Saturday 25 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


உலகப் புத்தகக் கண்காட்சி - 25-2-12


காலை 10 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவில் அமைச்சர் கபில் சிபல், வண்ண பலூன்களைப் பறக்கவிட்டு அதிகாரபூர்வமாக கண்காட்சியைத் துவக்கி வைத்தார். 1972இல் துவங்கி இருபது உலகப் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி முடித்திருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட், இதை ஆண்டுக்கொரு முறை நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் அமைச்சர். என்னைப் பொறுத்தவரை இது வியப்புக்குரிய அறிவிப்பு.
கடந்த புத்தகக் கண்காட்சியின்போது இதே வேண்டுகோள் முன்வைக்கப்பட்டபோது, ஆண்டுதோறும் நடத்துவதெல்லாம் சாத்தியமில்லை என்று அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், அவருடைய அமைச்சகம்தான் கண்காட்சிக்கு மானியம் வழங்க வேண்டும்.

நன்றி தெரிவித்துப் பேசிய இயக்குநர் சிக்கந்தர், ஆண்டுக்கொருமுறை உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்ததற்கு நன்றி கூறினார். இது அவருடைய சாதுர்யமா அல்லது அமைச்சர் தனியாக அவரிடம் முன்னரே கூறியதன் விளைவா என்பதை அவருடன்பேசினால்தான் தெரியும்.



எனக்குத் தெரிந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக தமிழர் ஒருவர் என்பிடியில் இயக்குநராக வந்திருக்கிறார்.

மேலும், ஆண்டுக்கு ஒருமுறை இவ்வளவு பிரம்மாண்ட கண்காட்சியை நடத்தும் அளவுக்கு நேஷனல் புக் டிரஸ்டிடம் மனித ஆற்றல் வளம் உள்ளதா என்பது ஒரு கேள்வி. ஆண்டுதோறும் குறைந்தது இரண்டு மாதங்கள் முழு அலுவலகமே இதில் மூழ்கியிருக்க இயலுமா... பதிப்பாளர்கள் இதற்கு ஆர்வம் காட்டுவார்களா... பிரகதி மைதானை நிர்வகிக்கும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் ஏற்கெனவே என்பிடி மீது பொறாமையில் இருப்பதாக தகவல்... ஆண்டுதோறும் என்றால் ஐடிபிஓ எப்படி இதை ஜீரணிக்கும்...




சிறப்பு விருந்தினர் ஒடிஷாவைச் சேர்ந்த எழுத்தாளர் மனோஜ் தாஸ். குழந்தைகள் அரங்கை இவர்தான் திறந்து வைத்தார். குழந்தைகள் அரங்கில் நாடகங்களும் இன்னபிற நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. ஒன்பது நாட்களும் அங்கே கொண்டாட்டம்தான்.

எது எப்படியோ, கண்காட்சி துவங்கி விட்டது. முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. மதியத்துக்கு மேல் கொஞ்சம் களை கட்டியது. 


தபன் சின்ஹா 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய காமிரா

மையக் கருத்து சினிமா என்பதால் அதற்கான சிறப்பு அரங்கில் கொஞ்சம் அதிகமாக மக்களைப் பார்க்க முடிந்தது. இங்கே இருக்கும் நூல்கள் காட்சிக்கு மட்டுமே, விற்பனைக்கு அல்ல. ஒரு பயாஸ்கோப் வைத்திருக்கிறார்கள்... நீங்கள் விரும்பினால் கீழே உட்கார்ந்து பெட்டியின் கண்ணில் கண் வைத்து பயாஸ்கோப் அனுபவம் பெறலாம்.


பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தைப்பாரு

தமிழ்ப் புத்தகக் கடைகளுக்குச் சென்று வந்தேன். இந்தமுறை கிழக்கு பதிப்பகம் கடையில் எதையும் விற்கப்போவதில்லையாம்... ஆர்டரை எடுத்துக்கொண்டு அனைத்தையும் அஞ்சல்வழி அனுப்புமாம்... கண்காட்சியில் இருக்கும் நூல்கள் பார்வைக்கு மட்டுமாம்... ஒருவேளை கடைசி இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்போது, புத்தகங்களை திருப்பி எடுத்துச் செல்வதற்குப் பதிலாக விற்றுவிட்டுப் போகலாம். கிழக்கு பத்ரி இன்னும் என்னென்ன செய்வார் என்று யூகிக்க முடியவில்லை.

சந்தியா பதிப்பகம் தமிழ்-தமிழ் அகராதி, புதுமைப்பித்தம் முழுத் தொகுப்பு போன்ற தடிதடியான நூல்கள் பலதும் வைத்திருக்கிறது. வண்ணதாசன், கலாப்ரியா நூல்களும் நிறையக் கண்டேன். காலச்சுவடு வழக்கம்போல நிறைய நூல்களை வைத்திருக்கிறது. இன்று அவர்களின் நூல்வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் இருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறை...ய்...ய நூல்களுடன் வந்திருக்கிறது. பதிப்பாளர் சங்கத்தில் யாரையும் காணவில்லை. சாந்தா பதிப்பகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வரும் இளைஞர் மதியம் வரை வந்து சேரவில்லை. ஒருவேளை இன்று வருவார் போல... இஸ்லாமிக் டிரஸ்ட் கடையில் இஸ்லாமிய நூல்கள் நிறைய அடுக்கியிருக்கிறார்கள்.

பாரதி புத்தகாலயத்திய் புத்தகம் பேசுது மட்டும் எடுத்து வந்தேன். அங்கே நான் வாங்கக்கூடிய நூல்கள் நிறையவே இருக்கின்றன. கடந்த ஆண்டு எட்டாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதாக நினைவு. இந்த ஆண்டு என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை.


வழக்கம்போல இந்த ஆண்டும் புத்தக விழிப்புணர்வு ஊர்வலம்... 1000 மாணவர்கள் கோஷ அட்டைகளைப் பிடித்தபடி மைதானத்துக்குள் ஊர்வலம் வந்தனர். எனக்குப் பிடிக்கும் என்றாலும் புரியாததில் இதுவும் ஒன்று - பிரகதி மைதானில் இருப்பவர்கள் எல்லாரும் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாங்க வந்த ஆர்வலர்கள்தான். அப்புறம் யாருக்கு இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...



சரி...சரி போகட்டும்... குழந்தைகளுக்கு இலவச அனுமதியும் ஆரஞ்சு வண்ணத் தொப்பியும் கிடைத்தது. பிஸ்கட், குளிர்பானங்களும் கிடைத்திருக்கும். அந்த மட்டுக்கு மகிழ்ச்சிதான். மீண்டும் நாளை.


1 comment: