Friday, 23 January 2015

கிரேன் பேடி மாயைகள்




கிரண் பேடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது கிரேன் பேடி என்ற அடைமொழி. பிரதமரின் காரையே கிரேன் வைத்து அகற்றியவர் என்று ஒரு கதை உலவுகிறது. அவரும் அதை பல இடங்களில் சொல்லிக்கொள்ளவும், அதனால்தான் பழிவாங்கு நடவடிக்கையாக கோவாவுக்கு மறுநாளே மாற்றப்பட்டதாகும் சொல்லவும் செய்கிறார். உண்மை என்ன? நேற்று இரண்டு வலைதளங்களில் வந்த கட்டுரைகளிலிருந்து சுருக்கமாக இங்கே --

காரை கிரேன் வைத்து தூக்கிய சம்பவம் நிகழ்ந்தது கனாட் பிளேசில். சம்பவத்திற்கு உள்ளான கார் பிரதமர் அலுவலகத்துக்குச் சொந்தமானது. அப்போது பிரதமரும்கூட இந்தியாவிலேயே இல்லை. யாரோ ஒரு டிரைவர் தன் சொந்த வேலைக்கு காரை எடுத்துச் சென்று கடை முன்னால் பார்க் செய்திருக்கிறார். அதைப் பார்த்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சலான் வழங்கியிருக்கிறார். சலானை கடைக்காரருக்குக் கொடுத்திருக்கிறார். அது பிரதமர் அலுவலகத்தின் கார் என்று கடைக்காரர் சொன்ன பிறகும்கூட அதை திரும்ப்ப் பெறவில்லை.

இதுதான் நடந்தது. இதற்கும் கிரண் பேடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை. சலான் வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று கூறியதுதான் அவர் செய்த சாதனை. பத்திரிகைகள் ஊதிப்பெருக்க, கிரேன் பேடி இரும்பு மனுஷி என்பதான பெயர்கள் நிலைத்துவிட்டன. கிரேன் பேடி பட்டப்பெயர் இனிக்க, அவரை தன்னை கிரேன் பேடி என நம்பத் துவங்கி விட்டார்.

கிரண் பேடியின் வலைதளத்திலேயே இருக்கிற விவரம் - .... On 5 August, when Mrs Gandhi and her family members where away in the USA, a Traffic Sub-Inspector found a white Ambassador (DHD1817) wrongly parked outside the Yusufzai Market, Connaught Circus in the heart of the city. Only after he had made out a challan did he realize that it was the official car of the PM . The security men accompanying the car (which had gone there for repairs) pointed this out to the traffic officer. But he was adamant. Wrong parking was illegal, whether it is by a commoner or a VIP, he told the security men.

இந்தச் சம்பவத்தை அடுத்து, மறுநாளே கோவாவுக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறிக்கொள்கிறார். உண்மையில், சம்பவம் நடந்தது 5 ஆகஸ்ட் 1982. இதற்குப் பல மாதங்களுக்குப் பிறகு மார்ச் 1983இல்தான் கோவாவுக்கு மாற்றப்படுகிறார். அதுவும்கூட பழிவாங்கலாக அல்ல, கோவாவில் சோகம் மாநாடு மற்றும் விளையாட்டுப் போட்டிக்காக.

மற்றொரு கதை வழக்கறிஞர்கள் மீதான தடியடி நடவடிக்கை. இதுகுறித்தும் ஊடகங்களில் ஏற்கெனவே நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கிரண் பேடியின் நடவடிக்கை தவறு என்று விசாரணைக் கமிஷன் அறிக்கை அளித்து விட்டது. இருந்தாலும் அவர் வீராங்கனையாக முன்வைக்கப்படுவதும் அதை ரசிப்பதும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வசதியாக இருக்கிறது.

உண்மையில் கிரண் பேடி அரசியல் சலுகைகளைப் பெற்றவர் இல்லையா? அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவரா? தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாதவரா?

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஐபிஎஸ் ஆனதுமே பிரதமர் இந்திரா காந்தி அவரை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார். தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தங்கள் தொடர்ந்த போதும் அவருக்கு ஆதரவாக இருந்தவர் பூடா சிங்.

மிசோரம் மாநிலத்தில் பணியில் அமர்த்தப்பட்ட காலத்தில் அவர்மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. வடகிழக்கு மாநிலத்தவருக்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தன் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொண்டார். இதுகுறித்தும் இணையத்தில் நிறையவே விவரங்கள் கிடைக்கும்.

மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபைரோ இன்று எழுதியதிலிருந்து சில விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம். அவருடைய மொழியிலேயே --

சாமானிய மனிதனின் குறிப்பாக இளைஞர்களின் ஆதர்ச நாயகியாக இருக்கும் கிரண் பேடி அரசியலில் இறங்கிய உடனேயே ஏதோ முதல்வர் ஆகிவிட்டது போலவே ஆகி விட்டார். அவரை அறிந்த எனக்கு இதில் வியப்பு ஏதும் இல்லை. பிரதமர் நாற்காலியைப் பிடிக்கவும் அவர் ஆசைப்படக்கூடும். ஏன், கூடாதா என்ன? நியூ யார்க் போலீஸ் கமிஷனர் தியோடர் ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராக ஆகும்போது என் சகா கிரண் பேடி மட்டும் பிரதமர் ஆகக்கூடாதா என்ன... ?

ஹைதராபாதில் ஐபிஎஸ் பணியில் கிரண்பேடி சேர்ந்தபோதுதான் அவரை முதல்முதலாகப் பார்த்தேன். அவர் தேசிய அளவிலான டென்னிஸ் ஆட்டக்காரர். எனவே காவல் பணிக்கு ஏற்ற உடலமைப்பு அவருக்கு புதிதல்ல. அவருடைய உற்சாகமும் ஈடுபாடும் எனக்கு பெரும் வியப்பையும் ஆர்வத்தையும் அளித்தன.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் உள்துறை அமைச்சரகத்தில் இருந்தபோது கிரண் பேடியிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். ஹைதராபாதில் உள்ள காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பணியை ஏற்குமாறு வேண்டினேன். அப்போது அதன் இயக்குநராக இருந்த அலி அவர்கள், தன் பள்ளியில் பெண் பயிற்சியாளர் இருப்பது நல்லது என்று விரும்பினார். ஏனென்றால், அப்போது நிறைய பெண்கள் காவல்துறைக்கு வரத் துவங்கினர். கிரண் பேடி அந்தப் பணியை ஏற்றிருந்தால் அது எதிர்காலத்திற்கு மிகவும் பயன் தந்திருக்கும். ஆனால் கிரண் பேடி அதை ஏற்க மறுத்து விட்டார். அதன் பிறகு அவருடைய இடத்திற்கு மஞ்சரி என்பவர் நியமிக்கப்பட்டார்.

கிரண் பேடிக்கு தில்லியை விட்டுச்செல்ல இஷ்டமில்லை. தில்லியின் மருத்துவக் கல்லூரியில் தன் மகளுக்கு இடம் கிடைத்ததும் காரணமாக இருக்கலாம். கிரண் பேடி மிசோரம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது வடகிழக்கு மாநில மிசோ பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை தன் மகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதால் கிடைத்தது இந்த இடம். அப்போது அதிருப்திக்குரல்கள் எழுந்தன. அவற்றை எல்லாம் மிக சாதுர்யமாக எதிர்த்து பதிலடி கொடுத்தார் கிரண் பேடி. அந்த சாதுர்யம் அரசியலில் இனிமேலும் அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அவரைப் பற்றி நினைவு வருகிற மற்றொரு சம்பவம் மகாசெசே விருது. குறிப்பிட்ட ஆண்டில் என் நண்பர் ஒருவர் என்னுடைய சுய விவரத்தை அளிக்குமாறு கேட்டார். அந்த ஆண்டு இந்தியாவிலில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு மகாசெசே விருது வழங்க பிலிப்பைன்ஸ் விருதுக் குழு முடிவு செய்திருந்தது. அப்போது, என் பெயர் தவிர இன்னொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிய வந்தது. விருது அறிவிக்கப்பட்ட போதுதான் அது கிரண் பேடியின் பெயர் என்று தெரிந்தது. உடனே அவரை அழைத்துப் பாராட்டினேன்.

அப்போது அவர், விருதில் கிடைக்கும் பணத்தில் ஒரு டிரஸ்ட் துவக்கப் போவதாகவும், அதில் என்னையும் ஓர் அறங்காவலராக இருக்குமாறும் கேட்டார். நான் சரி என்று ஒப்புதல் அளித்தேன். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் வரை டிரஸ்ட் பற்றி ஏதும் நான் கேள்விப்படவே இல்லை.

திடீரென்று ஒருநாள் தொலைக்காட்சியினர் என் கதவைத்தட்டினார்கள். விமானத்தில் செலவு குறைவான எகானமி வகுப்பில் பயணம் செய்துவிட்டு, பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த்தாக கிரண் பேடி பில் காட்டிய விவகாரம் வெடித்திருந்த நேரம் அது. அந்தப் பணம் டிரஸ்ட் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த்து. டிரஸ்டில் நானும் ஒரு நிர்வாகி என்று தெரிந்து கொண்ட தொலைக்காட்சி என்னிடம் கேள்வி கேட்க வந்தது. கிரண் பேடி செய்தது போல நானாக இருந்தால் செய்திருக்க மாட்டேன். ஆனால், பணத்தை தன் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் கிரண் பேடி செய்த்து பெரிய கிரிமினல் குற்றம் அல்ல என்று பதிலளித்தேன்.

அப்போதுதான் டிரஸ்ட் குறித்து எனக்கு மீண்டும் நினைவே வந்தது. கிரண் பேடி என்னையும் டிரஸ்டியாகப் போட்டிருக்கிறார் என்பதே அப்போதுதான் தெரிந்தது. ஏனென்றால், இடைப்பட்ட இத்தனை காலத்திலும் டிரஸ்ட் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. டிரஸ்டின் அறிக்கைகள் ஏதும் எனக்கு வந்த்தில்லை. டிரஸ்ட் நிர்வாக்க் கூட்டங்களுக்கான அழைப்பும் வந்ததில்லை. டிரஸ்டில் என்ன மாதிரியான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார் என்பதும் தெரியாது. பெயரளவில் என்னையும் டிரஸ்டியாகப் போட்டிருக்கிறார். இதுதான் கிரண் பேடி. முழு அதிகாரமும் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் அவர்.

அவருடைய நேர்மையையோ திறமையையோ யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், எப்போதும் கவனம் தன்மீதே இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர். ... அவர் எதைச்செய்தாலும் முழு முனைப்போடு செய்வார். ஆனால் எப்போதும் தான் மட்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதான அவருடைய போக்கு பாஜகவுக்குள் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கிரண் பேடியை நன்கு அறிந்திருக்கும் எனக்கு, அவர் மாற மாட்டார் என்பது தெரியும். இப்போதே அவர் முதல்வர் ஆகிவிட்டது போலத்தான் நடந்து கொள்கிறார். இதுதான் கிரண் பேடி.
*
பி.கு. இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா என்று கேட்டால், இல்லை, சில விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்தவைதான். எனக்கு எப்போதுமே அவர்மீது விமர்சனங்கள் உண்டு. ஆறேழு மாதம் முன்புவரை பாஜகவையும் மோடியையும் தாக்கிக் கொண்டிருந்தவர், இப்போது மோடி புகழ் பாடும்போது, இவரும் காரியவாத அரசியல்வாதி என்பதைத் தெளிவாக்க இதை எழுதும் தேவை வந்திருக்கிறது.

படம் - மாத்யமம், மலையாளத் தளத்திலிருந்து.

மேலும் விவரங்களுக்கு
http://www.firstpost.com/…/bjps-cm-candidate-for-delhi-the-…
http://www.dnaindia.com/…/report-the-kiran-bedi-i-know-an-e…

4 comments:

  1. கிரண் பேடி பற்றிய தகவல்கள் மூலம் தன்னை முன்னிறுத்த அவர் செய்த கீழ்த்தரமான செயல்களை அறிய முடிகிறது.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. There is definately a great deal to find out about
    this subject. I like all the points you made.


    Look into my site; home makeover ideas ()

    ReplyDelete
  3. இதுலயும் இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்கா... :)

    ReplyDelete