அனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 1
அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளில் பெரும்பகுதி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால்
பீடிகளும் அவருக்கு தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு,
திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி உடுமலை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த நாட்களில் புகைப்பதற்கு வழியில்லை.
கொர்...கொர்...என்று மூச்சுத் திணறல்களுக்கு இடையே பீடி வேண்டும் என்று கேட்டார்.
நான் முடியாது என்று மறுக்க, இருமிக்கொண்டே திட்டினார். அதில் கோபத்தைவிட
கெஞ்சல்தான் அதிகம் இருந்தது. கடைசியில் மனது கேளாமல், நர்ஸ்களுக்குத் தெரியாமல், பீடியும் தீப்பெட்டியும் வாங்கிவந்து கொடுத்தேன். ஓரிரு நாட்களில் அவர் இறந்து போனார்.
புகைப்பழக்கம் ஒரு மனிதனை இவ்வளவு தவிக்க வைக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. பீடி
சிகரெட்கள் மீது, புகைப்பவர்கள் மீது கோபமும் வெறுப்பும் வந்தது.
இவ்வளவு வெறுத்த நான் எப்படி, எப்போது, யாரிடமிருந்து
பழகினேன் என்று நினைவில்லை. முதல் சிகரெட் அனுபவத்தை கதைபோல எழுதியிருக்கிறேன். (பேஸ்புக்கில் வாசிக்கலாம்.) ஆனால் அந்த முதல் சிகரெட்டுக்குப் பிறகு உடனே புகைப் பழக்கம் ஆரம்பித்து விடவில்லை. சில
மாதங்கள் கழித்து எப்படியோ பழகி விட்டேன், அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகளாகப்
புகைத்து வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் புகைப்பதை வெறுத்தவன், படிப்படியாக புகைப்பதை போற்றுபவன்
ஆகிப்போனேன். புகைப்பது ஒரு ஸ்டைல், ஆண்மகனின் அடையாளம், புகைப்பது மூளையை
சுறுசுறுப்பாக்கும், பதற்றத்தைக் குறைக்கும், கவலையை மறக்கடிக்கும்... இப்படிப்
பலவிதமான தவறான நம்பிக்கைகளால் கட்டுண்டு கிடந்தேன்.
நண்பர்களின் சேர்க்கை ஒருபக்கம் புகைப்பழக்கத்துக்கு இதமாக இருந்தது. மறுபக்கம், புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று, இழுக்க இழுக்க இன்பம்
இறுதிவரை போன்ற பொன்மொழிகள் (!) வேறு உசுப்பி விட்டன. கமலஹாசன், ரஜனிகாந்த் போன்ற
திரைநாயகர்கள் தமது ஸ்டைல்களை எம் இளைய மனங்களில் திணித்தனர். காகித ஆலையில் நான்
வேலை செய்துவந்த காலத்தில் ரஜினியைப் போலவே நான் சிகரெட்டை சுண்டி வாயில் கச்சிதமாகப் பிடிப்பது எல்லாராலும்
பாராட்டப்பட்ட விஷயமாக இருந்தது. காற்றில்லாத அறைக்குள் வட்டமாகப் புகைவிட்டு, வட்டத்துக்குள்
வட்டங்களை நுழைய விட்டு போட்டிகள் நடத்தியதுண்டு. புதிய பறவை சிவாஜிபோல ஏகாந்தமாக
புகைவிட்டு இல்லாத சோகத்தை வரவழைத்துக் கொண்டதுண்டு. (புகைக்கிற காட்சிகளின் ஒளிப்பதிவு சிவாஜி, ரஜினி போல வேறெவருக்கும் சிறப்பாக அமைந்ததில்லை என்பது என் உறுதியான கருத்து.)
ஆரம்ப காலங்களில் சிஸர் என்கிற கத்திரி, பாசிங் ஷோ என்கிற
டொப்பி, பனாமா, எப்போதாவது கணேஷ் பீடி, சற்றே முன்னேறிய பிறகு கூல், மோர். வடக்கே நாக்பூர் பக்கம் வேலை செய்ய வந்த காலத்தில் சார்மினார், பிறகு சார்ம்ஸ். கடைசியாக அடையாளமாகிப் போனது கோல்ட் ஃபிளேக்ஸ்.
தொடர்ந்து புகைத்தவன்தான் என்றாலும் கிங்ஸ் பிராண்ட்கள் நீளமானவை என்பதால் இலவசமாக யாரேனும் தந்தாலும் தவிர்த்து
விடுவேன்.
புகையிலையில் இருப்பது நிகோடின் என்னும் போதைப்பொருள்.
சிகரெட் புகைக்கும்போது, நிகோடின் இரத்தத்தில் கலந்து மூளையின் செயல்பாட்டில்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையைத் தூண்டுகிறது, ரிலாக்ஸ்டாக உணரச்
செய்கிறது, மனம் ஒருமுகப்படுகிறது. சாதகமான மாற்றங்களாகத் தோன்றும் இவை எல்லாம்
புகைக்கத் துவங்கியதன் ஆரம்ப காலத்தில் மட்டும்தான். சில மாதங்களுக்குள்ளேயே, நாம் எவ்வளவு
புகைக்கிறோம் என்பதைப் பொறுத்து, நிகோடின் போதைக்கு உடல் பழகிப்போனபின் மேலே சொன்ன உணர்வுகள் எல்லாம் இருக்காது. ஆனாலும் இருப்பதாக நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.
கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மது-கஞ்சா-மரியுவானா போன்ற
போதைப் பொருட்களை முதல்முறை பயன்படுத்தியவர்கள் பிறகு அதற்கு அடிமையாவதைவிட, சிகரெட்டை
முதல்முறை பயன்படுத்தியபிறகு அடிமையாகும் விகிதம் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சிகரெட் எளிதில், எங்கும் கிடைக்கிறது, மலிவாகவும் கிடைக்கிறது என்பது ஒரு காரணம்.
புகைப்பதை ஒரு சாகசமாக / சாதனையாக நினைப்பது, வீட்டுக்குத்
தெரியாமல் புகைப்பது, மளிகை வாங்கும்போது சிகரெட் செலவுக்கு கமிஷன் அடிப்பது,
நோட்டு-புத்தகம் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி வீட்டிலிருந்தே சுருட்டுவது,
வாய் நாற்றத்தை மறைக்க பாக்கோ ஏலக்காயோ மென்று மறைப்பது என்பதான கட்டங்கள் விரைவாகவே
கடந்து போகும். வேலை கிடைத்து, சொந்தக் காசில் சிகரெட் வாங்கி தடையின்றிப் புகைக்க ஆரம்பித்து,
சிக்கல்களை எதிர்கொள்ளத் துவங்கும்போதுதான் இத்தனை காலமும் அடுத்தவரை ஏமாற்றியதாக
நினைத்துக்கொண்டதெல்லாம் உண்மையில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டதுதான் என்று புரியத் துவங்குகிறது.
இதெல்லாம் புரியும்போது காலம் கடந்து விட்டிருக்கும். சிகரெட் புகைப்பது என்பது,
அனிச்சைச் செயல்போல பழகிப்போய் விட்டிருக்கும். (இதைப்பற்றி ஒரு கவிதையை இந்த பேஸ்புக் பதிவில் வாசிக்கலாம்.)
புகைப்பழக்கத்துக்கு முழுமையாக ஆளான பிறகு குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் அறிவுரைகள், அல்லது
பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது உடல் ஆரோக்கியம் கெடுதல் போன்ற காரணங்களால் புகைப்பதை
விட்டொழிக்கும் ஆசை அவ்வப்போது தலைதூக்கும். விட்டொழிக்க முயற்சி செய்வோம், தோற்போம், அல்லது
தற்காலிக வெற்றி பெறுவோம், மீண்டும் புகைக்கத் துவங்கி விடுவோம்.
ஒருவன் எப்போது புகைக்கத் துவங்கினான் என்பதும்
அவனுடைய புகைப் பழக்கத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறது என்கிறது இதுகுறித்த ஆய்வு. வளரிளம் பருவத்திலேயே – டீன் ஏஜில் - புகைக்கத் துவங்கியவர்கள் ஆயுள்
முழுக்கப் புகைப்பவர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கல். புகைக்கத்
துவங்குகிற எல்லாருமே, தான்
நினைக்கும்போது நிறுத்தி விட முடியும் அல்லது ஐந்தாறு ஆண்டுகளில் விட்டுவிட இயலும்
என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள், அப்படித்தான் சொல்கிறார்கள். வளரிளம் பருவத்தில் புகைக்கத் துவங்கியவர்களில்
75
விழுக்காட்டினர், 18 வயதை
அடையும்போதே அதற்காக வருந்தத் துவங்கி விடுகிறார்கள்; 50 விழுக்காட்டினர் அதை நிறுத்த முயற்சியும்
செய்கிறார்கள். வளரிளம் பருவத்திலேயே புகைக்கத் துவங்கியவர்களுக்கு நிகோடின்
போதையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
Well done sir thank you
ReplyDeleteஷாஜகான் சார்,நான் நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட அனைத்து பருவங்களையும் கடந்து வந்திருக்கிறேன். சரியாக சொல்லப் போனால் உடல் நலம் கெட்டு குட்டிச்சுவறான பின் 40 வருடம் கழித்து கடந்த ஓராண்டாக புகைப்பதை நிறுத்தி விட்டேன். மனத்தளவில் மாற்றம் ஏற்பட்டால் நிறுத்த முடியும். உங்கள் கட்டுரை என் இளவயது அனுபவத்தை 90% ஒத்திருந்தது.
ReplyDeleteதொடருங்கள் ! கட்டுரையை !
ReplyDeleteஅந்த முதல் முத்த அனுபவ சுட்டியை இங்கே கொடுங்கள்
ReplyDeleteஇதோ... பேஸ்புக் கட்டுரை இணைப்பு
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?fbid=738745559481553&set=a.368701183152661.79964.100000383483109&type=3
Sir, neenga seirathu periya sevai!!thodarungal.Vazhthukal. kadavul ungalai aseervathipar.
ReplyDeleteநான் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது, 1987 ம் வருடம் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக WILLS சிகரெட் குடிக்க ஆரம்பித்தேன்,, விளையாட்டாக ஆரம்பித்தது 2010 ம் ஆண்டு தினமும் நான்கு பாக்கெட் சிகரெட் குடிக்கும் அளவுக்கு கணக்கில்லாமல் போனது,
ReplyDeleteமனைவி சொல்லி சொல்லி வெறுத்து போனார்.
இதனிடையே பாலகுமாரன் புகை பிடித்ததால் அவருக்கு உண்டான கடுமையான உடல்நல குறைவையும் படிக்கச் நேர்ந்தது.
பசி இல்லாதது ,
எங்கு போனாலும் தனியாக போயி சிகரெட் குடிக்க இடம் தேடுவது.
பிளான் போட்டு கொடுத்தால் சிகரெட் வாங்க பணம் கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு போனது.
சராசரியாக இரவு மட்டும் ஒரு பாக்கெட் குடிக்குமளவுக்கு போனது ..
என்னுடைய மனைவி தொழுகையின் பொழுது என்னுடைய சிகரெட் பழக்கத்தை நிறுத்த இறைவனிடம் துவா கேக்க துவங்கினார் ..
சரியாக பசி எடுக்காததால் , காசநோயாளி போல உடல் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது
#2004 ம் ஆண்டு அண்ணன் மகள் மக்காவில் பள்ளி வாகன விபத்தில் மரணமடைந்த தகவல் வந்தவுடன் சிகரெட் பத்த வைத்தேன் ..
#2006 ல் என் அம்மா மாரடைப்பால் மரணமடைந்த வுடன் அப்பொழுதும் சிகரெட் பத்த வைத்தேன்
இது தான் என்று இல்லாமல் எந்த இடமாக இருந்தால் சிகரெட் பத்த வைக்கும் அளவுக்கு அடிமையா மாறினேன் ( நீரழிவு , ரத்தக்கொதிப்பு என எதுவும் இல்லாவிடிலும் , உடல் இன்னும் எலும்பு கூடாகத்தான் உள்ளது )
2011 ம் ஆண்டு கட்டிலில் நானும் மூத்தமகன் ஆகில் ஜுபைரும் படுத்து இருக்க , நள்ளிரவில் சிகரெட் குடிக்க எழுந்த பொழுது, தரையில் சிறிய மகன் ஆகிப் ஜுபைரும் படுத்து இருந்தார். மனைவியையும் மகனையும் பார்த்தவுடன் , மனதினில் ஒரு சங்கடம் வந்தது, ஒருநாள் வெளியூர்்போனாலும் தேடும் மகன் , சிகரெட் பழக்கத்தால் நான் உயிர் இழந்தால் எப்படி தேடுவார் என நினைத்து விட்டு ,
வாசற்படிக்கு வந்த சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்த பொழுது 5 இருந்தது. அந்த 5 குடித்துவிட்டு இன்றோடு நிறுத்துவது என முதலில் ஒன்றை பற்ற வைத்தேன். தலைகீழாக பற்ற வைத்ததால் பஞ்சின் புகையினால் இருமல் வர அப்படியே தூக்கி வீசி விட்டேன். வந்து படுத்து விட்டேன்.
காலை எழுந்தவுடன் மனைவிடம் சிகரெட் நிறுத்திவிட்டதாக கூறினேன். ( 24 ஆண்டு பழக்கம் )
மனைவியும் மகன்களும் நக்கலாக சிரித்தார்கள்.
மனைவியிடம் சிறிது நாள் எந்த பிரச்சனைக்கும் சண்டை போட்டு டென்ஷன் வேண்டாம் எனசொல்லி விட்டு , கடைக்கு போயி ஒரு டப்பா நிறைய சென்டர் பிரெஷ் சாக்லெட் வாங்கிட்டு வந்து காலையில் இருந்து இரவு வரை மெல்ல துவங்கினேன் .. வாய் புண்ணாகி எரிச்சல் வந்தது. போதைக்கு மாற்று இன்னொரு போதை என இன்டர்நெட் சென்டர் போயி மணிக்கணக்கில் உட்கார்ந்து பொழுதை கழிக்க துவங்கினேன் .. ஒரு வாரம் மிக கடுமையாக இருந்தது .. மனைவிக்கும் நம்பிக்கை வர இன்றோடு ஏழு வருடங்கள் சிகரெட் நிறுத்தி
சில ஆண்டுகளாகவே இந்த அனுபவத்தை எழுத நினைப்பதுண்டு ..
சகோதரி Vidya Subramaniam பதிவை பார்த்தவுடன் எழுதி விட்டேன் நன்றி சகோதரி