Sunday, 26 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 26-2-12

முதல்நாள் என்பதால் நேற்று வேலை முடிந்து பிரகதி மைதானில் இருந்து புறப்படும்போது மணி 3-15. நான்கு மணிக்கு வீடு சேர்ந்து, விடிகாலையில் உறக்கம் பிடித்து, புத்தகக் குவியல்களின் கனவுகளுக்கு இடையே தூங்கியதாய் திருப்தி செய்துகொண்டு மீண்டும் வந்தாயிற்று.

வழக்கம்போல குடும்பமும் முதல்கட்ட புத்தக வேட்டைக்குத் துணையாய் வந்து விட்டது. வழக்கம்போல காலையில் தமிழ்க் கடைகளை சுற்றிவிட்டு வருவது என் வழக்கம். எனவே அவர்களுடன் சென்றேன்.

 

சந்தியாவையும் சாந்தாவையும் சந்தித்துவிட்டு ...


மேற்கிலிருந்து வந்து இங்கே வேரூன்றிய மதத்தின் நூல்களை தெற்கிலிருந்து வடக்குக்குக் கொண்டு வந்திருக்கும் இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் கடையையும் கவனித்து விட்டு....


அப்படியே கிழக்காகச் சென்று ...


பாரதிக்குப் பதவிசாய் வணக்கம் கூறி


காலத்தின் சுவடைப் பார்த்து விட்டு ....


புதுயுகம் படைக்கும் புரட்சிக் கடையில் புன்னகைத்து விட்டு...

திரும்புகையில் காலச்சுவடின் கண்ணனிடம் கதைத்துக் கொண்டிருந்த முத்துலட்சுமி. காலையிலேயே வந்து வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது சின்ன மகள் வந்து, யாரோ அங்கே உங்கள் வலைபதிவு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாள். யாரந்த முகமறியா அறிமுகங்கள் என்று யோசிக்கும்போதுதான் முத்துலட்சுமி சொன்னார் - பதிவர்கள் சந்திக்கத் திட்டம் போட்டதாகவும், தன் நண்பர்கள்தான் என்றும்.

இன்றைய அறிமுகங்கள் மகிழ்ச்சி தருபவை - வெங்கட், திருமதி வெங்கட், சரவணன் என்கிற கலாநேசன், சிறுமி ரோஷ்னி...


நன்றி பதிவுலகவாசிகளே... உங்கள் நட்பும் எழுத்துத் தொடர்பும் தில்லியை விட்டு நாம் சென்ற பிறகும்கூட தொடரட்டும்...

வலைபதிவர்கள் பலர் வம்பு பதிவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் வம்பு பதிவர்கள் உள்பட வலைபதிவர்கள் பலரும் வாசகர்களாக இருக்கிறார்கள். இருந்துதானே ஆக வேண்டும்... நல்ல வாசகனாக இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியுமா...

வெங்கட்டின் வலைபதிவை சிலமுறை பார்த்திருக்கிறேன். வேலைபளுவால் அதிகம் பார்க்க முடியவில்லை. முத்துலட்சுமி கூறிய விவரங்களிலிருந்து சீக்கிரம் அதையெல்லாம் படித்து முடித்துவிட வேண்டும் என்று ஆவல். புத்தகக் கண்காட்சி முடிந்து, அடுத்த மாத உத்தேச தமிழகப் பயணமும் முடியட்டும்...

கடமை அழைத்ததால் நண்பர்களுடன் உரையாடலை முறித்துக்கொண்டு விரைவாக சில நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வந்தாயிற்று. வேலை இடைவேளைகளில் இந்தப் பதிவும் எழுதத் துவங்கியாயிற்று.

இன்று வாங்கிய நூல்கள் -
இவான் - விளதிமிர் பகமோலவ்
சூதாடி - தஸ்தயோவ்ஸ்கி
புகழ்பெற்ற மூன்று கதைகள் - முல்லை முத்தையா
சிறகுகள முறியும் - அம்பை
காட்டில் ஒரு மான் - அம்பை
ஆதியில் பெண் இருந்தாள் - மரிஜா ஸ்ரெஸ்
புதிய சலனங்கள் - சிறுகதைத் தொகுப்பு
பிராயச்சித்தம் - லா.ச.ரா.
மகாகவி பாரதியார் - வ.ரா.
சென்னையின் கதை - கிளின் பார்லோ
உயரப் பறத்தல் - வண்ணதாசன்
பொம்மைக்காரி - பாவண்ணன்
சோ. தர்மன் கதைகள் - சிபிச்செல்வன் தொகுப்பு

மகள்கள் ஆங்கிலப் புத்தகங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 2000 ரூபாய்க்கு வாங்கி விட்டதாகத் தெரிகிறது. பட்டியலை நாளை பார்ப்போம்.

மையக் கருத்து அரங்கில் சாகிப் பீபி ஔர் குலாம் திரைப்படம் - 1962, அப்ரார் ஆல்வி இயக்கத்தில் குரு தத், மீனா குமாரி, வஹீதா ரஹ்மான் நடித்தது - ஓடிக் கொண்டிருக்கிறது.



அரங்கின் உள்ளே இந்த சிற்பத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வங்கத்தின் தேபபிரதா சக்ரவர்த்தி வடிவமைத்தன் நகல் இங்கே உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிற்பம் என்னைக் கவர்ந்தது என்றாலும் எதற்காக இங்கே என்று புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது, திரையரங்கில் கியூவில் காத்திருக்கும் மக்களை சுட்டுகிறது என்றார்கள். யோசித்தபோது இருக்கலாம் என்று தோன்றியது. எங்கள் கால டாக்கீசின் முன் மூங்கில்களைக் கட்டி அமைத்த தடுப்புகளில் காத்திருந்த மக்களின் நினைவு வந்தது.  அப்படியானால் இங்கே இருப்பது பொருத்தம்தான். இல்லையா நண்பர்களே...

மீண்டும் நாளை




4 comments:

  1. இல்லம் வந்து உடனேயே தமிழ்ச்சங்கம் சென்று நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு வலைப்பக்கம் வந்தால் இன்றைய சந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வு...

    உங்களைச் சந்தித்ததில் மிக்க நன்றி....

    தொடர்ந்து சந்திப்போம்....

    ReplyDelete
  2. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

    மகிழ்ச்சியில் திளைத்ததால் “மிக்க நன்றி” என எழுதி விட்டேன்! :)

    ReplyDelete
  3. மகிழ்ச்சியில் திளைத்ததால்தானோ என்னவோ நானும் அதை கவனிக்காமலே விட்டு விட்டேன். மிக்க நன்றி - உங்கள் அன்புக்கு.

    ReplyDelete
  4. இந்த அருமையான சந்தர்ப்பத்தை நான் தான் தவற விட்டுவிட்டேன் என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

    ReplyDelete