Thursday, 25 July 2013

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த.வி. வெங்கடேசுவரனையும் அழைத்தேன். இதற்கிடையே தினமணியிலிருந்து பா. கிருஷ்ணனும் அழைக்கப்பட்டு விட்டார். ஒருவர் மட்டுமே வரவில்லை. எனவே பேச்சாளர்கள் ஏழு பேராகி விட்டோம். எனவே நேரம் ஆளுக்கு 10 நிமிடம் என குறுக்கப்பட்டது. எவரும் 10 நிமிடங்களுக்குள் முடிக்க இயலவில்லை என்பது வேறு விஷயம்.

டாக்டர் சுந்தர ராஜனின் அறிமுக உரை, சங்கச் செயலர் முகுந்தனின் வரவேற்புரை, சங்கத் தலைவர் கிருஷ்ணமணியின் தலைமை உரை, பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளுக்கும் பின் ஏழு பேரும் உரையாற்றினோம். 

முதலில் உரையாற்றிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் த.நா. சந்திரசேகரன், சங்க இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் பற்றி உரை வாசித்தார்.

த.வி. வெங்கடேசுவரன் மைய அரசின் அறிவியல் பிரச்சார நிறுவனத்தில் பணிபுரிபவர். அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்டு ஏராளமான நூல்களை எழுதியவர். அறிவியல் பிரச்சாரமே அவருக்கு மூச்சு. அவருக்கு இத்தலைப்பு சர்க்கரைக்கட்டி. இலக்கியம் என்னும்போது, வாய்மொழி இலக்கியம், பழமொழி இலக்கியம் ஆகிய வடிவங்களிலிருந்தும் அறிவியல் குறிப்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார். இவருடைய உரைதான் கருத்தரங்கின் நோக்கத்திற்கேற்ற மிகச்சிறப்பான உரை. 

என் உரை கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

பா. கிருஷ்ணன், அறிவியல் என்பதில் உளவியல், நிர்வாக இயல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்று கூறி, திருக்குறளிலிருந்து பல உதாரணங்களைக் காட்டி அழகாக உரையாற்றினார்.

பொன்ராஜ், அப்துல் கலாமுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சித்த மருத்துவக் குறிப்புகளிலிருந்து ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், சர்க்கரை நோய்க்கு மருந்து விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார். இலக்கிய ஆதாரம் குறிப்பிடாமல் பேசும்போது அதில் வலிமை இருப்பதில்லை என்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்.

சிறப்புப் பேச்சாளர் அப்துல் காதர் பிரபலமான பேச்சாளராம். நான் அவரது நிகழ்ச்சிகள் எதையும் தொலைக்காட்சியில் பார்த்ததில்லை. தெள்ளிய நீரோடை போன்ற பேச்சு, வழக்கமான நகைச்சுவைத் துணுக்குகள், குறிப்புகளே இல்லாமல் இயல்பாக வரும் சொற்பொழிவு என அருமையாக உரையாற்றினார். பாரதிதாசன் உள்பட தமிழ் இலக்கியத்தின் சில அறிவியல் கருத்துகளை அழகாக விளக்கினார். 

கடைசியாக வந்த பேச்சாளர் நெல்லை சு. முத்து. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். திருக்குறளின் 1330 குறள்களுக்கும் அறிவியல் நோக்கில் புதிய உரை எழுதியிருப்பதாகக் கூறினார். விளக்கத்திற்காக பவர்பாயின்ட் பிரசன்டேஷன் பயன்படுத்தி அறிவியலின் பல கட்டங்களை விளக்கினார். ஆனால் நேரக்குறைவு பற்றிய கவனமின்றி நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பாதிக்கூட்டம் கலைந்து விட்டது.

* * *
என் உரை

நான் தமிழறிஞன் அல்லன். எளிய வாசகன். இலக்கிய ஆர்வலன். இலக்கியத்தின் சுவைகளை ருசிக்கத் துடிக்கும் பல்லாயிரம் ஆர்வலர்களில் ஒருவன். எனவே இந்த அரங்கில் என் பார்வை, பொதுவான பார்வையாகவே இருக்க முடியும். அதனை அவையோர் பொறுத்தருள வேண்டுகிறேன்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேசத் துவங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் கண்ணில்படுவது இதுவே.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கூறும்போதே அவ்வையுடன் வள்ளுவரும் நினைவில் வந்து விடுகிறார். அவ்வையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத்தேவையில்லை. மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான்.

தொடர்ச்சியாக நினைவில் வருவது வள்ளுவர் பெயர். உலக வாழ்க்கைக்கே அடிப்படையாக இருப்பது நீர்தான். ஆங்கிலத்தில் Water is the matrix of life என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் -
நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.
என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the matrix of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்வோம். தொல்காப்பியம் என்றாலே இலக்கண நூல் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் இன்று மொழி அறிவியல் என்றொரு வகை இருக்கிறது. லிங்க்விஸ்டிக்ஸ் என்னும் மொழியியல் கோணத்தில் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் முந்தைய தொல்காப்பியத்தில் மொழிக்கு இலக்கணம் மட்டுமல்ல, ஒலி அமைப்பும் உச்சரிப்பும்கூட தெள்ளத்தெளிவாக, இன்றும் திருத்தம் தேவைப்படாத. திருத்த முடியாத செம்மையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரிகிறது.

தொல்காப்பியம் வரையறுக்கிற ஒலிகளும் மாத்திரைகளும், மயக்கங்களும் திரிபுகளும் வியக்க வைக்கின்றன. பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் அதனை உணர்ந்து படிக்கவில்லை. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களுக்காக மட்டும்தான் படித்திருக்கிறோம்.

சுருக்கமாக சிலவற்றைப் பார்ப்போம்.
அகரமுத னகர விறுவாய் முப்பதென்ப.
உயிர் 12, மெய் 18 ஆக மொத்தம் முப்பது.
அப்புறம் சார்பெழுத்துகள்
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

அதைத் தொடர்ந்து உயிர்க் குற்றெழுத்துகள், நெட்டெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று விளக்கும் தொல்காப்பியர், சட்டென ஒரே வரியில் சொல்கிறார்
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

அதாவது, உயிரெழுத்து மெய்யோடு இயைந்து உயிர்மெய் எழுத்தாக ஆனாலும், அந்த உயிரின் இயல்பு மாறாது. இதுல என்ன பெரிய அதிசயம் இருக்கு.... என்று தோன்றக்கூடும்.
க் += கி, ப் += பூ, ம் += மா.

தமிழில் உயிரெழுத்துகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் இருக்கிற A E I O U என்னும் vowels எடுத்துக்கொள்வோம். இதர ஆங்கில எழுத்துகள் கான்சனன்ட்ஸ்.
இப்போது பார்ப்போம். B I K E – bike. K I T E – kite இங்கே, ஐ என்பது சரியாக அதன் இயல்பு திரியாமல் ஒலிக்கிறது.

இன்னொன்றையும் பார்ப்போம் B I T – bit, S I T – sit, W I T – wit. இங்கே ஐ என்ற உயிரெழுத்தின் இயல்பு திரிந்து விட்டது. இதே போல
S U N – sun, SON – son,  A D D – add, A L L – all

ஆங்கில உயிர் எழுத்துகளின் இயல்பு திரிவது பற்றி இதுபோல ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். ஆனால் தமிழில் எந்த உயிரெழுத்தும் மெய்யெழுத்தோடு சேரும்போது அதன் இயல்பு திரியாது. எஸ் யு என் சன் என்று கூறுவது போல MUTHU - முத்துவை மத்து என்று உச்சரிக்க முடியாது. உச்சரிக்க மாட்டோம்.

அதே போல, எந்தெந்த எழுத்துகள் முதலெழுத்தாக வரலாம், எந்தெந்த எழுத்துகள் அல்லது உயிர்மெய்கள் மொழிக்கு முதலாக வராது, மெய்யெழுத்தை அடுத்துவரும் உயிர்மெய் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும், எந்த உயிர்மெய்கள் திரியும், அல்லது மயங்கும், என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது தொல்காப்பியம்.

1.     பன்னீர் உயிரும் மொழிமுத லாகும்.
2.     உயிர்மெய் அல்லன மொழி முதலாகா.
3.     கதந பம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
4.     சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஔ எனும் மூன்றலங் கடையே
.5.    உஊ ஒஓ என்னும் நான்குயிர்
      வ என் எழுத்தொடு வருதலில்லை.
6.     ஆ எ ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய.
7.     ஆவோ டல்லது யகர முதலாவது.

இந்த எழுத்துகள் மட்டும்தான் முதலெழுத்துகளாக வரும். விளக்கிச் சொன்னால்,
1.     பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் முதலெழுத்துகளாக வரலாம்.
2.     உயிர்மெய் அல்லாத மெய்யெழுத்து எதுவும் முதலெழுத்தாக வராது.
3.     க த ந ப ம ஆகிய ஐந்து உயிர்மெய்களும், இந்த ஐந்துடன் பன்னிரண்டு உயிர்களோடு சேர்ந்த உயிர்மெய்களும் முதலெழுத்துகளாக வரலாம்.
4.     ச எனும் எழுத்துடன் அ, ஐ, ஒள ஆகிய மூன்று தவிர்த்து இதர உயிரெழுத்துகளுடன் இணைந்து முதலெழுத்தாக வரலாம்.
5.     அ ஐ ஔ தவிர்த்து இதர உயிர்களுடன் சேர்ந்து மட்டுமே ச முதலெழுத்தாக வரும்.
6.     ஞகரம், ஆ எ ஓ என்னும் மூன்று உயிர்களுடன் மட்டுமே முதலில் வரும்.
7.     யகரம் ஆ என்னும் உயிர் தவிர்த்து முதலெழுத்தாக வராது.

இதைத்தவிர பிற உயிர்மெய்கள் ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகியவை முதலெழுத்துகளாக வரவே வராது. சில விதிவிலக்குகள் தவிர.

உச்சரிப்பைப் பார்த்தால்,
ம் க்கு அப்புறம் ப வந்தால் BA என்றுதான் உச்சரிக்கப்படும். கம்பம், செம்பு, ப என்னும் எழுத்து முதலெழுத்தாக வந்தால் PA என்றுதான் உச்சரிக்கப்படும். பன்னீர், பல், பல்லி, பனை, பசி, பசு, பட்டினி... ங் க்கு அடுத்து க வந்தால் GA என்றுதான் உச்சரிக்கப்படும். இன்னும் இதுபோல விளக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு தெளிவான மொழியியல் விளக்கங்கள் எப்போது எழுதப்பட்டன... இப்போது இல்லை. வெள்ளைவாரணார் கருத்துப்படி கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்று கருதாவிட்டாலும், குறைந்தபட்சம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியியல் விதிகள் வரையறுக்கப்பட்டு விட்டன.

மொழியியல் குறித்து இதற்கு மேலும் விளக்கிக் கொண்டே போனால் இலக்கண வகுப்பு நடத்துவது போல உங்களுக்குத் தோன்றக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.

மதிப்புக்குரிய நண்பரும் சாகித்ய அகாதமி மொழியாக்க விருது பெற்றவருமான டாக்டர் எச். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியத்தை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அவருடைய மொழியாக்கத்தை தட்டச்சு செய்து, தமிழுடன் தொகுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அப்போது வாசிக்கக் கிடைத்த வரிகளைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. இலக்கண நூல் என நாம் கருதும் தொல்காப்பியம் தொடாத விஷயமே இல்லை.

திருக்குறளில் அறம், பொருள், இன்பம் போல, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. முன்னர் மொழியியல் குறித்து நான் எடுத்துக்கூறிய பகுதிகள் எழுத்ததிகாரத்தில் உள்ளவை. உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, கருப்பொருள்களைக் கொண்ட சூழல், ஆகியவற்றை எல்லாம் விவரிக்கிறது பொருளதிகாரம்.

நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இந்த உலகம் என்று கூறும்போது, கலந்த மயக்கம் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஒன்றொடு ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும், கலந்தும் கரைந்தும் இருப்பது உலகம் என்கிறார் தொல்காப்பியர்.

அடுத்து, உயிரினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம். உயர்திணை, அஃறிணை.
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
அதாவது, மனிதர்கள் என்போர் உயர்திணை
அஃறிணை என்றால் என்ன அல் திணை அதாவது திணை அல்லாதது. ஆக, திணை என்பதை மக்களுக்கும் திணை அல்லாத அனைத்தையும் அஃறிணை என்றும் வகுக்கிறது தொல்காப்பியம். இது வேறு எந்த மொழிகளிலும் இல்லாத ஒரு கருத்தாகும்.

இதைத்தொடர்ந்து, உயிர்களை பாலினங்களாக வகுக்கிறது.
தொல்காப்பியத்தை மட்டுமே தனித்தலைப்பாக எடுத்தாலே மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அறிவியல் கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. மாதிரிக்கு இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகிறேன்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

சுருக்கமாக விளக்குகிறேன் ஓரறிவு உயிரானது உடம்பினாலறிவது. ஈரறிவு உயிர் என்பது வாயும் கொண்டது. மூவறிவு உடையது மூக்கையும் கொண்டது. நான்கறிவு உடையது கண்ணையும் கொண்டது. ஐந்தறிவு உள்ளது செவித்திறனும் உடையது. ஆறறிவு என்பது சிந்திக்கும் மனமும் கொண்டது.
தொல்காப்பியத்தின் மரபியலில் வரும் இப்பாடலைத் தொடர்ந்து, ஓரறிவு உயிர்கள் எவை, ஈரறிவு கொண்ட உயிர்கள் எவை என்ற பட்டியலும் தரப்படுகிறது.
புல்லும் மரனும் ஓரறிவினவே
நந்தும் முரளும் ஈரறிவினவே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
மாவும் புள்ளும் ஐந்தறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே....
புல்லும் மரமும் ஓரறிவு கொண்டவை.
சங்கு, நத்தை கிளிஞ்சல் போன்றவை ஈரறிவு கொண்டவை
அட்டை, எறும்பு போன்றவை மூவறிவு உடையவை.
நணடு, தும்பி போன்றவை நான்கறிவு உடையவை.
நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவுடையவை.

இதைத்தொடர்ந்து உயிரினங்களைப் பற்றிய விளக்கமும் தொடர்கிறது. அதையும் விளக்க இங்கே நேரம் போதாது. ஆனால் சிந்தனை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ் இலக்கியத்தின் செழுமையை வியக்காமல் இருக்க முடிவதில்லை.

தொல்காப்பியரின் அதே கருத்தை -
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாகிப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.....
என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். சைவசிந்தாந்தக் கருத்தின்படி முனிவராய் தேவராய் எனவும் மறுபிறப்பு பற்றியும் பாடுவதை தனியாக ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், தொல்காப்பியர் சொன்ன அதே புல், பூண்டு, புழு, மரம், விருகம், பறவை, மனிதர் என உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழின் பக்தி இலக்கியமும் பாடுவதை நாம் அறிய முடிகிறது.

அண்மையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்த பிறகு ஏராளமான புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் எனக்குப் பிடித்த, தமிழின் சிறப்பை உணர்த்துகிற தகவல்களை சேகரித்து வருகிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நாம் பல விதமான அளவை முறைகளைப் பயன்படுத்துகிறோம். நீட்டல் அளவை, முகத்தல் அளவை, எடை அளவை, கால அளவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் தமிழில் பண்டைக் காலத்திலேயே பல்வேறு அளவைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

தொல்காப்பியத்திலேயே பல அளவைப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அளவுப்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என மூன்றாகப் பகுத்துக்கொள்கிறது தொல்காப்பியம்.

அளவைகள் பற்றி மேலும் அறிய விக்கிபீடியா பார்க்கவும்.
நில அளவையில் காணி என்பது நாம் அனைவரும் அறிந்தது. காணிநிலம் வேண்டும் என்று பாரதி பாடியதால், காணி நிலமாவது வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். உண்மையில் காணி என்பது சுமார் 92 சென்ட், 40000 சதுர அடி.

சரி, இப்படி வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு எல்லாவகை அளவைகளும் தமிழில் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை முற்ற முழுக்க மறந்து விட்டோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் சரிதான். ஆனால் பழையவை என்று நமது பொக்கிஷங்களை கழித்துவிட முடியுமா... ஆனால் நாம் கழித்துக்கட்டி விட்டோம் என்பதுதான் உண்மை.

குறவஞ்சியில் மட்டும் காணக்கிடைத்த பறவைகளின் பெயர்களை அண்மையில் பார்த்தேன்.
அகத்தாரா, அன்றில், அன்னம், ஆந்தை, ஆரா, ஆலா, ஆனைக்கால் உள்ளான், இராசாளி, உள்ளகன்,  கபிஞ்சலம், கம்புள், கருநாரை, கரும்புறா, கருவாலி, கவுதாரி, கருப்புக் கிளி, காட்டுக்கோழி, காடை, காணாக்கோழி, கிளிப்பிள்ளை, குயில், குருகு, கூழைக்கடா, கேகை, கொக்கு, கொண்டைகுலாத்தி, கோரை, சக்கரவாகம், சகோரன், சம்பங்கோழி, சம்பரன், சாதகம், சாரா, சிகுனு, சிச்சிலி, சிட்டு, சிட்டுல்லி, செந்நாரை, செம்போத்து, சேவரியான், தண்ணிப் புறா, தாரா, தீவகக் குருவி, தூக்கணம், நத்தைகொத்தி,  நாரை, நாங்கண வாச்சி, நாகை, நீர்க் காக்கை, நீர்த் தாரா, பகண்டை, பச்சைப்புறா, பஞ்சவர்ணக்கிளி, பஞ்சிலை, பணி, பருந்து, பாரத்துவாசம், பிருகு, மஞ்சணத்தி, மணித்தாரா, மயில், மாட்டுக்குருகு, மாடப்புறா, மீன்கொத்தி, லாத்தி, வட்டத்தாரா, வட்டா, வரிக்குயில், வரிசாளி, வல்லூறு, வலியான், வாலாட்டிக் குருவி, வாலான், வானம்பாடி, வெட்டுக்கிளி, வெண்கிளி, வெண்ணாரை, வெண்புறா, வெள்ளைப்புள், வெள்ளைப்புறா, வேதாளி

அண்மையில் ஒரு சிறுவர் நூலை தமிழாக்கம் செய்யும்போது ஹார்ன்பில் என்ற பறவைக்குத் தமிழ்ப் பெயர் கிடைக்காமல் தியடோர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இருவாட்சி என்ற பெயரைக் கேட்டறிந்தேன். இதுதான் இன்றைய நிலை.

மற்றொரு பக்கம், எப்போது எதைப்பேசினாலும் மிகையாக பெருமை பாராட்டுவதும் நம்மிடம் ஒரு குறையாக இருக்கிறது. எதைச் சொன்னாலும் அது தமிழில் இருந்திருக்கிறது என்பார்கள். சிலப்பதிகாரத்தை உதாரணம் காட்டி, விமானங்கள் இருந்தது என்பார்கள். கண்ணப்பநாயனார் கண்ணை ஈந்தது, பொற்கைப் பாண்டியன் பொற்கரத்தைப் பொறுத்திக் கொண்டதாகவும் உள்ள பாடல்களை வைத்து, அன்றே மாற்று உறுப்பு அறிவியலில் தமிழர்கள் சிறந்து விளங்கியது போன்ற மிகைப்படுத்தல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது இப்படியொரு குறிப்பை படிக்க நேர்ந்தது.
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  
என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. உதிரத்தில் மலம் மிகுதல் என்பது என்ன பொருளில் கூறப்பட்டிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.

அறிவியல் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பது. காப்பியங்களைப் படைத்தவர்களின் கற்பனையின் வளத்தை மட்டும் வைத்து முடிவு செய்வதல்ல என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம்.

பாரதியின் "வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்... சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.... போன்ற வரிகளும் நினைவில் வருகின்றன. இந்தக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கும் ஜூலை 21ஆம் நாளுக்கு முதல்நாள்தான் 1969 ஜூலை 20ஆம் நாள் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் கால் பதித்தார். சந்திர மண்டலத்தை இந்தியாவும் கண்டு, நீர் இருக்கிறது என்று அண்மையில் தெளிந்திருக்கிறோம் என்பதை எண்ணும்போது பாரதியின் தீர்க்கதரிசனத்தை வியக்கிறோம். ஆனால் பாரதியின் பாடல்களை மிகைகள் ஏதும் இருக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.

இத்தனை செழுமை கொண்டிருக்கும் தமிழின் அறிவியல் நூல்கள் இல்லாததும், அறிவியலை தமிழில் படிக்க முடியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்று ஆராய வேண்டியிருக்கிறது.

தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாக அமைய முடியாது என்பார் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.

எனவே, நம் முன்னே இருப்பது மிகப்பெரிய பணி. தமிழ் மொழியே பின்னுக்குத்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.

பல்வேறு அகராதிப் பணிகளை மேற்கொண்ட அனுபவத்தில் நான் இந்த இடத்தில் மற்றொன்றையும் சுட்ட விரும்புகிறேன். இந்தியில் கலைச்சொல்லாக்கத் துறை சங்கத்துக்கு நேர் எதிரே இருக்கிற கட்டிடத்தில்தான் இருக்கிறது. இந்தியில் கலைச்சொல் உருவாக்க முடியாத சொற்களுக்கு அவர்கள் மூலச்சொல்லையே பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஆனால் தமிழர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை. எந்தவகையான சொற்களுக்கு மூலச்சொற்களை அப்படியே ஏற்கலாம், எவற்றை தமிழ்ப்படுத்தலாம் என்பதெல்லாம் காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெரிய முன்னேற்றமோ ஒத்திசைவான கருத்தோ ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறிவியல் தமிழ் முயற்சி இந்தத் திசையில் உறுதியான பயணம் மேற்கொண்டால் அது தமிழுக்கும் பெருமை சேர்க்கும், தமிழ்ச் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும்.

10 comments:

 1. Your thesis is really amazing. How do you know that I am studying Tholkappiyam seriously in the past 15 days? We both sail in the same boat now!

  ReplyDelete
 2. உங்கள் உரையினைப் போல பிறரது உரைகளையும் பதிவேற்றினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அருமையான பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 3. செல்லப்பா சார்... ரசிச்சுப் படிங்க. சரி, உரை யாருடையது. இளம்பூரணர் உரை எடுத்தீங்கன்னா அதுக்கே ஒரு உரை தேவைப்படும்.

  ரகுலல்லிஹரி, நன்றி. நான் எழுதிய உரை என்னிடம் இருக்கிறது. மற்றவர்கள் பெரும்பாலும் உரையை எழுத்துவடிவில் வைக்காமல், பேசினார்கள். உரையை சமர்ப்பிக்கவில்லை. விரைவில் சமர்ப்பிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. பல புதிய தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 5. ஆழ்ந்த தகவல்களை திரட்டவும் துறை சார்ந்த அறிவு பூர்வமான விசயங்களை தமிழ்படுத்தவும் ஒவ்வொருவரும் முன்வந்தாலே போதுமானதுதான் இலக்கியத்தை குறித்த உங்கள் கருத்து ஏற்றுகொண்டாலும் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை ..

  ReplyDelete
 6. நன்றி குட்டிப்பிசாசு.
  நன்றி கோவை சரளா.

  ReplyDelete
 7. அறிவியல் தமிழ் கட்டுரை சிறப்பாக வந்திருககிறது. நீஙகள் தமிழாசிரியரல்லர் என்பதும் புரிகிறது.
  சரியாக ஆயிரம் ஆண்டுக்கு முன் -ஆங்கில மொழி இந்தியாவிற்கு வருமுன்- 50கல் சுற்றுவட்டாரத்திற்கு மலையே இல்லாத தஞ்சையில், அவ்வளவு உயரத்திற்கு அவ்வளவு பெரிய கோவிலைக் கட்டியது வெறும் பக்தியினால் மட்டும்தானா? அதில் பொறியியல் இலலையா என்னும் கோணததில் ஆய்வு செய்தால் தமிழில் பொறியியல் கட்டுரைக்கும் அது இட்டுச்செல்லும். தங்கள் அறிவியல் அறிவால் தமிழர் வளம்பெறட்டும். நன்றி எட்வினுக்கு, வணக்கம் உங்களுக்கு - நா.முத்துநிலவன, புதுக்கோட்டை-http://valarumkavithai.blogspot.in/

  ReplyDelete
 8. மாமூலனார் காலம் கி.மு.355 என்று பல்வேறு ஆதாரங்களுடன் கணிக்கப்பட்டுள்ளது மேலும் மாமூலனார் திருவள்ளுவர் பற்றி பாடியுள்ளார் ஆக திருவள்ளுவர் காலம் கி.மு 4-5 ஆம் நூற்றாண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது எனவே தொல்காப்பியரின் காலம் திருவள்ளுவரை விட குறைந்தபட்சம் 6 நூற்றாண்டு மூத்தவராக இருக்கலாம்

  ReplyDelete
 9. மாமூலனார் காலம் கி.மூ 355 இவர் திருவள்ளுவரை பாடியதால் வள்ளுவரின் காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டாகும் ஆக தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்ப்பட்டதாகும்

  ReplyDelete
 10. Thanks for your information. Very useful. Helped in my Tamil project.Thank u so much.Friends don't copy me. I am studying class 10.

  ReplyDelete