Wednesday, 29 February 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 29-2-12

தீவிர வாசகனாகவும் புத்தக ஆர்வலனாகவும் வாங்குபவனாகவும் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.... கடையில் வாங்கிய புத்தகப் பைகளை சுமந்து கொண்டு செல்வது எவ்வளவு பெருமையாக இருக்கிறது... அதுவும் இரண்டு மூன்று பைகளை சுமந்து செல்லும்போது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளுக்குள்ளே தலை தூக்குகிறது... நாம் வெறும்கையோடு நடக்கையில் இரண்டு மூன்று புத்தகப் பைகளை சுமந்து கொண்டு வருபவர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது....

கடந்த ஞாயிறன்ற என் நண்பர் பின்னியிம் மனைவியும் சகோதரியும் நாள் முழுக்க அலைந்து திரிந்து விட்டு ஆளுக்கு ஒரு டிராலி பேக் - நிறைய புத்தகங்களுடன் - இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். ஒரே முறை புத்தகக் கண்காட்சிக்கு வந்துபோகும் வாய்ப்புள்ளவர்களுக்கு டிராலி பேக் நல்ல வசதி. என்னைப்போல தினமும் அல்லது அடிக்கடி வருபவர்களுக்கு கையும் பையும்தான் வசதி.


ராமகிருஷ்ணனின் முதல்நாள் வருகையின்போது எடுத்த படத்தை முத்துலட்சுமி அனுப்பியிருந்தார். என்னை மட்டும் விட்டுவிட்டு எவ்வளவு ஜாலியா காப்பி குடிக்கிறாங்க பாருங்க..

.
ஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாததை ஒரு சித்திரம் விளக்கி விடும். எனவே ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போதும் கடைசி நாளில் செய்திமடலை எட்டு பக்கங்களாக்கி, புகைப்படங்களுக்கென இரண்டு பக்கங்கள் ஒதுக்குவது வழக்கம். அதற்காக ஆரம்பத்திலிருந்தே படங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவேன். இப்போதே நிறைய சேர்ந்து விட்டன. படங்களை மட்டும் தனியாக பதிவுகளாக இடலாம் என்றும் யோசனை உண்டு. ஒரு படம் இங்கே... மலைப்பு என்று தலைப்பு இடலாமா...


யார் கண் பட்டு விட்டதோ தெரியவில்லை, நேற்று வீடு போக மூன்று மணி ஆகிவிட்டது. நேற்று கண்காட்சிக்கு வந்த பொடியன் ஜஸ்வினை அலுவலக புகைப்படக்காரர் படம்பிடித்திருந்தது அதிர்ஷ்டவசம். இப்போதெல்லாம் அதிகம் புழங்கப்படும் கியூட் என்ற சொல்லை நானும் இப்போது சொல்லலாம். படத்தைப் பார்த்தபின் நீங்களும் சொல்வீர்கள்.



இன்று பாரதியில் சில புத்தகங்களை எடுத்து வந்தேன்.
  • பாப்லோ நெருதா கவிதைகள்
  • கறுப்பின மந்திரவாதி
  • காட்டிலே கதைகள்
  • நம்மைச்சுற்றி காட்டுயிர்
  • கார்ப்பரேட் என்ஜிஓக்களும் புலிகள் காப்பகங்களும்
  • அயோத்தியின் இராமன் - ஒரு மறு மதிப்பீடு
  • நண்டுகளின் அரசாட்சியில் ஓர் இடைவேளை
  • டாம் மாமாவின் குடிசை
  • கண்ணீர் சிந்தும் கதைகள்
  • அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

கடைசியாக குறிப்பிட்டுள்ள புத்தகத்தை எழுதியவர் ஜான் பெர்கின்ஸ் - இவருடைய முந்தைய நூலின் விமர்சனத்தை ஏற்கெனவே படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு - படித்ததில் பிடித்தது

நேற்று கண்காட்சிக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் - குல் பனாக். ஒருகாலத்தில் இந்திய அழகியாம், திரைப்பட நடிகையாம். எனக்குத் தெரியாது, அவர் படம் எதையும் பார்த்ததாக நினைவில்லை -



அவர் வெளியிட்ட நூலின் தலைப்பு - NEVER LET ME GO
படத்துக்கும் தலைப்புக்கும் யாரேனும் முடிச்சுப்போட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

தமிழ்ச் சங்க நூலகத்துக்காக புத்தகங்கள் வாங்க வந்தவர்களுடன் சுற்றி விட்டு வரும்போது திடீரென்று கண்ணில் பட்ட காந்தி ஸ்மிருதி கடையில் வாங்கிய நூல் மைண்ட் ஆஃப் மகாத்மா. காந்தியின் கருத்துகளை அறிய விரும்புவோர் கட்டாயம் வாங்க வேண்டிய நூல் என்று உறுதியாகப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன். குஜராத்தின் நவஜீவன் டிரஸ்ட் வெளியீடு - சுமார் 500 பக்கங்கள், ஹார்டு பைண்டிங்கில் விலை வெறும் நூறு ரூபாய். காந்தியின் சிந்தனைகளின் சாரத்தை பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறார் யு.ஆர். ராவ்.


 இதன் தமிழ் மொழியாக்கம் இந்த ஆண்டு நேஷனல் புக் டிரஸ்டில் வெளியாகும். அதற்குள் அவசரமாக வாங்க நினைப்பவர்கள் 8-9 அரங்கில் 52ஆம் எண் கடைக்குச் செல்லவும். காந்தி படம் பொறித்த சாவிவளையம் 10 ரூபாய்க்கும், மூன்று குரங்குகள் பொறித்தது 20 ரூபாய்க்கும் இங்கே கிடைக்கும்.

தில்லி அரங்கம் பற்றி இன்றாவது முடிகிறதா என்று பார்ப்போம்...


வாசிப்பை நேசிப்போம்

No comments:

Post a Comment