Wednesday 3 July 2013

கி.மு.வில் பிறந்திருக்க வேண்டியவன்


இது பழைய கதை. இதைப் படிக்கிறவர்கள் பலர் பிறப்பதற்கு முந்தைய கதை. 1970க்கு முன்பு. பள்ளியில் குடிநீர் வசதி எல்லாம் கிடையாது. அவரவர் மதிய சாப்பாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தோட்டங்களின் கிணற்றுக்குப் போக வேண்டும். அமராவதி வாய்க்காலில் தண்ணீர் வரும்பட்சத்தில் பள்ளிக்கு அருகே இருக்கிற கிளை வாய்க்காலில் தூக்குப்போணியும் கழுவிக்கொண்டு தண்ணீரும் அள்ளிக் குடிப்போம்.

கிணற்றுக்குப் போகிற நாட்களில் சாப்பாட்டைவிட குளியல்தான் முக்கியம். மணி அடித்ததுமே அள்ளி விழுங்கிவிட்டு ஓடத்துவங்குவோம். ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கும் மேடான ரயில் பாதையைக் கடந்ததுமே பள்ளியும் மாணவிகளும் கண்களிலிருந்து மறைந்து விடுவார்கள். ஓடுகிற வேகத்திலேயே துணிகள் எல்லாவற்றையும் கழற்றிவிடுவோம். ஈரமானால் மறுபடி பள்ளிக்குள் நுழைய முடியாதே...

ஓடிய வேகத்திலேயே கவுண்டர் தோட்டத்துக் கிணற்றில் குதிக்க வேண்டியது. டைவ் அடித்து விளையாடி, அரிதாக எவனிடமாவது இருக்கும் காசு போட்டுக் கண்டெடுத்து, தொட்டு விளையாடி, மூச்சடக்கப் போட்டி போட்டு ஒருவழியாக ஓய்ந்து வெளியே வருவோம். பாக்கெட் சீப்பெல்லாம் இருக்காது. கையாலேயே தலைமுடியை ஒருவழியாக ஒதுக்கிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக வகுப்புக்குத் திரும்பி வருவோம்.

வாய்க்காலில் தண்ணீர் வருகிற நாட்கள் வேறுவகையான சாகசங்கள். பக்கத்துக் காடுகளில் பயறு வகைகள் விளைந்திருந்தால் அதுதான் எங்கள் வேட்டைக்களம். சாலையையும் வேலியையும் ஒட்டிய பயறுச்செடிகள் எல்லாமே வீண்தான் என்பது அந்தக்காட்டுக்காரருக்கும் தெரிந்திருக்கும். எனக்கும் இன்னும் சிலருக்கும் அதைவிட சுவாரஸ்யமான விஷயத்தில் ஆசை வந்தது. கள்ளிப்பழம் தேடுவதுதான் அது. யாரிடமிருந்து அதைக் கற்றேன் என்பது நினைவில்லை.

வாய்க்கால் கரையை ஒட்டி கள்ளிகள் நிறையவே இருக்கும். கரையோரமாகவே நடந்து, செருப்பில்லாக் கால்களில் குத்துகிற முள்களைப் பொறுத்துக்கொண்டு அலைவதில் எனக்கு ஒரு செட் நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் வேலுச்சாமி முக்கியமான ஒருவன். (இந்த வேலுச்சாமியை அண்மையில் சந்தித்தது பற்றி இன்னொரு கதை, இன்னொருநாள் எழுத முயற்சிப்பேன்.)

சப்பாத்திக் கள்ளியின் ஓரங்களில் பச்சையாகக் காய்க்கும் காய்கள் பழுக்கப் பழுக்க வயலட் நிறத்தை அடையும். பழத்தின் பல பகுதிகளிலும் ரோமம் போல சிறுசிறு முட்கள் இருக்கும். கள்ளிப்பழத்தைப் இதுவரை பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம். பழத்தைப் பறிப்பதே பெரிய சிரமம். கள்ளிப்புதருக்குள் கைநுழைத்தால் முட்கள் கீறிவிடும். அதையும் மீறி எப்படியோ எட்டி, சூதானமாக பழத்தைப் பறிக்க வேண்டும். பறிக்கும்போதும் முட்கள் கையைப் பதம் பார்க்கும். பறித்த பழத்தை இரண்டு விரல்களால் பிடிப்பதுகூட சிரமமான வேலைதான். நான் இதில் முக்கியஸ்தன் ஆனதன் காரணம் நான் ஒல்லியானவன், கைகள் நீளமானவை, மெலிந்த விரல்கள். பறித்த பழத்தைச் சுற்றிலும் இருக்கிற முட்களை மீன் சுத்தம் செய்வது போல ஏதேனும் ஒரு கல்லில் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பழத்தையும் இப்படி சுத்தம் செய்யவே நேரம் ஆகிவிடும்.

அப்புறம் பழத்தைப் பிதுக்கினால்.... அடாடா... உள்ளே சிவப்பும் வயலட்டும் கலந்த வண்ணத்தில் இருக்கும் பழம். பழத்தின் உள்ளேயும் நடுவில் பெரிய முள் ஒன்று இருக்கும். அதற்கு நாங்கள் வைத்த பெயர் தொண்டை முள். எனவே, பழத்தை அப்படியே சாப்பிட்டுவிடக் கூடாது. பழத்தின் சுவை... உலகத்தின் வேறெந்தப் பழத்துடனும் ஒப்பிட முடியாத சுவை அது. சப்புக்கொட்டிச் சாப்பிடுவது ஒரு சுகம் என்றால், பழம் நாக்கில் படிவதும், அதை பற்களால் சுரண்டுவதும் ஒரு சுகம். ஒரு பழம் சாப்பிட்டாலே போதும், வாயெல்லாம் வயலட் நிறமாகிவிடும். திரும்பவும் பள்ளியை நெருங்கும் நேரத்தில் வாய்க்காலில் நன்றாகக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்வோம்.

வழக்கம்போல ஒருநாள் மதியம் கள்ளிப்பழ வேட்டைக்குப் புறப்பட்டோம். எல்லாம் முடித்து திரும்பிக்கொண்டிருந்தோம். பள்ளி நெருங்கும்போது நான் வாயைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொண்டேன். வேலுச்சாமி நீயும் வாயைக் கழுவிக்கடா என்றேன். போடா... இப்படியே விட்டாதான் வாய்ல அந்த டேஸ்ட் அப்படியே இருக்கும் என்று மறுத்துவிட்டான்.

மதியம் முதல் வகுப்பு சரித்திர வகுப்பு. ஆசிரியர் குப்புசாமி. அபாரமாக சரித்திரம் சொல்லிக்கொடுப்பார். கண்டிப்பானவரும் கூட. ஒருவகையில் வேலுச்சாமிக்கு உறவினர். அதனால் அவனிடம் கூடுதல் கண்டிப்புக் காட்டுவார். நான், வேலுச்சாமி உள்பட சில நல்லாப்படிக்கிற பையன்கள் முன்பெஞ்சுகளில் இருப்போம். வகுப்பு துவங்கியது. பாடம் நடத்திய ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்டார். சுற்றுமுற்றும் பார்த்தவர், வேலுச்சாமி அப்படியே தலையை கீழே அமுக்கிக்கொள்வதைக் கவனித்து விட்டார்.
- டேய் நீ சொல்லுடா.
எழுந்து நின்ற வேலுச்சாமி வாயில் வெற்றிலை குதப்புகிறவன் போல உம்மென்று மூடிக்கொண்டு நின்றிருந்தான்.
- டேய்... கேக்கறது காதுல விழலே...  சொல்லுடா....
கையை வாய்மேல் வைத்து அடக்கமாக நின்றான்.
- வாயில என்னடா கொழுக்கட்டையா வச்சுருக்கிற... வாயைத் திறடா...
வாயைத் திறந்தான். செக்கச்சிவந்திருந்தது வாய் முழுக்கவும்.
- என்னடா இது... என்ன பண்ணினீங்க.
- கள்ளிப்பழம் சார்
- கள்ளிப்பழம்.... உம்... யார் யார்றா போனது....
நாங்கள் ஒவ்வொருவராக தயங்கித் தயங்கி ஆறு பேர் எழுந்து நின்றோம்.
- ஏண்டா.... கிமு-ல இருந்திருக்க வேண்டியவன் எல்லாம் கிபி-ல பொறந்து ஏண்டா எங்கழுத்தை அறுக்கறீங்க... ஓடு. போய் கழுவிட்டு வந்து காட்டிட்டு கிளாஸ் முடியற வரைக்கும் வெளியே நில்லு.

அதற்குப்பிறகு வேலுச்சாமி ஒருநாளும் வாயை சுத்தம் செய்யத் தவறவில்லை. கள்ளிப்பழத்தையோ படத்தையோ பார்க்கிற போதெல்லாம் அந்த நாளின் நினைவும் வரத் தவறுவதில்லை.

5 comments:

  1. நல்ல கதை. கதைக்குள் இருப்பது போல இருந்தது

    ReplyDelete
  2. Nilavumozhi Senthamarai3 July 2013 at 11:10

    கள்ளிப்பழ சுவையை கொண்டுவந்துள்ளது.. பள்ளிப்பருவத்தில் பசங்க கொண்டு வந்து கொடுத்திருக்காங்க.. பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வருகின்றது...

    ReplyDelete
  3. வேலுச்சாமி பற்றிய கதைக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. Ninaivugal varama.......????? sabama......?????

    ReplyDelete
  5. நினைவுகள் வரமா? சாபமா? நல்ல கேள்வி!

    கள்ளிப் பழம் இதுவரை சுவைத்ததில்லை....

    உங்கள் பள்ளி நினைவுகள் என்னையும் அழைத்துச் சென்றன எனது பள்ளி நினைவுகளை நோக்கி......

    ReplyDelete