Wednesday 28 October 2015

கபடி... கபடி... கபடி...

நாந்தான் வீரண்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா....
இதைப் போன்ற பாடல்கள் எல்லாம் கிரிக்கெட் கூச்சல்களில் அமுங்கிப்போய் விட்டன. ஒருகாலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் இருந்த கபடி அணிகள் எல்லாம் காலத்தில் கரைந்து விட்டன. சுவர்களில் கரியால் போட்ட கோடு ஸ்டம்ப் ஆகி, பிளாஸ்டிக் பந்தும் கைக்குக் கிடைத்த கட்டை பேட் ஆகவும் மாறி கிரிக்கெட் மோகம் உள்நாட்டு விளையாட்டுகளை விழுங்கி விட்டது.

நகரங்களில் மட்டைகளும் பேட்களும் ஹெல்மெட்களும் கொஞ்சம் பயன்பாட்டில் உள்ளன என்றாலும் பெரும்பாலும் இப்படிப்பட்ட கிரிக்கெட்தான் நாடெங்கும் இருக்கிறது. சில வீடுகளில் காம்பவுண்ட் கதவுக்கும் வீட்டுக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதி பிட்ச் ஆக மாறிவிடுகிறது. விளையாட்டு சாதனங்கள் இல்லாமலே விளையாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் பரவி விட்டது. இலக்கும் இல்லை, நோக்கமும் இல்லை, முனைப்பும் இல்லை. எத்தனை ரன்களும் எடுக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம், அவுட் ஆனபிறகும் ஆடலாம், வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொண்டு வீட்டுக்குப் போகலாம்.

இன்றைய இந்த நிலையையும், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையையும் மனது தவிர்க்க இயலாமல் ஒப்பிடுகிறது. வீதி விளையாட்டுகள் முற்றிலுமாக மறக்கப்பட்டு விட்டன. தென்தமிழகக் கடைக்கோடி கிராமங்களில் பண்டைய விளையாட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தோன்றுகிறது. தமிழகம் எங்கும் பரவலாக விளையாடப்பட்டு வந்த கபடி விளையாட்டு எங்கே போனது?


எந்தவித சிறப்பான கருவிகளோ, சாதனங்களோ, ஏற்பாடுகளோ தேவைப்படாத எளிமையான விளையாட்டு கபடி. தமிழில் சடுகுடு என்றும் வடக்கே ஹூ-டு-டு என்றும், பஞ்சாபி-இந்தியில் கபட்டி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கபடி, இந்தியாவுக்கு உரிய விளையாட்டு. கை-பிடி என்பதுதான் கபடி என்று மருவியதாகவும் ஒரு கருத்து உண்டு.

கபடி வீரனுக்குத் தேவை, மூச்சுப் பிடிக்கும் திறன், துரிதமாக முடிவெடுக்கும் திறன், எதிராளியின் ஒவ்வொரு சிறு அசைவையும் கவனித்து உடனே பதில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கண், காது, மூக்கு, வாய் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன். உடல் வலிமையும், கைகால்கள் நீளமாக இருப்பதும் கூடுதல் வசதி. அத்துடன், சூழ்ந்திருக்கும் ரசிகர்கள் கொடுக்கும் ஆலோசனைகளையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் தன் இலக்கில் கவனம் செலுத்துவது மற்றொரு அவசியம்.

கபடி விளையாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான விதிகள் நிலவின. ஆனால் பொதுவான விதிகளாக இருந்தவை ஆடுகளத்தின் நடுக்கோடு, ஏறுகோடு, எல்லைக்கோடு ஆகியவை. ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பலீஞ்சடுகுடு...சடுகுடு... என்று பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படை. ஒரு அணியைச் சேர்ந்தவர் பாடிக்கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, கையால் அல்லது காலால் தொட்டு விட்டு பிடிபடாமல் வரவேண்டும். பிறகு எதிரணியும் அதேபோல் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

அமர் என்னும் கபடி வடிவத்தின் படி, தொடப்பட்டவர் வெளியேற மாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டம் முடியும்போது எந்த அணி அதிகப் புள்ளிகள் பெற்றாரோ அது வெற்றி பெறும். சஞ்சீவினி என்ற வடிவத்தின்படி, பாடிச் சென்றவர் யாரையேனும் தொட்டால் அவர் அவுட் ஆவது மட்டுமல்ல, தொட்டவர் அணியில் அவுட் ஆகி வெளியே இருந்த ஒருவர் திரும்பவும் உள்ளே வரலாம். ஜெமினி என்ற வடிவத்தின்படி, ஒருமுறை அவுட் ஆகி வெளியேறியவர் அந்தச் சுற்று முடியும்வரை திரும்ப வர முடியாது. ஓர் அணியில் இருந்த அனைவரும் அவுட் ஆனால் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும், மீண்டும் ஆட்டம் தொடரும். இவ்வாறு விதிகள் ஒவ்வொரு பகுகிக்கும் ஒவ்வொரு வகையாக இருந்தன. இந்திய கபடி கூட்டமைப்பு 1952இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு தெளிவான விதிகளை வகுத்தது. 1980இல் ஆசிய கபடி கூட்டமைப்பின் விதிகள் வகுக்கப்பட்டன.

ஆண்கள் ஆடும் களம் 13 மீ x 10 மீ பரப்பு கொண்டிருக்கும். பெண்கள் ஆடும் களம் 12 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும் கோடுகளும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குலம் இருக்க வேண்டும்.

பாடிச் செல்பவர் ரெய்டர் என அழைக்கப்படுகிறார். கபடி கபடி என்று மூச்சு விடாமல் பாடுவதை கான்ட் (cant) என்கிறார்கள். கான்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, முடிவே இல்லாமல் தொடர்ந்து சொல்வதால் பொருளிழந்து போன சொல் என்று பொருள். ஹு-டு-டு, டோ-டோ, தி-தி, சடு குடு, குடு குடு, இந்தச் சொற்கள் எல்லாம் நீக்கப்பட்டு, இப்போது கபடி-கபடி என்ற பாட்டுதான் அங்கீகரிக்கப்பட்ட பாட்டு.

எதிராளியைத் தொட்டுவிட்டால் புள்ளி கிடைக்கும். பாடிச் சென்றவர் மாட்டிக் கொண்டால் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும். பாடிச் சென்றவர் மூச்சை விட்டு விட்டாலும் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும்.

இடையில் புதிதாக ஒரு விதி அறிமுகம் ஆனது. அதாவது, தொடர்ந்து மூன்று முறை ரெய்டு சென்றும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை என்றால் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும் என்ற விதி வந்தது. ஆனால், இந்த விதியால் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்தது. எனவே சில ஆண்டுகள் கழிந்த பிறகு. இந்த விதி நீக்கப்பட்டது.

கிராமத்தின் ஆற்று மணலிலும், திறந்த மைதானங்களிலும் நிகழ்ந்த கபடி விளையாட்டுகள் என் கண்முன் நிழலாடுகின்றன. சிறுவயதிலிருந்தே நான் ஒல்லிக்குச்சி என்ற பட்டப்பெயரைத் தக்கவைத்து வந்தவன் என்றாலும்கூட உயரமாகவும், மூச்சை இழுத்துப்பிடிக்கும் திறமையும் இருந்தவன் என்பதால் எனக்கும் எங்கள் ஊரில் கபடி அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆற்றில் குளிக்கும்போது நீருக்குள் மூழ்கி மூச்சடக்கும் போட்டியில் பங்கேற்றது கபடிக்கும் துணை செய்தது. வெறுமனே மூச்சை இழுத்துப் பிடிப்பதற்கும் பாடிக்கொண்டே மூச்சை இழுத்துப்பிடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீருக்குள் இரண்டு நிமிடங்கள் வரை இருந்தவன், கபடியில் ஒரு நிமிடம் ஒன்றரை நிமிடம்தான் தாக்குப்பிடிக்க முடியும். நான் சிறந்த கபடி வீரன் இல்லை என்றாலும், என் அணி எதிரணியைவிட அதிகப் புள்ளிகள் எடுத்திருந்தால், ஆட்ட நேரம் முடியும் வரை வெறுமனே நேரத்தைப் போக்க - அதாவது, ஏறு கோட்டை மட்டும் தொட்டுவிட்டு மூச்சுப்பிடித்த நேரத்தை வீணடித்து டைம் பாஸ் செய்ய என்னைப் போன்றவர்களும் அணிக்குத் தேவைப்படுவார்கள்.

ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவார்கள். ஒருவர் எதிரணிப் பகுதிக்குள் சென்றதும் தன் தொடையைத் தட்டி பந்தா காட்டுவார், எதிரணிக்கு கோபத்தைத் தூண்டுவார். இன்னொருவர் ஏறுகோட்டைத் தொட்டுவிட்டு நடுக்கோட்டைத் தொடுகிற தூரத்தில் பந்தாவாக படுத்துக்கொண்டு வெறுப்பேற்றுவார். மற்றொருவர், ரஜினி வில்லனை ஒவ்வொருவனாக அடிக்கப்போகிறேன் என்று விரலால் சுட்டுவது போல அடுத்த்து நீதான் என்கிற பாணியில் எதிரணியில் எவரையேனும் சுட்டுவார். இது ஒரு தந்திரம். எதிராளிக்கு ஆத்திரமூட்டி அவன் தன் கையைப் பிடிக்கத் தூண்டுகிற தந்திரம். கபடியில் புதிதாக வந்தவன்தான் கையைப் பிடிப்பான். கையைப் பிடிப்பது போன்ற முட்டாள்தனம் கபடியில் வேறேதும் இருக்க முடியாது. பாடி வந்தவன் சட்டென்று கையை உருவிக்கொண்டு திரும்பி விடுவான்.

பாடி வருபவனைப் பிடிக்க இரண்டிரண்டு பேராக கைகளைக் கோத்துக்கொண்டு வளைய வருவதும், எதிராளி அருகே வரும்போது அதே வளையம் பின்னோக்கி நகர்வதும் உடைந்த வளையல்கள் அருகருகே இருப்பது போன்று எனக்குத் தோன்றும். பாடி வருபவனைக் கண்டு பயந்ததுபோல இயன்ற அளவுக்கு பின்னால் போய், அவனை நன்றாக உள்ளே ஏறவிட்டபின் அப்படியே அமுக்கி விடுவது இன்னொரு தந்திரம். எனக்கும் இந்தத் தந்திரங்கள் எல்லாம் அத்துபடி. ஏறுகோட்டைத் தொடுவதோடு சரி, யாரையும் அவுட்டாக்கும் உத்தேசம் இல்லாதவனாய் பாடிக்கொண்டே குறுக்காக தளுக்கு நடை போட்டு வெறுப்பேற்றுவேன். இந்த ஒல்லிக்குச்சிக்கு திமிரு பாரு என்று யாரேனும் ஒருவனுக்கு நிச்சயம் கோபம் வந்து பின்னால் வந்து பிடித்து விடுவான். அப்படியே அவனையும் இழுத்துக்கொண்டு நடுக்கோட்டைப் பார்த்து கைநீட்டியபடி விழுந்தால் போதும், ஆள் அவுட். ஜாக்கி சான் செய்யும் அத்தனை சேஷ்டைகளும் கபடி அரங்கில் அன்றே அரங்கேறியவைதான். அத்தனையும் இன்று நினைவேடுகளில் மட்டுமே பதிந்து கிடக்கின்றன.

கபடி விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் ஒலிக்கும். குறிப்பாக பஞ்சாபிலிருந்துதான் குரல் வலுவாக ஒலிக்கிறது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டு டெமான்ஸ்டிரேஷன் கேம் வகையில் ஆடிக்காட்டப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. சற்றே ஆராய்ந்தபோது, மகாராஷ்டிரத்தின் ஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல் என்ற உடற்பயிற்சிக் கழகத்தினர் பெர்லினில் உடற்பயிற்சிகள் செய்து காட்டியதாகத் தெரிகிறது. இதற்காக ஹிட்லர் பதக்கம் அளித்தார் என்கிறது இந்து நாளிதழின் செய்தி. இந்த உடற்பயிற்சிக் கழகத்திற்கு நூறாண்டு ஆகப்போகிறது. இதன் கட்டிடத்தை காந்தி 1926இல் திறந்து வைத்தார் என்றும், நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. ஆனால் ஒலிம்பிக்கில் கபடி இடம்பெற்றதாக ஆதாரபூர்வமான செய்திகள் ஏதும் இல்லை.

ஒலிம்பிக்கில் ஏதேனும் ஒரு விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என்றால், குறைந்தது மூன்று கண்டங்களில் ஐம்பது நாடுகளில் ஆடப்படும் விளையாட்டாக இருக்க வேண்டும் என்பது ஒலிம்பிக் விதி. கபடி இப்போது ஆசியக் கண்டத்தில் மட்டுமே - அதிலும் தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிறது. எனவே, இப்போதைக்கு இந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.

வங்கத்தில் கபடி தேசிய விளையாட்டு. ஈரானில் கபடி தேசிய விளையாட்டுகளில் ஒன்று. சீன தைபெய், நேபாளம், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் கபடி மிகவும் பிரபலம். இந்தியாவின் சகோதர நாடான பாகிஸ்தானிலும் கபடி பிரபலம் என்று கூறத்தேவையில்லை.

1990 ஆசிய விளையாட்டில் கபடி முதல் முறையாக இடம் பெற்றது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது - அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2010இல் ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி அறிமும் ஆனது, இந்திய மகளிர் தாய்லாந்தை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

கபடி உலகக் கோப்பை 2004இல் அறிமுகம் ஆனது. இந்தியா சாம்பியன் ஆனது. தொடர்ந்து 2007, 2010, 2011 உலகக் கோப்பையிலும் இந்தியா சாம்பியன் ஆனது, மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டி முதல்முதலாக 2012 ஜனவரியில் பீகாரில் நடைபெற்றது. இந்திய மகளிர் ஈரானை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.

இங்கிலாந்து, நியூ சிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கபடி ஆடப்படுகிறது. 2010இல் பஞ்சாபில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பையில் இத்தாலியும் ஸ்பெயினும்கூட இடம் பெற்றன. 1979இல் ஜப்பானில் கபடி அறிமுகம் ஆனது. ஆசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளைப் பொறுத்தவரை, கபடி அணிகளில் இடம்பெறுபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்தான். இன்றைய தேதியில் முப்பது நாடுகளில் கபடி ஆடப்படுவதாகத் தெரிகிறது.

ஆக, ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வேண்டுமானால் கபடி இன்னும் பல நாடுகளில் ஆடப்பட்டு ஒலிம்பிக் குழுவைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு முக்கியமான ஆட்டமாக வேண்டும். 2020 ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படும் என்று இந்திய கபடி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நிகழ்ந்தால் 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம்.


- 2012இல் வானொலியில் நான் வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து சுருக்கப்பட்டது.

Friday 9 October 2015

கூகுள் எழுத்துணரிஎன்றோ அச்சிடப்பட்ட பழைய நூல் ஒன்று மறு அச்சுக்கு வருகிறது; அல்லது ஓர் ஆவணம், பிடிஎஃப் வடிவில் அல்லது படத்தின் (image) வடிவில் இருக்கிறது, அதைப் படித்துப் பார்த்து திருத்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இவை ஆங்கிலத்தில் இருந்தால் கவலைப்பட ஏதுமில்லை.

ஓ.சி.ஆர். (OCR) எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் – எழுத்துணரி மென்பொருளைப் பயன்படுத்தி, படத்தில் இருப்பதை எழுத்துவடிவ உரைகளாக மாற்றிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் ஸ்கேனர்கள் வாங்கும்போது இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களில் எழுத்துணரி மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது, படத்தில் உள்ள எழுத்துகள் எந்த அளவுக்கு தெளிவாக உள்ளதோ அந்த அளவுக்கு பிழைகள் குறைவாக உரைவடிவில் எடுக்க முடியும். பொதுவாக 85 முதல் 90 சதவிகிதம் சரியாக இருக்கும். பிறகு பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். அல்லது, Abbey Finereader போன்ற தரமான எழுத்துணரி பயன்படுத்தி, 98 சதவிகிதம் வரை பிழையின்றி எழுத்துவடிவில் பெற முடியும். ஆனால் தமிழில்....?

மைய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்லா மொழிகளிலும் கணினிக்கேற்ற பல மென்பொருட்களை உருவாக்கி குறுந்தகடுகளாக வெளியிட்டது. இது உண்மையில் பயன் தரும் நோக்கமாக அல்லாமல், வெறும் விளம்பர நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது. எனவே பெரும்பாலான மென்பொருள்கள் காலாவதி ஆனவை. இன்றைய யுனிகோட் வடிவுக்குப் பொருந்தாதவை. சிறிது காலத்தில் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. அந்தக் குறுந்தகட்டிலும் ஓசிஆர் மென்பொருள் ஒன்று இருந்த்தாக நினைவு. ஆனால் வெற்றிகரமாக அது செயல்படவில்லை.

சென்னையில் பொன்விழி என்று ஒரு மென்பொருள் இருப்பதாக தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் அந்த நிறுவனத்தின் தளத்தில் அதைக் காணவில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒருமுறை விலைக்கு வாங்கி கணினியில் நிறுவிய பிறகு, நமது கணினியின் ஹார்ட் டிஸ்க்கை அழித்து எழுதி விட்டால் மீண்டும் நிறுவும்போது மீண்டும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அரசு சார்ந்து சில நிறுவனங்கள் தமிழ் எழுத்துணரி மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக பல ஆண்டுகளாகவே செய்திகளைப் பார்த்து வருகிறேன். ஆனால் இதுவரை பயனுள்ளதாக ஏதும் கிடைக்கவில்லை.

http://www.i2ocr.com/free-online-tamil-ocr என்று ஒரு வலைப்பக்கம் இருக்கிறது. இதில் மிகச் சிறிய அளவில் படங்களைப் பதிவேற்றினால் எழுத்துகளாக மாற்றித் தருகிறது. ஆனால் இந்தச் சிறிய படத்துக்கும் ஏகத்துக்கு பிழைகளோடு மாற்றித் தருகிறது. சான்றாக, கீழே இருக்கும் படத்தையும் அதன் கீழே இருக்கும் உரையையும் பார்க்கலாம். பிழைகள் மட்டுமல்ல, வரிகளும் தனித்தனியாக வரும்.


அவருக்குக் கறுப்புக் டுகஈடி கஈட்டினஈர்கள். ஜளுலை மஈதம் முன்றஈம'
வரீரத்தில' வட்டருமனஜ மகஈநரட்டு உறுப்பிளர்சுளின் டுபயர்கள் அறிவிக்சுப்
பட்டன, மகஈத்மஈ சுஈந்தி, ஜின்னஈ, ஸப்ரு, ஆகிகீயரீருடன் அம்பிபதகரும்
அனழக்கப்பட்டிருநதஈரீ, இய்முனற அவர் சஉட்டஈட்சி அனமப்புக' குழு உறுப்
பினர் என்ற முனறயில' கீசர்க்கப்பட்டிருந்தஈர். இந்திய அரசியலனமப்புச்
சட்டத்தின் முன்வனரவு தயஈர் கிசய்யும் கீவளை இக்குழுவினரிடம் தரப்
பட்டிருற்தது' '

ஆக, இது பயன் தரவில்லை. வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய எழுத்துணரி எனக்கு தொழில்முறையாகத் தேவைப்படுகிறது என்பதால் பல காலமாகவே தேடலில் இருந்தேன். Tesseract என்ற பெயரிலும் ஒரு மென்பொருள் கிடைக்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தோழி, அது சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். இதில் ஸ்கேனரையும் Tesseract மென்பொருளையும் டிரெயின் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு அது பயன் தரக்கூடும். எனக்கு அவ்வளவு திறமை கிடையாது.

அதிர்ஷ்டவசமாக, சில நாட்களுக்கு முன் மலைகள் டாட் காம் தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கூகுள் டிரைவ் தளத்தில் எழுத்துணரி வசதி இருப்பதாக அந்தக் கட்டுரை காட்டியது. உடனே சோதித்துப் பார்த்தேன். மேலே காட்டப்பட்ட அதே படத்தின் முழுப் பக்கத்தையும் கூகுள் டிரைவ் எழுத்துணரியில் முயற்சி செய்தேன். கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொடுத்தது.


அவருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் வட்டமேஜை மகாநாட்டு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டன. மகாத்மா காந்தி, ஜின்னா, ஸப்ரு ஆகியோருடன் அம்பேத்கரும் அழைக்கப்பட்டிருந்தார். இம்முறை அவர் கூட்டாட்சி அமைப்புக் குழு உறுப் பினர் என்ற முறையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்வரைவு தயார் செய்யும் வேலை இக்குழுவினரிடம் தரப் பட்டிருந்தது. - அம்பேத்கர் நியமிக்கப்பட்ட செய்தி பரவியதும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பாராட்டுகள் தொடர்ச்சியாக வந்து குவிந்தன. அம்பேத்கரை வழக்கமாக எதிர்த்தெழுதும் பத்திரிகையான குலாபா சமாச்சார் கூட சிர்னேர் வழக்கு, சைமன் கமிஷன், வட்டமேஜை மகாநாடு ஆகிய சூழ்நிலைகளில் அவர் வெளிப்படுத்திய தேசிய உணர்வைப் பாராட் டியது. இண்டியன் டெய்லி மெயில், ஸண்டே கிரானிகிள், கேசரி ஆகிய செய்தித்தாள்களும் அவரது நியமனத்தை வரவேற்றன. - இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் மகாத்மா காந்தி பங்கு கொள்வது நிச்சயமில்லாமலிருந்தது. அம்பேத்கரின் கோரிக்கைகளின் பின்ன ணிையைப் புரிந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி தானாகவே அம்பேத் கரைச் சந்திக்கும் விருப்பத்தைக் கடிதம் மூலம் வெளியிட்டு 6-8-1931 அன்று சந்திக்க வருவதாக நிச்சயித்தார். அம்பேத்கர் காந்திஜியிடமிருந்து கடிதம் எதிர் பார்க்கவில்லை. அன்றுதான் அவர் ஸாங்கலி என்ற ஊரிலிருந்து திரும்பி யிருந்தார். காய்ச்சலால் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. எனினும், இரவு 8 மணிக்கு நானே உங்களைச் சந்திக்க வருகிறேன்" என்று சொல்லியனுப் பினார். ஆனால் அன்று மாலை 106 டிகிரி வரை காய்ச்சல் ஏறிவிட்டது. வேறு வழியின்றி அவர் காய்ச்சல் இறங்கியதும் தங்களைச் சந்திக்க வருகிறேன் என்று செய்தியனுப்ப நேர்ந்தது. அதன்படி 14-8-1193 அன்று பிற்பகல் அம்பேத்கர் மகாத்மா காந்தியைச் சந்திக்கப் பம்பாயில் மணி பவனை அடைந்தார். இந்தச் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. சந்திப்பின்போது காந்திஜி அம்பேத்கரிடம் இந்து-முஸ்லிம் பிரச்சினையைவிடத் தீண்டத்தகாத வர்களின் பிரச்சினையை அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தான் கருது வதாகச் சொன்னார். தனக்குத் தீண்டத்தகாதவர்களின் மீது அளவுகடந்த அன்பு இருந்த போதிலும், அம்பேத்கர் தன்னை காந்தியடிகளை தீண்டத் தகாதவர்களின் தலைவராக ஏற்கத் தயாரில்லை என்பது தனக்கு வியப் பளிப்பதாகக் கூறினார். தீண்டாமையை ஒழிக்கக் காங்கிரஸ் கட்சி 20 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வாறு காந்திஜி கூறியதைக் கேட்டதும் அம்பேத்கர் சொன்னார். இந்த விஷயம் இன்றுவரை எனக்குத் தெரியாது. காங்கிரசின் முயற்சி

தேவர் திரைப்படங்களில் எம்ஜிஆர் வெற்றி! வெற்றி! என்று கூவுவாரே... அப்படிக் கூவத் தோன்றியது எனக்கு. ஆமாம், கூகுள் டிரைவ் எழுத்துணரி அருமையாகச் செயல்படுகிறது. இதை எப்படிச் செய்வது என்பதை படத்துடன் பார்க்கலாம்.

1. எந்தப் பக்கத்தை எழுத்துகளாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கேன் செய்து படமாக மாற்றிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 300 dpi இருக்க வேண்டும்.

2. ஜிமெயில் கணக்கில் நுழைந்து கூகுள் டிரைவுக்குச் செல்லுங்கள், அல்லது கூகுள் டிரைவ் பக்கத்தில் லாகின் செய்யுங்கள். திறக்கிற பக்கத்தில் இடதுபுறம் பாருங்கள். படத்தில் உள்ளதுபோலத் தெரியும்.


3. அதில் New என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல, ஒரு மெனு கீழ்நோக்கி விரியும். அதில் File Upload என்பதை தேர்வு செய்யுங்கள்.

4. ஒரு சாளரம் திறக்கும். நீங்கள் படத்தை எங்கே சேமித்து வைத்தீர்களோ அந்த போல்டரைத் திறந்து, படத்தின் கோப்பைத் தேர்வு செய்யுங்கள். படம் பதிவேற சில நிமிடங்கள் எடுக்கலாம். பதிவேறிய பிறகு இவ்வாறு படம் தெரியும். (கீழே மாதிரியில் Scan0085 என்பது நான் தேர்வு செய்து பதிவேற்றிய படம்)


5. படத்தின்மீது மவுசால் கிளிக் செய்து, வலதுபக்க பொத்தானை கிளிக் செய்யுங்கள். கீழ்க்கண்டதுபோல மெனு விரியும். அதில் Open With என்று தெரிகிற இடத்தின்மீது கிளிக் செய்யுங்கள். அதன் வலதுபுறம் Google Docs என்று தெரியும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
 
6. புதிதாக ஒரு சாளரம் திறக்கும். அதில் படத்தை எழுத்துணரியாக மாற்றும் பணி சில நிமிடத்தில் அல்லது சில நொடிகளில் நடக்கும். மாற்றிய பிறகு படம் மேலாகவும், எழுத்துகள் கீழாகவும் கீழ்க்கண்டவாறு தெரியும்.


அவ்வளவுதான். வேலை முடிந்தது. படத்தின் கீழே இருக்கும் உரைப்பகுதியை மொத்தமாக செலக்ட் செய்து, காபி செய்யலாம் (Control+C), எங்கே தேவையோ அங்கே பேஸ்ட் (Control+V) செய்து கொள்ளலாம். நீங்கள் பதிவேற்றிய படமும், எழுத்துகளாக மாற்றப்பட்ட உரையும் கூகுள் டிரைவிலேயே இருக்கும். பிடிஎஃப் வடிக் கோப்புகளையும் எழுத்துகளாக மாற்றலாம், ஆனால் சில பிழைகள் வரக்கூடும். அதே பிடிஎஃப் பக்கத்தை படமாக மாற்றிப் பதிவேற்றினால் பிழைகள் குறைவு.

கடைசியாக அனுபவத்திலிருந்து ஓர் எச்சரிக்கை. கூகுள் டிரைவில் நான் செய்து பார்த்தபோது, நூறு படங்களுக்கு மேல் பதிவேற்றி விட்டால், எழுத்துகளாக மாற்றும் வசதி வருவதில்லை. Open With என்று கிளிக் செய்யும்போது Google Docs என்று காட்டுவதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஃபைல், அதன் உரைக்கும் ஒரு ஃபைல் – ஆக 100 படங்களுக்கு 200 ஃபைல்கள் சேர்ந்து விட்டால் அதற்கு மேல் படத்தை எழுத்துணரியாக மாற்ற முடியவில்லை என்று புரிந்தது. இந்தப் பிரச்சினை வந்தால், முன்னர் எழுத்துகளாக மாற்றிவிட்ட சில ஃபைல்களை நீக்கி விட்டால் போதும், மீண்டும் தொடர்ந்து எழுத்துணரியில் மாற்றலாம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

நன்றி - http://malaigal.com/?p=7382