Tuesday 24 November 2020

கோவை எனும் கோயம்புத்தூர்

இன்று, கோவை தினம். 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோயம்புத்தூர் நகரம் மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 216 ஆண்டுகள் ஓடி விட்டன. கோவையின் சிறப்பைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ, ஏதேதோ வலைதளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்தது இது.

*

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-வாங்க-போங்க என மரியாதை கலந்த பேச்சுவழக்கு, விருந்தோம்பல், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடங்கிய சுற்றுப்புறங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வந்தாரை வாழ வைக்கும் பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மாசுகளற்ற மின்சாரம் தரும் காற்றாலைகள், அறிவுக் கண்களைத் திறக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பக்தி மணம் கமழும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கோவையின் இதர சிறப்புகள்.

இப்பகுதியைப் பழங்குடி மக்களாகிய கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்று இருந்ததே கோயம்புத்தூர் என மருவியது என்பார் சிலர். கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவி கோயம்புத்தூர் ஆனது என்றும் கூறப்படுகிறது. பேரூர் நாட்டுக் கோவன் புத்தூரான வீரகேரள நல்லூர்என்ற கல்வெட்டின் மூலம், கோயம்புத்தூர் என்பது பேரூர் நாட்டில் அமைந்திருந்தது என்று கருதலாம்.

கோவைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 9ஆம் நூற்றாண்டில் கோவைப் பகுதி சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். 14ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆட்சிப் பகுதியாக இருந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசின்கீழ் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

18ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னருக்குமிடையே நடைபெற்ற போரைத் தொடர்ந்து, கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. மைசூரை ஹைதர் அலி கைப்பற்றியபோது கோவையும் அவருடைய ஆட்சியின்கீழ் வந்தது. அவருக்குப் பிறகு, மகன் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் வந்தது. ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டவர்கள். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் மைசூரை முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைத்தனர். ஆனால் கோவையை தங்களின் மெட்ராஸ் மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். கொங்குநாட்டைச் சேர்ந்த தீரன் சின்னமலை, திப்புவின் உதவியுடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புரட்சி நடத்தவும், கோவை கோட்டையைப் பிடிக்கவும் திட்டமிட்டார். ஆனால், வீரர்களின் ஆர்வக் கோளாறு காரணமாக, திட்டமிட்ட நாளுக்கு முந்தைய நாளே இந்தத் திட்டம் ஆங்கிலேயருக்குத் தெரிந்து போனது. துவக்கப்படாமலே கோவைப்புரட்சி தோல்வி கண்டது.

கோவையைத் தலைநகராகக் கொண்ட கோவை மாவட்டம் இன்றைய ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது கோவை.



தமிழ்நாட்டில்
, சென்னைக்கு அடுத்த மிகப்பெரிய நகரம் கோவை. தென்னக ரயில்வேயில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் பெறுவது கோவை ரயில்நிலையம். சிறப்பான பேருந்து வசதிகளும், உள்நாட்டு-வெளிநாட்டு விமானப் போக்குவரத்து வசதியும், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்லக்கூடிய ரயில் போக்குவரத்து வசதியும் கொண்டது கோவை. முப்படைகளுக்கும் தளம் அமைந்திருந்த இடம் கோவை. கடற்படையின் ஐஎன்எஸ் அக்ரானி, சூலூரில் விமானப்படைத்தளம், வெலிங்டனில் ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகிய மூன்றையும் கொண்ட சிறப்பு கோவைக்கு உண்டு. வெலிங்டன் இப்போது நீலகிரி மாவட்டத்தில் சேர்ந்து விட்டது.

2011 கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள்தொகை 35 லட்சம். 84 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். பல்வேறு மதத்தினரும், பல மொழிகள் பேசுவோரும் வசிக்கும் காஸ்மபலிடன் நகரமாகத் திகழ்கிறது கோவை. இம்மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 6 தாலுக்காக்கள் உள்ளன.

கோவை என்பது மக்கள் வாழத் தகுதியில்லாத இடம் எனக் கருதப்பட்ட காலமும் உண்டு. ஆனால், 1872இல் வந்த ரயில் வசதி, 1888இல் உருவான முதல் நூற்பாலை, கோவையின் தலைவிதியை மாற்றின.

கோவை மாவட்டம் கரிசல் மண் பகுதிகளையும் கொண்டிருப்பதால், கணிசமான பருத்தி விளைகிறது. எனவே, பருத்தியை உடைக்கும் ஜின்னிங் தொழிற்சாலைகள் ஆங்காங்கு தோன்றின. பஞ்சை நூலாகவும், நூலை துணியாகவும் மாற்றக்கூடிய பஞ்சாலைகள் கோவை நகரில் இருக்கவில்லை. கோவையில் முதல் பஞ்சாலைக்கு வித்திட்டவர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ். இவரைப் பற்றிய கதையும் சுவாரசியமானது.



லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டேன்ஸ் என்பவர் இந்தியாவிலும் சீனாவிலும் வர்த்தகம் செய்து வந்தவர். வியாபார நோக்கங்களுக்காக தன்னுடைய மகன்களை அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கடைசி மகனான ராபர்ட் ஸ்டேன்ஸ். குன்னூரில் காபித் தோட்டத்தை நிறுவினார். ஆனால் விரைவிலேயே அவருடைய கம்பெனி திவாலானது. வெறும் 500 ரூபாயுடன், சரக்குக்கப்பலில் தன் மனைவி குழந்தைகளுடன் லண்டன் திரும்ப வேண்டியதாயிற்று. மீண்டும் கோவைக்குத் திரும்பி வந்த ராபர்ட் ஸ்டேன்ஸ், கோவையின் எல்லாத் துறைகளின் வளர்ச்சிக்கும் தன் பங்கினை அளித்தார். காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஸ்டேன்ஸ் மில் என்ற பஞ்சாலை, ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி என பலவற்றையும் நிறுவி வெற்றிகள் பெற்றார். இன்று கோவை தொழில்துறை நகரமாகத் திகழ்வதற்கு அடித்தளமிட்டவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்றால் மிகையில்லை. இவரின் உதவியாளராக இருந்த பிரேசர் என்பவர்தான் 1895ல் கோவைக்கு சைக்கிளை அறிமுகப்படுத்தியவர்.

ஸ்டேன்ஸ் மில்லுக்குப்பிறகு காளீஸ்வரா மில், சோமசுந்தரா மில், லட்சுமி மில்ஸ் ஆகியவை உருவாயின. 1930களில் பைகாரா மின் நிலையம்கொண்டுவரப்பட்டதன் காரணமாக மேலும் பல மில்கள் உருவாகின.

பி.எஸ்.ஜி. ரங்கசாமி நாயுடு என்பவர் 1926ல் தொழில்கல்வி நிறுவனத்தைத் துவக்கினார். இந்த நிறுவனம், கல்வியைப் போதிப்பதோடு மில்களுக்கும், விவசாயத்திற்கும் தேவையான இயந்திரங்களையும் தயார் செய்தது. இந்தியாவில் முதன்முதலாக மின்சார மோட்டார் தயாரித்த பெருமை இந்த நிறுவனத்துக்கு உண்டு.

ஆக, மோட்டார்கள், பம்புகள், வீட்டில் மாவரைக்கும் கிரைண்டர்கள், பஞ்சாலை இயந்திரங்கள், நூற்பாலை இயந்திரங்கள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் என பல்வேறு துறைகளில் லட்சுமி மெசின் ஒர்க்ஸ், சக்தி ஆட்டோமொபைல், ஷார்ப், டெக்ஸ்மோ, டெக்ஸ்டூல், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எனப்படும் பிரிகால், எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் கோவையை செம்மைப்படுத்தின. கோவையைச் சுற்றிலும் ஆயிரக் கணக்கான காற்றாலைகள் மின்சார உற்பத்தி செய்கின்றன.

இப்போது தனி மாவட்டமாகவும், ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை கோவையின் அங்கமாகவும் இருந்த திருப்பூரில் பின்னலாடைத் தொழில் சிறப்படைந்தது. இதைத் தொடர்ந்து, ‘சித்ராஎன்றழைக்கப்படும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் 1955ல் கோவையில் துவக்கப்பட்டது. இது பருத்தி மற்றும் ஜவுளித்துறையில் தேசிய அளவில் சிறந்த ஆய்வு நிறுவனமாகத் திகழ்கிறது. கொடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம், அரசுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.

கோவையில் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியவர்கள் ஏராளம் என்றாலும் இரண்டு பேரை தனியே குறிப்பிட்டாக வேண்டும். ஒருவர் ஜி.டி. நாயுடு. மற்றொருவர் நா. மகாலிங்கம்.

ஜி.டி. நாயுடு, முறையான கல்வி பெறாத விஞ்ஞானி. எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் தானாகவே முன்னேறி, வேளாண்மையிலும் இயந்திரத் துறையிலும் பல பொருட்களைக் கண்டுபிடித்தவர். தண்ணீர் இல்லாத ரேடியேட்டர், பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் கருவி, மலிவுவிலை பிளேடு, விதையில்லா ஆரஞ்சு என இவர் கண்டுபிடித்த பொருட்கள் ஏராளம். கோவையில் தொழில்துறை நிறுவனங்களையும், சேவை நோக்கில் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கியவர். அவர் தொடங்கிய பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிதான் இன்று அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி எனப் புகழ் பெற்றுள்ளது.

பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தொழில்துறையில் தடம் பதித்தவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை நாச்சிமுத்து தொடங்கிய பேருந்து நிறுவனம் ஏபிடி. தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்ட மகாலிங்கம், அவற்றை விரிவுபடுத்தினார். சக்தி சர்க்கரை ஆலை, சக்தி சோயா ஆலை, சக்தி ஆட்டோ மொபைல்ஸ், சக்தி பைனான்ஸ், ஏபிடி டிரான்ஸ்போர்ட், ஏபிடி பார்சல் சர்வீஸ் என இவருடைய தொழில் சாம்ராஜ்யம் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்தது. பொள்ளாச்சி தொகுதியிலிருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்எல்ஏவாக இருந்த காலத்தில்தான் கோவை மாவட்டத்து விவசாயத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். 

தொழில்துறை மட்டுமல்ல, திரைத்துறையிலும் தடம் பதித்தது கோவை. ஆங்கிலத் திரைப்படத் துறை ஹாலிவுட் என்று அழைக்கப்படுகிறது. இந்தித் திரைப்படத் துறை பாலிவுட் எனப்படுகிறது. அதற்கடுத்து கோலிவுட் என அழைக்கப்படும் அளவுக்கு மிகப்பெரிய துறையாக வளர்ந்திருப்பது தமிழ்த் திரைப்படத்துறை. சென்னையின் கோடம்பாக்கத்தை மையமாக வைத்தே கோலிவுட் என அழைக்கப்படுகிறது என்றாலும், தமிழ் திரைத்துறையின் ஆரம்ப காலங்களில் கோவைதான் முன்னிலை வகித்தது என்பது பலருக்கும் தெரியாது.

சென்ட்ரல் ஸ்டுடியோ, பட்சிராஜா ஸ்டுடியோ போன்றவை அனைத்து வசதிகளையும் கொண்டவையாக இருந்தன. ஒலிப்பதிவுக் கூடம், படத்தொகுப்பு நிலையம் என நவீன வசதிகளுடன் சென்ட்ரல் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன ரக கேமரா பயன்படுத்தப்பட்டது. பி.யு. சின்னப்பாவை அறிமுகம் செய்தது சென்ட்ரல் ஸ்டுடியோதான். இதை உருவாக்கியதில் ரங்கசாமி நாயுடு, ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர்  ஸ்ரீராமலு நாயுடு ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு. வெள்ளிவிழா கண்ட எம்.கே. தியாகராஜ பாகவதரின் சிவகவி திரைப்படம் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான்.

சென்ட்ரல் ஸ்டுடியோவிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீராமலு நாயுடு உருவாக்கியதுதான் பட்சிராஜா ஸ்டுடியோ. கருணாநிதியின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன்இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், சிங்களம் என 6 மொழிகளில் ஒரே நேரத்தில் இங்குதான் தயாரிக்கப்பட்டது.

ஷேக்ஸ்பியர் எழுதிய பன்னிரண்டாவது இரவு என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் கன்னியின் காதலி. ராம்நாத் என்பவர் தயாரித்து இயக்கினார். இந்தப் படத்திற்காக கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என்ற முதல் பாடலை சென்ட்ரல் ஸ்டுடியோவில்தான் எழுதினார் கண்ணதாசன். வனவாசம் என்ற தனது சுயசரிதை நூலில், இந்தப் பாடலுக்கு நூறு ரூபாய் ஊதியம் கிடைத்தது என்று எழுதியவர், இந்தப்பாடல் திரைப்படப் பாத்திரத்துக்காக எழுதப்பட்டது மட்டுமல்ல, தனக்குத் தானே சொல்லிக்கொண்டதும்கூட என்று அவரே குறிப்பிட்டுள்ளார். (இதைப்பற்றிய பதிவை பேஸ்புக்கில் வாசிக்கலாம்.)


தமிழ்த் திரையுலகின் ஆரம்பகாலத்தில் புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் என பலருக்கும் அறிமுகத்தைக் கொடுத்த்து கோவைதான்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் கோவையின் பங்கு குறிப்பிடத் தக்க்து. பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஆகிய இரண்டு அரசுப் பல்கலைக் கழகங்கள் தவிர ஐந்து நிகர்நிலைப் பல்கலைகளும் கொண்டது கோவை. கோவையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது பிரிட்டிஷார் காலத்திலிருந்தே துவங்குகிறது.



கோவை நகரின் முதல் பள்ளி 1831இல் கோவை மரக்கடை பகுதியில் உருவானது. லண்டன் மிஷன் சொசைட்டியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி இப்போதும் செயல்படுகிறது. இப்பள்ளியைத் தொடங்கிய மாவட்ட ஆட்சியர் சலீவன் என்பவரின் பெயரால் அமைந்ததுதான் சலீவன் வீதி. அதே லண்டன் மிஷன் சொசைட்டியால் ராஜவீதியில் துவக்கப்பட்ட இன்னொரு தொடக்கப்பள்ளி சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியாக மாற்றமடைந்துள்ளது. 1832இல் உப்பிலிபாளையத்தில் பெண்கள் பள்ளி துவங்கப்பட்டது. 1852இல் கோவை டவுன்ஹால் அருகே துவக்கப்பட்ட பிராஞ்சு ஸ்கூல் எனும் தொடக்கப்பள்ளி பிறகு உயர்நிலைப்பள்ளியாக மாறி, பட்டப்படிப்புகள் வரை வளர்ந்து, அரசு கலைக்கல்லூரியாக மாறியது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவை நகராட்சித் தலைவராகவும் இருந்தவர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ். வணிகராவும் வள்ளலாகவும் இருந்த ஸ்டேன்ஸ், பெரியகடை வீதியில் ஆரம்பித்ததுதான் ஸ்டேன்ஸ் பள்ளி, தற்போது அவிநாசி சாலையில் ஆங்கிலோ இந்தியன் பள்ளியாக சிறந்து விளங்குகிறது.



1885இல்தான் ராஜவீதியில் முதல் அரசு தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அதுவே, பின்னர் உயர்நிலைப்பள்ளியாகவும், பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாகவும் வளர்ந்தது. ஆங்கிலேயரைப் போலவே இந்தியர்களும் பல பள்ளிகளை உருவாக்கினர். அவற்றில் குறிப்பிட வேண்டியது சர்வஜன பள்ளி. இதன் பின்னே சுவாரசியமான கதை உண்டு.

பிஎஸ்ஜி குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வெங்கடசாமி நாயுடு, ரங்கசாமி நாயுடு, கங்கா நாயுடு, நாராயணசாமி நாயுடு. இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டிஷார் நடத்தி வந்த பள்ளியில் இடம் கொடுக்க மறுத்ததால், தாமே ஒரு பள்ளியைத் துவக்க முடிவு செய்தனர். தமது பரம்பரைச் சொத்துகளை நான்கு பேரும் ஐந்து பாகமாகப் பிரித்தனர். ஐந்தாவது பாகமாக வந்த இரண்டு லட்சம் ரூபாயைக் கொண்டு பூ.சா.கோ. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினர். அவர்கள் நிறுவியதுதான் சர்வஜன பள்ளி. அந்த பூசாகோ அறக்கட்டளை இன்று பல பள்ளிகள், பாலிடெக்னிக், கலைக்கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, என சுமார் 30 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

திருப்பூரைச் சேர்ந்த அவிநாசிலிங்கம் செட்டியார் என்பவர் வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், காந்தியவாதி. 1946 முதல் 1949 வரை சென்னை மாகாண கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தார். இளம் வயதில் ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1930ஆம் ஆண்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் துவக்கினார். பின்னர்,  பெரியநாயக்கன்பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்திற்கு பள்ளியை மாற்றினார். இப்போது அது அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்ந்துள்ளது.

இன்று பீளமேட்டில் முக்கிய இடங்களில் ஒன்று ஹோப் காலேஜ்என்ற பகுதியாகும். சென்னை கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் ஹோப் என்பவர். அவர் ஜி.டி. நாயுடுவின் நண்பர். கவர்னர் காட்டிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜி.டி. நாயுடு 1945ல் கோவையில் ஆரம்பித்த தொழிற்பயிற்சிக் கல்லூரிக்கு ஆர்தர் ஹோப் காலேஜ்என்று பெயரிட்டார் ஜி.டி. நாயுடு. பின்னர் ஆர்தர் ஹோப் பொறியியல் கல்லூரியையும் தொடங்கினார். பின்னர் இந்த இரண்டு கல்வி நிறுவனங்களையும் அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த இரண்டு கல்விநிலையங்கள்தான் இன்று அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி எனப் பெயர் பெற்றுள்ளன. கல்லூரியின் பெயர் மாறினாலும், ஹோப் காலேஜ் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவையின் முக்கியமான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. முதலில் இது சென்னையில் வேளாண் பள்ளியாகவே துவக்கப்பட்டது. 1906இல் கோவைக்கு மாற்றப்பட்டது. சர் ஆர்த்தர் லாலி எனும் பெயர் கொண்ட ஆங்கிலேய அதிகாரி, வேளாண் பல்கலைக் கழகத்துக்காக உரிய இடத்தைத் தேடி, மருதமலை செல்லும் சாலையில் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த பகுதியைத் தேர்வு செய்தார். அவருடைய நினைவாகவே, வேளாண் பல்கலை அமைந்துள்ள சாலை "லாலி ரோடு" எனப் பெயரிடப்பட்டது.

கார்ப் பந்தயத்தில் புகழ்பெற்று விளங்கி, ஒரு விபத்தில் உயிரிழந்த கரிவரதன் நினைவாக, கோவையை ஒட்டியிருக்கும் செட்டிபாளையத்தில் கரிவரதன் மோட்டார் ஸ்பீடுவே என்ற பெயரில் கார்ப் பந்தய ஓடுகளம் உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தாவரவியல் பூங்கா ஒன்று உள்ளது.

விளையாட்டுக்கு நேரு ஸ்டேடியம், கோல்ஃப் மைதானம். பொதுக்கூட்டங்கள், பொருட்காட்சிக்கு வ.உ.சி. மைதானம். குழந்தைகளுக்கு வ.உ.சி. பூங்கா, விலங்குக் காட்சி சாலை ஆகியவற்றை நகரின் மையப் பகுதியில் கொண்டது கோவை. கோவையைச் சுற்றிலும் எந்தப் பக்கம் போனாலும் சுற்றுலாத் தலங்கள்தான். ஒரு பக்கம் ஊட்டி, மறுபக்கம் வால்பாறை, முதுமலை வனவிலங்கு காப்பகம், டாப்சிலிப்பில் இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம், வால்பாறை போகும் வழியில் குரங்கு அருவி, ஆழியாறு அணை என பலவும் உண்டு. மேட்டுப்பாளையம் சாலையில் பிளாக் தண்டர், சிறுவாணி அணை அருகே கோவை குற்றாலம் அருவி ஆகியவை கோடைக்கு உகந்த சுற்றுலா மையங்கள்.

மருத்துவத் துறையிலும் முன்னிலை வகிக்கிறது கோவை. சென்னைக்கும் வேலூர் சிஎம்சிக்கும் அடுத்தபடியாக கோவைதான் புகழ்பெற்ற, சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குகிறது. கே.ஜி. மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, ஜி. குப்புசாமி நாயுடு மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, பிஎஸ்ஜி, கங்கா மருத்துவமனை, கோவை மெடிகல் சென்டர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கோவையின் காவல் தெய்வம் எனக் கருதப்படும் கோனியம்மன் கோயில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. கோவில்பாளையத்தில் அமைந்துள்ள காளகஸ்தீஸ்வர்ர் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், பேரூர் பட்டீஸ்வர்ர் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், காரமடை அருகில் உள்ள தென்திருப்பதி கோவில், உப்பிலிபாளையத்தில் தண்டுமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோவில் ஆகியவை புகழ் பெற்றவை. மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் கோவையில்தான் உள்ளது. பேரூரில் படித்துறையின் அருகே மகாத்மா காந்தி, காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகிய மூவரின் அஸ்திக் கலசங்கள் உள்ளன என்பது தனிச்சிறப்பான செய்தி.

கோவையின் சிறப்பை எவ்வளவு சொன்னாலும் தீராது. ஆனால் ஒரு விஷயத்தை முத்தாய்ப்பாகக் குறிப்பிட வேண்டும். தேசிய அளவில் தொழில்துறை மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்கது கோவை. தமிழகத்திலேயே தொழில்துறையில், கல்வியில், கோவை முன்னோடி மாவட்டமாக இருக்கிறது. இத்தனை சிறப்புகள் இருந்தாலும், கோவையில் பெரிய அளவுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் ஏதும் கிடையாது. தனியார் முயற்சிகளாலேயே கோவை முன்னேற்றம் கண்டது.

2 comments: