ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த பிறகு ஜேஎன்யு வளாகத்தில் ஆற்றிய உரை. அரசியல் தெளிவும், ஆழமான சிந்தனையும் கொண்ட உரை வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியில் இருக்கும் உரை தமிழர்கள் பலருக்கும் புரியாது என்பதால் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
கன்னையாவின் உரை அங்கதமும் சாடலும் குத்தலும்
நகைச்சுவையும் கவிதைகளும் பழமொழிகளும் சொலவடைகளும் நிறைந்தது. அதனை அப்படியே
தமிழாக்கம் செய்வது சாத்தியமில்லை. என்னால் இயன்றவரையில் உள்ளது உள்ளபடி தர
முயற்சி செய்திருக்கிறேன்.
*
அனைத்துக்கும் முதலாக ஜேஎன்யு மக்களுக்கு – மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், செக்யூரிடி ஊழியர்கள்,
கடைக்காரர்கள்,
கடைகளின் ஊழியர்கள்
அனைவருக்கும் புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே இருக்கும்
ஊடகங்களின் வாயிலாக நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகின் மூலை முடுக்குகளிலிருந்து ஆதரவளித்த மாணவர்கள், அறிஞர்கள், திரைப்படத் துறையினர்
அனைவருக்கும் நன்றி. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கு ஆதரவாக நின்ற
அனைவருக்கும் நன்றி. ஜேஎன்யுவை காக்கவும், ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைக்கவும் துணையாக நிற்கும்
ஊடகத்துறையினர், குடிமை சமூகத்தினர், அரசியல் சார்புள்ளவர்கள், சார்பற்றவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் செவ்வணக்கத்தையும்
உரித்தாக்குகிறேன்.
பெருமைக்குரிய நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, எது சரி, எது தவறு என்று தமக்கு
மட்டுமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற
கனவான்களுக்கும் நன்றி. அவர்களுடைய காவல்துறைக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும்
நன்றி. ஜேஎன்யு மீது அவதூறு பரப்புவதாகத்தான் இருந்தது என்றாலும்கூட,
அவர்களால்தான் ஜேஎன்யு-வுக்கு பிரைம் டைம் ஒளிபரப்புகளில் இடம் கிடைத்தது.
எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. குறிப்பாக ஏபிவிபி
மீது கிடையாது. ஏனென்றால், ஜேஎன்யுவில் இருக்கும் ஏபிவிபி என்பது நாட்டின் இதர பகுதிகளில் இருக்கும்
ஏபிவிபியைவிட பகுத்தறிவில் மேம்பட்டது. அரசியல் வித்தகர்கள் என்று கருதிக்கொள்ளும்
அறிவாளிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள வேண்டும். கடந்த ஜேஎன்யு மாணவர் தேர்தலின்போது,
ஏபிவிபியின் முக “புத்திசாலியான” வேட்பாளரை நான் எவ்வாறு
எதிர்கொண்டு அவருக்குத் தண்ணீர் காட்டினேன் என்று அவர்களே வீடியோவில்
பார்த்துக்கொள்ளட்டும். ஆக, இங்கே இப்படி என்றால் நாட்டின் இதர பகுதிகளில் ஏபிவிபியின் நிலை
எப்படியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். எனக்கு ஏபிவிபி மீது
எந்தவித வெறுப்புணர்வும் கிடையாது. ஏனென்றால், நாங்கள் ஜனநாயகத்தை
விரும்புகிறவர்கள், அரசமைப்பை உண்மையிலேயே நம்புகிறவர்கள். எனவேதான் ஏபிவிபியை
எதிர்க்கட்சியாகத்தான் பார்க்கிறோமே தவிர, எதிரிகளாக அல்ல. ஏபிவிபி நண்பர்களே, உங்கள்மீது பழிவாங்கும்
விதத்தில் ஏதும் செய்துவிட மாட்டேன், நீங்கள் அதற்குத் தகுதி உள்ளவர்களும் அல்ல.
வேட்டைக்காரன்கூட வேட்டைக்குத் தகுதி உடையதைத்தான் வேட்டையாடுவான் இல்லையா?
இப்போது நடந்திருக்கும் விஷயத்தில் ஜேஎன்யு தான் யார்
என்பதைக் காட்டியிருக்கிறது. எது சரி எது தவறு என்பதைக் காட்டியிருக்கிறது. அதற்கு
என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியானதை சரி என்றும் தவறை தவறு என்றும்
சொல்வதற்காக நாம் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,
இது தன்னெழுச்சியாக –
ஸ்பான்டேனியஸாக எழுந்த எதிர்வினை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவர்களுடைய முயற்சிகள்
எல்லாம் முன்னரே திட்டமிட்டவையாக இருந்தன. நம்முடைய எதிர்வினைகளோ, எந்தத் திட்டமிடலும்
இல்லாமல் தன்னிச்சையாக எழுந்தவை.
இந்த நாட்டின் அரசமைப்பில், இந்த நாட்டின் சட்டத்தில்,
இந்த நாட்டின்
நீதியமைப்பின்மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், மாற்றம் ஒன்றே மாறாதது
என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, மாறும், மாறியே தீரும், நாம் மாற்றத்தின் பக்கம் நிற்கிறோம், இந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். நமது
அரசமைப்பின்மீது நம்பிக்கை இருக்கிறது. அரசமைப்பின் முன்னுரையில்
கூறப்பட்டிருக்கிற இலட்சியங்களின்மீது நம்பிக்கையுடன் சொல்கிறோம். அதில்
கூறப்பட்டுள்ளதே - சோஷலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் – அதன் பக்கத்தில் நிற்கிறோம்.
நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் – நான் இன்று உரையாற்றப்
போவதில்லை. இன்று என் அனுபவத்தை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
ஏனென்றால், முன்னர் எல்லாம் நான் படிப்பது அதிகமாகவும், அமைப்புமுறையை – சிஸ்டத்தைக் கேள்வி கேட்பது
குறைவாகவும் இருந்தது. இந்த முறை, படிப்பு குறைவாகவும் கேள்வி கேட்பது அதிகமாகவும் இருந்தது. அந்த அனுபவத்தில்
சொல்கிறேன். ஜேஎன்யுவில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களிடம் பிரைமரி
டேட்டா இருக்கிறது. நிறைய தகவல்கள் இருக்கின்றன.
முதலாவதாக ஒன்றைச் சொல்ல வேண்டும் – விஷயம் நீதிமன்றத்தில்
இருக்கிறது, அதைப்பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. ஒரே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
இந்த நாட்டின் அரசமைப்பின்மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள், பாபாசாகேப் அம்பேத்கரின்
கனவை நனவாக்க விரும்புகிறவர்கள், இந்த வார்த்தைகள் போதும் என்று நினைக்கிறேன்,
புரிய
வேண்டியவர்களுக்குப் புரிந்து விடும். சப்-ஜுடிஸ் விஷயத்தில் நான் ஏதும் சொல்ல
விரும்பவில்லை.
பிரதம மந்திரி ட்வீட் செய்தார். அவர் சொன்னார் – சத்யமேவ ஜெயதே. பிரதமர்
அவர்களே... உங்கள் கருத்துகளோடு எனக்கு பல விஷயங்களில் பெரும் வேறுபாடு உண்டு.
இருந்தாலும், சத்யமேவ ஜெயதே உங்களுடையது அல்ல. அது இந்த நாட்டுக்குச் சொந்தமானது, அரசமைப்பில் உள்ளது. எனவே
நானும் சொல்கிறேன் சத்யமேவ ஜெயதே. ஆமாம், உண்மை வெல்லும்.
இந்தப் போராட்டத்தில், மக்களுக்கு ஒரு விஷயத்தைச்
சொல்லிக்கொண்டு என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அந்த விஷயம் என்னவென்றால்,
தேசத்துரோகம் என்பது
மாணவர்கள் மீது அரசியல் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று மட்டுமே
நினைத்து விடாதீர்கள்.
நானும் கிராமத்திலிருந்து வந்தவன். ஊரிலிருந்து வரும்போது
ரயில்வே ஸ்டேஷனில் வித்தை காட்டப்படுவதுண்டு. மந்திரவாதி வித்தை காட்டுவான். அவன்
வித்தை காட்டுவது மட்டுமல்ல, மோதிரத்தையும் விற்பான். மனசுக்குப் பிடித்த மந்திர மோதிரம். அந்த மந்திர
மோதிரத்தை அணிந்தால் உங்கள் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறும் என்று சொல்லுவான்.
அதேபோலத்தான் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் சிலர்
இருக்கிறார்கள். கறுப்புப்பணம் வரும் என்றார்கள். ஹர் ஹர் மோதி என்றார்கள்.
விலைவாசி குறையும் என்றார்கள்கள். சப்கா சாத், சப்கா விகாஸ்... அந்த
வெற்றுச் சவடால்கள் (தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஜும்லா
என்று கட்சித் தலைவரே சொல்லி விட்டார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும்) எல்லாம்
மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. இந்தியர்களாகிய நமக்கு எதையும் எளிதில்
மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் நடத்திய நாடகம் மிகப் பெரியது,
எனவே மக்களால் மறக்க
முடியவில்லை. அதனால்தான் இந்தச் சவடால்களை மறக்கடித்துவிட வேண்டும் என்று அவர்கள்
நினைத்தார்கள்.
ஆராய்ச்சி செய்யும் ஸ்காலர்களுக்கு ஃபெல்லோஷிப் நிறுத்தி விடுவோம்
என்று சொல்வார்கள். அப்போது ஸ்காலர்கள் என்ன செய்வார்கள்? பெல்லோஷிப் தொடர வேண்டும்
என்று கேட்பார்கள். உடனே அவர்கள் சொல்வார்கள் – சரி போகட்டும், 5,000 அல்லது 8,000
பெல்லோஷிப் தொடரும் என்பார்கள். ஆக, உயர்த்துவது பற்றிய கேள்வி மறந்து போகும். பெல்லோஷிப்
தொகையை உயர்த்த வேண்டும் என்று கேட்டது ஜேஎன்யு. எனவே, உங்களுக்கு பெல்லோஷிப் தொகை
கிடைக்கிறது என்பதற்காக உங்கள்மீது அவதூறு சுமத்தப்பட்டால் அதற்காக
வருத்தப்படாதீர்கள். (உப்புத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டியிருக்கும்.)
இந்த நாட்டில் மக்கள் விரோத அரசு ஆட்சியில் இருக்கிறது.
அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்தால், அரசின் சைபர் செல்
திரிக்கப்பட்ட வீடியோவை அனுப்பி வைக்கும், உங்கள் மீது வசைமொழிகளை வீசும், உங்கள் குப்பைக்கூடையில்
எத்தனை காண்டம்கள் என்றும்கூட எண்ணப்படும்! இது நமக்கு கடுமையான நேரம், நாம் தீவிரமாக யோசிக்க
வேண்டிய நேரம். ஜேஎன்யு மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம்
தீவிரமாக உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. ஏனென்றால், Occupy UGC இயக்கத்தை
சட்டவிரோதமாக்குவது அவர்களுடைய திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது.
ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை அடக்குவது அவர்களுடைய
திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது.
மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே... ஜேஎன்யு
விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில்
15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர் வாக்களித்தார் என்பதை மறக்கடிப்பதற்காக. ஆனால்
உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் – ஜேன்யுவில் அட்மிஷன் கிடைப்பதும் கடினம், அதேபோல ஜேஎன்யுவினரை மறக்கச் செய்வதும் கடினம். மறக்கடித்து விடலாம் என்று நீங்கள்
நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு மறந்து போயிருந்தாலும் நாங்கள் அவ்வப்போது அடிக்கடி உங்களுக்கு
நினைவூட்டிக்கொண்டே இருப்போம்.
இந்த நாட்டின் அரசு எப்போதெல்லாம் அநியாயம் செயகிறதோ,
அப்போதெல்லாம்
ஜேஎன்யு அதை எதிர்த்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறது, அதையேதான் இப்போதும் நாம்
செய்கிறோம். எமது போராட்டத்தை நீங்கள் நீர்த்துப்போகச் செய்ய முடியாது.
எல்லையில் சாகும் வீரர்கள் குறித்துப் பேசுகிறார்கள். அந்த
வீரர்களுக்கு என் வணக்கத்தை உரித்தாக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி
இருக்கிறது. ஜெயிலில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். போராட்டம் கொள்கை
சார்ந்தது என்றால், எதிராளி நபருக்கு தேவையற்ற விளம்பரத்தைத் தேடித்தந்து விடக்கூடாது. எனவே
அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிட மாட்டேன். பாஜகவின் தலைவர் ஒருவர்
நாடாளுமன்றத்தில் பேசினார் – இந்நாட்டின் இளைஞர்கள் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். நான் அவரைக்
கேட்கிறேன் – அவர்கள் உங்கள் புதல்வர்களா? உங்கள் சகோதரர்களா? தற்கொலை செய்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், நமக்கு உணவை உற்பத்தி
செய்யும் விவசாயிகள் பற்றி – எல்லையில் காவல் காக்கும் வீரர்களின் பெற்றோர்களாக இருந்து தம்மையே தியாகம்
செய்யும் விவசாயிகள் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
வயலில் உழும் வேலை செய்யும் விவசாயி என் தந்தை, எல்லையைக் காக்கும் வீரன்
என் சகோதரன். எனவே, இந்த நாட்டில் எங்களிடையே விரோதத்தை உருவாக்க பொய்யான விவாதத்தைக் கிளப்ப
முயற்சி செய்யாதீர்கள். இவர்கள் நாட்டின் உள்ளேயும் இறக்கிறார்கள், நாட்டின் எல்லையிலும்
இறக்கிறார்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து
கொண்டிருக்கிறீர்கள். நாட்டில் உயிரிழப்பவர்களுக்கு யார் பொறுப்பு? உயிரிழப்பவர்கள் அதற்குக்
காரணமாக முடியாது. சண்டை மூட்டிவிடப் பார்க்கிறார்களே, அவர்கள்தான்
பொறுப்பாவார்கள்.
எனக்கு ஒரு கவிதை நினைவு வருகிறது
ஒருவருக்கு அதிகம் என்றும்
ஒருவருக்கு குறைவு என்றும்
பிரிவினைகள் பேதங்களின்றி
எல்லாருக்கும் எல்லாம் என்று
எட்டும் நாள் வரும் வரையில்
அமைதி இல்லை அமைதி இல்லை.
ஆகவே நண்பர்களே, உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு யார் என்று யோசியுங்கள். யார்
மக்களுக்கிடையில் சண்டை மூட்டுகிறார்கள் என்று சிந்தியுங்கள். நாட்டில் செத்துக்
கொண்டிருப்பவர் என் தந்தை, எல்லையில் சாகிறவன் என் சகோதரன்.
தொலைக்காட்சிகளில் ப்ரைம் டைமில் பேசும் பேச்சாளர்களைக்
கேட்கிறேன் – நாட்டில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கேட்பது குற்றமா? யாரிடமிருந்து விடுதலை
வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். ஏன், நீங்களே சொல்லுங்களேன்....–
இந்தியாவில் யாராவது
அடிமைகள் இருக்கிறார்களா என்ன? இல்லை. ஆக, நாம் இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. இந்தியாவிடமிருந்து விடுதலை
அல்ல நண்பர்களே, இந்தியாவுக்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
நாம் வெள்ளையரிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற
சுதந்திரத்தைக் கேட்கிறோம்.
இனி நான் ஜெயில் அனுபவத்துக்கு வருகிறேன்.
காவலர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏதோ லால் சலாம் லால் சலாம்
(செவ்வணக்கம்) என்றீர்களே... அது என்ன...? இது வழக்கு விசாரணையின்போது நடந்தது அல்ல. போலீஸ்காரர்கள்
அவ்வப்போது சாப்பிடவோ, மருத்துவப் பரிசோதனைக்கோ அழைத்துச் செல்வார்கள். நானோ ஜேஎன்யுக்காரன். அதுவும்
பிரம்மபுத்திராக்காரன். (பிரம்மபுத்திரா என்பது ஜேஎன்யு ஹாஸ்டல் கட்டிடங்களில்
ஒன்று. ஒவ்வொரு ஹாஸ்டல் கட்டிடத்துக்கும் நதியின் பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களில் பிஎச்டி இறுதி ஆண்டில் இருக்கிற, சீனியர் மாணவர்களுக்கு
மட்டும்தான் பிரம்மபுத்திரா ஹாஸ்டல் தரப்படும். அதாவது, பிரம்மபுத்திரா ஹாஸ்டல்காரன்
அரசியல் முதிர்ச்சி உடையவர்கள் என்பது மறைபொருள்) என்னால் பேசாமல் இருக்க முடியுமா?
உரையாடத்
துவங்கினேன்.
உரையாடலின் போக்கில்தான் தெரிந்தது – அந்தப் போலீஸ்காரரும்
என்னைப் போன்றவர்தான் என்பது. இங்கே போலீஸ் வேலைக்குச் செல்கிறவர்கள் யார்?
விவசாயியின் மகன்,
கூலிக்காரன் மகன்,
தாழ்த்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவனின் மகன் இவர்கள்தான் போலீஸ் வேலை செய்கிறார்கள். நானும்
இந்நாட்டின் பிற்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து வருகிறேன். நானும் ஏழைக்குடும்பத்தைச்
சேர்ந்தவன். நானும் விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்தவன். போலீசில் இருப்பவர்களும் ஏழைக்
குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். நான் இங்கே பேசுவது, கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் மட்டத்தில்
உள்ளவர்கள் பற்றித்தான். ஐபிஎஸ் ஆட்களுடன் எனக்கு அதிக இன்டராக்சன் ஏதும்
கிடையாது. ஆக, கான்ஸ்டபிளுடன் உரையாடினேன். நான் இப்போது கூறப்போவதெல்லாம் அந்த உரையாடலின்
பகுதிதான்.
லால் சலாம் லால் சலாம் என்கிறீர்களே... அது என்ன?
நான் சொன்னேன் – லால் என்றால் கிராந்தி - புரட்சி. சலாம் என்றால், புரட்சிக்கு வணக்கம்.
புரியவில்லையே என்றார் அவர்.
இன்குலாப் தெரியுமா என்று கேட்டேன்.
தெரியும் என்றார்.
கிராந்தி என்பதற்கு உருதுவில் இன்குலாப் என்கிறோம் என்று
கூறினேன்.
அட... இந்த கோஷத்தை ஏபிவிபிகாரர்களும்தான் எழுப்புவது உண்டே
என்றார்.
இப்போது புரிந்ததா – அவர்கள் போலிப்
புரட்சிக்காரர்கள், நாங்கள் உண்மைப் புரட்சிக்காரர்கள் என்று சொன்னேன்.
அப்புறம் அவர் கேட்டார் - உங்கள் ஆட்களுக்கு ஜேஎன்யுவில்
எல்லாம் மிகவும் மலிவாகக் கிடைக்கிறதே?
நான் கேட்டேன் – உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா...? உங்களுக்கு ஏன் இப்படிக்
கிடைக்கவில்லை? உங்களுடைய இப்போதைய நிலை... அவர் நாளுக்கு 18 மணி நேரம் டியூட்டி செய்து
கொண்டிருந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு ஓவர்டைம் கிடைக்கிறதா?
இல்லை என்றார். பின்னே எப்படி சமாளிக்கிறீர்கள் என்று
கேட்டேன்.
அது... அதுதான்... நீங்கள் கரப்ஷன் என்று சொல்கிறீர்களே
அங்கிருந்துதான் என்றார்.
நல்லது. யூனிபார்முக்கு எவ்வளவு கிடைக்கிறது என்று
கேட்டேன்.
நூற்றுப் பத்து ரூபாய் கிடைக்கிறது என்றார்.
நூற்றுப் பத்து ரூபாயில் என்ன கிடைக்கும். நான் சொன்னேன்,
இதிலிருந்துதான்
நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்று. சிபாரிசுகளிலிருந்து, ஊழலிலிருந்து விடுதலை
கேட்கிறோம்.
இதற்கிடையில் ஹரியாணாவில் ஒரு போராட்டம் துவங்கி விட்டது.
தில்லி போலீஸ் துறையில் பெரும்பாலானவர்கள் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்தான் என்பது
உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகள், அவர்களுக்கு என் வணக்கம்.
இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான்
காவலரிடம் கேட்டேன்.
ஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார்.
இந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம்
என்றேன்.
அப்படியானால் இதில் தவறேதும் இல்லையே... இதில் தேசத்துரோகம்
ஏதும் இல்லையே என்றார்.
சரி, ஒரு விஷயம் சொல்லுங்கள்... உங்கள் சிஸ்டத்தில் யாருக்கு மிகவும் அதிக அதிகாரம்
இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன்.
என் கையில் இருக்கும் தடிக்குத்தான் என்றார்.
மிகச்சரியாகச் சொன்னீர்கள்... சரி, இதைச் சொல்லுங்கள் – உங்கள் தடியை உங்கள்
விருப்பப்படி பயன்படுத்த முடியுமா?
அவர் சொன்னார் - இல்லை, முடியாது.
எல்லா அதிகாரமும் யாரிடமும் குவிந்திருக்கிறது என்று
கேட்டேன்.
போலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே அவர்களிடம்
குவிந்திருக்கிறது என்றார்.
போலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே.... அந்த
சங்கப் பரிவாரத்திடமிருந்து விடுதலை கேட்கிறோம் என்றேன்.
நான் சொன்னேன் – நண்பா... நானும் நீயும் ஒரே இடத்தில் நின்று
கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் இதில் ஒரு சிரமம் இருக்கிறது. நான் எல்லா
மீடியாக்காரர்களையும் குற்றம் சொல்லவில்லை. அடக்கத்துடன் சொல்கிறேன்.
மீடியாக்காரர்கள் எல்லாரும் சம்பளத்தை “அங்கிருந்து” பெறுவதில்லை. சிலர் “அங்கிருந்துதான்” பெறுகிறார்கள். அப்புறம்...
மீடியாவில் வேலை செய்யச் செய்ய... பார்லிமென்ட்டுக்கு வெளியிலிருந்து செய்திகளைத்
திரட்டத்திரட்ட பார்லிமென்ட்டுக்குள் நுழையும் முயற்சியில் இருக்கிறார்களே சில
மீடியாக்காரர்கள்... அவர்கள்தான் இப்படியொரு சூழலை உருவாக்கி விட்டார்கள் ....
அந்தக் காவலர் சொன்னார்... உண்மையைச் சொன்னால் நண்பனே...
உன்னுடைய பெயர் எஃப்ஐஆரில் வந்ததுமே நினைத்தேன்..... நீ எப்போது வந்தாலும் சரி.......
நான் சொன்னேன் – எஃப்ஐஆரில் வருவதற்கு முன்னால் ஏபிவிபியின் துண்டறிக்கையில்
வந்து விட்டது.
ஆமாம் நண்பர்களே, ஏபிவிபி துண்டறிக்கையில்தான் முதல் குற்றவாளி என்று முதலில்
என் பெயர் குறிப்பிடப்பட்டு விட்டது. அதன் பிறகுதான் எப்ஐஆரில் இடம்பெற்றது. ( ! )
காவலர் சொன்னார் – எஃப்ஐஆரில் உன் பெயரைப் பார்த்தபோது, நீ வந்ததும் உன்னை நையப்
புடைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பனே... உன்னோடு பேசிய பிறகு
எனக்கு என்ன ஆசை என்றால்.... அவர்களைப் போய் நையப் புடைக்க வேண்டும் என்று
தோன்றுகிறது.
அந்தக் காவலர் மிக முக்கியமான விஷயத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார் நண்பர்களே. இந்த நேரத்தில் மீடியாவின் வாயிலாக நாட்டு
மக்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தக் காவலர் என்னைப் போலவே
எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். என்னைப் போலவே பிஎச்டி செய்ய
விரும்பியவராகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜேஎன்யுவில் இடம் கிடைக்கவில்லை.
அவரும் என்னைப்போலவே இந்நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்கு எதிராகப்
போராட விரும்பியவர்தான். எழுத்தறிவுக்கும் கல்விக்கும் இடையே இருக்கும்
வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள விரும்பியவர்தான். இப்போது போலீஸ் காவலராக
இருக்கிறார்.
இங்கேதான் ஜேஎன்யு முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான்
ஜேஎன்யுவின் குரல்வளையை நெறிக்கப் பார்க்கிறீர்கள். பலவீனமானவர்கள் பிஎச்டி
செய்துவிட முடியாது, ஏனென்றால், கல்வி வியாபாரமாக்கப்படுகிறது. அவரால் தனியாருக்கு லட்சக்கணகில் பணம் செலவு
செய்ய முடியாது. அதனால் அவர் பிஎச்டி செய்ய முடியவில்லை.
அதனால்தான் நீங்கள் ஜேஎன்யுவை முடக்கப் பார்க்கிறீர்கள்.
ஒன்றுபட்டு எழும் குரலை முடக்கப் பார்க்கிறீர்கள். அது எல்லையில் நிற்பவனாக
இருந்தாலும் சரி, வயல்வெளியில் தன் உயிரைக் கொடுத்து உழைப்பவனாக இருந்தாலும் சரி, அல்லது இந்த ஜேஎன்யூவில்
சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவனாக இருந்தாலும் சரி... அந்தக் குரல்கள்
எழுந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் – பாபாசாகேப் சொன்னார்.
அரசியல் ஜனநாயகம் மட்டும் பயன் தராது, நாம் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அதனால்தான் நாம்
அரசமைப்பு குறித்து அடிக்கடி பேசுகிறோம். லெனின் சொல்கிறார் – சோஷலிசத்திலிருந்து
ஜனநாயகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால்தான் நாம் ஜனநாயகம் குறித்துப்
பேசுகிறோம். அதனால்தான் நாம் கருத்துரிமைச் சுதந்திரம் குறித்துப் பேசுகிறோம்.
அதனால்தான் சமத்துவம் பற்றிப் பேசுகிறோம். அதனால்தான் சோஷலிசம் குறித்துப்
பேசுகிறோம். ஒரு கடைநிலை ஊழியனின் மகனும் குடியரசுத் தலைவரின் மகனும் ஒரே
பள்ளியில் படிக்கும் காலத்தை உருவாக்க விரும்புகிறோம். ஆனால் நீங்களோ... இந்தக்
குரலை ஒடுக்கப் பார்க்கிறீர்கள்.
ஆனால் அறிவியலில் ஒரு விஷயம் உண்டு. நீங்கள் எந்த அளவுக்கு
அடக்கி வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு
விஞ்ஞானம் என்றால் ஆகவே ஆகாது. ஏனென்றால், விஞ்ஞானத்தைப் படிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். விஞ்ஞானி
ஆவது முற்றிலும் வேறு விஷயம். தம்மை விஞ்ஞானிகளாக நினைத்துக் கொள்கிறவர்களுக்குச்
சொல்லிக் கொள்கிறேன் – நாங்கள் கோருகிற விடுதலை ஏழ்மை மற்றும் பட்டினியிலிருந்து விடுதலை. அநீதி
மற்றும் அக்கிரமங்களிலிருந்து விடுதலை. தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான
விடுதலை. அதை நாம் பெற்றே தீருவோம். அந்த விடுதலையையும் இதே அரசமைப்பின் மூலம்,
இதே
நாடாளுமன்றத்தின் மூலம், இதே நீதியமைப்பின் மூலம் பெறுவோம். இது எங்கள் லட்சியம். இந்த நாட்டில் நாம்
எந்த சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும், அதை இந்நாட்டின் சட்டங்கள் மற்றும் நீதியமைப்பின்
வரம்புக்குள்ளேயே அடைவோம். இதுதான் அம்பேத்கரின் கனவு. இதுவேதான் ரோகித்தின் கனவு.
நீங்களே பாருங்களேன்... ஒரு ரோகித்தை அவர்கள் கொன்றார்கள்.
அதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை அவர்கள் ஒடுக்க முயற்சி செய்தார்கள்.
அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தார்களோ அந்த அளவுக்கு அது பெரிதாக வளர்ந்து விட்டது
பாருங்கள்.
இன்னும் ஒரு விஷயம். இப்போது ஜெயிலுக்குள் நடந்ததைப்பற்றிக்
கூறப்போகிறேன். நாம் ஜேஎன்யுகாரர்கள். இது ஒரு வகையில் சுய விமர்சனம்.
உங்களுக்கும் எப்போதாவது சுயவிமர்சனம் உண்டு என்றால், அதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நாம் ஜேஎன்யுகாரர்கள் முக்கியமான விஷயங்களைப் பேசத்தான் செய்கிறோம். ஆனால் நாம்
பயன்படுத்தும் சொற்கள் மிகவும கடினமானவை. இந்தியாவின் சாமானிய மக்களால் புரிந்து
கொள்ள முடிவதில்லை. இது அவர்கள் குற்றமல்ல. அவர்கள் நேர்மையானவர்கள், எளிமையானவர்கள். அவர்களுடைய
மட்டத்துக்கு இறங்கி அவர்கள் மொழியில் நாம பேச வேண்டும். உண்மையில் அவர்களுக்குப்
போய்ச் சேர்வதுதான் என்ன? கிடைக்கிற எந்தத் தகவலையும் சீக்கிரம் ஃபார்வேர்ட் செய்யணும்... எந்த அளவுக்கு
முடியுமோ அந்த அளவுக்கு அதிகமான குரூப்புகளுக்கு விரைவாக அனுப்பிட வேண்டும்...
ஆகவேதான் நண்பர்களே, அவர்களுடன் நாம் முறையான உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
சிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்கள் கிடைத்தன. ஒன்று நீல
நிறம். மற்றொன்று சிவப்பு. இரண்டையும் பார்த்தபோது அடிக்கடி எனக்கு ஒரு சிந்தனை
தோன்றியது... எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுளையும் நான்
அறிந்திலேன். ஆனால், இந்த நாட்டுக்கு நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது.
சிவப்பும் நீலமும் பக்கம் பக்கமாக இருக்கும்போது ஏதோ நடக்கும் எனத் தோன்றியது. அது
எனக்கு இந்தியாவைப்போலத் தோன்றியது. நீலம் அம்பேத்கர் இயக்கத்தைப் போலவும்,
சிவப்பு (கம்யூனிச)
இயக்கத்தைப் போலவும் தோன்றியது. நம் நாட்டில் இந்த இரண்டுக்குமிடையே ஒற்றுமையை
மட்டும் நிலைநாட்டி விட்டால்.... நண்பர்களே எல்லாருக்கும் ஒரே சட்டமாய், எல்லாருக்குமான உலகம்
ஒன்றாய், எல்லாருக்கும் நலம் தருவதாய்... எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய “சப்கா
சாத் சப்கா விகாஸ்” – எல்லாருக்கும் துணையாக, எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய
அரசை அமைத்தே தீருவோம். இது நம் கனவு காணும் கடமையாகும்.
உங்களுக்கெல்லாம் சுண்டல் காத்திருக்கிறது. ஒரு சொலவடை
தெரியுமா...? ஜெயிலில் சுண்டல் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவு காலம் வருவதும் போவதும் தொடர்ந்து
கொண்டே இருக்கும். (ஜப் தக் ஜெயில் மே சனா ரஹேகா தப் தக் ஆனா ஜானா லகா ரஹேகா)
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஜேஎன்யு மாணவன் சிறைக்குச் சென்றிருக்கிறான். ஒரு
விஷயத்தை மறப்பதற்கு முன்னால் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்று மாண்புமிகு
பிரதமர்... (மாண்புமிகுன்னு சொல்லியாகணும் இல்லியா... இல்லேன்னா இதையும் ஏதாவது
திரித்து, அதுக்கும் ஒரு செடிஷன் வழக்குப் போட்டாலும் போட்டுடுவாய்ங்க...)
மாண்புமிகு பிரதமர் சொல்லிக்கொண்டிருந்தார்... ஸ்டாலினையும்
குருஸ்சேவையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்படியே டிவி பெட்டிக்குள்
நுழைந்து விடலாம் என்று எனக்கு அப்போது ஓர் ஆவல் எழுந்தது. அவருடைய சூட்டைப்
பிடித்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது... மோடி ஜி... ஹிட்லரைப் பற்றியும்
கொஞ்சம் பேசுங்களேன். ஹிட்லரை விடுங்கள். முசோலினைப் பற்றிப் பேசுங்கள். கறுப்புத்
தொப்பி அணிந்திருப்பாரே... உங்கள் குரு கோல்வால்கர் சந்திக்கப் போயிருந்தாரே...
பாரதியம் என்பதற்கான வரையறையை ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொன்னாரே... (அவரைப்பற்றிப் பேசுங்களேன்.) ஹிட்லர் பற்றி, முசோலினி பற்றி, பிரதமர் பற்றி எல்லாம்
மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நமது பிரதமர் மன் கீ பாத் பேசுவார், ஆனால் மனதின் குரலைக் கேட்க
மாட்டார்.
இப்போது எனது சொந்த விஷயம் ஒன்றைக் கூற வேண்டும்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு என் அம்மாவுடன் பேசினேன். நான்
ஜேஎன்யுவில் இருக்கும்போது வீட்டாருடன் அதிகம் பேசுவதில்லை. ஜெயிலுக்குப்
போனபிறகுதான், வீட்டாருடன் பேச வேண்டும் என்பது புரிந்து போனது. நீங்களும் உங்கள்
வீட்டாருடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருங்கள். நான் அம்மாவிடம் சொன்னேன் – அம்மா, நீ மோடியை நன்றாகவே கேலி செய்தாய்
இல்லையா...? அம்மா சொன்னார் – நான் கேலி செய்யவில்லை மகனே... கேலி செய்பவர்கள் அவர்கள்தான்.... சிரிப்பதும்
சிரிப்பு மூட்டுவதும் அவர்களுடைய வேலை. நாம் நம்முடைய வேதனையைத்தான் சொல்ல
முடியும். அந்த வேதனையைப் புரிந்து கொண்டவர்கள் உடன் சேர்ந்து அழுவார்கள், புரியாதவர்கள்
சிரிப்பார்கள். என்னுடையது வேதனை, கேலி அல்ல. அதனால்தான் நான் சொன்னேன் – மோடியும் ஒரு தாயின்
மகன்தானே... என் மகனை தேசத் துரோகக் குற்றத்தில் சிக்க வைத்து விட்டாரே... மனதின் குரலைப்
பேசுகிறவர் எப்போதாவது தாய்மார்களின் குரலைப் பற்றியும் பேசட்டுமே என்றார்.
அம்மாவிடம் சொல்வதற்கு எனக்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை.
ஏனென்றால், இந்த தேசத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பதன் பின்னால் மிகவும் ஆபத்தான ஒரு
போக்கு இருக்கிறது. அதனால்தான் நான் எந்தவொரு தனிப்பட்ட கட்சியை மட்டும் நான்
பேசவில்லை. எந்தவொரு மீடியாவையும் பேசவில்லை, எந்தவொரு துறையையும் பற்றிப்
பேசவில்லை. ஒட்டுமொத்த நாட்டைப்பற்றிப் பேசுகிறேன். நாட்டில் வசிப்பதற்கு மக்களே
இல்லை என்றால் அங்கே நாடு எப்படிப்பட்டதாக இருக்கும்? சிந்தியுங்கள் நண்பர்களே...
ஜேஎன்யுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் நாம் தலைதாழ்த்தி வணக்கம்
தெரிவித்தாக வேண்டும். ஏனென்றால், அவர்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவர்கள்.
ஜேஎன்யுவில் எப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் வருகிறார்கள்...!
இங்கே 60 விழுக்காட்டினர் பெண்கள். இது ஜேஎன்யூவில் மட்டுமே சாத்தியம். எத்தனை
குறைகள் இருந்தாலும்சரி, நான் பெருமையுடன் சொல்வேன், நாட்டில் வேறெங்கும் காண முடியாதபடி இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படுவது
ஜேஎன்யுவில் மட்டும்தான். அப்படி செயல்படுத்தவில்லை என்றாலும், அதைச் செயல்படுத்த வேண்டும்
என்று நாம் போராடுகிறோம், செயல்படுத்த வைக்கிறோம். இங்கே எப்படிப்பட்ட மாணவர்கள் எல்லாம் வருகிறார்கள்...!
உங்களுக்கு நான் இதுவரை சொல்லாத விஷயம் இது...
உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்காது. என் குடும்பம் வெறும் 3000 ரூபாய் வருவாயில்
ஓடுகிறது. இப்படிப்பட்ட நான் வேறு ஏதாவதொரு பெரிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி
செய்வது சாத்தியம் ஆகியிருக்குமா...? (ஜேஎன்யுவில்தான் இது சாத்தியம் ஆனது.) ஆனால்... ஜேஎன்யு
மீது எப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது? நான் எந்தவொரு
கட்சியினரையும் குறிப்பாகச் சொல்லவில்லை. எனக்கும் ஒரு அரசியல் சார்பு உண்டு. அது
வேறு விஷயம். ஆனால் ஜேஎன்யுவுக்கு ஆதரவாக நிற்கிற எல்லாரையும் தேசத் துரோகிகள்
என்று குற்றம் சாட்டுகிறார்களே...! சீதாராம் யெச்சூரியையும் என்னுடன் சேர்த்து
தேசத்துரோக வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராகுல் காந்தியை தேசத் துரோகியாக
என்னுடன் சேர்த்து விட்டார்கள். டி. ராஜாவையும் தேசத் துரோகி என்று குற்றம்
சாட்டுகிறார்கள். கேஜ்ரிவால் மீதும் தேசத்துரோகி வழக்கு... எந்த மீடியாக்காரர்கள்
ஜேஎன்யுவின் சார்பாகப் பேசுகிறார்களோ... – உண்மையில் அவர்கள் ஜேஎன்யு சார்பாகப் பேசவில்லை, உண்மையை உண்மை என்றும்
பொய்யை பொய் என்றும் சொல்கிறார்களோ - அவர்கள்மீது வசைமாரி பொழியப்படுகிறது.
அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது என்ன வகையான தேசபக்தி ஐயா...
சுயம்புவாக வந்த தேசபக்தியா?
ஜெயிலில் சில காவலர்கள் என்னிடம் கேட்டார்கள் – நிஜமாகவே நீ கோஷம் போட்டாயா?
ஆமாம் கோஷம்
போட்டேன் என்றேன். திரும்பிப் போனபிறகு மறுபடி கோஷம் போடுவாயா என்று கேட்டார்கள்.
ஆமாம், இன்னும் உரக்க கோஷம்
போடுவோம் என்றேன். அப்பனே... உன் தலையெழுத்து அப்படி இருக்கிறது. உன் எதிர்காலம்
முடிந்து போய்விட்டது என்றார்கள். ஐயா... இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு
ஆண்டுகள்தான் ஆயிற்று. இன்னும் மூன்று ஆண்டுகள் இழுத்தாக வேண்டும். இவ்வளவு
சீக்கிரமாக உங்கள் நோக்கங்கள் நிறைவேறி விடாது. இந்த நாட்டில் 69 சதவிகிதத்தினர்
உங்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும்
31 சதவிகிதம்தான் உங்களுக்கு ஆதரவு கிடைத்தது. அதிலும்கூட பலர் உங்கள் வாய்ச்சவடால்களில்
ஏமாந்தவர்கள். சிலரை நீங்கள் ஹர் ஹர் என்று கோஷம்போட்டு ஏமாற்றினீர்கள். இப்போது
ஹர்ஹரால் வேதனைப்படுகிறார்கள். (ஹர்ஹர் என்பது துவரம்பருப்பைக் குறிக்கும்.
துவரம்பருப்பு விலை உயர்வைச் சொல்கிறார்.)
நூறு முறை பொய்யை பொய் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது
உண்மையாகி விடும் என்பது சரிதான். ஆனால் இது பொய்க்குத்தான் பொருந்தும், உண்மைக்கு அல்ல. சூரியனை
நூறு முறை நிலா நிலா என்று சொன்னால் அது நிலா ஆகிவிடுமா? ஆயிரம் முறை சொன்னாலும் அது
சூரியனாகவேதான் இருக்கும். பொய்யைத்தான் நீங்கள் பொய் என்று சொல்ல முடியும்.
சத்தியத்தை ஒருபோதும் பொய் என்றாக்கிவிட முடியாது. நாடாளுமன்றத்திலும்
நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் இவர்களுடைய திட்டங்கள் எல்லாம் திசைதிருப்பும்
முயற்சிகளாகவே இருக்கும். மக்களின் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவது. புதிய
புதிய பிரச்சினைகளில், அஜென்டாக்களில் சிக்க வைப்பது.
இந்தப்பக்கம் ஆக்குபை யுஜிசி போராட்டம்
நடந்துகொண்டிருந்தது. ரோகித் கொலை நடந்தது. ரோகித்துக்காக குரல் எழுந்தது. உடனே
தேசவிரோதம் என்ற குரல் எழுந்தது. பாருங்கள்.... நாட்டிலேயே மிக மோசமான தேச
துரோகிகளைப் பாருங்கள்... (ஜேஎன்யு) தேச துரோகிகளின் கூடாரம் என்றார்கள். ஆனால்
இது அதிக காலம் நீடிக்காது. எனவே அடுத்த பிரச்சினைக்குத் தயார் செய்வார்கள். ராமர்
கோயில் கட்டுவோம் என்பார்கள்.
இன்று நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். சிறையிலிருந்து
புறப்படுவதற்கு முன்பு ஒரு காவலருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
உனக்கு மதத்தில் நம்பிக்கை உண்டா என்று கேட்டார்.
மதத்தை அறிவேன் என்றேன். முதலில் அறிந்து கொள்ள வேண்டும்,
அதன் பிறகுதானே நம்ப
முடியும்?
ஏதாவதொரு இனக் குடும்பத்தில்தானே பிறந்திருப்பாய் என்று
கேட்டார்.
பிறப்பினால் நான் இந்துக் குடும்பத்தில் பிறந்தேன் என்றேன்.
அப்படியானால் இந்து மதம் பற்றி ஏதும் தெரியும்தானே என்று
கேட்டார்.
ஐயா... எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவில்
பார்த்தால், கடவுள்தான் உலகைப் படைத்தார் என்றேன். அணு அணுவிலும் கடவுள் இருக்கிறார்.
சரிதானே?
மிகவும் சரி என்றார்.
சரி, ஆனால் இப்போது சில ஆட்கள் கடவுளையே படைக்க விரும்புகிறார்களே அதைப்பற்றி
உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். (பீகாரின் சொலவடை புரியவில்லை)
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்றார்.
ஆம் நண்பர்களே... ராமர் கோவிலை வைத்து எத்தனை காலம்தான்
நடத்துவீர்கள் நாடகத்தை? உங்கள் ஏமாற்றுத் தந்திரத்தால் 80 இடங்களை 180 இடங்கள் ஆக்கினீர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆனால் இவர்கள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. பிரச்சினைகளிலிருந்து
திசை திருப்புகிறார்கள். அப்போதுதான் இந்த நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைப்
பற்றி விமர்சனம் எழுந்து விடாதிருக்கும் என்று நினைக்கிறார்கள். இன்று இங்கே
நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருக்கிற உங்களுக்கு, உங்கள்மீது ஒரு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது என்று உணர்கிறீர்கள். உண்மையிலேயே இது பெரிய தாக்குதல்தான்.
ஆனால் இந்தத் தாக்குதல் இன்று நடந்தது அல்ல நண்பர்களே.... உங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்....
ஆர்எஸ்எஸ்இன் முக்கியப் பத்திரிகையான ஆர்கனைசரில் ஜேஎன்யு
குறித்து ஒரு கவர் ஸ்டோரி தயாரிக்கப்பட்டது. ஜேஎன்யு குறித்து ஸ்வாமிஜியின்
அறிக்கை வெளிவந்தது. (சுப்பிரமணியம் ஸ்வாமியைக் குறிப்பிடுகிறார் என்று நின.)
இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற ஏபிவிபி நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒருமுறை உங்கள் ஸ்வாமிஜியை இங்கு அழைத்து வாருங்கள். நேருக்கு நேர் விவாதம்
செய்வோம். தர்க்க ரீதியாக – குதர்க்கமாக இல்லாமல் – ஜேஎன்யுவை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று அவர் தர்க்கரீதியாக
நிரூபித்தால் அவர் சொல்வதை நான் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால், அவரிடம் வேண்டிக் கொள்வேன் –
ஐயா, முன்னால் இந்தியாவுக்கு
வெளியே இருந்தது போலவே இப்போதும் வெளியேறி
விடுங்கள் என்று.
எப்படியெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது....?
இன்னொரு சுவாரசியமான விஷயத்தை சொல்கிறேன். நீங்கள்
கேம்பசுக்குள் இருந்தீர்கள் என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்காது. எவ்வளவு
அழகாகத் திட்டமிட்டிருந்தார்கள்.... துல்லியான பிளான்.... ! போஸ்டர்கூட
மாற்றப்படுவதில்லை. எந்தப் போஸ்டருடன் அல்லது எந்த நோட்டீசுடன் இந்து கிராந்தி சேனா
எதிர்ப்புக் காட்டுகிறதோ அதே போஸ்டர், அதே நோட்டீசுடன் ஏபிவிபி போராட்டம் நடத்துகிறது. அதே
வாசகங்களை, அதே போஸ்டருடன் எழுத்துக்கு எழுத்து அப்படியே பிரதியெடுத்து, முன்னாள் ராணுவத்தினர்
அணிவகுப்பு நடத்துகிறார்கள். இதன் அர்த்தம் என்ன... அத்தனை பிளானிங்கும் நாக்பூரில்
முடிவு செய்யப்படுகிறது. (நாக்பூர் என்பது, ஆர்எஸ்எஸ் தலைமையகம்
என்பதைக் குறிக்கும்.) இது தன்னிச்சையாக எழுந்த எதிர்ப்பு அல்ல நண்பர்களே...
திட்டமிட்ட எதிர்ப்பு.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் – முக்கியமான விஷயம் – இந்த நாட்டில் எழுகிற
எதிர்ப்புக் குரல்களை, போராட்டக் குரல்களை அடக்குவது. முக்கியமான விஷயம் – நாட்டின் மக்களை வாட்டும்
பிரச்சினைகளிலிருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்புவது. முக்கியமான விஷயம் –
இந்த ஜேஎன்யு
வளாகத்தில் போராடும் மக்களிடமிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களை – அது அனிர்பான், உமர்,
அசுதோஷ் என எந்தத் தரப்பினருடைய குரலாக இருந்தாலும் சரி – அவர்களை தேசத் துரோகிகள்
என்று குற்றம் சாட்டி ஜேஎன்யுவின் குரலை ஒடுக்குவது. ஜேஎன்யுவை சட்டவிரோதானதாகக்
காட்டுவது, இந்தப் போராட்டத்தை ஒடுக்குவது.
ஆனால் நான் சொல்லிக் கொள்கிறேன் – இந்தப் போராட்டத்தை நீங்கள்
ஒடுக்க முடியாது. இதை அடக்க எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவுக்கு நாங்கள்
இன்னும் வலுவுடன் இன்னும் வீரியமாக ஆர்த்தெழுவோம்.
கடைசியாக ஒரு விஷயம். இது நீண்ட நெடிய போராட்டம். தடைகள்
கண்டு நில்லாமல், தலைகளைக் குனியாமல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுவோம்.
முன்னேறுவோம். இந்த வளாகத்துக்குள்ளும் சரி, தேசத்தை சீர்கெடுக்கும்
சக்திகளை – அது ஏபிவிபி ஆனாலும் சரி, வெளியிலிருக்கும் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக சக்திகள் ஆனாலும் சரி – தேசத்தை சீர்குலைக்க
முனையும் சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். ஜேஎன்யு குரல் கொடுக்கும்,
எழுந்து நிற்கும்.
சரித்திரம் படைக்கும். ஆக்குபை யுஜிசி-யில் துவங்கிய இந்தப் போராட்டம், ரோகித் வெமுலா துவக்கிய
போராட்டம், நீங்கள் துவக்கிய இந்தப் போராட்டம் .... இந்த நாட்டில் அமைதியை விரும்புகிற
மக்கள் துவக்கிய போராட்டத்தை நாம் முன்னெடுப்போம், வெற்றி பெறுவோம். இதுவே எம்
நம்பிக்கை.
இந்தச் சொற்களுடன், ஜேஎன்யுவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி கூறி
விடைபெறுகிறேன். நன்றி.
இன்குலாப் ஜிந்தாபாத்.
தேச ஒற்றுமை ஜிந்தாபாத்
சமூக நீதி ஜிந்தாபாத்
உணரசிப்பூர்வமான எழுச்சி உரை.அருமையான தமிழாக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையா தமிழாக்கம் சார்.சத்யமேவ ஜெயதே..! (Y)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிக அருமையான பணியைச் செய்துள்ளீர்கள் ஷாஜகான். நன்றிகள் !
ReplyDeleteExcellent Work, sir. Thank you. Sharing it in my wall :-)
ReplyDeleteThankyou Shajahan ji.
ReplyDeleteஅருமையான மொழிபெயர்ப்பு ஷாஜஹான் சார். தெளிவான அரசியல் பார்வை,பேச்சு வன்மை மாணவர் கன்னையாவிற்கு.இந்த தேசம், இம்மண் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும். சோஷலிசமே வெல்லும்!!
ReplyDeleteதங்களது பணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.
ReplyDeleteஅருமையான மொழிபெயர்ப்பு. மிக்க நன்றி!. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழில் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி !
ReplyDeleteதமிழில் தந்த தங்களுக்கு மிகவும் நன்றி
ReplyDeleteதங்களது பணி அருமை மிகா நேர்த்தியாக புரியும்படியும் இருந்தது உங்கள் மொழி பெயர்ப்புகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான மொழிபெயர்ப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteExcellent.. Thank you very much
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDeleteஎளிய நடையில் அனைவரும் புரியும் வண்ணம் பேச்சும் எழுத்தும் அமைந்துள்ளன
ReplyDeleteEveryone should get equal chance in all aspects.Good thinking .Let us work for freedom within India.
ReplyDeleteWell done brother Shajahan!
ReplyDeleteWell done brother Shawjahan !
ReplyDeleteஐயா..
ReplyDeleteபிராமணீயம்,முதலாளித்துவம்,சாதியம் இவற்றிலிருந்து விடுதலை என சொன்னதாக படித்தேன்..
உங்கள் மொழிபெயர்ப்பில் அது இல்லாததுபோல் தெரிகிறதே..
மதிவாணன், இந்த உரையில் அது இல்லை. அது கடைசியாக எழுப்பப்பட்ட கோஷம். அதை சரியாகக் கேட்க முடியவில்லை.
ReplyDeleteபாராட்டிய அனைவருக்கும் என் நன்றி.
ReplyDeleteபடிப்பவர்கள் படிக்கவேண்டியர்கள் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான். - பாரதி
ReplyDeleteGood work
ReplyDeleteமிகச்சிறப்பான பணி உங்களால் தமிழ்நாடே அவரது உரையை படித்து பயன்பெற்றது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.தகுந்த நேரத்தில் வெளியிட்டமைக்கு.. இதுதான் தேசப்பணிகளில் ஒன்று..நன்றி..
ReplyDeleteஅரும்பணி அண்ணா. மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்😊
ReplyDeleteThanks for ut translation
ReplyDeleteநன்றி..அருமை..
ReplyDeleteமாரீச மானை பார்த்து மயங்கிய மக்கள்,விரைவில் தெளிவு பெற இந்த உரை,உங்களின் பணி மிகவும் உதவும்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteMiga arumaiyana, muzhumaiyana Mozhi peyarppu! Mikka Nandri!
ReplyDeleteமிகவும் அற்புதகமான தமிழாக்கம்.மிகவும் அவசியமான தமிழாக்கம். வாழ்த்துக்கள் தோழர் ஷாஜஹான்
ReplyDeleteஇந்த உரை சாத்தன் வேதம் ஓதுவது
ReplyDeleteாேல் உள்ளது.
கியூட் கை திருடனே திருடன் திருடன் என்று கூவிய கதை தெரியும்தானே?
ReplyDeleteEvery youth should read this inclusive APVP
ReplyDelete௭ங்களுக்கு தெரிந்த அதே திருடன் கதையை உங்களுக்கும் நினைக கூறுகிறேன். சாதி, மதத்தை வைத்து அரசியல் உங்களுக்கு நகர் நீங்கள் மட்டுமே (காங்கிரஸ், கம்யுனிஸ்ட்)
ReplyDeleteThank u..
ReplyDeleteஅருமையான மொழிபெயர்ப்பு வாழ்த்துக்கள்
ReplyDeleteArumai
ReplyDeleteவாழ்த்துக்கள்... அருமையான மொழிபெயர்ப்பு
ReplyDeleteGood.
ReplyDeleteNyayamana kural.....ellorayum sendradayattum.
ReplyDeleteஎனக்கு புரிந்த வரை, ஒரு சித்தாந்தம். அதை ஒரு மாதிரி புரிந்து கொள்வது. புரிந்து கொள்ளப்பட்டது சரியா தவறா தெரியாது. ஒரு மாதிரி புரிந்து கொண்டு, அதற்கேற்றார் போல பேசவேண்டியது.
ReplyDeleteகேட்பவர்களும் அதே டோனில்/அலைவரிசையில் இருந்தால், அவர்களுக்கும் அதே டோனில் புரியும்.
ஆனால், அடிப்படை புரிதலே தவறு என்று தெரியவரும் போது தான் பேசியதும் தவறு என்றே தெரியும்... :P
முந்தின கமென்ட்டுக்கு தொடர்புடையவை:
ReplyDelete//அட... இந்த கோஷத்தை ஏபிவிபிகாரர்களும்தான் எழுப்புவது உண்டே என்றார்.
இப்போது புரிந்ததா – அவர்கள் போலிப் புரட்சிக்காரர்கள், நாங்கள் உண்மைப் புரட்சிக்காரர்கள் என்று சொன்னேன்.//
//தம்மை விஞ்ஞானிகளாக நினைத்துக் கொள்கிறவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்//
உங்கள் பணி சிறந்த பணி ஷாஜி சார்... உங்களுக்கு நன்றி. அத்துடன் வருங்கால இந்தியாவின் எழுச்சி மிகு தலைவரை இனம் காட்டிய ஆர்.எஸ்.எஸ். = பி.ஜே.பி. கூட்டத்துக்கும் நன்றி
ReplyDelete