Friday, 28 August 2015

மகாத்மா காந்தியின் சிந்தனைகள்




காந்தி மகான், அரசின் வலுமிக்க சக்திக்கு எதிராக அகிம்சை மற்றும் சத்தியத்தின் தூய வலுவை நிறுத்தி வைத்தார்; வெற்றியும் கண்டார். அவர் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்த அகிம்சை, சத்தியம் ஆகியவை ஒன்றும் புதியவையல்ல. மலைகள் எந்த அளவுக்குப் பழமையானவையோ அந்த அளவுக்கு இவையும் பழமையானவை என்கிறார் அவர். அவர் செய்ததெல்லாம் அந்தத் தத்துவத்துக்குப் புதுவாழ்வு கொடுத்ததும் அதனைப் புதுத் தளத்தில் பயன்படுத்தியதும்தான்.

சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், அன்பு, கடவுள் பக்தி, உடைமையின்மை, சுதந்திரம், உண்ணாநோன்பு, பிரார்த்னை, பிரும்மச்சரியம், உழைப்பு, இயந்திரம், கல்வி, பெண்ணுரிமை என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் குறித்து காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன என்பதை இந்நூல் காட்டுகிறது.

இந்த நூலில் மகாத்மா தமது சொந்தச் சொற்களிலேயே பேசுகிறார். அவருக்கும் வாசகருக்கும் இடையே எடுத்துச் சொல்லுவார் யாரும் இல்லை; எவரும் தேவையும் இல்லை. இந்நூலின் அச்சுப் பிரதிகளை காந்தியே பார்வையிட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. காந்தியையும் அவரது சிந்தனைகளையும் அறிந்தோர் இன்னும் சிறப்பாக அவரைப் புரிந்து கொள்ளவும், அறியாதோர் எளிதாக அறியும் வகையிலும் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் புதுவரவு.

*

எனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

*

இதற்கு முன்னர் நான் பேஸ்புக்கில் பல பதிவுகளில் இந்நூலைப் பற்றி எழுதியிருக்கிறேன். The Mind of Mahatma என்ற தலைப்பில் நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.
நான் புத்தக வடிவமைப்புத் தொழில் துவங்கியபோது செப்பனிடும் வேலை துவங்கியது. பலமுறை திருத்தியும் பிழைபார்த்தும் நூலாக வெளிவர 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தமிழாக்கம் தம்பி சீனிவாசன், வேங்கடராமன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
என் நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களுக்கும் இதை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்குண்டு.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட், 978-81-237-7627-9, ரூ. 460

2 comments: