• நம்முடைய வரிப்பணத்தில் சலுகை பெற்றுக்கொண்டு 28 வயதாகியும் வேலை செய்யாமல்,
குடும்பத்தையும்
காப்பாற்றாமல் கூத்தடித்துக் கொண்டிருக்கிற கன்னையாவுக்கு தேசத்தைப் பற்றிப் பேச
அருகதை இருக்கிறதா?
இப்படியொரு பதிவு பேஸ்புக்கிலும் சமூல வலைதளங்களிலும்
சுற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல அரைவேக்காடுகள் இதைப் பகிர்ந்து
கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னே இருக்கும் விஷயம் என்ன, விஷமம் என்ன?
• 28 வயதில் கன்னையா பிஎச்டி
மாணவனாகவே இருக்கிறான், அரசு அவனுக்காக செலவு செய்து கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே
சுந்தர் பிச்சை ஐஐடியில் பட்டம் பெற்று இன்று ஆண்டுக்கு 335 கோடி ரூபாய்
சம்பாதிக்கிறார்.
இப்படி ஒப்பீடு செய்த ஒரு படமும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதை அரைவேக்காடுகள் மட்டுமல்ல, அறிவுஜீவிகள் என்று நான் நினைக்கிறவர்களும் சிலர் பகிர்ந்ததைப் பார்க்கும்போது
கவலையாக இருந்தது. நுனிப்புல் பழக்கம் வேரோடி விட்டதோ என்று தோன்றியது. (இதற்கு பதிலடியாக அதே படத்தை மேலே இருப்பது போல வேறுமாதிரி மாற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் ! )
கன்னையாவின் குடும்பத்தினர் மீது திடீரென்று எவ்வளவு அக்கறை
பாருங்களேன்....! கன்னையாவின் குடும்பம் மாதம் வெறும் 3000 ரூபாய் வருவாயில் பிழைப்பு
ஓட்ட வேண்டிய நிலையில் இருக்கிறதே... அதற்கு யார் காரணம்? அதானி அம்பானிகளுக்கு
பல்லாயிரம் கோடி ரூபாய் வரிவிலக்குகளும் சலுகைகளும் தருகிற அரசுகள் இந்த
அடித்தட்டு மக்களுக்குப் போய்ச்சேரும் மானியங்களை வெட்டுவதில் ஏன்
முனைந்திருக்கின்றன என்று பேச வேண்டாமோ? ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா,
அபவுட் டர்ன்
இந்தியா என்று அடித்து விட்டுக் கொண்டிருக்கிற ஆட்சியாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயிகளுக்காக என்ன செய்கிறார்கள் என்று பேச வேண்டாமோ? அப்படிப் பேசிவிடாமல் திசை
திருப்பத்தான் இதுபோன்ற ஒப்பீடுகள்.
சரி அதை விடுங்கள். பட்டப்படிப்பு முடித்து, முதுகலை முடித்து, பிஎச்டி படிக்கும்போது 25-28 வயது ஆகத்தான் செய்யும்
என்பதுகூடத் தெரியாதா என்ன? பி.எச்.டி- படிப்பது எவ்வளவு சிரமம் என்பது பி.எச்.டி. படித்தவர்களுக்கும்,
படிப்பதற்கு முட்டி
மோதி தோற்றவர்களுக்கும்தான் தெரியும். குறிப்பிட்ட கால வரம்புக்குப் பிறகும்
மாணவன் படிப்பை முடிக்கவில்லை என்றால் ஃபெல்லோஷிப் கிடைக்காது, சொந்தக் காசில்தான் படிக்க
வேண்டும்.
“நம்முடைய வரிப்பணத்தில்” படிக்கிறான் என்கிறார்கள்.
எல்லாருமே ஏதோவொரு வகையில் வரிப்பணத்தில் படிக்கிறவர்கள்தான். ஐஐடியில்
படித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓடிப்போகிறவர்கள் மட்டும் யாருடைய பணத்தில்
படிக்கிறார்கள் என்று கேட்கலாம் இல்லையா? அப்படியெல்லாம் கேட்க மாட்டேன். எல்லாருக்கும் கல்வி கிடைக்கட்டும்,
எல்லாருக்கும் சமமான
வாய்ப்பும் கிடைக்கட்டும்.
அப்புறம், “நம்முடைய வரிப்பணம்” என்கிறார்களே... அது என்ன “நம்முடைய வரிப்பணம்”? இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருமே ஏதோவொரு வகையில் வரி செலுத்திக்கொண்டுதான்
இருக்கிறார்கள். அது கடையில் வாங்கும் அரிசிக்குக் கொடுக்கும் பணத்திலிருந்து,
ரயில் டிக்கெட்
கட்டணம் வரை எல்லாரும் அரசுக்கு வரி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேல்தட்டில் இருக்கும் சிலர் அதிகமாக செலுத்தலாம், சிலர் குறைவாக செலுத்தலாம்.
அதிகமாக செலுத்துகிறவர்களின் வரிப்பணம் குறைவாக செலுத்துகிறவர்களுக்குத்தான்
அதிகம் போய்ச் சேருகிறது என்று யாரும் நினைத்து விடாதீர்கள். அரசின் வரிப்பணத்தில்
அதிக சலுகை பெறுகிறவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினர்தான். கன்னையா போன்றவர்களுக்குக்
கிடைக்கிற Non-NET ஃபெல்லோஷிப் என்பதே 2006இலிருந்துதான் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சம் 35 ஆயிரம் மாணவர்கள்
மட்டும்தான். அதுவும் எம்.ஃபில் படிப்புக்கு 5 ஆயிரம், பி.எச்.டிக்கு 8000 ரூபாய்தான். NET பெல்லோஷிப்புக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை. அதுவும்
ஆண்டுக்கு சுமார் 14000 மாணவர்கள்தான். கிராமப்புறங்களிலிருந்து, அடித்தட்டிலிருந்து வருகிற,
எத்தனை பேர் NET
ஃபெல்லோஷிப்
பெற்றுவிட முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும் அல்லவா? அப்படியானால், மேல்கல்விக்கான பல்லாயிரம்
கோடிகள் எல்லாம் யாருக்குப் போய்ச்சேருகின்றன என்பது புரியும்தானே?
கன்னையாக்கள் அரசு தரும் நிதியுதவியில்தான் படிக்கிறார்கள்,
சரி. கன்னையா
போன்றவர்கள் ஐஐடி-ஐஐஎம்களை பெரிய அளவுக்கு எட்டிவிட முடியாது. அதற்கான
நுழைவுத்தேர்வுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஜேஎன்யு-வில் கூட
நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிய விஷயமல்ல. முற்றிலும் தகுதியின்
அடிப்படையில், தேர்வுகளின் மூலம்தான் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அது ஒருபுறம்
இருக்க, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் சம்பாதிப்பவர்கள் சொந்தக்காசில் தனியார்
நிறுவனங்களில் கொட்டிக்கொடுத்துப் படிக்கலாம். கன்னையா போன்ற அடித்தட்டு
வர்க்கத்தினர் எங்கே போவார்கள்? அவர்கள் அரசுக் கல்லூரிகள், ஜேஎன்யு போன்ற நிறுவனங்களில்தானே படிக்க முடியும்.
ஆக, கன்னையாவை விமர்சனம் செய்பவர்கள் சொல்ல விரும்புவது என்ன? அதன் பின்னால் பல
அர்த்தங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.
வறுமையில் இருக்கும் விவசாயியின் மகனுக்கு படிப்பு எதற்கு?
படிப்பை விட்டு விட்டு குடும்பத்தை கவனிக்க வேண்டும் அல்லவா?
விவசாயத்தையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா?
அவன் எதற்குப் படிப்பதில் செலவு செய்ய வேண்டும்?
அவனெல்லாம் காலா காலத்திற்கும் அப்படியே கிடந்து
விவசாயியாகவோ கூலித் தொழிலாளியாகவோ உழன்று கொண்டிருக்க வேண்டாமோ?
மேற்படிப்பு படிப்பதற்கும் மேலே முன்னேறுவதற்குமான உரிமை
மேல்தட்டு வர்க்கமாகிய எங்களுக்கு மட்டும்தானே இருக்கிறது?
கன்னையாக்கள் எப்படிப் படிக்கலாம்?
அப்படியே படிக்க வந்தாலும் ஏதோ 20-25 வயதுக்குள் ஏதோ சிறிய அளவில் படித்துவிட்டு சின்ன வேலை தேடிக்கொண்டு அத்தோடு முடித்துக்கொள்ள வேண்டாமோ?
படிக்க வந்ததால்தானே கேள்வி கேட்கிறான்? (அதுவும் கடவுளாகவே பார்த்து
இந்தியாவை ரட்சிக்க அனுப்பி வைத்த மோடியையே கேள்வி கேட்கிறானே...!)
இவனைப் போன்றவர்கள் இன்னும் படித்து வரும்போது கேள்வி
கேட்பவர்கள் அதிகமாகிக் கொண்டே போக மாட்டார்களா?
அதை அனுமதிக்கலாமா?
இப்போதே கிள்ளியெறிய வேண்டாமா?
கேள்வி கேட்பவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பி.கு. - கன்னையா அப்படி என்னதான் பேசிவிட்டான் என்று
தெரியாதவர்கள் இதைப் படிக்கவும்.
No comments:
Post a Comment