அனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி-5
புகைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி (பகுதி-1), புகையிலைத் தொழில்
புள்ளிவிவரங்கள் (பகுதி-2), ஏன் விட்டொழிக்க வேண்டும் (பகுதி-3), அரசு எடுக்கும் நடவடிக்கைகள் (பகுதி-4) ஆகியவை
குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
இந்தப் பதிவில் புகைப்பதை
விட்டொழிப்பதற்கான ஆலோசனைகளைப் பார்ப்போம். அதற்கு முன்னதாக, புகைப்பழக்கத்தால்
ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கியாக வேண்டும். ஆயினும், நிறுத்துவதற்கான
ஆலோசனைகளை அறியும் ஆவலுடன் இருப்பீர்கள் என்பதால், சுருக்கமாகத் தருகிறேன்.
விளக்கமாக பிறகு பார்க்கலாம்.
சிகரெட்டால் விளையும் தீமைகள்
- புகையில் இருக்கும் விஷப்பொருட்கள் குருதியில் கலக்கின்றன. அதனால் இரத்தம் கெட்டியாகும், இரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்; இரத்த அழுத்தமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும், அதனால் இதயம் வழக்கத்தைவிட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்; இரத்தக் குழாய்கள் சுருங்கும், அதனால் உடலின் பல பகுதிகளுக்கும் போய்ச்சேர வேண்டிய இரத்தத்தின் அளவு குறையும்; அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்.
- வயிற்றுப் புண்கள் அல்லது வயிற்றுப் புற்றுநோய் ஆபத்துகள் அதிகரிக்கும். உணவுக்குழாயின் ஈசோஃபோகஸ் வால்வு லூசாகி விடும், அதனால் வயிற்றுக்குள் போன உணவுப்பொருள் மேலே திரும்பி வரும். குடலுக்குள் சுரந்த அமிலத்தன்மையுடன் இருக்கும் அநத உணவு தொண்டை மற்றும் உணவுக்குழாயைப் பாதிக்கும்.
- சிறுநீரகப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கும்.
- உடலுக்கு இரத்தம் தேவையான அளவு போகாத்தால் தோல் பாதிக்கப்படும், குறைந்த வயதிலேயே முதிர்ந்த தோற்றம் காட்டும். தோலில் சுருக்கம், முகத்தில் மாற்றம் எல்லாம் சேர்ந்து 10-20 வயது அதிகமாக்க் காட்டும்.
- எலும்புகள் பலவீனமாகும்.
- மூளைக்கு போதுமான ரத்தம் போய்ச்சேராதபோது, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம். மூளைக்குள் இரத்தக்குழாய் வெடிக்கலாம். அதனால் பக்கவாதம் அல்லது செயலிழப்பு ஏற்படக்கூடும்.
- நுரையீரல்தான் பெரிதும் பாதிக்கப்படும். இருமல், சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா என வேதனைகள் தொடரும். நுரையீரல் புற்றுநோய் காரணமான உயிரிழப்புகளில் 84 சதவிகிதம் புகைப்பதன் தொடர்புடையது.
- வாயில் துர்நாற்றம். குழந்தைகளையோ வாழ்க்கைத்துணையையோ கொஞ்ச முடியாது. வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரக்கூடும்.
- நாக்கு சுவை உணர்வை இழக்கும். மூக்கு வாசங்களைப் பிரித்து உணரும் திறனை இழக்கும்.
- பாலுறவு இன்பத்தில் உச்சத்தை அடைய முடியாது. மலட்டுத்தன்மை அதிகரிக்கும்.
இன்னும் பலவற்றை எழுதிக்கொண்டே போகலாம். (படத்தில் பார்க்கவும்) முக்கியமான
சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். இத்தனை தீமைகளும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும்போது,
சொந்தக் காசில் எதற்கு சூனியம் வைத்துக்கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்,
செயல்படுங்கள், சிகரெட்டை விட்டொழியுங்கள்.
புகைப்பதை நிறுத்த சில ஆலோசனைகள்
• தினமும் எத்தனை சிகரெட் புகைப்பவராக இருந்தாலும் சரி, சிகரெட்
எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பேன்; அப்படியே
நிறுத்தி விடுவேன் என்று நினைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது என்று முடிவு
செய்தால் ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். படிப்படியாக நிறுத்துவது என்பதெல்லாம் சாத்தியமில்லை.
• புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது என உறுதியாக முடிவு
செய்தால், உறுதி எடுத்த அந்தக்கணமே கையில் இருக்கிற சிகரெட்டுகளை உடைத்துத்
தூக்கியெறியுங்கள்.
• சிகரெட்டை நிறுத்துவதென முடிவு செய்த பிறகும் மனதளவில்
நீங்கள் உறுதியாக இல்லை, கால அவகாசம் தேவைப்படுகிறது என்றால், உங்கள் பிறந்தநாள்,
மணநாள், அல்லது பிள்ளைகளின் பிறந்தநாள் போன்ற ஏதேனுமொரு விசேட நாளில் விட்டொழிக்க
முடிவு செய்யலாம். அவர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஒரு விஷயம் - சிகரெட்டை
விட்டொழித்த நாள்தான் மிகச்சிறந்த விசேட நாள் என்பதை மறந்து விடாதீர்கள்.
• புகைப்பதை விட்டொழிப்பது என்று முடிவு செய்து துவங்கிய
பிறகு, எதற்கும் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று சிகரெட்டை கையிருப்பில்
வைத்திருக்காதீர்கள். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து
விடுங்கள்.
• புகைப்பதை நிறுத்தப்போகும் செய்தியை உங்கள்மீது
அக்கறையுள்ள, உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். “நான்
சிகரெட்டை விடப்போகிறேன், இந்த சோதனையான நேரத்தில் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுத்து
என் முயற்சியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று குடும்பத்தாரை / நண்பர்களை
வேண்டுகிறோம். உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவும்
அளிப்பார்கள். நிறுத்தியபிறகு சொல்லிக்கொள்ளலாம் என்றும் சிலர் நினைக்கக்கூடும்.
மிக உறுதியாக இருந்தால் இது வெற்றியும் தரலாம். ஆனால் பொதுவாக, யாருக்கும்
சொல்லாமல் நிறுத்தும் முயற்சிகளில் பலன் அதிகம் இருக்காது. சொல்லிவிட்டால் அது
ஒருவகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது போலாகும். யாருக்கும் சொல்லாமல் நிறுத்தும்
முயற்சி, யாருக்கும் சொல்லாமல் மீண்டும் புகைக்கத் துவங்கவும் வைக்கலாம்.
• ஒவ்வொருவருக்கும் சிகரெட் பிடிக்கிற சில தருணங்கள்
வழக்கமாகி இருக்கும். உதாரணமாக, உணவுண்ட பிறகு, தேநீர் அல்லது காப்பி அருந்திய
பிறகு, மது அருந்தும்போது, சீட்டு விளையாடும்போது, நண்பர்களுடன்
கூடியிருக்கும்போது, காலாற நடக்கும்போது, செய்யும் வேலையில் ஏதேனும் சிக்கல் வரும்போது. இத்தகைய
சூழல்களை எதிர்கொள்ளும்போது சிகரெட் பிடிக்கத் தோன்றும். எனவே முடியுமானால்
இவற்றைத் தவிருங்கள். இந்தச் சூழல்கள் எல்லாவற்றையும் தவிர்க்க முடியாது. உணவு
உண்ணாமல் இருக்க முடியுமா அல்லது காபி குடிக்காமலோ, வேலைக்குப் போகாமலோ இருக்க
முடியுமா? எனவே, எவை இயலுமோ அவற்றைத் தவிர்க்கலாம். தவிர்க்க இயலாதவை விஷயத்தில்
கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்.
• குறிப்பிட்ட சில பானங்களை அருந்திய பிறகு சிகரெட் பிடிக்கப்
பழகியிருப்போம். அந்தப் பானங்களை தவிர்த்துவிட்டு வேறு பானங்களை அருந்திப்
பார்க்கலாம். உதாரணமாக, காபி அருந்திப் பழகியவருக்கு காபி அருந்தியதும் சிகரெட்
தூண்டல் இருக்கும். காபிக்குப் பதிலாக வேறு பானம் அருந்தலாம்.
• சிலவகை உணவுகளை – உதாரணமாக, அசைவ உணவு உண்டபிறகு சிகரெட்
புகைப்பது திருப்தி தருவதாக பழகிப் போயிருக்கும். சில நாட்களுக்கு அசைவ உணவு
வகைகளைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். மாற்றாக பழங்களை உண்ணலாம். நிறைய தண்ணீர் /
பழச்சாறு / பானங்களை அருந்துங்கள்.
• உணவுண்ட பிறகு அல்லது டீ குடித்ததும் வழக்கப்படி சிகரெட் பிடிக்க
முடியவில்லையே என்ற எண்ணத்திலிருந்து மனதை திசை திருப்புங்கள். தேநீர் அல்லது
உணவின் சுவையை ரசித்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment