விளையாட்டுகளை விட்டுவிட்டு கால்பந்தைத் தேர்வு செய்ய வேண்டும்? கால்பந்து என்பது குழுவிளையாட்டு. இதில் பங்கேற்பவர்களுக்கு ஆரோக்கியம், கல்வி, அர்ப்பணிப்பு, ஒற்றுமையுணர்வு ஆகியவை பற்றிய புரிதல் கிடைக்கிறது. மைதானத்தையும் அவர்களே தேர்வு செய்கிறார்கள். ஆக, இந்த அணிகளின் வெற்றியும் தோல்வியும் அவர்களுக்கே உரியது.

இவ்வாறு உருவான யுவா அணிதான் ஸ்பெயினுக்குச் சென்றது. அவர்களின் பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் தேவை. பழங்குடியினக் குழந்தைகள் எல்லாமே வீட்டில் பிரசவித்தவர்கள். எனவே சான்றிதழ் இல்லை. கிராமப் பஞ்சாயத்து ஊழியரிடம் கேட்டபோது, அவர்களை அடித்தும், அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்கச் செய்தும் அவமானப்படுத்தியிருக்கிறார். தினேஷ் சாஹு என்ற அந்த அலுவலர், சான்றிதழ் வழங்க லஞ்சமும் கேட்டிருக்கிறார். ஸ்பெயினுக்கு அழைத்துப்போய் உங்களை விற்றுவிடுவார் என்றும் மிரட்டியிருக்கிறார். காவல்துறை அதிகாரி ஒருவரின் துணையால் ஒருவழியாக சான்றிதழ்களைப் பெற்றார்கள். 

ராஞ்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தம் கிராமத்துக்கு வெளியே இதுவரை சென்று விளையாடாத இந்தப் பெண்கள்தான் ஸ்பெயினுக்குச் சென்றார்கள், கேஸ்டீஜ் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றார்கள், வெண்கலம் வென்றார்கள். வந்தார்கள். இவர்களுடைய கதை இப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது.

யுவாவில் பயிற்சிபெறுகிற எந்தப் பெண்ணும் 18 வயதுக்கு முன்னால் திருமணம் செய்யவில்லை. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றதில், யுவாவைச் சேர்ந்த புஷ்பா முக்கியக் காரணமாக இருந்தார். நீதா குமாரியும், மனிஷா திர்க்கியும் இலங்கையில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றனர். 

இந்திய கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் பிரபுல்ல படேல், இவர்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதபோது நான் என்ன செய்ய முடியும் என்கிறார். கோப்பைக்கான கால்பந்துப்போட்டி என்பது இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற போட்டி அல்ல என்று கைகழுவுகிறது கூட்டமைப்பு. யுவாவுக்கு இப்போது விளையாட்டுக்கு மைதானம் கிடைப்பதும்கூட சிரமமாக இருக்கிறது. விளையாட்டு அமைச்சகச் செயலரிடம் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறதாம். இதுவரை மைய அரசும் சரி, மாநில அரசும் சரி, எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ திறமைகள் எத்தனையோ கிராமங்களில் ஒளிந்து கிடக்கின்றன. 

ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஏராளமான பதக்கங்களை அள்ளிச் செல்லும் சீனத்தில், விளையாட்டுத் திறமை உள்ளவர்களை ஆரம்பப்பள்ளி நிலையிலேயே கண்டறிகிறார்கள். கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி, இந்தத் திறமை கண்டறியும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

இதுபோல இந்தியாவும் முனைப்பாக திறமைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா, மாஸ்கோவில் நடைபெற்ற உலகத் தடகளப்போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்லாதது குறித்து கவலைப்பட்டுப் பயனில்லை. 


மேலும் தகவலுக்கு - http://yuwa-india.org/ வலைதளத்தைப் பார்க்கவும்.

1 comment:

  1. சமூக அக்கறையுள்ள ஒரு பதிவு. உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். (நீங்கள் சென்னை வருவதாக வெங்கட் நாகராஜ், பதிவர் திருவிழாவில் என்னிடம் சொன்னார். எனது தொடர்புக்கு: 9600141229 & 044-67453273).- அன்புடன்: கவிஞர் இராய செல்லப்பா.

    ReplyDelete