இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல
மாநிலத்துக்கு கவர்னர். ஆனால், குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார். கவர்னர்
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அதாவது, நடைமுறையில் பார்த்தால்,
குடியரசுத் தலைவர்
மத்தியில் ஆளும் அரசின் வழிகாட்டலின்படி மட்டுமே செயல்படக் கூடியவர் என்பதால்,
மத்தியில் ஆளும்
கட்சியால் கவர்னர் நியமிக்கப்படுகிறார் என்று சொல்லலாம்.
கவர்னருக்கு எந்த சிறப்புத் தகுதியும் தேவையில்லை. 35 வயது நிரம்பிய இந்தியராக
இருந்தால் போதும். பதவிக்காலம் 5 ஆண்டுகள். இரண்டு மாநிலங்களுக்கு ஒரே கவர்னர் இருக்க முடியும். அருணாச்சலப்
பிரதேசம், சிக்கிம், மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களுக்கு ஒரே கவர்னர் இருப்பதுண்டு. தமிழ்நாடு
போன்ற பெரிய மாநிலங்களுக்கு பொதுவாக தனி கவர்னர்தான் இருப்பார். (எந்த மாநில
அரசும், தனக்கு ஏன் தனி கவர்னர் இல்லை என்று கேட்காது. ரோசய்யா பதவி முடிந்து ஏழு
மாதம் ஆன பிறகும் தமிழக அரசும் கேட்கவில்லை. எதுக்கு வான்ட்டடா வண்டியில்
ஏத்தணும்கிற கொள்கைதான்.)
நாட்டுக்குத் தலைவர் குடியரசுத் தலைவர் என்பது போல
மாநிலத்துக்குத் தலைவர் கவர்னர். என்றாலும், குடியரசுத் தலைவருக்கு
எப்படி முழு அதிகாரம் இல்லையோ, அதே போல கவர்னருக்கும் முழு அதிகாரம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்
ஆலோசனைப்படி அவர் செயல்பட வேண்டும். இந்திய அரசின் முடிவுகள் எல்லாம் குடியரசுத்
தலைவரின் பெயரால் வெளியிடப்படுவது போலவே, மாநிலத்தின் முடிவுகள் கவர்னரின் பெயரால் வெளியிடப்படும்.
மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு
செய்யப்பட்டவர் அல்ல என்றாலும், கவர்னர்தான் அரசமைப்பு ரீதியாக மாநிலத்துக்குத் தலைவர். இந்திய அளவில் குடியரசுத் தலைவர் பதவி பெரும்பாலும் அலங்காரப் பதவிதான். இதனுடன் ஒப்பிட்டால் ஆனால் மாநில அளவில் ஆளுநர் பதவிக்கு அதிக அதிகாரங்கள் உண்டு.
ஒரு குடியரசுத் தலைவர் அரசமைப்புக்கு எதிராக செயல்பட்டார்
என்றால், நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரை நீக்க முடியும் (impeachment). ஆனால், ஒரு கவர்னரை மாநில
சட்டமன்றம் நீக்க முடியாது. அவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் என்பதால்,
குடியரசுத்
தலைவர்தான் கவர்னரை நீக்க முடியும். குடியரசுத் தலைவரை குற்றப் பிரேரணை மூலம் impeachment
செய்யலாம், ஆனால் கவர்னரை impeachment
செய்ய முடியாது.
டிஸ்மிஸ் செய்யலாம், அல்லது அவராகவே பதவி விலகலாம். அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ்கார
சண்முகநாதன் பாலியல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்தார். ராஜினாமா
செய்யாதிருந்தால், குடியரசுத் தலைவர் விரும்பினால், அவரை நீக்கியிருக்க முடியும்.
மத்தியில் ஆளும் கட்சி மாறினால் மாநிலங்களில்
கவர்னர்களையும் மாற்றிவிடுவதே வழக்கம். இது முறையா என்று கேட்டால், நிச்சயமாக முறையற்றது. ஆனால்
காங்கிரஸ் பாஜக இரண்டுமே இப்படித்தான் செய்து வந்திருக்கின்றன. கவர்னர் என்பவர்
மத்திய அரசின் உளவாளி அல்லது கைக்கூலி. மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமான கட்சி
மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் கவர்னர் பல் பிடுங்கிய பாம்பு. மத்தியில் ஆளும்
கட்சிக்கு எதிர்க்கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால், கவர்னர் விஷப்பாம்பு. இதற்கு
ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும், அண்மை உதாரணம் தில்லியில் லெப். கவர்னர் நஜீப் ஜங்.
புதுவையில் கிரன் பேடி. மாநில நிர்வாகத்தில் தலையிட்டு, தேர்வு செய்யப்பட்ட அரசு
செயல்பட விடாமல் செய்வதற்காகவே அனுப்பி வைக்கப்படுகிறவர்கள். இதைப்பற்றி இப்போது
அதிகம் அலசுவது பயனற்றது என்பதால், அரசமைப்புச் சட்டத்தின்படியான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
கவர்னர் என்பவர் அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை
உறுதி செய்வதற்கான நபர் என்பதால், அது தொடர்பாக மூன்றுவகை அதிகாரங்கள் உண்டு :
1. நிர்வாக அதிகாரம் (Executive
powers) — முதல்வரை நியமிப்பது,
முதல்வர்
ஆலோசனையின்படி அமைச்சர்களை நியமிப்பது, இதர பல பதவிகளுக்கான ஆட்களை நியமிப்பது உள்ளிட்டவை.
2. சட்டமியற்றும் அதிகாரம் (Legislative
powers) — சட்டமன்றக்
கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பது, சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டமன்றத்தையே கலைப்பது,
சட்டமன்றக்
கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றுவது
உள்ளிட்டவை.
3. விருப்புரிமை அதிகாரம் (Discretionary
powers) (விருப்புரிமை என்பதை
ஏதோ தன் இஷ்டப்படி என்று பொருள் கொள்ள வேண்டாம். நிலைமைக்கேற்ப உசிதமான
முடிவெடுக்கும் அதிகாரம் எனப் பொருள் கொள்ள வேண்டும்.) — சட்டத்துக்கு ஒப்புதல்
அளிக்க மறுப்பது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது, எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்கவில்லை என்னும்போது யாரை ஆட்சி அமைக்க அழைப்பது ஆகியவை இதில்
வரும். மூன்றாவது விஷயத்தைப் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
முதலாவதாகச் சொன்ன நிர்வாக அதிகாரத்தின்படி, கவர்னர்தான் முதல்வரை
நியமிக்கிறார். என்றாலும் அவர் தன் இஷ்டப்படி நியமிக்க முடியாது. ஒரு
சட்டமன்றத்தில் ஏதேனும் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை தெளிவாக இருக்கும்போது,
அந்தக் கட்சியை
விட்டுவிட்டு கவர்னர் தன் விருப்புரிமைப்படி வேறு எவரையும் ஆட்சியமைக்க அழைத்துவிட
முடியாது. எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கவர்னரின் பங்கு
முக்கியத்துவம் பெறுகிறது. யாரை முதல்வராக நியமிக்கலாம், யாருக்கு பெரும்பான்மை
இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று அவர் யோசித்து முடிவு செய்ய உரிமை உண்டு.
நிலைமையைப் பற்றி குடியரசுத் தலைவருக்குத் (அதாவது, மத்திய அரசுக்கு)
தெரிவிக்கவும் செய்யலாம். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில்
முதல்வர் தேர்வு செய்வதில் அவர் தவறான முடிவு எடுத்துவிட்டாலும்கூட, அவர் தேர்வு செய்த நபர்
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனாலும்கூட, அது கவர்னருடைய குற்றமாகாது.
அடுத்த நபராக யாரை அழைக்கலாம் என்று அவர் முடிவு செய்யலாம்.
இனி, இப்போதைய நிலைமையைப் பார்ப்போம்.
பன்னீர் செல்வம் 5ஆம் தேதி பதவி விலகல் கடிதம் கொடுத்து விட்டார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி, முதல்வர் ராஜினாமா செய்கிறார் என்றால் முதல்வர் மட்டுமல்ல, முழு அமைச்சரவையும் ராஜினாமா
செய்கிறது. கவர்னர் அதை ஏற்றுக் கொண்டார். சம்பிரதாயப்படி, “மாற்று ஏற்பாடுகள் செய்யும்
வரை தற்போதைய அமைச்சரவையை தொடருமாறு” கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இப்போது சசிகலா, பன்னீர் செல்வம் இருவருமே கவர்னரை சந்திக்கிறார்கள். தமக்கே
சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தின்
எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 234. அதிமுகவுக்கு இருப்பது 135. சசிகலா கும்பல் 129 பேர் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறது. பன்னீர் செல்வம் கும்பல் 100 பேர் இருப்பதாகச்
சொல்கிறது. இருவருமே ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கோருகிறார்கள்.
இத்தகைய காட்சி ஏதும் புதிதல்ல. பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துப் போட்ட
காகிதத்தைக் கொடுப்பதால் அவர்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக கவர்னர் முடிவு
செய்ய முடியாது. இதற்கு முன்பும் இதேபோல கையெழுத்து நாடகங்கள் நடந்திருக்கின்றன.
நேரடித் தலைகளை எண்ணித்தான் உறுதிப்படுத்த முடியும் என்று கவர்னர் எண்ணுவது
இயல்பு.
இத்தகைய சூழலில் யாருக்கு பெரும்பான்மை இருக்கக்கூடும்,
யாரை ஆட்சியமைக்க
அழைக்கலாம் என்று முடிவு செய்ய கவர்னர் உரிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு
கால வரையறை ஏதும் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் கட்சி உடைப்பு, ஆட்சிக் கலைப்பு, கவர்னர் தலையீடு என இதேபோன்ற
சிக்கல்கள் எழுந்த பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தெளிவான சில கருத்துகளைத்
தெரிவித்திருக்கிறது. எனவே கவர்னராக எவர் இருந்தாலும் தன்னிச்சையாக முடிவு
செய்துவிட தயங்குவார்கள். இப்போதும் அதே நிலைதான் இருக்கிறது.
இப்போதைய நாடகத்தில் ஒரே ஒரு காட்சி மட்டுமே புதியது.
ராஜினாமா செய்த முதல்வர், நிர்ப்பந்தம் காரணமாக ராஜினாமா செய்தேன் என்றும், ராஜினாமாவை திரும்ப்ப் பெறத்
தயார் என்று சொல்வதும்தான் புதிய காட்சி. இப்படியொரு நிகழ்வில் கவர்னர் என்ன செய்ய
முடியும் என்பது சட்டரீதியாக சற்றுக் குழப்பம்தான். ஆனால், ராஜினாமாவை திரும்பப்
பெறுவதாக பன்னீர் செல்வம் சொல்வதை ஏற்றாக வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு இல்லை. இது
சிறுபிள்ளை விளையாட்டு அல்ல. பன்னீர் செல்வத்துக்கு பெரும்பான்மை இருந்தால்,
ராஜினாமாவைத்
திரும்பப் பெற்றுத்தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதில்லை, மீண்டும் பதவியேற்கலாம்.
சசிகலா வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வர இருக்கிறது
என்பது கவர்னருக்குத் தெரியும். தீர்ப்பு வரும் வரை சசிகலா பதவியேற்கத் தடை
விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை விரைவாக விசாரிக்க முடியாது என்று
உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. ஆகவே, சசிகலாவிடம் பெரும்பான்மை இருக்கிறது என்று உறுதியாகத்
தெரிந்தாலும்கூட, தீர்ப்பு வரும்வரையில் அவர் முடிவை அறிவிக்காமல் தாமதிக்கும் சாத்தியம் உண்டு.
*
பதிவை காலையில் பேஸ்புக்கில் எழுதினேன். வலைப்பூவில்
பதிவேற்றும் இரவு நேரத்தில், அவசரப்பட்டு முடிவெடுப்பதில்லை என கவர்னர் முடிவு
செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
*
பி.கு. 1 – இது கட்சிசார் பதிவு அல்ல. கவர்னர் அதிகாரங்கள் அப்படியே நீடிக்க வேண்டும் என்று
கூறும் பதிவும் அல்ல. கவர்னர் நியமனம் / அதிகாரம் / இம்பீச்மென்ட் குறித்து மேலும்
அறிய சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைப் படிக்கலாம். அரசமைப்புச் சட்டம் 356 குறித்து 2001இல் சர்க்காரியா தலைமையில்
நீதிபதி ஜீவன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அளித்த Consultation Paper on
‘Article 356 of the Constitution’ படிக்கலாம். http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b2-5.htm இதற்கும் மேலே கட்சி
சார்ந்து பதிவைப் பார்ப்பவர்கள் அடுத்த பி.கு. படிக்கவும். :)
பி.கு. 2 - சசிகலா கும்பலுக்கும் பன்னீர் கும்பலுக்கும் நடைபெறுகிற போட்டி தமிழக
நலனுக்கான போட்டி அல்ல. இப்போது தேர்தல் நடைபெற்றால் காணாமல் போய் விடுவோம்,
சுளையாக நாலேகால்
ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பு போய் விடும் என்ற அச்சம் மட்டுமே அவர்களுக்கு
இருக்கிறது. இதில் அவர் உசத்தி, இவர் தாழ்த்தி ஒப்பீடுகள் எல்லாம் தேவையில்லை. “யார்தான் உத்தமர், இருக்கிற கொள்ளியில் நல்ல
கொள்ளியைத்தானே தேர்வு செய்ய முடியும்” என்று கேட்பவர்கள் தாராளமாக தலையில் கொள்ளியை வைத்துக்
கொள்ளலாம்.
அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதில் சசிகலா, பன்னீரை விட கவர்னருக்கு தான் மண்டை காய்ந்துபோகும். நிச்சயமாக இருவரில் ஒருவரை அழைத்து மெஜாரிட்டியை நிரூபிக்குமாறுதான் அவர் சொல்லியாகவேண்டும். அப்போது அதிமுக உடைவதை யாராலும் தடுத்துவிடமுடியாது. ஆனால் தோற்கடிக்கப்படும் அதிமுக பிரிவினர், அதன் பின்னணியாக, தமக்கு ஆதரவான (சில) போலீஸ் மற்றும் (பல) சமூகவிரோதிகள் துணையுடன், தமிழகத்தை என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம் பொதுமக்களிடம் நிலவுகிறது. இந்த நேரம் பார்த்து கலைஞர் வயோதிகத்தால் முடங்கிவிட்டது ஸ்டாலினுக்கு கெட்ட காலமே.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
செல்லப்பா ஐயா அவர்கள் சொன்னது போல் தமிழகம் இனி எதை எதை எதிர் கொள்ள வேண்டியிருக்குமோ தெரியலை....
ReplyDeleteநல்ல பகிர்வு.