Wednesday, 29 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 29-2-12

தீவிர வாசகனாகவும் புத்தக ஆர்வலனாகவும் வாங்குபவனாகவும் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.... கடையில் வாங்கிய புத்தகப் பைகளை சுமந்து கொண்டு செல்வது எவ்வளவு பெருமையாக இருக்கிறது... அதுவும் இரண்டு மூன்று பைகளை சுமந்து செல்லும்போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளுக்குள்ளே தலை தூக்குகிறது... நாம் வெறும்கையோடு நடக்கையில் இரண்டு மூன்று புத்தகப் பைகளை சுமந்து கொண்டு வருபவர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது....

கடந்த ஞாயிறன்ற என் நண்பர் பின்னியிம் மனைவியும் சகோதரியும் நாள் முழுக்க அலைந்து திரிந்து விட்டு ஆளுக்கு ஒரு டிராலி பேக் - நிறைய புத்தகங்களுடன் - இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். ஒரே முறை புத்தகக் கண்காட்சிக்கு வந்துபோகும் வாய்ப்புள்ளவர்களுக்கு டிராலி பேக் நல்ல வசதி. என்னைப்போல தினமும் அல்லது அடிக்கடி வருபவர்களுக்கு கையும் பையும்தான் வசதி.


ராமகிருஷ்ணனின் முதல்நாள் வருகையின்போது எடுத்த படத்தை முத்துலட்சுமி அனுப்பியிருந்தார். என்னை மட்டும் விட்டுவிட்டு எவ்வளவு ஜாலியா காப்பி குடிக்கிறாங்க பாருங்க..

.
ஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாததை ஒரு சித்திரம் விளக்கி விடும். எனவே ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் கடைசி நாளில் செய்திமடலை எட்டு பக்கங்களாக்கி, புகைப்படங்களுக்கென இரண்டு பக்கங்கள் ஒதுக்குவது வழக்கம். அதற்காக ஆரம்பத்திலிருந்தே படங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவேன். இப்போதே நிறைய சேர்ந்து விட்டன. படங்களை மட்டும் தனியாக பதிவுகளாக இடலாம் என்றும் யோசனை உண்டு. ஒரு படம் இங்கே... மலைப்பு என்று தலைப்பு இடலாமா...


யார் கண் பட்டு விட்டதோ தெரியவில்லை, நேற்று வீடு போக மூன்று மணி ஆகிவிட்டது. நேற்று கண்காட்சிக்கு வந்த பொடியன் ஜஸ்வினை அலுவலக புகைப்படக்காரர் படம்பிடித்திருந்தது அதிர்ஷ்டவசம். இப்போதெல்லாம் அதிகம் புழங்கப்படும் கியூட் என்ற சொல்லை நானும் இப்போது சொல்லலாம். படத்தைப் பார்த்தபின் நீங்களும் சொல்வீர்கள்.இன்று பாரதியில் சில புத்தகங்களை எடுத்து வந்தேன்.
  • பாப்லோ நெருதா கவிதைகள்
  • கறுப்பின மந்திரவாதி
  • காட்டிலே கதைகள்
  • நம்மைச்சுற்றி காட்டுயிர்
  • கார்ப்பரேட் என்ஜிஓக்களும் புலிகள் காப்பகங்களும்
  • அயோத்தியின் இராமன் - ஒரு மறு மதிப்பீடு
  • நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை
  • டாம் மாமாவின் குடிசை
  • கண்ணீர் சிந்தும் கதைகள்
  • அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

கடைசியாக குறிப்பிட்டுள்ள புத்தகத்தை எழுதியவர் ஜான் பெர்கின்ஸ் - இவருடைய முந்தைய நூலின் விமர்சனத்தை ஏற்கெனவே படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு - படித்ததில் பிடித்தது

நேற்று கண்காட்சிக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் - குல் பனாக். ஒருகாலத்தில் இந்திய அழகியாம், திரைப்பட நடிகையாம். எனக்குத் தெரியாது, அவர் படம் எதையும் பார்த்ததாக நினைவில்லை -அவர் வெளியிட்ட நூலின் தலைப்பு - NEVER LET ME GO
படத்துக்கும் தலைப்புக்கும் யாரேனும் முடிச்சுப்போட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

தமிழ்ச் சங்க நூலகத்துக்காக புத்தகங்கள் வாங்க வந்தவர்களுடன் சுற்றி விட்டு வரும்போது திடீரென்று கண்ணில் பட்ட காந்தி ஸ்மிருதி கடையில் வாங்கிய நூல் மைண்ட் ஆஃப் மகாத்மா. காந்தியின் கருத்துகளை அறிய விரும்புவோர் கட்டாயம் வாங்க வேண்டிய நூல் என்று உறுதியாகப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். குஜராத்தின் நவஜீவன் டிரஸ்ட் வெளியீடு - சுமார் 500 பக்கங்கள், ஹார்டு பைண்டிங்கில் விலை வெறும் நூறு ரூபாய். காந்தியின் சிந்தனைகளின் சாரத்தை பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறார் யு.ஆர். ராவ்.


 இதன் தமிழ் மொழியாக்கம் இந்த ஆண்டு நேஷனல் புக் டிரஸ்டில் வெளியாகும். அதற்குள் அவசரமாக வாங்க நினைப்பவர்கள் 8-9 அரங்கில் 52ஆம் எண் கடைக்குச் செல்லவும். காந்தி படம் பொறித்த சாவிவளையம் 10 ரூபாய்க்கும், மூன்று குரங்குகள் பொறித்தது 20 ரூபாய்க்கும் இங்கே கிடைக்கும்.

தில்லி அரங்கம் பற்றி இன்றாவது முடிகிறதா என்று பார்ப்போம்...


வாசிப்பை நேசிப்போம்

Tuesday, 28 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 28-2-12

நேற்று இரவு ஒரு மணிக்கே வேலையை முடித்து விட்டு ஒன்றரை மணிக்கெல்லாம் வீடு போய்விட்டேன். நேற்று முடித்து அச்சுக்கு அனுப்பிய கண்காட்சி செய்தி மடலில் நான்கு புகைப்படங்கள் விடுபட்டு விட்டன என்று அச்சகத்தார் போன் செய்து காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுவதாக கனவு கண்டு விழித்து மீண்டும் தூங்கி.... பிரகதி மைதான் முழுக்கவும் ஒலித்துக்கொண்டிருக்கும் சானல் மியூசிக் திடீரென ஏன் இவ்வளவு சத்தமாக ஒலிக்கிறது என்று விழித்துப்பார்த்தால்... எட்டு மணி அலாரம் எழுப்புகிறது.

முந்தாநாள் ஆங்கில நூல்களைத் தேடிச்சென்ற மகள்கள் வாங்கியவை -
பெரியவள் தேர்வுகள் -
Manorama Year Book 2012
Pride and Prejudice - Jane Austen
Mansfield Park - Jane Austen
Sense and Sensibility - Jane Austen
World Famous horror Stories

சின்னவள் தேர்வுகள் -
Treasure Island
Peter Pan
Gulliver's Travels
Oliver Twist

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் ஜேன் ஆஸ்டின் இன்றும் இளைஞிகளின் ஆகர்ஷ எழுத்தாளராக இருப்பது எப்படி... சேதன் பகத்தின் விறுவிறுப்பான நடையைப் படிக்கும் வளரிளம் பருவத்தினரால் இதையும் எப்படிப் படிக்க முடிகிறது... யாரேனும் பதிலளித்தால் மகிழ்வேன்.

புதையல் தீவு, ஆலிவர் டிவிஸ்ட் போன்ற நூல்கள் இன்னும் பலப்பல ஆண்டுகளுக்கும் சிறார்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. நமது தாய்மொழி எழுத்தாளர்களில் இவ்வாறான கதை எழுதுபவர்கள் அரிதிலும் அரிது. ரஸ்கின் பாண்ட் தவிர்த்து வேறு யாரும் உண்மையில் குழந்தைகளுக்கான கதைகளை சாகசம் கலந்து எழுதுவதாகத் தெரியவில்லை. குழந்தை இலக்கியம் இன்னும் நம்மிடம் உருவாகவே இல்லை.

நேற்று சஸ்பென்ஸ் வைத்ததை இன்று கொஞ்சம் உடைக்கலாம். எப்போதும் வருபவர்களில் உடனடி நினைவுக்கு வருபவர்கள் ஸ்ரீகாந்த், அத்வானி. ஸ்ரீகாந்த் முந்தாநாளும் வந்திருந்தார் என்று தகவல்.


அத்வானி வரும்போதெல்லாம் அவருடன் அவருடைய மகள் பிரதிபாவும் வருவதும், யாரோ திரை நட்சத்திரம் வந்து விட்டதாக கூட்டம் அவர்கள் பின்னால் செல்வதும் வழக்கமான காட்சி.


இந்த ஆண்டின் மையக்கருத்து இலக்கியமும் திரைப்படமும் என்பதால், திரையுலகப் பிரமுகர்கள் - நட்சத்திரங்கள் அல்ல - வந்துபோகிறார்கள். ஜாவேத் அக்தர் இரண்டுநாள் வந்தார், இரண்டு நாட்களும் ஏதேதோ புத்தகங்களை வெளியிடுவதற்காக. உம்ரோ ஜான் புகழ் முஜாபர் அலி வந்தார் மற்றொரு புத்தக வெளியீட்டுக்காக.

அப்புறம்... எழுத்தாளர் ராமகிருஷ்ணன் இன்றும் வந்திருந்தார். தமிழ்ப் புத்தகக் கடைகளுக்கு வந்தபோது ...


ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்புக்கு ஜிஜி வராமல் போனது இதற்காகத்தான் என்று இப்போது புரிகிறது. சரி சரி வச்சுக்குவோம்...

நேற்று ராமகிருஷ்ணன் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தும் அனுப்பாமல் தன் பதிவில் மட்டும் போட்டுக்கொண்டு சதி செய்த ......யையும் வச்சுக்குவோம்....

ஆஹா... நானும் வம்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்போல!!!
இன்று தமிழ்ப் புத்தகங்களை ஒரு சுற்று சுற்றி பாரதியிலும் காலச்சுவடிலும் சில நூல்களைத் தேர்வு செய்து வைத்துவிட்டு வந்தேன். மொத்தமாக வாங்கிய பிறகு பட்டியல் வெளியாகும். இரவல் கேட்கக்கூடிய பதிவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பட்டியல் வெளியீடு.

சாந்தா பதிப்பகத்தாரிடம் எப்போதும் சில புத்தகங்கள் வாங்குவது வழக்கம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை வாங்கினேன் -
குழந்தைகளின் கவனக்குறைபாடும் மிகுசெயல் நிலையும்
ஆசிரியர் என்பவர் யார்
காமராஜ்
உலக தினங்களும் தேசிய தினங்களும்.

ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பல நாடுகளிலும் அவரவர் விருப்பம்போல வெவ்வேறு நாட்களில் புத்தக தினம் கொண்டாடுகிறார்கள் என்பது கொசுறுச் செய்தி.

இன்று மால்குடி டேஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது. வழக்கம்போல கிடைக்காதது.

நண்பர்களின் தொடர் வருகையால் தில்லி அரங்கம் பற்றி இன்றும் எழுத இயலவில்லை. தொடர்வேன்.

வாசிப்பை நேசிப்போம்


உலகப் புத்தகக் கண்காட்சி - 27-2-12

நேற்று இரவு சீக்கிரமே வேலையை முடித்து விட்டதால் மூன்று மணிக்கே வீடு போயாயிற்று. நேற்று இரவா... இல்லை இன்று காலை 3 மணிக்கு அல்லவா...

நேற்று தமிழ்ச் சங்கத்தில் ராமகிருஷ்ணன் உரையாற்றிய நிகழ்ச்சிக்குச் செல்ல இயலவில்லை. நிகழ்ச்சி அருமையாக நடந்தேறியதாக அவர் தொலைபேசியில் தெரிவித்தார். நிகழ்ச்சியைக் கேட்டவர்களும் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்கள். எப்படியோ என் வேண்டுகோளை ஏற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சங்கத்துக்கு நன்றி, உரையைக் கேட்க திரளாக வந்தவர்களுக்கும் - திரைப்படத்துக்கு வந்து இலக்கிய உரையைக் கேட்க நேர்ந்தவர்களுக்கும் சேர்த்துத்தான் - நன்றி. ராமகிருஷ்ணன் தில்லி வர இருப்பதாக அவருடைய வலைப்பூவில் படித்தபிறகு திட்டமிட்டே இந்த நேரத்தை முடிவு செய்தோம். திட்டம் வெற்றி பெற்றது.

இன்று மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார். அவருடனான இந்த முதல் சந்திப்பில் இலக்கியம் பேச வாய்ப்பில்லை. காரிய விஷயங்கள்தான் பேச முடிந்தது. என்பிடி இயக்குநருடன் அவருடைய சந்திப்பை நிகழ்த்தி வைத்தேன். இதன் பயன் பின்னால் தெரியலாம்.

அவருக்கு தில்லியிலும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் பொழுதுக்கும் புத்தகக் கண்காட்சியில் அவருடன் நேரம் செலவழிக்க இருக்கிறார்கள் என்று தெரியாது. காலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி ராமகிருஷ்ணனை சந்திக்க எப்போது வரலாம் என்று கேட்டு வைத்திருந்த முத்துலட்சுமியும் வந்து விட்டார்.

அவர்களுடனான உரையாடலில் ராமகிருஷ்ணன் கூறிய ஒரு விஷயம் எனக்குப் பிடித்தது - தன் எழுத்துகளிலிருந்து கணிசமானவற்றை எடுத்து இணையத்தில் இலவசமாகப் படித்துக்கொள்ள பதிவேற்ற இருப்பதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்தவரை, தன் எழுத்தை முழுக்கவும் வியாபாரமாகப் பார்க்காமல், மக்களுக்கு முக்கியமானவை என்று கருதியவற்றை, இலவசமாக இணையத்தில் ஏற்றியிருக்கும் ஒரே நபர் ஞானிதான் என்று நினைக்கிறேன். இதற்கு உதாரணமாக ஒரு சிற்றேட்டுக்கான இணைப்பு -

http://gnani.net/ஏன்-இந்த-உலைவெறி-அணு-உலைக/


வாசகர்களை ஈர்க்கும் நடையில் எழுதும்கலை கைவரப்பெற்றிருக்கும் ராமகிருஷ்ணனும் இதுபோல தன் கதைகள், கட்டுரைகள் சிலவற்றை வலைதளத்தில் ஏற்றுவது வலையுலகவாசிகளுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

இன்றும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். நூல்வேட்டையில் இருக்கும்போது ஏகப்பட்ட தொலைபேசித் தடங்கல்கள். புலிநகக் கொன்றை  புகழ் பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் மற்றொரு நூலையும் எடுத்து அங்கேயே பையில் வைத்து விட்டு வந்துவிட்டேன். நாளை வாங்கிய பிறகு பட்டியல் வெளியாகும்.

கடந்த புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்த பிரமுகர்களில் பலர் இப்போதும் வந்தார்கள். அநேகமாக ஒவ்வொரு முறையும் வருகிறவர்களைக் குறிப்பிட வேண்டும் என்றால் .... கொஞ்சம் இரகசியம் இருக்கட்டுமே... அப்போதுதானே நாளையும் நீங்கள் என் பதிவைப் படிப்பீர்கள்...

புத்தகக் கண்காட்சி களேபரங்களில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய ஒரு விஷயமும் உண்டு - மையக்கருத்து அரங்கின் வெளியே நிகழ்ந்திருப்பதுதான் அது.

தில்லி நகரம் தலைநகரான நூற்றாண்டு இது. இதற்காக தில்லி அரசு சில விழாக்களை நடத்தி வருகிறது. சந்தோஷம். இந்தப் புத்தகக் கண்காட்சியில் 7ஆம் அரங்கில் தில்லி பெவிலியன் என்ற ஒன்றும் அமைந்திருக்கிறது. நல்லது. ஆனால் அரங்கிற்கு வெளியே, சிமிட்டித் தரையில், கீழே தெர்மோகோல் போன்ற ஒருவகை பாலிதீன் விரிப்பை விரித்து அதன்மீது பெ......ரி.....ய்......ய..... பிளக்ஸ் பேனர் விரிக்கப்பட்டிருக்கிறது.ஷாஜஹான் கட்டிய ஷாஜஹானாபாதின் வரைபடமாம் அது. மக்கள் அதன்மீது நடந்து செல்லவதற்கேற்ப முழுப்பரப்பிலும் விரிக்கப்பட்டிருக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது... அட்ராஷியஸ் என்ற ஆங்கிலச்சொல்தான் நினைவு வருகிறது.

பிளெக்ஸ் பேனர் சதுர அடிக்கு என்ன விலை என்பது பெரும்பாலோருக்கும் தெரியும்.  உத்தேசமாகக் கணக்கிட்டால் சுமார் ஐம்பதாயிரம் வரலாம். அரசு என்பதால் இது லட்சம் ரூபாயாகவும் இருக்கலாம்.


இலட்சம் ரூபாய் கிடக்கட்டும். இவ்வளவு பெரிய பிளாஸ்டிக் பேனர் இந்த ஒன்பது நாள் கூத்துக்குப் பிறகு கூடைக்குப் போகும். சுற்றுச்சூழல் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசின் இந்தக் கூத்தினால் யாருக்கு என்ன பயன்... இதில் என்ன இழவு புரிகிறது. அங்கங்கே பழைய தில்லியின் முக்கிய இடங்களின் பெயர்கள். அவை தில்லிவாசிகளில் தேவையுள்ளவர்கள் அறிந்தவைதான். இந்த வரைபடத்தைப் பார்த்து யாரும் அந்தப் பகுதிகளுக்குப் போய்விட முடியாது. அப்புறம் எதற்காக...

விடை தெரியாத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று. யாரோ ஒரு கூமுட்டை அதிகாரி இந்த ஆலோசனை கூறியிருக்கலாம். இதனால் லாபம் கிடைக்கும் ஒப்பந்ததாரர் ஆமாம் போட்டிருக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்...

தில்லி அரங்கம் பற்றிய சிறப்புப் பதிவு போடக்கூடிய அளவுக்கு நல்ல புகைப்படங்கள் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் ஆய்வு செய்து அவற்றை வெளியிட உத்தேசம் - நாளை.

Sunday, 26 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 26-2-12

முதல்நாள் என்பதால் நேற்று வேலை முடிந்து பிரகதி மைதானில் இருந்து புறப்படும்போது மணி 3-15. நான்கு மணிக்கு வீடு சேர்ந்து, விடிகாலையில் உறக்கம் பிடித்து, புத்தகக் குவியல்களின் கனவுகளுக்கு இடையே தூங்கியதாய் திருப்தி செய்துகொண்டு மீண்டும் வந்தாயிற்று.

வழக்கம்போல குடும்பமும் முதல்கட்ட புத்தக வேட்டைக்குத் துணையாய் வந்து விட்டது. வழக்கம்போல காலையில் தமிழ்க் கடைகளை சுற்றிவிட்டு வருவது என் வழக்கம். எனவே அவர்களுடன் சென்றேன்.

 

சந்தியாவையும் சாந்தாவையும் சந்தித்துவிட்டு ...


மேற்கிலிருந்து வந்து இங்கே வேரூன்றிய மதத்தின் நூல்களை தெற்கிலிருந்து வடக்குக்குக் கொண்டு வந்திருக்கும் இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் கடையையும் கவனித்து விட்டு....


அப்படியே கிழக்காகச் சென்று ...


பாரதிக்குப் பதவிசாய் வணக்கம் கூறி


காலத்தின் சுவடைப் பார்த்து விட்டு ....


புதுயுகம் படைக்கும் புரட்சிக் கடையில் புன்னகைத்து விட்டு...

திரும்புகையில் காலச்சுவடின் கண்ணனிடம் கதைத்துக் கொண்டிருந்த முத்துலட்சுமி. காலையிலேயே வந்து வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சின்ன மகள் வந்து, யாரோ அங்கே உங்கள் வலைபதிவு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாள். யாரந்த முகமறியா அறிமுகங்கள் என்று யோசிக்கும்போதுதான் முத்துலட்சுமி சொன்னார் - பதிவர்கள் சந்திக்கத் திட்டம் போட்டதாகவும், தன் நண்பர்கள்தான் என்றும்.

இன்றைய அறிமுகங்கள் மகிழ்ச்சி தருபவை - வெங்கட், திருமதி வெங்கட், சரவணன் என்கிற கலாநேசன், சிறுமி ரோஷ்னி...


நன்றி பதிவுலகவாசிகளே... உங்கள் நட்பும் எழுத்துத் தொடர்பும் தில்லியை விட்டு நாம் சென்ற பிறகும்கூட தொடரட்டும்...

வலைபதிவர்கள் பலர் வம்பு பதிவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் வம்பு பதிவர்கள் உள்பட வலைபதிவர்கள் பலரும் வாசகர்களாக இருக்கிறார்கள். இருந்துதானே ஆக வேண்டும்... நல்ல வாசகனாக இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியுமா...

வெங்கட்டின் வலைபதிவை சிலமுறை பார்த்திருக்கிறேன். வேலைபளுவால் அதிகம் பார்க்க முடியவில்லை. முத்துலட்சுமி கூறிய விவரங்களிலிருந்து சீக்கிரம் அதையெல்லாம் படித்து முடித்துவிட வேண்டும் என்று ஆவல். புத்தகக் கண்காட்சி முடிந்து, அடுத்த மாத உத்தேச தமிழகப் பயணமும் முடியட்டும்...

கடமை அழைத்ததால் நண்பர்களுடன் உரையாடலை முறித்துக்கொண்டு விரைவாக சில நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தாயிற்று. வேலை இடைவேளைகளில் இந்தப் பதிவும் எழுதத் துவங்கியாயிற்று.

இன்று வாங்கிய நூல்கள் -
இவான் - விளதிமிர் பகமோலவ்
சூதாடி - தஸ்தயோவ்ஸ்கி
புகழ்பெற்ற மூன்று கதைகள் - முல்லை முத்தையா
சிறகுகள முறியும் - அம்பை
காட்டில் ஒரு மான் - அம்பை
ஆதியில் பெண் இருந்தாள் - மரிஜா ஸ்ரெஸ்
புதிய சலனங்கள் - சிறுகதைத் தொகுப்பு
பிராயச்சித்தம் - லா.ச.ரா.
மகாகவி பாரதியார் - வ.ரா.
சென்னையின் கதை - கிளின் பார்லோ
உயரப் பறத்தல் - வண்ணதாசன்
பொம்மைக்காரி - பாவண்ணன்
சோ. தர்மன் கதைகள் - சிபிச்செல்வன் தொகுப்பு

மகள்கள் ஆங்கிலப் புத்தகங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 2000 ரூபாய்க்கு வாங்கி விட்டதாகத் தெரிகிறது. பட்டியலை நாளை பார்ப்போம்.

மையக் கருத்து அரங்கில் சாகிப் பீபி ஔர் குலாம் திரைப்படம் - 1962, அப்ரார் ஆல்வி இயக்கத்தில் குரு தத், மீனா குமாரி, வஹீதா ரஹ்மான் நடித்தது - ஓடிக் கொண்டிருக்கிறது.அரங்கின் உள்ளே இந்த சிற்பத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வங்கத்தின் தேபபிரதா சக்ரவர்த்தி வடிவமைத்தன் நகல் இங்கே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிற்பம் என்னைக் கவர்ந்தது என்றாலும் எதற்காக இங்கே என்று புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது, திரையரங்கில் கியூவில் காத்திருக்கும் மக்களை சுட்டுகிறது என்றார்கள். யோசித்தபோது இருக்கலாம் என்று தோன்றியது. எங்கள் கால டாக்கீசின் முன் மூங்கில்களைக் கட்டி அமைத்த தடுப்புகளில் காத்திருந்த மக்களின் நினைவு வந்தது.  அப்படியானால் இங்கே இருப்பது பொருத்தம்தான். இல்லையா நண்பர்களே...

மீண்டும் நாளை
Saturday, 25 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


காலை 10 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவில் அமைச்சர் கபில் சிபல், வண்ண பலூன்களைப் பறக்கவிட்டு அதிகாரபூர்வமாக கண்காட்சியைத் துவக்கி வைத்தார். 1972இல் துவங்கி இருபது உலகப் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி முடித்திருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட், இதை ஆண்டுக்கொரு முறை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் அமைச்சர். என்னைப் பொறுத்தவரை இது வியப்புக்குரிய அறிவிப்பு.
கடந்த புத்தகக் கண்காட்சியின்போது இதே வேண்டுகோள் முன்வைக்கப்பட்டபோது, ஆண்டுதோறும் நடத்துவதெல்லாம் சாத்தியமில்லை என்று அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அவருடைய அமைச்சகம்தான் கண்காட்சிக்கு மானியம் வழங்க வேண்டும்.

நன்றி தெரிவித்துப் பேசிய இயக்குநர் சிக்கந்தர், ஆண்டுக்கொருமுறை உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி கூறினார். இது அவருடைய சாதுர்யமா அல்லது அமைச்சர் தனியாக அவரிடம் முன்னரே கூறியதன் விளைவா என்பதை அவருடன்பேசினால்தான் தெரியும்.எனக்குத் தெரிந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக தமிழர் ஒருவர் என்பிடியில் இயக்குநராக வந்திருக்கிறார்.

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை இவ்வளவு பிரம்மாண்ட கண்காட்சியை நடத்தும் அளவுக்கு நேஷனல் புக் டிரஸ்டிடம் மனித ஆற்றல் வளம் உள்ளதா என்பது ஒரு கேள்வி. ஆண்டுதோறும் குறைந்தது இரண்டு மாதங்கள் முழு அலுவலகமே இதில் மூழ்கியிருக்க இயலுமா... பதிப்பாளர்கள் இதற்கு ஆர்வம் காட்டுவார்களா... பிரகதி மைதானை நிர்வகிக்கும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் ஏற்கெனவே என்பிடி மீது பொறாமையில் இருப்பதாக தகவல்... ஆண்டுதோறும் என்றால் ஐடிபிஓ எப்படி இதை ஜீரணிக்கும்...
சிறப்பு விருந்தினர் ஒடிஷாவைச் சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ். குழந்தைகள் அரங்கை இவர்தான் திறந்து வைத்தார். குழந்தைகள் அரங்கில் நாடகங்களும் இன்னபிற நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. ஒன்பது நாட்களும் அங்கே கொண்டாட்டம்தான்.

எது எப்படியோ, கண்காட்சி துவங்கி விட்டது. முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. மதியத்துக்கு மேல் கொஞ்சம் களை கட்டியது. 


தபன் சின்ஹா 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய காமிரா

மையக் கருத்து சினிமா என்பதால் அதற்கான சிறப்பு அரங்கில் கொஞ்சம் அதிகமாக மக்களைப் பார்க்க முடிந்தது. இங்கே இருக்கும் நூல்கள் காட்சிக்கு மட்டுமே, விற்பனைக்கு அல்ல. ஒரு பயாஸ்கோப் வைத்திருக்கிறார்கள்... நீங்கள் விரும்பினால் கீழே உட்கார்ந்து பெட்டியின் கண்ணில் கண் வைத்து பயாஸ்கோப் அனுபவம் பெறலாம்.


பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப்பாரு

தமிழ்ப் புத்தகக் கடைகளுக்குச் சென்று வந்தேன். இந்தமுறை கிழக்கு பதிப்பகம் கடையில் எதையும் விற்கப்போவதில்லையாம்... ஆர்டரை எடுத்துக்கொண்டு அனைத்தையும் அஞ்சல்வழி அனுப்புமாம்... கண்காட்சியில் இருக்கும் நூல்கள் பார்வைக்கு மட்டுமாம்... ஒருவேளை கடைசி இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்போது, புத்தகங்களை திருப்பி எடுத்துச் செல்வதற்குப் பதிலாக விற்றுவிட்டுப் போகலாம். கிழக்கு பத்ரி இன்னும் என்னென்ன செய்வார் என்று யூகிக்க முடியவில்லை.

சந்தியா பதிப்பகம் தமிழ்-தமிழ் அகராதி, புதுமைப்பித்தம் முழுத் தொகுப்பு போன்ற தடிதடியான நூல்கள் பலதும் வைத்திருக்கிறது. வண்ணதாசன், கலாப்ரியா நூல்களும் நிறையக் கண்டேன். காலச்சுவடு வழக்கம்போல நிறைய நூல்களை வைத்திருக்கிறது. இன்று அவர்களின் நூல்வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் இருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறை...ய்...ய நூல்களுடன் வந்திருக்கிறது. பதிப்பாளர் சங்கத்தில் யாரையும் காணவில்லை. சாந்தா பதிப்பகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வரும் இளைஞர் மதியம் வரை வந்து சேரவில்லை. ஒருவேளை இன்று வருவார் போல... இஸ்லாமிக் டிரஸ்ட் கடையில் இஸ்லாமிய நூல்கள் நிறைய அடுக்கியிருக்கிறார்கள்.

பாரதி புத்தகாலயத்திய் புத்தகம் பேசுது மட்டும் எடுத்து வந்தேன். அங்கே நான் வாங்கக்கூடிய நூல்கள் நிறையவே இருக்கின்றன. கடந்த ஆண்டு எட்டாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதாக நினைவு. இந்த ஆண்டு என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை.


வழக்கம்போல இந்த ஆண்டும் புத்தக விழிப்புணர்வு ஊர்வலம்... 1000 மாணவர்கள் கோஷ அட்டைகளைப் பிடித்தபடி மைதானத்துக்குள் ஊர்வலம் வந்தனர். எனக்குப் பிடிக்கும் என்றாலும் புரியாததில் இதுவும் ஒன்று - பிரகதி மைதானில் இருப்பவர்கள் எல்லாரும் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாங்க வந்த ஆர்வலர்கள்தான். அப்புறம் யாருக்கு இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...சரி...சரி போகட்டும்... குழந்தைகளுக்கு இலவச அனுமதியும் ஆரஞ்சு வண்ணத் தொப்பியும் கிடைத்தது. பிஸ்கட், குளிர்பானங்களும் கிடைத்திருக்கும். அந்த மட்டுக்கு மகிழ்ச்சிதான். மீண்டும் நாளை.


Thursday, 23 February 2012

20ஆவது உலகப் புத்தகக் கண்காட்சி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சி மீண்டும் வந்து விட்டது.


2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 வரை பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1400 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன.  மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும்.

தமிழகத்திலிருந்து பங்கேற்கும் நிறுவனங்களில், தமிழ் நூல்கள் வைத்திருக்கும் கடைகள் 10ஆம் எண் அரங்கில் அமைந்திருக்கும். அவற்றின் கடை எண்களின் விவரம் கீழே.

நியூ செஞ்சுரி புக் ஸவுஸ் - கடை எண் 25
பாரதி புத்தகாலயம் - கடை எண் 22
காலச்சுவடு - கடை எண் 23
கிழக்கு பதிப்பகம் - கடை எண் 21
பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் - கடை எண் 24

சாந்தா பதிப்பகம் - சிறிய கடை எண் 16
சந்தியா பதிப்பகம் - சிறிய கடை எண் 14
இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - சிறிய கடை எண் 13

இது தவிர, நேஷனல் புக் டிரஸ்ட் பல அரங்குகளில் கடைகள் அமைத்திருந்தாலும், ஒரு அரங்கில் மட்டுமே தமிழ் மற்றும் இதர மொழி நூல்கள் கிடைக்கும். சாகித்ய அகாதமி நிறுவனமும் பிராந்திய மொழிகளுக்கென தனி கடை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனங்களின் கடை விவரம்

நேஷனல் புக் டிரஸ்ட் - அரங்கம் 14 - கடை எண் - 70-79
சாகித்ய அகாதமி - அரங்கம் 11 - கடை எண் 323-324

10ஆம் எண் அரங்கம் மெட்ரோ நிலைய நுழைவாயில் வழியாக வந்தால் மிகவும் பக்கத்தில் இருக்கிறது.  உச்சநீதிமன்ற சிவப்பு விளக்குக்கு எதிராக உள்ள 8ஆம் எண் வாயில் வழியாக வந்தால் நேராக நடக்க வேண்டும். பெரிதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தின் இடப்புறம் 10ஆம் அரங்கம்.

உங்கள் வசதிக்காக வரைபடம் கீழே - கறுப்பு வண்ணக் கட்டத்தில் இருப்பது 10ஆம் அரங்கம் -


அனைத்து நிறுவனங்களும் நூல்களின் விலையில் சீராக 10 சதவிகிதம் கழிவு தர வேண்டும் என்பது அமைப்பாளர்களின் நிபந்தனை. சில நிறுவனங்களிடம் அதற்கும் அதிகமாகக் கழிவு பெறுவது உங்கள் திறமை....


இலட்சக் கணக்கான நூல்களைக் கண்டு நூல் விரும்பிகள் மலைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தும் போவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

திரைப்பட ஆர்வலர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. இந்தியத் திரைப்படங்கள் உருவான நூறாவது ஆண்டு நெருங்குவதை முன்னிட்டு இந்தப் புத்தகக் கண்காட்சியின் மையக் கருத்து - நூறாண்டை நெருங்கும் இந்திய சினிமா.

இதற்காக 7ஆம் எண் அரங்கில் தனியாக கண்காட்சி நடைபெறுகிறது. திரைப்படங்கள் தொடர்பான நூல்கள் பல மொழிகளில் காட்சிக்கு இருக்கும். அவை விற்பனைக்கு அல்ல. பதிப்பாளர்கள் விரும்பினால் அந்த நூல்களின் பதிப்புரிமை பெற சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை அணுகலாம்.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்ன என்று கேட்பவர்களுக்கு...
தினமும் ஒரு திரைப்படமும் திரையிடப்படுகிறது - அதாவது, இலக்கியத்திலிருந்து திரைக்கு வந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏழு திரைப்படங்கள் உண்டு. தமிழர்களின் மகிழ்ச்சிக்கு தண்ணீர் தண்ணீர் -


திரையிடப்படும் படங்கள் மற்றும் நேரம் -
25 பிப்ரவரி சனிக்கிழமை மாலை 5.30 - பதேர் பாஞ்சாலி -வங்க மொழி
26 பிப்ரவரி ஞாயிறு மாலை 5.30 - சாஹிப் பீபி ஔர் குலாம் - இந்தி
27 பிப்ரவரி திங்கள் மாலை 4.00 மணி - உம்ரோ ஜான் 1981ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை முற்பகல் 11.30 - தேவதாஸ் - இந்தி - 1936ஆம் வருடத்தியது
28 பிப்ரவரி செவ்வாய் மாலை 5.30 - மால்குடி டேஸ் - இந்தி தொலைக்காட்சித் தொடர்
29 பிப்ரவரி புதன் மாலை 5.30 - தண்ணீர் தண்ணீர் - தமிழ்
1 மார்ச் விழாயன் மாலை 5.30 - ஹலோதியோ சொரயே பாவதான் காய் - அசாமியா
2 மார்ச் வெள்ளி மாலை 5.30 - சூரஜ் கா சாத்வான் கோடா - இந்தி
3 மார்ச் சனிக்கிழமை மாலை 5.30 - மாதி மாய் - மராட்டி
4 மார்ச் ஞாயிறு நண்பகல் 12.00 - சாருலதா - வங்கமொழி

உம்ரோ ஜான் தவிர அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஆங்கில சப்டைடில் இருக்கும் - ஒருவேளை உம்ரோ ஜானுக்கும் இருக்கலாம்.
திரையிடுவது தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம்

இவை தவிர திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் அமர்வுகள், நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளும் நாள் முழுதும் நடைபெறும். இவை குறித்து மேலும் விவரம் அறிய அஞ்சல் அனுப்பினால் பிடிஎப் வடிவில் சிறு பிரசுரம் அனுப்ப இயலும்.

பத்து நாட்களும் புத்தகக் கண்காட்சியில் கழிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது. நேரம் கிடைத்தால் சுவாரசியமான புகைப்படங்களை பதிவில் காணலாம்.

வாசிப்பை நேசிப்போம்.