அனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 3
2015இல் நடத்தப்பட்ட ஓர் கணக்கெடுப்பின்படி இந்தியாவில்
புகைப்பவர்கள் எண்ணிக்கை 12 கோடி. உலகில் புகைப்பவர்களின் எண்ணிக்கையில்
சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்திருப்பது இந்தியா. வீட்டுக்குத்
தெரியாமல் புகைப்பவர்கள் இந்தக் கணக்கெடுப்பின்போது உண்மையைக் கூறியிருக்க
வாய்ப்பில்லை என்பதையும் சேர்த்துப் பார்த்தால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே
இருக்கும். இந்த 12 கோடிப் பேரில், புகைக்கும் பெண்கள் எண்ணிக்கை 1.1 கோடி.
2010இல் புகைப்பழக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம். அதாவது, மொத்த
உயிரிழப்புகளில் 10 சதவிகிதம். புகைப்பவர்களில் பீடி குடிப்பவர்கள் 60 சதவிகிதம்,
சிகரெட் பிடிப்பவர்கள் 39 சதவிகிதம். ஆண்டுக்கு ஆண்டு சிகரெட்டுக்கு வரிகள்
அதிகரித்துக்கொண்டே வருகிறது. பீடிக்கான வரியைவிட சிகரெட்டுக்கான வரி 210
சதவிகிதம் அதிகம்; என்றாலும் மக்கள் தொகை அதிகரிப்புக்கேற்ப புகைப்பவர்கள்
எண்ணிக்கை அதிகரித்த்து என்றாலும், பீடி புகைப்பவர்கள் அதிகமாக சிகரெட்டுக்கு மாறி
வருகிறார்கள்.
புகைப்பவர்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்கள் – வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய்,
உணவுக்குழாய்
புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய். இவற்றில் நுரையீரல் புற்றுநோய் ஆபத்துதான்
புகைப்பவர்களுக்கு அதிகம். உலகில் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களில் 90 சதவிகிதம்
பேருக்கு புகைப்பழக்கமே காரணம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. (புகைப்பழக்கம் நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது என்று தனியாக ஒரு கட்டுரை வெளிவரும்.) இந்த மிரட்டல் புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புகைப்பழக்கத்தை எப்படி
நிறுத்தலாம் என்று பார்ப்போம்.
இணையத்தில் தேடினால், புகைப்பதை நிறுத்துவதற்கான பயனுள்ள
ஆலோசனைகள், தகவல்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. “எதுக்கு இந்த சனியனைப்
புடிச்சுட்டு அழறே... கான்சர் வந்து செத்துப்போவே” என்று நேரடியாக மிரட்டாமல்,
உளவியல் ரீதியாகப் புரியவைக்கும் மென்மையான மொழியில், ஆலோசனைகள் கிடைக்கின்றன.
எல்லாம் ஆங்கிலத்தில்தான். புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கும்
நாடுகளில் முதன்மையானவை ஆசிய நாடுகள்தான். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான்,
பங்களாதேஷ் போன்றவை. இந்த நாடுகளில் உள்ள மக்களின் மொழிகளில் புகையிலை / புகைப்பழக்கத்துக்கு
எதிரான தகவல்கள் கிடைக்காதிருப்பது துரதிருஷ்டம்தான். இங்கே கிடைப்பவை எல்லாம்
பெரும்பாலும் மிரட்டல்கள்தான். பொது இடங்களில் புகைக்கக்கூடாது போன்ற சட்டங்களால் மட்டும் புகைப்பழக்கத்தை ஒழித்துவிட முடியாது. அது பாசிவ் ஸ்மோக்கிங் எனப்படுகிற - புகைப்பவர்களால் அடுத்தவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்பை மட்டுமே குறைக்கும்.
புகைத்தல் என்பது வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய்.
புகைப்பவன் ஒரு நோயாளி. தான் நோயாளி என்று அறியாத நோயாளி. புகைப்பவரை ஒரு நோயாளியைக்
கையாள்வது போல எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.
என்னைப்போலவே புகைத்துக்கொண்டிருந்த நெருங்கிய நண்பர்கள்,
உறவினர்கள் பலர் முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். பள்ளிப்பருவ நண்பன் மாணிக்கம்,
மைத்துனர் கலீல், கம்யூனிஸ்ட் தோழன் இளசை எஸ்.எஸ். கணேசன், தில்லி நண்பர் சேது
ராமலிங்கம் என பலர் தாமாகவே நிறுத்தி விட்டார்கள். இப்படி ஒவ்வொருவராக முற்றிலும்
நிறுத்திவிட்ட பிறகு, நானும் நிறுத்துவது குறித்து குறைந்தது 5 ஆண்டுகளாக யோசித்து
வந்தேன். புகைப்பழக்கம் தொடர்பான பல கட்டுரைகளைப் படித்தேன், பலவற்றை கணினியில்
சேமித்து வைத்தேன். பேஸ்புக்கில் ஈடுபாடு அதிகரித்தபிறகு, பெங்களூரில் வசிக்கும்
தோழி கீர்த்திகா, சிகரெட்டை விடுமாறு மிகவும் வற்புறுத்தினார். அதிஷா போன்றவர்கள்
சிகரெட்டை நிறுத்தியதாக அறிந்ததும் எனக்கும் வேகம் பிறந்தது. அப்போதுதான்
என்னிடம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை வெளியிட்டேன். சிகரெட்டைக்
குறைத்து, அதில் மீதமாகிற பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்குச் செலவழிப்பேன் என்று
உறுதி பூண்டேன். எண்ணிக்கையைக் குறைப்பதும் அதிகரிப்பதுமாக மூன்று ஆண்டுகள்
கடந்தன. இந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்த நாளன்று ரயில் பயணத்தின்போது சிகரெட்டை
நிறுத்த முயற்சி செய்து பார்த்தேன். பத்து மணி நேரத்தில் மீண்டும் புகைக்கத்
துவங்கி விட்டேன்.
செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி. மாலை நேரம். எதையோ வாசித்துக்
கொண்டிருக்கும்போது, சிகரெட்டை விட்டொழிக்கலாமே என்ற யோசனை திடீரென வந்தது.
ஏற்கெனவே படித்திருந்த வழிமுறைகள் எல்லாம் வரிசையாக நினைவில் அலைமோதின. அந்த
நேரத்தில், சிகரெட் பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகளும், மேசையில் லைட்டரும்
ஆஷ்டிரேயும் இருந்தன. புகைப்பழக்கத்தை விட்டொழிப்பதற்கான வழிகாட்டல்களில் முதலாவதாகச்
சொல்லப்படுவது – சிகரெட்டை விடப்போகிறோம் என்பதை நமக்கு நெருங்கியவர்களுக்குச் சொல்ல
வேண்டும்; அதன் மூலம் நமக்கு நாமே ஒரு அர்ப்பணிப்பை உருவாக்கிக் கொள்கிறோம். நான்
சிகரெட் விடப்போகிறேன், இந்த நேரத்தில் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுத்து என்
முயற்சியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று நம்மீது அக்கறையுள்ள குடும்பத்தினரை / நண்பர்களை
வேண்டுகிறோம். இந்த வழிமுறையை கைக்கொள்வது என்று முடிவு செய்ததும் எனக்கு நினைவில்
வந்தவர்கள் பேஸ்புக் நண்பர்கள். வழிகாட்டல்களில் இரண்டாவது விஷயம் – கையில் சிகரெட் பாக்கெட்
வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
“கையில் இருக்கும் இரண்டு சிகரெட்டுகள்தான் கடைசி, அத்துடன் புகைப்பழக்கத்தை
விட்டொழிக்கப்போகிறேன்” என்று பேஸ்புக்கில் எழுதினேன். “விட்டொழிப்பது என்று முடிவு
செய்தால் அந்த இரண்டு மட்டும் எதற்கு? அதையும் எறிவதுதானே?” என்று கேட்டார் நண்பர்
ஸ்ரீதர். கேள்வியின் நியாயம் புரிந்தது. சிகரெட் பாக்கெட், லைட்டர், ஆஷ்டிரே மூன்றையும் துணைவியார் கையில் கொடுத்து,
குப்பையில் போடச் சொன்னேன். மற்ற மேசைகளில் தேடி, மேலும் இரண்டு லைட்டர்களையும் எடுத்துக்கொடுத்தேன். 28 ஆண்டுகால மணவாழ்க்கையில் நம்பவே முடியாத வியப்பை
அவருடைய பார்வை வெளிப்படுத்தியது. ஒரு திடீர் கணத்தில் தூண்டலால் உந்தப்பட்டு
எடுத்த முடிவுதான் அது, ஆனால் அந்த முடிவில் உறுதியாக இருப்பதென முடிவு செய்தேன்.
சிகரெட் விட்டொழிக்கும் முயற்சிக்கு ஏராளமானோர் வாழ்த்தினார்கள். பலர் என்னுடன் சேர்ந்து தானும் விட்டொழிக்க
முன்வந்தார்கள். அதன்பிறகு சிகரெட்டின் தீமைகள் குறித்து தொடர்ந்து எழுதினேன்.
பலருக்கு தொலைபேசி வழியிலும், உரையாடல் வழியிலும் ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்தேன்.
சிலர் என்னோடு சேர்ந்து முற்றிலுமாக நிறுத்தினார்கள். சிலர் நிறுத்தியபிறகு
மீண்டும் தொடர்ந்தார்கள், மீண்டும் நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த
அனுபவங்களை வைத்து, படித்த கட்டுரைகளிலிருந்தும் தகவல்களை சேர்த்து, புகைப்
பழக்கத்தை எப்படி விட்டொழிக்கலாம் என்று சுருக்கமாகத் தருகிறேன்.
Good sharre
ReplyDelete