ஜன கண மன தேசிய கீதமா, வந்தே மாதரம் தேசிய கீதமா... --- இப்படி ஒரு கேள்வி பேஸ்புக்கில்
சுற்றிக்கொண்டிருக்கிறது.
தேசிய கீதம் எது என்ற விவாதம் விடுதலையின்போதே எழுந்து
அடங்கிவிட்டது. இப்போதும் குழப்பம் இருக்கிறது என்றால், அரசமைப்புச்சட்ட
உருவாக்கத்தின்போது நடைபெற்ற விவாதங்களின் இறுதியில் சில விஷயங்கள் தெளிவாக்கப்படாததும்
ஒரு காரணம். நம் வரலாறு பற்றிய புரிதலின்மையும் காரணம்.
ஜன கண மன பாடல் தேசிய வாழ்த்துப் பாடலாக –
அல்லது பரவலாக அறியப்படுவதுபோல தேசிய கீதமாக – முடிவு செய்யப்பட்டது
1950இல்தான். நம் அரசியலமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டு குடியரசு ஆவதற்கு இரண்டு நாட்கள்
முன்னதாக நடைபெற்ற அமர்வில், 24 ஜனவரி 1950இல்தான், ஜனகணமன தேசிய கீதம் என
பிரகடனம் செய்யப்பட்டது.
சமஸ்கிருதமும் வங்க மொழியும் கலந்து தாகூர் எழுதிய இந்தப்பாடல்
1911இல் ஜனவரி 27ஆம் தேதி கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதல்முதலாகப் பாடப்பட்டது.
அப்போதே சர்ச்சை எழுந்துவிட்டது. கல்கத்தாவுக்கு வருகை தந்த ஜார்ஜ் மன்னரை
வாழ்த்தி எழுதப்பட்ட பாடல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தவறான கருத்து என்று
தாகூரே வருத்தத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார்.
வந்தே மாதரம் பாடல், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய
ஆனந்தமடம் நாவலில் இடம்பெற்ற பாடல். “தாயே வணக்கம்” என்று
பொருள்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. இந்தப் பாடலும் 1896இல் காங்கிரஸ்
மாநாட்டில் பாடப்பட்டதுதான். இதுவும் சமஸ்கிருதமும் வங்கமும் கலந்த பாடல். பங்கிம்
சந்திரர் எழுதியதை மாநாட்டில் பாடியவர் வேறு யாருமல்ல, தாகூர்தான்.
அதற்குப்பிறகு, தேசிய விடுதலைப்போராளிகளின் முக்கிய கோஷமாக
வந்தே மாதரம் முதலிடம் பெற்றது. சீர்திருத்த இயக்கத்திலும் ஆரம்பகால காங்கிரஸ்
பேரியக்கத்திலும் பெரும்பாலும் வங்கத்தினரின் ஈடுபாடு அதிகமாக இருந்ததாலும் வந்தே
மாதரம் முன்னிலை பெற்றது. தவிர, வந்தே மாதரம் என்று முழங்குவது எளிதாகவும்
இயல்பாகவும் இருந்தது. லாலா லஜபதி ராய், வந்தே மாதரம் என்றொரு பத்திரிகை
நடத்தினார். மேடம் பிகாஜி காமா ஜெர்மனியில் ஏற்றி வைத்த முதல் இந்தியக்கொடியில்
வந்தே மாதரம் என்ற வரிகள் இடம்பெற்றன. (தெற்கு தில்லியில் உள்ள பிகாஜி
காமா பிளேஸ் என்னும் வணிக வளாகம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டதுதான்.)
விடுதலையைத் தொடர்ந்து தேசிய கீதமாக எதை ஏற்பது என்ற பிரச்சினை
எழுந்தபோது, வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு வந்தது. விடுதலைப் போராட்ட காலம்
முழுவதும் கோஷம் எழுப்பியவர்கள் எதற்காக இப்போது எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி
எழலாம். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே முன்னிலை
வகிக்கவில்லை. முஸ்லீம் லீகும் இருந்தது, கம்யூனிஸ்டுகளும் வலுவாக இருந்தனர். ஆக,
விடுதலைப் போராளிகளுக்கு வந்தே மாதரத்துடன், அல்லாஹு அக்பர், இந்துஸ்தான் ஜிந்தாபாத்,
இன்குலாப் ஜிந்தாபாத் ஆகிய கோஷங்களும் இருக்கவே செய்தன.
இது மட்டுமின்றி, உண்மையில் வந்தே மாதரம் பாடல் ஆறு பத்திகளைக்
கொண்டது. அதில் நேரடியாக துர்க்கையைப் போற்றிப் பாடுகிற வரிகளும் உண்டு. இந்தியா
இந்துக்களை மட்டுமே கொண்ட நாடு அல்ல. முஸ்லிம்கள், கிறித்துவர்கள்,
சீக்கியர்கள், பார்சிக்கள் என பல
மதத்தினரும் சமஉரிமையுடன் வாழும் நாடு. எனவே ஒரு மதத்தின் கடவுளைப் போற்றுகிற
பாடல் தேசிய வாழ்த்துப்பாடலாக இருக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்றது. (ஆனந்தமடம்
நாவலும்கூட முகலாயர் எதிர்ப்புத் தொனியைக் கொண்டது என்பது தனி விஷயம். நான்
அதற்குள் போக விரும்பவில்லை.)
விடுதலைக்கு முன்பே இந்தப் பிரச்சினை எழுந்து விட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய பாடலை தேசிய கீதமாக ஏற்கத் தேவையில்லை என்று 1937இலேயே சுபாஷ்
சந்திர போசுக்கு தாகூர் கடிதம் எழுதியிருக்கிறார். “பங்கிம் சந்திரர், தாய்மண்ணை
துர்க்கையோடு ஒப்பிடுகிறார் என்றாலும், பல்வேறு சமூகங்களைக் கொண்ட நாட்டில்,
துர்க்கையை வணங்குவதாக வரும் வரிகளை ஏற்பதில் சிக்கல் வரும்” என்று
விளக்குகிறார் தாகூர்.
The core of Vande Mataram is a hymn to goddess
Durga: this is so plain that there can be no debate about it. Of course
Bankimchandra does show Durga to be inseparably united with Bengal
in the end, but no Mussulman [Muslim] can be expected patriotically to worship
the ten-handed deity as 'Swadesh' [the nation]. ..... The
novel Anandamath is a work of literature, and so the song is
appropriate in it. But Parliament is a place of union for all religious groups,
and there the song cannot be appropriate. When Bengali Mussulmans show signs of
stubborn fanaticism, we regard these as intolerable. When we too
copy them and make unreasonable demands, it will be self-defeating. … Bengali
Hindus have become agitated over this matter, but it does not concern only
Hindus. Since there are strong feelings on both sides, a balanced judgment is
essential. In pursuit of our political aims we want peace, unity and good
will—we do not want the endless tug of war that comes from supporting the
demands of one faction over the other.
ஆக, நாம் விடுதலை பெறும்போது நமக்கு தேசிய கீதம் ஏதும்
இருக்கவில்லை. 1947 ஜூலை 15ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் கிருபளானிக்கு எழுதிய
கடிதத்தில், தேசிய கீதம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார் ஜவாஹர்லால்
நேரு. 1947 ஜூலை 22ஆம் தேதி அரசமைப்புச்சட்டப் பேரவைக்கூட்டத்தில் பேசிய சரோஜினி
நாயுடு, நமக்கென ஒரு தேசிய கீதம் இல்லையே என்று ஆதங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்.
இன்னும் சில ஆதாரங்களை இப்படிக் குறிப்பிடலாம்.
ஆக, அரசமைப்புச் சட்ட பேரவையில் ஜன கண மன தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.
இருப்பினும், பலரின் வற்புறுத்தல் காரணமாக, இத்தனை காலமும் விடுதலை முழக்கமாக
இருந்த வந்தே மாதரம் பாடலையும் மதிக்க வேண்டும் என்பதால், அதன் முதலிரண்டு
பத்திகளை மட்டும் ஏற்று, சம அந்தஸ்துள்ள பாடலாக வைத்துக்கொள்வது என முடிவு
செய்யப்பட்டது.
The composition consisting of words and music known as Jana
Gana Mana is the National Anthem of India, ... and the song Vande
Mataram, which has played a historic part in the struggle for Indian freedom,
shall be honored equally with Jana Gana Mana and shall have equal status with
it.
I hope this will satisfy the Members.
- ராஜேந்திர பிரசாத்.
மேலே உள்ள ஆங்கில வாசகத்தில் தெளிவின்மை இருக்கிறது. அதன்
பின்னணி என்ன என்பதை யாரும் ஊகிக்கலாம். இந்த விஷயத்தில் வீணான விவாதம் தொடர்வதைத்
தவிர்ப்பதற்காக, வந்தே மாதரத்தை ஆதரித்தவர்களையும் திருப்தி செய்யும் வகையில், கடைசியாக, “உறுப்பினர்கள்
திருப்தி அடைவார்கள் என நம்புகிறேன்” (I hope this will satisfy the Members)
என்றுதான் ராஜேந்திர பிரசாத் கூறி முடித்து வைக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும். ஆக, வந்தே மாதரம் National Song என அதிகாரபூர்வமாக எங்கும்
கூறப்படவில்லை.
மேலும், வந்தே மாதரம் பாடப்படுவது குறித்த சர்ச்சைகள்
அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கின்றன. பாஜக ஆட்சியில் இருந்தபோது மைய அமைச்சர்
முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சரஸ்வதி வந்தனமும்கூட
அதிகாரபூர்வமாகப் பாடப்பட்டு வந்தது. மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் கட்டாயமாக
வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவும் ஓர் சர்ச்சையாகத் தொடர்கிறது. இதுபோன்ற
நடவடிக்கைகளின்மீதான விவாதங்களே வந்தே மாதரம் தேசிய கீதமா இல்லையா என்ற தொடர்
சர்ச்சைக்கு வழிவகுக்கின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ-வின்கீழ், அடிப்படைக் கடமைகளில்
to abide by the Constitution and respect its ideals
and institutions, the National Flag and the National Anthem
என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுவதைத் தடுக்கும்
1971 சட்டத்திலும் வந்தே மாதரம் அல்லது National Song இடம் பெறவில்லை.
National
Flag, Constitution of India, National Anthem ஆகிய மூன்றும்தான் இடம் பெறுகின்றன. தெளிவாகச்
சொல்வதானால், அரசமைப்புச் சட்டத்தில் song என்ற
சொல்லே இல்லை. ஆகவே, national song என்று நாம் சொல்லிப் பழகி விட்டிருக்கிறோமே
தவிர, அரசமைப்புச்சட்ட ரீதியாக அப்படியொரு பாடல் இல்லை.
ஆகவே, ஜன கண மன - மட்டும்தான் தேசிய கீதம், National
Anthem.
வந்தே மாதரம் – சம அந்தஸ்துள்ள பாடல். ஆனால் தேசிய
கீதம் என்று இதைக் குறிப்பிட முடியாது.
* * *
இப்போது முக்கியமாக ஒரு கேள்வி. இவை இரண்டுமே 1950இல்தான்
முடிவு செய்யப்பட்டது என்றால், 1947இல் நள்ளிரவில் இந்தியா விடுதலை பெற்றபோது
எந்தப் பாடல் பாடப்பட்டது....
இதோ.... வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு. 1947 ஆகஸ்ட் 14
நள்ளிரவில் அரசமைப்புச் சட்டப் பேரவைக் கூட்ட நடவடிக்கைக்
குறிப்புகளிலிருந்து.....
Constituent Assembly of India
Thursday, the 14th August 1947
The Fifth Session of the Constituent Assembly of India commenced in the Constitution Hall, New Delhi , at Eleven
P.M., Mr. President (The Honourable Dr. Rajendra Prasad) in the Chair.
SINGING OF VANDE MATARAM
Mr. President: The first item on the Agenda is the singing
of the first verse of VANDE MATARAM. We will listen to it all standing.
திருமதி சுசேதா கிருபளானி வந்தே மாதரம் பாடலின் முதல்
பத்தியைப் பாடுகிறார்.
மேற்கண்ட தலைப்பில், வந்தே மாதரம் பாடுதல் என்றுதான் குறிப்பிடப்படுகிறதே
அன்றி தேசிய கீதம் பாடப்படுவதாக அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
விடுதலைநாள் விழாவில், ஆட்சி அதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு
வந்த பிறகு, இந்திய அரசமைப்புச்சட்ட அவையினர் உறுதிமொழி ஏற்ற பிறகு,
மவுன்ட்பேட்டன் கவர்னர் ஜெனரல் ஆன பிறகு, சரோஜினி நாயுடு வராத காரணத்தால் திருமதி
ஹன்சா மேத்தா தேசியக் கொடியை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு, நள்ளிரவில் சுதந்திரம்
பெற்ற நிகழ்ச்சியின் முடிவில் ....
SINGING OF NATIONAL SONGS
Mr. President: The next item is the singing of the first few
lines of Sare Jahan se Acaha Hindustan Hamara and the first verse of
Janaganamana Adhinayaka Jaya He.
(Shrimati Sucheta Kripalani sang the first few lines of Sare
Jahan Se Achcha Hindustan Hamara and the first verse of Janaganamana Adhinayaka
Jaya He.)
திருமதி சுசேதா கிருபளானி, ஸாரே ஜஹான் ஸே அச்சா பாடலின் முதல்
சில வரிகளையும், ஜனகண மன பாடலையும் பாடினார்.
அதாவது, மேலே உள்ள தலைப்பில் தேசிய கீதம் என்ற சொல் இல்லை
என்பதையும், தேசியப் பாடல்கள் என்றே குறிப்பிடப் படுவதையும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
ஆக,–
• வந்தே மாதரம்
• ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா
• ஜன கண மன
ஆகிய மூன்று பாடல்களும் விடுதலை
நாள் விழாவில் பாடப்பட்ட பாடல்கள்.
பி.கு. 1. முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலாமா கூடாதா என்ற
கோணத்தில் இந்தக் கட்டுரை ஆராயவில்லை. இந்தப் பிரச்சினையும் விரைவில்
உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மேற்கோள்கள் விக்கிபீடியா, அரசமைப்புச் சட்டம், 1947ஆம்
ஆண்டின் அரசமைப்புச் சட்டப் பேரவை விவாத ஆவணங்கள், ஆகியவற்றிலிருந்து
எடுத்தாளப்பட்டுள்ளன.
Very good research post! Thanks!
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/6_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...