Thursday, 17 October 2013

பழங்குடிகள் குறித்து ஓர் உரையாடல்

கடந்த சனிக்கிழமை தில்லிகை நிகழ்ச்சியில் இருவர் உரையாற்றினர். கல்வராயன் மலை பழங்குடிகளின் வாழ்க்கை பற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இளையராஜா பேசினார். மேற்குத் தொடர்ச்சி மலைப் பழங்குடிகள் குறித்துப் பேசினார் தட்சிணாமூர்த்தி. இளையராஜா அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு புதிய செய்தி. புகைப்படக் கலைஞர் என்று மட்டுமே இதுவரை நினைத்திருந்த தட்சிணாமூர்த்தி, பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் எனக்கு இன்னொரு புதிய செய்தி. 

இளையராஜா கல்வராயன் மலை பழங்குடிகள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுடைய உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், திருமண முறை, சடங்குகள், நம்பிக்கைகள் என பலவற்றையும் விரித்துரைத்தார். சடங்குகளை விலாவாரியாக விளக்கியதற்குப் பதிலாக அவர்களுடைய வாழ்க்கை எந்த வகையில் மாற்றம் அடைந்திருக்கிறது என்று விவரித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதைக் குறிப்பிட்டபோதுதான் தெரிந்தது, அவர் அதே பழங்குடி இனத்திலிருந்து வந்தவர் என்பது. ஆனால் அவருடைய உரை பெரும்பாலும் இன்றைய நிலைமையை சுட்டுவதாகவும், பொதுப்புத்தி சார்ந்த பார்வையில் பழங்குடி மக்களின் வாழ்வை அவதானிப்பதாகவும் தொனித்தது.

இவரிடம் எழுப்ப நினைத்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பது போல அமைந்தது தட்சிணாமூர்த்தியின் உரை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பழங்குடிகள் வாழ்க்கை என்று தலைப்பு இருந்தாலும் அதை மேலோட்டமாகத் தொட்டுவிட்டு பொதுவாக பழங்குடிகளின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, அவர்களுடைய பாரம்பரிய அறிவுச் செல்வம், அரசின் தலையீட்டு முயற்சிகள், நில உரிமைகள், சுற்றுச்சூழல், என பலவற்றையும் சுருக்கமாக தெளிவாக எடுத்துச்சொன்னார். குறிப்பாக அவர் சொன்னது - ஒரு வரைபடத்தில், இயற்கை வளங்கள் எங்கே அதிகமாக உள்ளன என்று புள்ளிகளால் குறித்துக்கொள்ளுங்கள். எங்கே பழங்குடிகள் வசிக்கிறார்கள் என்று குறியுங்கள். இரண்டாவது படத்தை முதல் படத்தின்மீது வைத்தால், இரண்டும் ஒரே பகுதிகளைக் குறிக்கும். மூன்றாவது வரைபடத்தில், வறுமை எங்கே அதிகம் என்று குறியுங்கள். அதையும் மேலை வைத்துப் பாருங்கள். பழங்குடிகள் வசிக்கிற இயற்கை வளம் அதிகமாக இருக்கிற பகுதிகளில்தான் வறுமையும் அதிகம் என்பது அப்போது தெரியும்.

இதன் காரணம், அவர்களுடைய தேவைகள் எவை என்று நாம் முடிவு செய்து அவற்றைப்பற்றிய கல்வியை ஊட்டாமல் அவர்கள் மீது திணிக்கிறோம், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது உண்மைதான், ஆனால் அவை அந்த மக்களுடைய அறிவுச் செல்வத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் செய்வதால் பிரச்சினைகள் வருகின்றன என்று தெளிவாகச் சொன்னார் தட்சிணாமூர்த்தி.

முன்னவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏராளமான கேள்விகள் இணையாக மனதுக்குள் எழுந்தன. காரணங்கள் பல: அண்மையில் பழங்குடி மக்களைப் பற்றிய நூல்கள் - The Naga Story, அருந்ததி ராயின் நூல், ஜானு எழுதிய நூல், சோளகர் தொட்டி போன்றவை வாசித்தது; இப்போது இந்தியாவில் பழங்குடி மக்களின் வாழ்க்கை என்ற நூலை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பது; எங்கள் சொந்த ஊர்ப் பகுதியிலும் பழங்குடிகள் இருப்பதால் எனக்கு ஆர்வமுள்ள விஷயமாக இது இருப்பது. எனவே தட்சிணாமூர்த்தியின் கருத்தோடு இசைந்து என் கருத்தையும் முன்வைத்தேன். அதைத் தொடர்ந்து சுவையான - சூடான விவாதமும் இடம்பெற்றது. 

அவர்களுக்குக் கல்வி கொடுப்பதும் வீடுகள் கட்டித் தருவதும் தவறா? அவர்களும் நாங்கள் சமவெளி மக்களைப்போல வசதியாக வாழ வேண்டும் என்று கூறுகிறார்கள்? நாம் எப்படி கிராமங்களை விட்டு வசதியான வாழ்க்கை வாழ விரும்புகிறோமோ அதேபோல அவர்களும் கிராமங்களின் வசதியை அனுபவிக்க விரும்பினால் சரிதானே? கழிப்பறைகள் அமைத்துக்கொடுத்தாலும் அவர்கள் அதை பயன்படுத்துவதில்லையே? என விவாதித்தார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு சந்திரசேகரன்.

பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகச் செயல்படுகிற அரசுகளும் அவர்களின் பகுதிகளில் இருக்கிற கனிம வளங்களைப் பறிப்பதில் தீவிரமாக இருக்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தி வந்தவர்களை நாகரிக வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி அவர்களுடைய தனித்தன்மையையும் அடையாளத்தையும் இழக்கச் செய்கிறோம். இந்தி, வங்காளி, ஒடியா போன்ற மொழிகள் கலந்து ஓரான், முண்டா போன்ற பழங்குடி மக்களின் மொழிகள் அழிந்து விட்டன. மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறத்தில் கழிப்பறைகளின் தேவை உண்டு. ஆனால் சதுர கிலோமீட்டருக்கு 10-15 பேர் மட்டுமே வசிக்கும் காட்டுப் பகுதிகளில் கழிப்பறைகள் அவர்களுக்குத் தேவையற்றவை. கண்ணாடி மாளிகைக்குள் அமர்ந்து கொண்டிருக்கிற நாம் பழங்குடிகளின் தேவைகளை நிர்ணயம் செய்கிறோம். இவை நான் முன்வைத்த கருத்துகள்.



கணிதவியல் வல்லுநர் பாரதி பாலு, தமிழகப் பழங்குடி மக்கள் தாமே எண்களைக் கண்டுபிடித்து வைத்திருந்த ஒரு ஆய்வை முப்பது ஆண்டுகளுக்கு முன் தில்லியில் படித்ததாக நினைவுகூர்ந்தார்.

ஓரான் பழங்குடிகளின் மக்களின் பாடல்களையும் தமிழக பழங்குடி மக்களின் பாடல்களையும் ஒப்பீடு செய்து வரும் ஜேஎன்யு பல்கலை மாணவி கவிதா, அவர்களின் திருமண முறை, வாழ்க்கை முறை என தான் கண்டறிந்த சில விஷயங்களை முன்வைத்தார். 


* * *

நிகழ்ச்சி முடிந்த பிறகு, தட்சிணாமூர்த்தி ஒரு கட்டுரையை வாசிக்க அனுப்பி வைத்தார். அந்தக்கட்டுரையை இங்கே காணலாம். - 

4 comments:

  1. மிக நல்ல பதிவு. அமெரிக்காவில் ஆமிஷ் என்ற பழங்குடிமக்களும் இதேபோலத்தான். தங்களுக்காக அரசு நிர்ணயம் செய்யும் வாழ்க்கைமுறைகளை நிராகரித்து இயற்கையுடன் இயைந்த வாழ்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இருபது ஆண்டுகள் முன்பு கல்வரயான் மலை அருகிலுள்ள ஊர்களில் பணி நிமித்தம் அடிக்கடி நான் பயணித்ததுண்டு. அப்போதெல்லாம் நாள்தோறும் ஓரிரு அமைச்சராவது அங்கு விசிட் செய்வார்கள். தந்தி முதல் ஹிந்து வரை தினந்தோறும் கல்வராயன் செய்திகள் அடிபடும். பிறகு என ஆயிற்றோ தெரியவில்லை. (தமிழ் இந்துவில் கூட செய்தி வருவதில்லை!) ஒன்று, கல்வராயன் மலை மக்கள் எல்லாருமே முன்னேறியிருக்க வேண்டும், அல்லது ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டிருக்கவேண்டும்! (௨) தங்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள். (தில்லியில் ஆடுகள் நலமா?)

    ReplyDelete
  2. தமிழ்மணம் வாக்களிக்க விரும்பினாலும் அந்தப்பட்டையைக் காணோமே! (௨) எனது இரண்டு தளங்களிலும் தாங்கள் வாக்களிக்கலாமே! சிலர் மாதிரி என்னிடம் ஏராளமான பினாமி மின்னஞ்சல்கள் இல்லை என்பதை கவனத்தில் கொள்வீராக.

    ReplyDelete
  3. நல்லதொரு உரையாடல்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தமிழ்மணம் பட்டை எல்லாம் எனக்குத் தெரியாது ஐயா. இன்னும் இதில் அரிச்சுவடி நிலையிலேயே இருக்கிறேன். தமிழ் மணத்தில் மட்டும் இணைக்கத் தெரியும். அதற்குமேல் ஏதும் தெரியாது. மின்னஞ்சல்... என்ன கேக்கறீங்கன்னே புரியலை.

    ReplyDelete