Saturday, 26 October 2013

புலம்பெயர்ந்தோர் குரல்கள்

(இந்தக் கட்டுரை கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றிய பதிவு. எங்கோ மறைந்து கிடந்தது. நேற்று ஒரு தோழியுடன் நடைபெற்ற உரையாடலின்போது இதைத் தேடித் தருகிறேன் என்று குறிப்பிட்டேன். அதனால் பதிவிடுகிறேன்.)

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை கடந்த மாதம் புலம் பெயர்ந்தோர் குரல்கள் - Voices of Diaspora - என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. லண்டனில் வசிக்கும் இரா. உதயணன் எழுதிய "பனி நிலவு", "நூலறுந்த பட்டங்கள்", டென்மார்க்கில் வசிக்கும் கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய "இப்படிக்கு அன்புள்ள அம்மா", பிரான்சில் வசிக்கும் வீ.. இளங்கோவன் எழுதிய "பிரான்ஸ் மண்ணிலிருந்து சில தமிழ்க் கதைகள்" ஆகிய நான்கு நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டன. நான்கையும் மொழிபெயர்த்தவர் நண்பர் திரு எச். பாலசுப்பிரமணியன். 


இந்த மூன்று எழுத்தாளர்களோடு டென்மார்க்கிலிருந்து ஜீவகுமாரனும் வந்திருந்தார். இவரைத்தவிர, உஸ்பெகிஸ்தானிலிருந்து வந்திருந்த மக்தூபா, இந்தியிலிருந்து உஸ்பேக் மொழிக்கு மாற்றம் செய்த "பவளாயி" நாவலும் இங்கு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியைப்பற்றி பேராசிரியர் எம்.. சுசீலா அவர்கள் தன் வலைப்பூவில் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் தனியாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.

நூலை வெளியிட்டபிறகு நூல்களைப்பற்றி உரையாற்றியவர்கள் தமிழர்கள் அல்லர். ஜே.என்.யு. மற்றும் இதர கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். அவர்கள் சரளமாக இந்தியில் பேசியது அந்த எழுத்தாளர்களுக்குப் புரிந்திருக்கும் என்று தோன்றவில்லை. உரையாற்றிய நால்வரும் இயல்பான மொழிபெயர்ப்பு என்று பாராட்டினார்கள். அவர்கள் குறிப்பிட்டதில் ஒரு விஷயம் எனக்கு முக்கியமாகப்பட்டது. மொரிஷீயஸ், சுரிநாம் போன்ற நாடுகளுக்கு அடிமைகளாகச் சென்றவர்களின் சில எழுத்துகள் இந்திக்கு வந்துள்ளன. ஆனால் பொதுவாக இந்தியில் புலம்பெயர் இலக்கியம் மிக அரிது. எனவே, இந்தி இலக்கியத்திற்கு இது புதியதோர் இலக்கிய இனம் என்றார்கள். அந்த நிகழ்ச்சியில் தமிழரல்லாதவர்கள் பத்து-பதினைந்து பேர்தான் இருந்தார்கள் என்பதுதான் துரதிர்ஷ்டம்.

புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை, வேதனைகளை, வசிக்கச் சென்ற தேசத்துடன் தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளை அவர்கள் மட்டுமே எழுத முடியும். நாம் என்னதான் தொப்புள்கொடி உறவு என்று கூறிக்கொண்டாலும், அவர்களுடைய சிக்கல்களை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டாலும் உண்மையில் புரிந்தது அதில் கால்வாசி கூட இராது. 
(இதிலிருந்து பிறந்தவைதான் நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் வரிகள் 
உன் வலி எனக்குப் புரிகிறது என்று நானும்
என் வலி உனக்குப் புரிகிறது என்று நீயும்
சொல்லிக்கொள்கிறோம்தான் என்றாலும்
உனக்குப் புரிந்ததும் எனக்குப் புரிந்ததும்
புரிய வேண்டியதன் பகுதி மட்டுமே எனினும்
புரிந்து கொண்டதாய் அத்தனைபேரும்
புளுகிக்கொண்டுதான் திரிகிறோம்...)

கலாநிதி ஜீவகுமாரன் எழுதியது டேனிஷ் மொழியில். அவருடைய கணவர் அதை தமிழில் தந்திருக்கிறார். கலாநிதி, டேனிஷ் மொழியைக் கற்றுக்கொண்டு அதிலேயே எழுதியதற்குப் பாராட்டலாம். அதற்குக் காரணமாக அவர் கூறினார் - "நான் வாழும் நாட்டினர் எங்கள் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும், என் குழந்தைகளைப் போன்ற அடுத்த தலைமுறையினர் டேனிஷ்தான் புரிந்து கொள்ள முடியும், எனவே அவர்களுக்குப் புரிகிற மொழியில் எழுத வேண்டும்." பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

தில்லியில் தமிழர் குழந்தைகள் எவ்வாறு தமிழ் வாசிக்கத் தெரியாமலே வளர்கிறார்களோ அதேபோலத்தான் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளும் தமிழ் தெரியாமலே வளர்கிறார்கள். (தமிழ்நாட்டிலும் நிலைமை அப்படித்தான் என்று சிலர் எண்ணினால் அதுவும் சரிதான்.) வீடுகளில் தமிழ் பேசுவார்களாய் இருக்கலாம். ஆனால் வாசிக்கவோ, தமிழ் இலக்கியங்களை புரிந்து கொள்ளவோ, பண்பாட்டை முன்னெடுத்துச்செல்லவோ அவர்களால் இயலாது. இன்னும் பத்து-இருபது ஆண்டுகளில் புலம்பெயர் இலக்கியமே இருக்காது என்று எழுத்தாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார். இதைக் கேட்டதுமே என் மனதில் தோன்றியது - இனி யாருமே புலம்பெயர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகாதிருக்கட்டும்.

மேற்குறிப்பிட்ட இளம் தலைமுறை பற்றி யோசிக்கும்போது இரண்டு செய்திகள் நினைவுக்கு வந்தன.

ஒன்று - கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குக் கலைகளைப் பயிற்றுவித்து ஆடம்பரமாக நடத்தும் அரங்கேற்றங்கள் பற்றிய ஒரு வலைப்பதிவு. கூடவே ஜெர்மனியிலும் பிரான்சிலும் தமிழர் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் கண்முன் நிழலாடுகின்றன. தில்லியில் எனக்குப் பழகிப்போன செய்தி இது என்றாலும் புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலைதான் என்னும்போது தமிழர்கள் எங்கே சென்றாலும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. தம் குழந்தைகளை சகலகலா வல்லவர்களாக்குவதாக எண்ணிக்கொண்டு அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய அனுபவங்களைப் பறிப்பது.


இரண்டாவது - லண்டனில் வசிக்கும் இளைய அப்துல்லா எழுதிய நூல். கடந்த புத்தகக் கண்காட்சியின்போது வாங்கியது இப்போதுதான் படிக்க முடிந்தது. லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற கட்டுரைத்தொகுப்பு. இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு இனி புலம்பெயர்ந்து வருவது சாத்தியமில்லை என்பதை, வந்தவர்கள் பலரும் சரியான வேலைகள் இன்றி சுரண்டப்படுவதை, உரிய ஆவணங்கள் இல்லாதபோது கைது செய்யப்படுவதை, பிள்ளைகள் ஆங்கிலேயப் பண்பாட்டை ஏற்கவே விரும்புவதை என்பதான பல பிரச்சினைகளை அலசியிருக்கிறார். புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருமே உயிரைக் காத்துக்கொள்ளத்தான் சென்றார்கள், புலம்பெயர்ந்த தேசங்களில் சீரோடு வாழ்கிறார்கள், தமிழ்ப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்த முயல்கிறார்கள் போன்ற பிம்பங்களை எல்லாம் உடைத்துப்போடுகிறார் அப்துல்லா. வாசிக்க வேண்டிய புத்தகம். காலச்சுவடு வெளியிட்டுள்ளது.

ஜே.என்.யு. நிகழ்ச்சியில் இளங்கோ - அல்லது உதயணன் - கூறியது நினைவு வருகிறதுபனைமரங்கள் நாங்கள், பிடுங்கப்பட்டு பனிப்பிரதேசத்தில் நடப்படுகிறோம்.


வேரறுந்து, புதிய இடத்தில் வேர் பிடிக்கவும் முடியாமல், சொந்த நிலத்துக்கு மீளவும் இயலாமல், பாரம்பரியப் பண்பாடுகளை மனதில் சுமந்து கொண்டு புகலிட தேசத்தின் பண்பாடுகளுக்கு இசைய முயற்சி செய்வதிலேயே காலம் கழிந்துவிடும் பலருக்கும். இதை இலக்கியமாக்க முயற்சிக்கும்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றாலே புலம்பல் இலக்கியம் என்ற பேர் சூட்டப்படும் அபாயமும் அவர்களுக்கே. இதனையும்மீறி அவர்களின் எழுத்துகள் காத்திரமாகவே இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்குமிடங்களில்தான் நல்ல இலக்கியங்கள் பிறக்கின்றன என்பதே முழு உண்மைதானோ....?

Thursday, 17 October 2013

பழங்குடிகள் குறித்து ஓர் உரையாடல்

கடந்த சனிக்கிழமை தில்லிகை நிகழ்ச்சியில் இருவர் உரையாற்றினர். கல்வராயன் மலை பழங்குடிகளின் வாழ்க்கை பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இளையராஜா பேசினார். மேற்குத் தொடர்ச்சி மலைப் பழங்குடிகள் குறித்துப் பேசினார் தட்சிணாமூர்த்தி. இளையராஜா அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு புதிய செய்தி. புகைப்படக் கலைஞர் என்று மட்டுமே இதுவரை நினைத்திருந்த தட்சிணாமூர்த்தி, பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் எனக்கு இன்னொரு புதிய செய்தி. 

இளையராஜா கல்வராயன் மலை பழங்குடிகள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுடைய உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், திருமண முறை, சடங்குகள், நம்பிக்கைகள் என பலவற்றையும் விரித்துரைத்தார். சடங்குகளை விலாவாரியாக விளக்கியதற்குப் பதிலாக அவர்களுடைய வாழ்க்கை எந்த வகையில் மாற்றம் அடைந்திருக்கிறது என்று விவரித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதைக் குறிப்பிட்டபோதுதான் தெரிந்தது, அவர் அதே பழங்குடி இனத்திலிருந்து வந்தவர் என்பது. ஆனால் அவருடைய உரை பெரும்பாலும் இன்றைய நிலைமையை சுட்டுவதாகவும், பொதுப்புத்தி சார்ந்த பார்வையில் பழங்குடி மக்களின் வாழ்வை அவதானிப்பதாகவும் தொனித்தது.

இவரிடம் எழுப்ப நினைத்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பது போல அமைந்தது தட்சிணாமூர்த்தியின் உரை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பழங்குடிகள் வாழ்க்கை என்று தலைப்பு இருந்தாலும் அதை மேலோட்டமாகத் தொட்டுவிட்டு பொதுவாக பழங்குடிகளின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, அவர்களுடைய பாரம்பரிய அறிவுச் செல்வம், அரசின் தலையீட்டு முயற்சிகள், நில உரிமைகள், சுற்றுச்சூழல், என பலவற்றையும் சுருக்கமாக தெளிவாக எடுத்துச்சொன்னார். குறிப்பாக அவர் சொன்னது - ஒரு வரைபடத்தில், இயற்கை வளங்கள் எங்கே அதிகமாக உள்ளன என்று புள்ளிகளால் குறித்துக்கொள்ளுங்கள். எங்கே பழங்குடிகள் வசிக்கிறார்கள் என்று குறியுங்கள். இரண்டாவது படத்தை முதல் படத்தின்மீது வைத்தால், இரண்டும் ஒரே பகுதிகளைக் குறிக்கும். மூன்றாவது வரைபடத்தில், வறுமை எங்கே அதிகம் என்று குறியுங்கள். அதையும் மேலை வைத்துப் பாருங்கள். பழங்குடிகள் வசிக்கிற இயற்கை வளம் அதிகமாக இருக்கிற பகுதிகளில்தான் வறுமையும் அதிகம் என்பது அப்போது தெரியும்.

இதன் காரணம், அவர்களுடைய தேவைகள் எவை என்று நாம் முடிவு செய்து அவற்றைப்பற்றிய கல்வியை ஊட்டாமல் அவர்கள் மீது திணிக்கிறோம், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது உண்மைதான், ஆனால் அவை அந்த மக்களுடைய அறிவுச் செல்வத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் செய்வதால் பிரச்சினைகள் வருகின்றன என்று தெளிவாகச் சொன்னார் தட்சிணாமூர்த்தி.

முன்னவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏராளமான கேள்விகள் இணையாக மனதுக்குள் எழுந்தன. காரணங்கள் பல: அண்மையில் பழங்குடி மக்களைப் பற்றிய நூல்கள் - The Naga Story, அருந்ததி ராயின் நூல், ஜானு எழுதிய நூல், சோளகர் தொட்டி போன்றவை வாசித்தது; இப்போது இந்தியாவில் பழங்குடி மக்களின் வாழ்க்கை என்ற நூலை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது; எங்கள் சொந்த ஊர்ப் பகுதியிலும் பழங்குடிகள் இருப்பதால் எனக்கு ஆர்வமுள்ள விஷயமாக இது இருப்பது. எனவே தட்சிணாமூர்த்தியின் கருத்தோடு இசைந்து என் கருத்தையும் முன்வைத்தேன். அதைத் தொடர்ந்து சுவையான - சூடான விவாதமும் இடம்பெற்றது. 

அவர்களுக்குக் கல்வி கொடுப்பதும் வீடுகள் கட்டித் தருவதும் தவறா? அவர்களும் நாங்கள் சமவெளி மக்களைப்போல வசதியாக வாழ வேண்டும் என்று கூறுகிறார்கள்? நாம் எப்படி கிராமங்களை விட்டு வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறோமோ அதேபோல அவர்களும் கிராமங்களின் வசதியை அனுபவிக்க விரும்பினால் சரிதானே? கழிப்பறைகள் அமைத்துக்கொடுத்தாலும் அவர்கள் அதை பயன்படுத்துவதில்லையே? என விவாதித்தார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு சந்திரசேகரன்.

பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகச் செயல்படுகிற அரசுகளும் அவர்களின் பகுதிகளில் இருக்கிற கனிம வளங்களைப் பறிப்பதில் தீவிரமாக இருக்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி வந்தவர்களை நாகரிக வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி அவர்களுடைய தனித்தன்மையையும் அடையாளத்தையும் இழக்கச் செய்கிறோம். இந்தி, வங்காளி, ஒடியா போன்ற மொழிகள் கலந்து ஓரான், முண்டா போன்ற பழங்குடி மக்களின் மொழிகள் அழிந்து விட்டன. மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறத்தில் கழிப்பறைகளின் தேவை உண்டு. ஆனால் சதுர கிலோமீட்டருக்கு 10-15 பேர் மட்டுமே வசிக்கும் காட்டுப் பகுதிகளில் கழிப்பறைகள் அவர்களுக்குத் தேவையற்றவை. கண்ணாடி மாளிகைக்குள் அமர்ந்து கொண்டிருக்கிற நாம் பழங்குடிகளின் தேவைகளை நிர்ணயம் செய்கிறோம். இவை நான் முன்வைத்த கருத்துகள்.கணிதவியல் வல்லுநர் பாரதி பாலு, தமிழகப் பழங்குடி மக்கள் தாமே எண்களைக் கண்டுபிடித்து வைத்திருந்த ஒரு ஆய்வை முப்பது ஆண்டுகளுக்கு முன் தில்லியில் படித்ததாக நினைவுகூர்ந்தார்.

ஓரான் பழங்குடிகளின் மக்களின் பாடல்களையும் தமிழக பழங்குடி மக்களின் பாடல்களையும் ஒப்பீடு செய்து வரும் ஜேஎன்யு பல்கலை மாணவி கவிதா, அவர்களின் திருமண முறை, வாழ்க்கை முறை என தான் கண்டறிந்த சில விஷயங்களை முன்வைத்தார். 


* * *

நிகழ்ச்சி முடிந்த பிறகு, தட்சிணாமூர்த்தி ஒரு கட்டுரையை வாசிக்க அனுப்பி வைத்தார். அந்தக்கட்டுரையை இங்கே காணலாம். - 

Monday, 7 October 2013

சர்க்கசுக்குப் போனோமே....


தோஸ்த் தோஸ்த் நா ரஹா
ஜீனா யஹாங் மர்னா யஹாங்
யாதோன் கி பாராத்
இந்தப் பாடல்கள் எல்லாம் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, சர்க்கஸ் கம்பெனிகளின் முக்கிய இசைக்கீற்றுகளாக இன்றும் இவைதான் ஒலிக்கின்றன. புதிதாகச் சேர்ந்திருப்பவை சில ஆங்கில இசைக்கீற்றுகள்.

தில்லியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் என்ற விளம்பரத்தை என்னைக் கடந்துசென்ற ஆட்டோவில் பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே மகளிடம் சொன்னேன் - சர்க்கஸ் எங்கே நடக்கிறது என்று விசாரி என்று. பஷ்சிம் விஹாரில் நடக்கிறது என்றும் வெப்சைட் விவரமும் தந்தாள். சனிக்கிழமை போகத்திட்டமிட்டோம். வீட்டிலிருந்து 26 கிமீ. காரில் சென்றதால் வசதியாக இருந்தது. 

100, 200, 300 மூன்றே ரகமான டிக்கெட்டுகள்தான். போகும்போது 200 ரூபாய் டிக்கெட் எடுக்கலாம் என்று யோசித்திருந்தது அங்கே போனபிறகு 300க்கு எடுக்கலாம் என்று மாறியது. எதனால்? வேறென்ன, நலிந்து வரும் கலைக்கு நம்மாலான பங்களிப்பை இதைவிட வேறென்ன வகையில் செய்துவிட முடியும் என்பதே. இதைப்பற்றி எழுதுவதால் நான் பெருமை பீற்றுவதாக யாரும் நினைத்துவிடப்போவதில்லை. இதைப் படித்த எவருக்காவது அவருடைய ஊரில் சர்க்கஸ் வரும்போது தவறாமல் போவதற்கு இந்தப்பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

ஒட்டுப்போட்ட வண்ண வண்ணத் துணிகளால் அமைந்த கூடாரம். பார்ப்போர் கண்களிலிருந்து ஒட்டுகளை மறைக்க வண்ணவிளக்குகள். கைக்குக் கிடைத்த அத்தனை இரும்புக்கம்பிகள், பலகைகள், தட்டிகள், மூங்கில்கள், மரங்கள் எல்லாம் வைத்து அமைக்கப்பட்ட தடுப்புகள், பாதைகள், பிரிப்புகள்....

உரிய நேரத்திற்கு வெகு முன்னரே, முன்வரிசைகள் எல்லாம் காலியாக இருந்தபோதே போயும்கூட எங்களுக்கு ஏழு வரிசை தள்ளித்தான் டிக்கெட் நம்பர் கொடுத்திருந்தது குறித்து மனதுக்குள் வருத்தம்தான். சரி போகட்டும் என்று விடவேண்டியிருந்தது. 

வழக்கம்போல பளீரிடும் ஒளிவெள்ளம் திடீரெனப் பாய, ஒரு பக்கத்தில் இருந்த சிறு மேடையில் இசைக்கலைஞர்களின் டிரம்களும் கிடார்களும் திடீரென ஒலிக்க, துவங்கியது சர்க்கஸ். அந்த இசைக்கலைஞர்கள் இருந்த மேடைக்கு முன்பெல்லாம் தனி விளக்குகள் எரியும். இந்த சர்க்கஸில் அவர்கள் கிட்டத்தட்ட மறைந்தே போனார்கள். 


மத்தியில் கட்டப்பட்டிருந்த வலைகளும் மேலே தொங்கிக் கொண்டிருந்த பார்களும், முந்தைய ஷோவில் பார் வித்தைதான் கடைசி அம்சமாக நடந்தேறியது என்று அறிவித்தன. ஆறு பார் கலைஞர்கள், ஒரு குள்ளக் கோமாளியுடன் விறுவிறுவென்று மேலே ஏறினார்கள். "டேய், அவன் பாக்கறதுக்குத்தான் கோமாளி மாதிரி. ஆனா அவனுக்குத்தான் எல்லா சர்க்கஸ் வித்தையும் தெரியும். எந்த இடத்திலும் யார் வராட்டியும் அவனால சமாளிக்க முடியும்..." சிறு வயதில் நாங்கள் பேசிக்கொண்டது என் காதுகளில் திரும்ப ஒலிக்கிறது. யார் சொன்னது...?

முன்னைப்போல அரைமணிநேர பார்விளையாட்டெல்லாம் இல்லை. பிரதானக் கலைஞனை நோக்கி ஐந்துபேர் போனார்கள், அவரைப் பிடித்தார்கள், அந்தரத்தில் ஒரு கரணம் அடித்துத் திரும்பினார்கள். ஒரு பெண்கூட அதில் இருக்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக ஆடப்படும் வித்தை இல்லை. 5 நிமிடத்தில் முடிந்தது. அடுத்த 5 நிமிடத்திற்கு விளக்குகளை அணைத்துவிட்டு மங்கிய நீல ஒளியில் அதே விளையாட்டு. டிரான்ஸ்க்ளூஸன்ட் ஆடைகள் அணிந்த உருவங்கள் மட்டும் மாயம் காட்டின. பார்த்ததை உள்வாங்குவதற்குள் பார் விளையாட்டு முடிந்துவிட்டது, சரசரவென்று வலைகள் நீக்கப்பட்டுவிட்டன. 

அடுத்து வந்தது கலைஞர்களின் அணிவகுப்பு. டிரம்கள் உச்சத்தில் ஒலித்தன. சாதாரணமாக மனிதர்கள் அணியத் துணியாத விதவிதமான பகட்டு வண்ணங்களில், கான்ட்ராஸ்ட் வண்ண வேலைப்பாடுகளுடன் சிக்கென உடலைப்பிடித்திருக்கும் ஆடையணிந்த சிவப்பழகிகள் (!) வண்ணவண்ணக் கொடிகளேந்தி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்தன விலங்குகள் - ஒரு யானை, 4 ஒட்டகங்கள், 2 குதிரைகள், குட்டி நாய்கள். திட்டமிட்ட பாணியில் வந்து, நடந்து, சுற்றி அதே வேகத்தில் திரும்பியும் விட்டார்கள். 


ஒரு காலம் இருந்தது. புலி, சிங்கம், குரங்கு எல்லாம் இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஏதோ ஒரு சர்க்கஸில் காட்சி நடந்து கொண்டிருக்கும்போதே, சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்த ஓமனாக்குட்டி என்ற பெண்ணை சிங்கம் குதறி விட்டது. அதற்குப் பிறகு விலங்குகளின் காப்பாளர்களும் சேர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுக்க, எல்லாம் மாயமாகிவிட்டன. சர்க்கஸ் பார்க்கிற அல்லது சர்க்கஸ் செய்தி கேட்கிற ஒவ்வொரு முறையும் ஓமனாக்குட்டி மனதுக்குள் மரண ஓலமிடுகிறாள்.

வண்ண வண்ணக் கிளிகளைக் கொண்டுவந்த இரண்டு பச்சைக்கிளிகள், இயந்திரத்தனமாக கிளிகளை கம்பியில் சைக்கிள் ஓட்டச்செய்தன, பார் விளையாடச் செய்தன. வித்தை காட்டி முடித்த கிளிகளை அததற்கான ஸ்டாண்டில் திரும்பக் கொண்டுபோய் விடுவதற்காக குறுக்கும் நெடுக்குமாக நடந்தன. கிளிகளுடன் கிளிகளும் திரும்பிப்போயின.

திடீரென்று ஒளியூட்டப்பட்ட மரணக்கூண்டில், சைலன்சர் பிடுங்கிய இரண்டு மோட்டார் பைக் ஓட்டிகள் புர்புர்... என்று ஓசையை எழுப்பி, அச்சமூட்டி, விர்ரென்று புறப்பட்டு சுற்றி ஒரு நிமிடத்தில் மறைந்து போயினர்.

அடியும் விழ வேண்டும், ஒலியும் எழ வேண்டும், வலிக்கவும் கூடாது என்பதற்காகவே அமைக்கப்பட்ட மட்டையை வைத்திருந்த கோமாளிகள் ஒருவரை ஒருவர் புட்டத்தில் அடித்துக் கொண்டனர், உதைத்துக் கொண்டனர், வீழ்த்திக் கொண்டனர். சார்லி சாப்ளினின் The Circus தவிர்க்கவே முடியாமல் நினைவுக்கு வருகிறது.

இந்த சர்க்கஸிலும் மலையாளிகள் குறைந்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. யானையை பந்தடிக்க வைத்தவரும், ஒட்டகங்களை முன்கால்களை ஸ்டூலின்மேல் வைத்து நிற்க வைத்தவருமான ரிங் மாஸ்டர் (!) மலையாளி என்பது பார்த்ததுமே தெரிந்தது. (விலங்குகளின் வித்தை அவ்வளவுதான். குதிரைகள் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாரும் நினைவு வைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் போய் கேட்கப்போவதில்லை.) மலையாளிகளின் இடத்தை நிரப்பி விட்டார்கள் வடகிழக்கு மாநிலத்தவர்.

அதேபோல, எந்தவொரு சர்க்கஸிலும் முன்னர் சில ரஷ்யர்கள் இருப்பார்கள். ரஷ்யா என்றால் இன்றைய ரஷ்யா அல்ல, கஜக்கிஸ்தான், தஜக்கிஸ்தான் போன்ற பக்கத்தில் இருக்கும் நாடுகளிலிருந்து அக்கரைப்பச்சை நம்பிக்கையுடன் வந்தவர்கள். இப்போது அவர்களையும் காண முடியவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஆறு ஆப்பிரிக்கர்களைக் காண முடிந்தது. புலித்தோல் போல டவுசர் அணிந்து, வித்தை காட்டி முடித்ததும் ஆப்பிரிக்க நடனத்தின் அசைவுகளை சில விநாடிகளுக்குக் காட்டி விட்டு மறைந்த அவர்களின் முகங்கள் மட்டுமே இயல்பான புன்னகையை அணிந்திருந்தன.


ஐந்து பெண்கள் இணைந்து சைக்கிள் ஓட்டினார்கள், சைக்கிளை அக்கக்காகப் பிரித்து சக்கரத்தில் ஓட்டினார் ஒருவர், பல்லில் கயிற்றைக் கடித்துக்கொண்டு பம்பரம்போல் சுற்றினார் ஒரு பெண், இரண்டு பெண்களை தோளில் சுமந்து கொண்டு அரையடி அகலப் பாதையில் ஓரடி உயர சைக்கிளை ஓட்டினார் ஒருவர், குட்டிக்குட்டி நாய்கள் சொன்னதைச் செய்துவிட்டு வாலாட்டிக் கொண்டே கரவொலிகளைப் பெற்றுக்கொண்டு தம் இடத்துக்குத் திரும்பின, வாயில் இரும்புக் கம்பின்மேல் இரும்புக்குண்டுகளை சுமந்து காட்டினார் ஒருவர் .......

விலங்குகள் குறைந்து போனதையும் வித்தைக்காரர்கள் குறைந்து போனதையும் ஈடுகட்ட சில புதுப்பது வித்தைகளை சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நடனங்கள், நாட்டுப்புறக்கலைகள், தற்காப்புக் கலைகள் போன்றவற்றிலிருந்து சுட்டவை. தில்லியில் குடியரசு தின விழாக்களின்போது இவற்றையெல்லாம் பார்த்தவர்களுக்கு இதில் சுவாரஸ்யம் இருக்காது. இருந்தாலும் கைதட்டி, குரலெழுப்பி பாராட்டுகிறோம்.


சர்க்கசின் நுழைவாயிலில், தமது சர்க்கஸைக் காண வந்த பிரபலங்களின் புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். வி.வி. கிரி, சாஸ்திரி, காமராஜர், எம்ஜிஆர், இந்திரா காந்தி, நம்பூதிரிபாட், அச்சுதானந்தன், பிரேம் நசீர், கருணாகரன், பிஜு பட்னாயக் .... நமது சமகால பிரபலங்களின் படங்கள் எதுவும் கண்ணில் படவில்லை, நடிகர் சூர்யா படம் தவிர.  சர்க்கஸ் கலைக்கு நாம் கொடுக்கும் மரியாதையை இது சுட்டக்கூடும்.

நம் ஊரில் முக்கோணத் தட்டி கட்டி ஒற்றை மாட்டு வண்டியில் விளம்பர நோட்டீஸ் விநியோகம், பேட்டரி வைத்த மைக்கில் தேய்ந்து போன விளம்பரம், பல கிமீ தூரத்திற்குத் தெரியும் ஃபோகஸ் விளக்கு. விளம்பரத்திற்காக ஊருக்குள் ஊர்வலம் அழைத்துவரும் விலங்குகள்.... எல்லாமே காணாமல் போய் விட்டன. தொலைக்காட்சி அரக்கன் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டான்.

எப்போதும்போல வியக்கவைப்பதும் பாராட்ட வைப்பதும் சர்க்கஸ் ஊழியர்களின் ஒருங்கிணைப்பு முறையும் ஒழுங்கும். அங்கே யாரும் தனிநபர் அல்ல. குழுவின் அங்கம் அல்லது கருவி. கயிறு கட்டுபவனோ, கயிறு இழுப்பவனோ, ஒட்டகத்தின் விட்டைகளை உடனே அகற்றுபவனோ, விளக்குகளை இயக்குபவனோ, கோமாளியோ, பார் கலைஞனோ, குள்ளனோ குண்டனோ... எல்லாருக்கும் ஒரே மந்திரம்தான் - என் கடன் பணி செய்து கிடப்பதே.


பணி என்றால் அதுவும் சொல்லிச் செய்வதில்லை. எவரும் சொல்லாமல் செய்வது. அந்த ஒருங்கிணைப்பில்தான் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி நடந்து கொண்டிருக்கிறது சர்க்கஸ். அவ்வாறு செய்யச்செய்வதில் முதன்மையானது வயிறு. பளீர் ஒளியில் மின்னும் சிவப்புத்தோல் வயிறு அல்ல. அதனுள் இருப்பது. அது சிலரின் கண்களுக்கே தெரிகிறது.