Wednesday, 2 October 2013

காந்திஜிக்கு அஞ்சலி


அக்டோபர் 2 காந்திஜியின் பிறந்த நாள். இந்தியா பூராவிலும் மக்கள் காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். கடல் கடந்த நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பிரதானப் பாத்திரம் வகித்த மகாத்மா காந்தியின் நினைவுக்குத் தேச மக்களுடன் சேர்ந்து நாமும் நம் அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றில் காந்திஜியின் பெயர் நீங்காத இடம் பெற்றுள்ளது. காந்திஜியின் பிரவேசத்துக்குப் பின்னரே இந்திய தேசிய காங்கிரசின் போக்கிலும் ஒரு திருப்பம் ஏற்பட்டதென்று கூறலாம்.

காந்திஜி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொள்வதற்கு முன் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்திய மக்களின் நிலை உயர்வதற்கும் பாடுபட்டார்.

இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும்போது, மக்களின் விடுதலைப்போராட்டம் தீவிரமாக, புரட்சிகரப் பாதையில் சென்றுவிடாமல் காந்திஜி அணைபோட்டு வந்ததும் நாமறிவோம். எதிரியின் மனமாற்றத்தில் காந்திஜி அதிக நம்பிக்கையும் வைத்துக்கொண்டிருந்தார்.

படிப்படியாகத் தீவிரமடைந்த மக்களின் எழுச்சியும், குறிப்பாக 1946ஆம் வருட பிற்பாதியில் நடைபெற்ற இந்திய மக்களுடையவும், தொழிலாளி வர்க்கத்தினுடையவும் உறுதியான போராட்டங்களும் கடற்படையினர், ராணுவப் படையினர் ஆகியோரின் எழுச்சியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கிலியை உண்டுபண்ணி, அதன் பயனாக இந்திய மக்களுக்கு அதிகார மாற்றம் செய்ய அவர்கள் இசைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறாக இந்திய விடுதலை சாதனையாயிற்று.

இன்று நாடு விடுதலை பெற்று 13 ஆண்டுகளாகின்றன. இந்தப் பதின்மூன்று ஆண்டு காலங்களில் ஆட்சிப் பீடத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினரின் நடைமுறையைப் பரிசீலிக்குங்கால், பல துறைகளில் அவர்கள் காந்திஜியின் போதனைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர் என்பதைக் காந்திஜியின் நினைவுக்கு அஞ்சலி  செலுத்தும் இந்த நன்னாளில் நினைவுக்குக் கொண்டு வராமலிருக்க முடியாது.

மக்களுக்குச் சேவை புரிவது, சத்தியம், அஹிம்சையைக் கடைப்பிடிப்பது, நேர்மையான வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பது ஆகிய பல நற்போதனைகளை காங்கிரஸ்வாதிகள் என்று சொல்வோர் பலர் கைகழுவி விட்டனர் என்பதே இன்றுள்ள நிலை.

காங்கிரசில் பதவிப் பித்தும், சொந்த லாபத்திற்காகப் பாடுபடுவதும், ஆதிக்கத்திற்கான பூசல்களும், கதர்ப் போர்வையின்கீழ் மக்களுக்கு விரோதமான இழிசெயல்களில் இறங்குவதும் மலிந்து விட்டன.

அரசியல் குரோதம் ஒன்றையே காரணமாகக் கொண்டும், என்றென்றும் தாங்களே பதவியில் நீடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையின் காரணமாகவும், காங்கிரஸ்காரர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் அரும்பெரும் தியாகங்கள் செய்த கம்யூனிஸ்டுகள் போன்றோரைத் தூற்றுவதும், அவர்களை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டுவதும் இன்று நாம் பார்க்கும் நிலை.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் எல்லாக் கட்சியினரையும் அணைத்துக்கொண்டு ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டுமென்ற எண்ணமே இன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு அற்றுப்போய்விட்டது என்று கூறலாம்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளிகள், பாடுபடும் நடுத்தர மக்கள் ஆகியோரின் பிரதிநிதியாக இல்லாமல், இன்று நிலப்பிரபுக்களுடையவும் முதலாளிகளுடையவும் நலன்களைக் காப்பாற்றும் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது.

உழுபவனுக்கு நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார். அவருடைய வாரிசான வினோபாஜியும் இன்று அதையே கூறுகிறார்.  ஆனால் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபடும் விவசாயிக்கு நிலம் சொந்தமாகாத முறையில் இன்றைய நிலச்சட்டங்கள் எல்லாம் தயாரிக்கப்படுகின்றன. எனவே காந்திஜியின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த முக்கியமான நாளில் காங்கிரசினுடையவும் காங்கிரஸ் சர்க்கார்களுடையவும் ஜன விரோதக் கொள்கைகளை  எதிர்த்து மக்களை மேலும் மேலும் அதிகமாகத் திரட்டுவதற்கு உறுதி கொள்ள வேண்டும்.
3-10-1960
ப. ஜீவானந்தம்.


நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள ஜீவானந்தம் கால ஜனசக்தி தலையங்கங்கள் தொகுப்பு நூல் 2ஆம் பாகத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.

3 comments:

  1. ஹும்...! ௫௩ (53) வருடங்கள் முன்பு சொன்ன விஷயம்!

    ReplyDelete
  2. நான் பிறப்பதற்கு பதினோரு வருடங்களுக்கு முன் வந்த ஒரு கட்டுரை.....

    உங்கள் பதிவின் மூலம் படிக்க முடிந்தது.....

    மிக்க நன்றி

    ReplyDelete