? சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் அவசரகோலத்தில் செய்து
விட்டார்கள் என்று சொன்னீர்கள். என்ன முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?
•-• பருப்பு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கும் இன்றைய
விலைவாசிச் சூழலில் 500 ரூபாய் என்பது பெரிய மதிப்பு உடையது அல்ல. எனவே அதை செல்லாமல் ஆக்கியிருக்க
வேண்டாம், 1000 ரூபாய் நோட்டோடு நிறுத்தியிருக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86% நோட்டுகள் 500/1000 ரூபாய் நோட்டுகள்தான். மீதி
14% நோட்டுகள்தான் 100/50/20/10 ரூபாய் நோட்டுகள். 86 சதவிகித நோட்டுகளை
திடீரென்று ஓர் இரவில் செல்லாது என அறிவித்து விட்டார்கள். அடுத்த நாளிலிருந்து,
அந்த 86% நோட்டுகளின் இடத்தை 14% நோட்டுகள் தீர்த்து வைக்க
வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? இது ஒரு சிக்கல்.
இரண்டாவது சிக்கல், வங்கிகளில் நோட்டுகள் இல்லை, ஏடிஎம்களில் பணம் எடுக்க
முடியாது என்று தெரிந்ததும், 100 ரூபாய் நோட்டு வைத்திருந்தவர்கள் எல்லாரும் அவரவர் தேவைக்காக
பத்திரப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது இயற்கைதான். எனவே, இருக்கிற நோட்டுகளும்
புழக்கத்தில் இல்லாது போயின.
மூன்றாவது சிக்கல், புதிதாக அறிமுகம் செய்த 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே
உடனடி புழக்கத்தில் வந்தன. 500 ரூபாய் நோட்டுகள், இன்று வரை வந்து சேரவில்லை. ஆக, பழைய ரூபாய் நோட்டுகளை
வங்கியில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றினாலும்கூட அதைப் பயன்படுத்த முடியாத நிலை. கடைகளில்
முழு 2000க்கும் பொருட்கள் வாங்கினால் மட்டுமே பயன்படுத்த முடியும். இது கையில் பணம்
இருந்தும் செலவுக்குப் பயன்படாத நிலை. நாயிடம் கிடைத்த தேங்காய் நிலை. இதுதான்
மக்களை பாதித்தது. ஒருவாரம் ஆகிவிட்டது. இப்போதும் நிலைமை அப்படியேதான்
இருக்கிறது. கீழே இருக்கும் படம் நேற்று எடுத்தது. மகள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் எதுவும் கிடைக்காமல் திரும்பி வந்த வங்கியில் காத்திருந்த ஆண்கள் வரிசை இது.
வங்கிகளில் நாளுக்கு 4000 எடுக்கலாம் என்பதை 4500 எடுக்கலாம் என்றார்கள்.
ஆனால் நடைமுறையில் 2000தான் தர முடியும் என்று பல வங்கிகளில் சொல்கிறார்கள். இருக்கிற பணத்தை இயன்ற
வரையில் பலருக்கும் பகிர நினைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள். ஆனால் மக்கள் அவர்களைக்
குற்றம் சொல்லுகிறார்கள். அரசு செய்த குளறுபடிக்கு வங்கி ஊழியர்கள் திட்டு வாங்க
வேண்டும்.
இன்று முதல் இன்னும் சிக்கல். வங்கியில்
பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான வரம்பு 4500 என்று இருந்ததை 2000 ஆகக் குறைத்து விட்டார்கள்.
முன்னேற்பாடுகள் குறித்து சிந்திருந்தால் இப்படி நாளுக்கு ஒருவிதமாய் குழப்புவார்களா?
? இதற்கு என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?
•-• நான் பொருளாதார நிபுணன்
அல்ல. இந்த நடவடிக்கை பயன் தராது என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னதை முன்னரே
சுட்டியிருக்கிறேன். எலியைக் கொல்ல வீட்டுக்குத் தீ வைத்த கதை இது.
பாதிப்பைக் குறைக்க என்ன செய்திருக்கலாம்? 2000 ரூபாய் நோட்டுகள் எத்தனை
அடிக்க உத்தேசித்துள்ளார்களோ, அந்த எண்ணிக்கையைக் குறைத்து, அதற்கு நிகராக 100 ரூபாய் நோட்டுகளை முன்னரே அச்சிட்டு நாடு முழுவதும் அனுப்பியிருக்கலாம். பழைய
நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், தட்டுப்பாட்டைக்
குறைப்பதற்காகவும் அனுப்புகிறோம் என்று சொன்னால் யாருக்கும் சந்தேகமும்
வந்திருக்காது. 500/1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்த நேரத்தில் நோட்டுகளின் தட்டுப்பாடும்
ஏற்பட்டிருக்காது. 2000 ரூபாய் நோட்டுகளையும் போதுமான அளவுக்கு வங்கிகளுக்கு அனுப்பியிருக்க
வேண்டும். அப்படிச் செய்திருந்தால், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தமது கணக்கிலிருந்து
எடுப்பதற்கு வாரம் 20000 என உச்சவரம்பு தேவைப்பட்டிருக்காது. புழக்கத்தில் குறைபாடும்
ஏற்பட்டிருக்காது. இத்தனை குழப்பங்களும் நேர்ந்திருக்காது. தற்கொலைகளும்
நிகழ்ந்திருக்காது. நம்முடைய ரூபாய் நோட்டு அச்சகங்களில் ஒரு மாதத்தில் 300 கோடி நோட்டுகள்தான் அச்சிட
முடியும். தேவைப்படுவது 2100 கோடி. எனவே, ஏழு மாதங்கள் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார் சிதம்பரம். இதுகுறித்து
அரசுத்தரப்பிலிருந்து பதிலே காணோம். அதாவது, தேவை-இருப்பு-உற்பத்தி
குறித்து இவர்கள் சிந்திக்கவே இல்லை. எந்த முன்னேற்பாடும் செய்யாமல் திடீரென
அறிவித்தார்கள் என்பதைத்தான் அடுத்து நடந்த சம்பவங்களும் காட்டின.
? அடுத்து நடந்த சம்பவங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்?
•-• 500/1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென
அறிவிக்கும்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் அதை வெள்ளையாக்கப்
பார்ப்பார்கள் என்று ஊகிக்க வேண்டாமா? அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? 8ஆம் தேதி இரவு திடீரென
அறிவித்ததும், மக்கள் நகைக்கடைகளுக்கு ஓடினார்கள். விடிய விடிய வியாபாரம் நடந்தது.
ரயில்களில் அதிக கட்டணம் உள்ள முதல்வகுப்பு ஏசி டிக்கெட்டுகளை புக்கிங் செய்தது.
இப்படி பலவிதமாக மக்கள் தமது பணத்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். இதையாவது
விடுங்கள். விஷயம் தெரிந்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் ஏடிஎம்கள் பற்றி விஷயமே தெரியாமல்
இருந்திருக்கிறார்களே! ஏடிஎம்கள் விஷயத்தில் முதலிலேயே கவனம் செலுத்தியிருந்தால்
நாட்டில் இவ்வளவு குழப்பம் வந்திருக்காதே?!
? ஏடிஎம்கள் விஷயத்தில் அவர்களுக்கு என்ன தெரியவில்லை,
அல்லது அப்படி என்ன
குழப்பம்?
•-• ஏடிஎம்களில் இதுவரை இருந்தவை
1000/500/100 ரூபாய் நோட்டுகள். இப்போது 1000, 500 நோட்டுகள் செல்லாது. 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே
வைக்க முடியும். ஆக, பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து 1000 ரூபாய் நோட்டுகள் இருந்த இடத்தில், 100 ரூபாய் நோட்டுகள் நூறு
தேவைப்படும். சராசரியாக ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 நோட்டுகள் வைக்கலாம். 100 ரூபாய் நோட்டுகளுக்கு
ஏற்கெனவே பற்றாக்குறை, அப்படியே நோட்டுகள் இருந்தாலும் ஏடிஎம்களில் வைக்க இடம் இருக்காது. இதை
அவர்கள் முன்னரே ஊகித்திருக்க வேண்டும். சிக்கலை எதிர்கொள்ள போதுமான அளவுக்கு 100 ரூபாய் நோட்டுகளை முன்னரே
வங்கிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
அடுத்த குழப்பம், புதிய நோட்டுகளை வைக்க முடியாமல் போனது. இதுவரை இருந்த 1000/500 ரூபாய் நோட்டுகளின் அளவுகள்
வேறு. இப்போது வந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டின் அளவு வேறு. 1000/500 ரூபாய் நோட்டுகள் இருந்த இடத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்க
முடியாது. அதற்கு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும். சாப்ட்வேரிலும்
மாற்றங்கள் செய்ய வேண்டும். அதுபோக, 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பரவலாக வரவில்லை என்பதால்,
அதுவும்
வந்தபிறகுதான் இயந்திரங்களில் மாற்றங்கள் முழுமை அடையும். நாட்டில் உள்ள இரண்டு
லட்சத்துக்கு மேற்பட்ட இயந்திரங்களில் இந்த மாற்றங்களைச் செய்ய சில வாரங்கள்
ஆகும். இந்தச் சூழலில், முன்னரே யோசித்திருந்தால், குறைந்தபட்சம் புதிய நோட்டின் அளவையேனும் மாற்றாமல் இருந்திருக்கலாம்.
பெரியதொரு சிக்கல் குறைந்திருக்கும். ஆனால் அரசு இதைப்பற்றி யோசித்ததாகவே
தெரியவில்லை. ஓரிருநாளில் சரியாகி விடும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பெரிய
அளவுக்குதொழில்நுட்ப அறிவு இல்லாத என்னைப்போன்ற சாமானியர்கள் ஏடிஎம் சிக்கல் பற்றி
எழுதிய பிறகுதான், “ஆமாம், ஏடிஎம்களில் சிக்கல் இருக்கிறது, இதை சரிசெய்ய இரண்டு-மூன்று வாரங்கள் ஆகும்” என்றார் நிதியமைச்சர்.
இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் – இவர்கள் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அதிரடியாகச்
செய்திருக்கிறார்கள் என்று. இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ பிரச்சினை ஏற்பட, காவல்துறை தடியடி நடத்திய சம்பவங்கள் நிறையவே நடந்தன. இந்த வீடியோவைப் பாருங்கள். என்னதான் இருக்கட்டும், இப்படி முரட்டுத்தனமாக அடிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டா? இந்த நிலைமைக்கு யார் காரணம்?
? நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் இந்த சின்னச்சின்ன
விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமா? அவர்கள் நிர்வாகிகள்தானே?
•-• நிதியமைச்சருக்கு ஏடிஎம்
இயந்திரத்தின் செயல்முறை, சாப்ட்வேர் பற்றியெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் சிறந்த நிர்வாகி
என்ன செய்வார்? இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் முன்னால் வல்லுநர்களுடன் ஆலோசித்திருப்பார்.
என்னென்ன சிக்கல்களை எப்படி எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசித்திருந்தால்,
இதெல்லாம்
பிரச்சினைகள் ஆகியிருக்காது. நோட்டின் அளவுகளைக் குறைக்காமல் இருந்திருக்கலாம்.
சிறிய மொபைல் ஏடிஎம்களை நிறுவியிருக்கலாம். முன்னரே குறிப்பிட்டதுபோல 100 ரூபாய் நோட்டுகளை போதுமான
அளவுக்கு ஏற்பாடு செய்து ஏடிஎம்களின் தேவையைக் குறைத்திருக்கலாம். வல்லுநர்களுக்கு
இன்னும் பல யோசனைகள் வரக்கூடும். ஆனால் இவர்கள் தம் அரசியல் வட்டத்துக்கு வெளியே
அதிகம் ஆலோசித்த்தாகத் தெரியவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினை.
? ஆலோசித்திருக்க மாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
•-• சொல்லிக்கொண்டே போனால் தீரவே
தீராது. ஒரு ஏடிஎம்மில் ஒரு நாளுக்கு 2000 ரூபாய் எடுக்கலாம் என்றார்கள். என்னுடைய கணக்கில் 1500 ரூபாய்தான் இருக்கிறது,
அவ்வளவுதான் எடுக்க
முடியும் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு உடனே 1500 ரூபாய் தேவை இருக்கிறது.
ஆனால் ஏடிஎம்மில் 2000 ரூபாய் மட்டும்தான் இருக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? என் கணக்கில் பணம் இருந்தும்,
ஏடிஎம்மில் பணம்
இருந்தும், பயன்படுத்த முடியாத நிலை அல்லவா? அபத்தமாக இல்லையா? எவ்வளவு அபத்தமாக முடிவுகளை அறிவிக்கிறார்கள் என்பதற்கு
இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
ஏடிஎம்களில் நாளுக்கு 2000 ரூபாய் எடுக்கலாம் என்ற
வரம்பை 2500 எடுக்கலாம் என்று 13ஆம் தேதி அறிவித்தார்கள். 1. ஏடிஎம்கள் இயங்குவதற்கே 2-3 வாரங்கள் ஆகும் - 90 விழுக்காடு ஏடிஎம்கள் இயங்கவில்லை என்னும்போது இந்த அறிவிப்பால் என்ன பயன்?
புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து
விட்டன என்றார்கள். இன்றுவரையில் இவை வங்கிகளையோ ஏடிஎம்களையோ அடையவில்லை.
ஏடிஎம்களில் 2000 நோட்டுகள்தான் அதிகம். நூறு ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறை இருக்கும்போது
ஏடிஎம்களில் எப்படி 2500 ரூபாய் நோட்டுகள் எடுக்க முடியும்? 500 ரூபாய் எங்கிருந்து வரும்?
வங்கிகளிலும்
சில்லறை நோட்டுகள் இல்லை. 4500 ரூபாய் மாற்றலாம் என்றது அரசு. ஆனால் பல வங்கிகளில் 2000க்கும் மேல் தர முடியாது
என்று மறுத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இருக்கிற
நோட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க முயற்சி செய்தார்கள்.
ஆக, இவர்களுடைய அறிவிப்புகள், திட்டங்கள் எல்லாம் இப்படி அபத்தமாகவே இருக்கின்றன. கறுப்புப்பணத்தின் மீதான நடவடிக்கை என்றால் நவம்பர் 8ஆம் தேதி தடாலடியாக
அறிவித்தால்தான் செயல்படும், என்பதில்லை. முன்னேற்பாடுகள் செய்துவிட்டு சற்று பின்னரும்கூட
எடுத்திருக்கலாம். அதற்குள் ஒன்றும் முழுகி விடாது. பின் ஏன் இந்த அவசரம்? ஏனென்றால், இது கறுப்புப்பணத்தின் மீதான
நடவடிக்கை அல்ல. அரசியல் லாபம் தேடும் நடவடிக்கை.
? நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.
பெரியதொரு நோக்கத்துக்காக சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும் அல்லவா? இந்த அரசு நல்லதொரு நடவடிக்கை
எடுத்திருப்பதாகவே எல்லாரும் பார்க்கிறார்கள்.
•-• எப்போதும் சாமானிய
மக்கள்தான் தியாகங்கள் செய்ய வேண்டியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இந்த அரசு நல்லதொரு நடவடிக்கை எடுத்தது என்கிறீர்கள்.
இப்போது அரசை நடத்துவது பாரதிய ஜனதா கட்சி. இதே கட்சி 2014இல் எதிர்க்கட்சியாக
இருந்தபோது, என்ன சொன்னது தெரியுமா? கறுப்புப்பணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2005க்கு முற்பட்ட ரூபாய்
நோட்டுகளை ஒழிக்கலாம் என்று காங்கிரஸ் யோசித்தபோது, இது ஏழை மக்களை பாதிக்கும்
முயற்சி என்று கடுமையாகத் தாக்கியது இப்போது ஆளுகிற அதே பாஜகதான். “ரூபாய் நோட்டுகளை செல்லாதென
அறிவிக்கும் நிதியமைச்சகத்தின் நவீன நாடகம் எந்தப் பயனையும் தராது. கறுப்புப்பணம்
வைத்திருப்பவர்கள் மிக எளிதாக மாற்றி விடுவார்கள். உண்மையில் பாதிக்கப்படப்
போகிறவர்கள் சாமானிய மக்களும் பெண்களும்தான். படிப்பறிவு இல்லாத, வங்கிச் சேவைகளை அணுகும்
வசதியற்ற சாமானிய மக்கள்தான் இந்த திசைதிருப்பல் நடவடிக்கையால்
பாதிக்கப்படுவார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் ஏழை மக்கள், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்,
வாழ்க்கைக்காக
சேமித்து வைத்தவர்கள், ஆகியோர்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தால் கறுப்புப் பணத்தை ஒழியவே
ஒழியாது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் எந்த சிரம்மும் இல்லாமல்
மாற்றி விடுவார்கள். இந்தியாவில் 65 விழுக்காடு மக்கள் வங்கிக்கணக்கு இல்லாதவர்கள். அவர்கள் தமது பணத்தை
ரொக்கமாகவே வீட்டில் சேமித்து வைப்பார்கள். இவர்கள் பெரும்பாலும்
எழுத்தறிவற்றவர்கள், ஏழைகள், முதியவர்கள், கடைக்கோடிப் பகுதிகளில் வாழ்பவர்கள். இவர்கள்தான் தரகர்களால்
பாதிக்கப்படுவார்கள். ரூபாய் நோட்டுகள் பயனற்ற வெறும காகிதங்கள் என்ற மிரட்டலால்
பாதிக்கப்படுவார்கள்.” இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏழைகளைப் பாதிக்கும் நடவடிக்கையாக இருந்தது,
இப்போது நல்லதாக
மாறிவிட்டது எப்படி? இது அரசியல் நாடகமன்றி வேறேதும் இல்லை என்று இதிலிருந்து தெரியவில்லையா?
? அரசியல் நடவடிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நீண்டகால
நோக்கில் பயன் கிடைக்கும்தானே?
•-• இந்த நடவடிக்கையால் பெரிய பயன்
ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை என்பதுதான் உண்மை. பொருளாதார வல்லுநர்கள் சொன்னதும்
அதுவே. “பல கோடி மக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள், பல்லாயிரம் தொழில்களுக்கும்
வியாபாரங்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடிகள் இவற்றின் விளைவாக ஏற்படும் இழப்பைவிட
இதனால் கிடைக்கும் பயன் குறைவாகவே இருக்க முடியும்.” என்றார் உலக வங்கியின்
தலைமைப் பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான பாசு.
கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கு இப்போதைய சிக்கல்கள்
தற்காலிகம்தான். அவர்கள் மாற்று வழிகளை நன்றாகவே அறிவார்கள். பாதிகப்படுவது சாமானிய மக்கள்தான். சிக்கல்கள் தீர்ந்ததும் மீண்டும் கறுப்புப்பணம் உருவாகும். தீர்ந்ததும் என்ன, நேற்றே உருவாகி விட்டது. குஜராத்தில் துறைமுக ஊழியர் ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் ரொக்கமாக லஞ்சம் தரப்பட்டுள்ளது. அதுவும் புத்தம்புதிய 2000 ரூபாய் நோட்டுகள். சாமானிய மக்களுக்கு 2000 ரூபாய்க்கு மேல் மாற்ற முடியாது என்னும்போது, இவர்களுக்கு மட்டும் எப்படி கட்டுக்கட்டாகக் கிடைத்தது? ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால் லஞ்சம் ஒழியாது, ஊழல் ஒழியாது, கறுப்புப்பணம் ஒழியாது. — கறுப்புப் பொருளாதாரத்தின் வழிகளை அடைக்காமல் கறுப்புப்பணத்தை ஒழிக்க
முடியாது.
- தொடரும்
No comments:
Post a Comment