Thursday, 24 November 2016

பணத்தாள் நீக்கம் என்னும் கொடுங்கனவு

எம்.எஸ். ஸ்ரீராம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்த டீமானிடைசேஷன் என்னும் நடவடிக்கையின் விளைவுகள் வெளித்தெரியத் துவங்கி விட்டன. ஆனால், நமக்குக் காணக் கிடைப்பது நம் அண்டைப் பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகள் மட்டுமே பெரும்பாலும் ஊடகங்கள் சென்றடையக்கூடிய நகர்ப்புறப் பகுதிச்செய்திகள் மட்டுமே.

ஏதோவொரு கிராமத்தில் காத்திருக்கும் சாமானியர்கள் எப்படி அடி வாங்குகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நாட்கள் செல்லச்செல்ல வேளாண்மைச் சந்தைகள் எப்படி சீர்குலையும், சரக்கு லாரிகள் எப்படித் தேங்கி நிற்கும், பொருளாதாரச் செயல்பாடுகள் எப்படி மந்தமடையும் என்பதையெல்லாம் பார்க்கப் போகிறோம். நாட்டின் நன்மைக்காக இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று நமக்குக் கூறப்படுகிறது. இந்த வாதம் பெரும்பாலும் அபத்தமானது. கணக்கில் வராத செல்வம் வைத்திருக்கிறவர்களை இது பாதிக்கும் என்றாலும், நேர்மையாக வரி செலுத்துபவரை அதைவிடப் பன்மடங்கு பாதிக்கிறது.

பண நோட்டின் முக்கியத்துவம் என்பது, அதை மாற்றக்கூடிய தன்மையில்தான் இருக்கிறது. (பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கலாம், பொருளைக் கொடுத்து பணத்தை வாங்கலாம், பண நோட்டைக் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கலாம்.) இதர எல்லா சொத்துகளும் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சொத்துகள் அவற்றுக்கு உடைமையாளன் என்ற அடையாளம் உண்டு. செல்பேசியோ, சீறிப்பாயும் மோட்டார் பைக்கோ, அந்த சொத்துக்கு உரிமையாளன் என்ற அடையாளம் கொண்டவை. ஆனால் பண நோட்டு என்பது, அதை வைத்திருப்பவருக்குச் சொந்தமானது, கை மாறும்போது மாறுபவருக்குச் சொந்தமாகிறது. அரசு அறிவித்த திடீர் நடவடிக்கை, மாற்றப்படக்கூடிய சொத்தினை குறிப்பிட்டதொரு நிலைச் சொத்தாக மாற்றுகிறது சிறிது காலத்துக்குத்தான் என்றாலும்கூட, பண நோட்டுகள் வைத்திருப்பவரின் அடையாளத்துடனும் வருவாயுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்குவோரின் விரலில் மை வைக்கும் அபத்தமான செயல், பண நோட்டின் இயல்பையே மாற்றுகிறது. கணக்கு வைக்கப்பட்டு, வரி விதிக்கப்படக்கூடியதாக கையில் இருக்கும் வருவாய் மற்றும் பரிமாற்றத்துக்கான ஊடகமாகச் செயல்படுகிற, கையில் வைத்திருக்கிற பண நோட்டு வருவாய்-பண நோட்டு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு டிரைவரும், தான் சிவப்பு விளக்கை மீறவில்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அதே அளவுக்கு அபத்தம்தான் தன்னிடம் இருக்கும் பண நோட்டு நேர்மையான வழியில் வந்ததுதான் என்று நிரூபிக்க வேண்டும் என்று குடிமக்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைப்பதும். பண நோட்டில் அரசின் உறுதிமொழி இருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை, “இந்த ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபருக்கு ..... ரூபாய் தருவதாக உறுதியளிக்கிறேன்என்று பண நோட்டில் எழுதப்பட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட அந்த உறுதிமொழியை உடைத்தெறிந்து விட்டது.

செலுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட காலத்தில் செலுத்தப்படாத கடனுக்கு டிஃபால்ட் என்று பெயர். குறுகிய காலத்துக்கே என்றாலும், தன் குடிமக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறி மிகப்பெரிய தவறிழைத்ததாக டிஃபால்டராக இருப்பது அரசுதான். பண நோட்டு வைத்திருப்பவருக்கு அதற்கான தொகை தராதபோது, ரிசர்வ் பேங்க் தனது உறுதிமொழியிலிருந்து டிஃபால்ட் ஆகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு அந்த உறுதிமொழியை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்வதே மோசமானதுதான்; ஆனால், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட, கணக்கில் வைக்கப்பட்ட பணத்தைக்கூட வாடிக்கையாளர் தன் விருப்ப்ப்படி பெற முடியாது என்று சொன்னால், அது தீயது, ஒழுக்கக்கேடானது.

திரைப்படத்துக்கு, கோவிலில் தரிசனத்துக்கு, மதுபானம் வாங்குவதற்கு நிற்கிறபோது தன்னுடைய சொந்தப்பணத்துக்காக வரிசையில் நின்று தேசபக்த பட்டயத்தை வாங்கி ஒட்டிக்கொள்ளக்கூடாதா என்று கேட்கிறார்கள். இங்கே முக்கியமான கேள்வி எத்தனை காலம் நிற்க வேண்டும்? எப்போது எனக்கு அந்த தேசபக்தப் பட்டயம் கிடைக்கும்?

பணத்தாள் நீக்க நடவடிக்கை ஆரம்பித்தது முதலாகவே நெருக்கடியின் பரிமாணங்கள் சாமானியர்களுக்குக்கூடத் தெரிந்து விட்டது. இப்படியொரு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும்போது இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் : மாற்றாகத் தர வேண்டிய பண நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சிடப்பட்டு, சுற்றுக்கு விடப்படக்கூடிய அளவுக்கு கையிருப்பில் தயாராக உள்ளதா? குறைந்த கால அவகாசத்துக்குள் இதைச் செய்துமுடிக்கக்கூடிய நெட்வொர்க்கும் லாஜிஸ்டிக்சும் தயாராக இருக்கிறதா?இந்த இரண்டு கேள்விகளுக்கும் கிடைக்கிற விடை இல்லைஎன்பதே. ஒற்றை வரி அறிவிப்பால் செல்லாதென ஆகிவிட்ட பண நோட்டுகளுக்கு ஈடாக புது நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க 2017 மே மாதம் வரை காலம் எடுக்கும் என்று திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சௌமித்ர சவுத்ரி கணக்கிட்டுக் கூறியிருக்கிறார். தேசபக்தியைக் காட்ட இந்த ஆறு மாதங்கள் போதுமா? ஆறு மாதங்களுக்குப் பிறகாவது நம் தேவைக்கேற்றபடி, அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ப சில்லறையாக ரொக்கப் பணம் கிடைக்குமா?

ரூபாய் நோட்டு விநியோக லாஜிஸ்டிக்ஸ் இப்போது அதன் முழுத்திறனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், பயன் முழுக்க்க் கிடைக்கவில்லை என்பதை எல்லா வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம்களிலும் பார்க்க முடிகிறது.

இந்த துல்லியத் தாக்குதலுக்குஅரசு இயந்திரம் தயாராக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கையில் போதுமான அளவுக்கு பண நோட்டு இருப்பு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், மாற்றித் தர நான்கு மாதங்கள் பிடிக்கும் என்பது கடந்தவார செயல்களிலிருந்து புரிகிறது. இது மிக மோசமான திட்டமிடலாகும்.

மோசமான திட்டமிடல், மோசமான செயல்படுத்தல் இவற்றின் விளைவுகள் எல்லாருக்கும் தெரிகின்றன. சுமார் 60 பேர் உயிரிழந்தார்கள். அடுத்தடுத்து வந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை, மனித்த் தவறின் விளைவான பேரிடரையும் எதிர்கொள்ளப்போகிறது. விளைபொருட்களை விவசாயிகள் விற்க முடியவில்லை, இருப்புகளை லாரிகள் ஏற்றிச்செல்ல முடியவில்லை. தற்போதைக்கு உணவுப் பொருட்கள் மற்றும் விலைகளில் இதன் தாக்கம் இருக்கும்.

ஜன்-தன் திட்டத்தில் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டபோது, ஏழைகள் வங்கிச்சேவையில் சேர்க்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பயன் கிடைக்கும், தொழில்நுட்பத்தின் வரம் என்றெல்லாம் பார்ட்டிக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளி தன் மனைவி/தந்தை/சகோதரன் கணக்கில் பணம் போட முடியாது. அப்படிச் செய்வதற்கு அங்கீகாரக் கடிதம் தேவை என்றாகி விட்டது.

ஏழை குடும்பத்தலைவி அவசரத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை பயன்படுத்த முடியவில்லை. அடையாள அட்டை இல்லை, அல்லது வங்கிக்கணக்கு இல்லை. அரசு திருதிருவென விழிப்பது நாளும் பல்டியடிக்கும் அதன் அறிவிப்புகளிலிருந்தே தெரிகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து 4000 ரூபாய் மாற்றுவதை ஒரு தடவைதான் செய்யலாம் என்று வரம்பு ஏதுமில்லை என்று சொன்னார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், லாஜிஸ்டிக்ஸ் காரணமாக, வங்கிகள் தேவைப்பட்டால் இதை கட்டுப்படுத்தலாம் என்றார். அடுத்த நாளே ஒரு முறைதான் மாற்ற முடியும் என்றானது. அத்துடன். விரலில் மை வைக்கப்படும் என்றார்கள். அடுத்த நாளே அது 2000தான் என்றாகி விட்டது.

இப்போது பெட்ரோல் பம்ப்களில் டெபிட் கார்டுகளை தேய்த்து பணம் எடுக்கலாம் என்கிறார்கள். (எல்லா பெட்ரோல் பம்ப்களிலும் இது கிடையாது.) ஓரளவுக்குத்தான் பயன்தரும் என்றாலும் இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், புழக்கத்துக்கான சில்லறை நோட்டுகள் இல்லை என்ற அடிப்படைப் பிரச்சினையை இது தீர்க்கவில்லை. இப்போதைய குழப்ப நிலையை நியாயப்படுத்த அரசு கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் ரகசியம். ஆக, ரகசியம் என்ற காரணத்தால், அரசில் முடிவெடுத்தவர்கள் அறிவார்ந்த ஆலோசனைகள் அல்லது கருத்துகளை கேட்கவே இல்லை என்று தெளிவாகிறது. அப்புறம் குழப்பநிலை ஏற்பட்டதில் வியப்பேது?

பணநோட்டுப் பற்றாக்குறையும், அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பமும் சேர்ந்து, மோசடிக்காரர்கள் சந்தையில் இருக்கும் சமநிலையின்மையைப் பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது. இந்த துல்லியத் தாக்குதல்கணக்கில் வராத வருவாயை இன்னும் உருவாக்குகிறது இல்லையா? இதுதான் கேவலமான முரண்.

*

ஆட்டுமந்தை ஒன்று இருந்தது. எல்லா ஆடுகளுக்கும் கம்பளி தரப்போவதாக அதன் தலைமை ஆடு அறிவித்தது.
எல்லா ஆடுகளும் மகிழ்ச்சிக் கூத்தாடின
கம்பளிக்கான ரோமம் எங்கிருந்து கிடைக்கும்?” என்று ஒரு ஆடு கேட்கும் வரை.
-  ஆங்கிலத்தில் டிவிட்டரில் வந்த துணுக்கின் தழுவல்


No comments:

Post a Comment