Tuesday 22 March 2016

இந்தியாவில் நிலத்தடி நீர்வளங்கள்

இப்படியொரு தலைப்பில் ஒரு நூல் 2011இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2014 இறுதியில், திருத்திய பதிப்புக்காக நூலாசிரியர் திருத்தங்கள் செய்து அனுப்பினார். 2015 மார்ச் மாதம் திருத்தங்கள் செய்து அனுப்பும்போது, இந்திய அளவில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக தமிழகத்தின் நிலையைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அப்போது தப்பிப் போயிற்று. 2015இல் அனுப்பிய ப்ரூஃப் நேற்றுதான் திரும்ப வந்திருக்கிறது. அதில் கண்ட மேலும் பல திருத்தங்களின் மூலம், ஓராண்டுக்குள் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது எனத் தெரிய வந்தது. எனவே சுருக்கமாக, இந்தப்பதிவு.


இந்திய அளவில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு தென்பகுதியில் குறைந்து கொண்டே போகிறது.
நாட்டின் வடமாநிலங்களோ, தென் மாநிலங்களோ தொழில்துறை வளர்ச்சியடைந்த மாநிலங்களில்தான் நிலைமை மோசமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, வடக்கே குஜராத், தெற்கே தமிழ்நாடு.
• 2009 - 2011 புள்ளிவிவரங்களுக்கு இடையில் பார்த்தால், நிலத்தடி நீர்மட்டத்தில் முன்னேற்றமும் குறைந்திருக்கிறது. 2009இல் தமிழ்நாட்டில் 80 சதவிகிதமாக இருந்தது இப்போது 77 சதவிகிதம். புதுச்சேரியில் 98 விழுக்காடாக இருந்தது, இப்போது 90 விழுக்காடு. மழைநீர் அளவும் குறைந்துவருகிறது.

2011 புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு தாலூகாக்களில் நிலத்தடி நீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அவற்றில், பாதிப்பு அற்றவை, சற்றே பாதிப்படைந்தவை, பாதிப்படைந்தவை, மிகவும் பாதிப்படைந்தவை, உப்புநீர்த்தன்மை பெற்றவை என்ற ஒரு பட்டியல் இருக்கிறது. அதிலிருந்து உதாரணத்துக்காக சில மாநிலங்களின் விவரங்களைக் கீழே தருகிறேன். தொழில்துறையில் முன்னேறியவை, வட மாநிலங்கள், தென் மாநிலங்கள், மழைவாய்ப்பு அதிகம் உள்ளவை, தொழில்துறை வளர்ச்சி இல்லாத வடகிழக்கு மாநிலங்கள் என தேர்ந்தெடுத்த பட்டியல் இது.

மாநிலம்
சோதித்தவை
பாதிப்பு அற்றவை
சற்றே பாதிப்பு
பாதிப்பு
மிகவும் பாதிப்பு
உப்புநீர் ஆனது
ஆந்திரா
1110
877
97
15
83
38
அருணாசல்
11
11
0
0
0
0
பீகார்
533
522
11
0
0
0
குஜராத்
223
171
13
5
24
10
கர்நாடகா
270
152
34
21
63
0
ம.பி.
313
70
21
1
8
0
மகாரா.
353
325
16
2
10
0
மிசோ
22
22
0
0
0
0
ஒடிஷா
314
308
0
0
0
6
ராஜஸ்.
243
25
20
24
172
2
தமிழ்நாடு
1129
437
235
48
374
35
திரிபுரா
39
39
0
0
0
0
உ.பி.
820
68
10
8
111
0

மேற்கண்ட அட்டவணையிலிருந்து, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு உவர்ப்புத்தன்மை அதிகரித்துள்ளது, இதில் மிக மோசமானது தமிழகம்தான் என்பதை அறியலாம்.

மிகவும் பாதிக்கப்பட்டவை என்ற வரிசையில், ராஜஸ்தான் முதலிடம் பெறுகிறது. பாலைவனப்பகுதி என்பதால், பரிசோதிக்கப்பட்ட 243இல் 172 இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இதிலும் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. பரிசோதிக்கப்பட்ட 1129 இடங்களில் 374 இடங்கள் அதாவது, 33 விழுக்காடு அதிகம் பாதிக்கப்பட்டவை.

பரிசோதிக்கப்பட்டவற்றில் பாதிப்பு இல்லாத பாதுகாப்பான நிலத்தடி நீர் என்ற வகையில் தமிழ்நாட்டில் மிக மோசமான நிலை உள்ளது. (தமிழ்நாட்டில் 39 விழுக்காடு, ஆந்திரத்தில் 79 விழுக்காடு, குஜராத் 77 விழுக்காடு, ஹரியாணா 20 விழுக்காடு).

இன்னும் பல விவரங்களையும் சேர்த்து பதிவை நீட்ட விரும்பவில்லை. தமிழகத்துக்கு வரும் நதி நீர்ப் பிரச்சினைகள் எப்போதும் இருக்கின்றன. அத்துடன் மழை அளவும் குறைந்து வருகிறது. எனவே நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாகச் சுரண்டாமலும், இருக்கிற நிலத்தடி நீரைப் பாதுகாப்பதோடு அதை மேம்படுத்தவுமான கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது. மணல்கொள்ளை, காடுகள்-மலைகளை அழித்தல், ஏரிகள்-குளங்களை பராமரித்தல், ஏரிகுளங்களிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் சேகரிப்பு, தொலைநோக்குத் திட்டங்கள் என பல விஷயங்களோடு தொடர்புடைய பிரச்சினை இது.


தமிழகத்தில் தேர்தல் வர இருக்கிறது. நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்போம், மேம்படுத்துவோம் என்று உறுதியளிக்கிற கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்று உறுதியெடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்தவர்களாவோம்.

No comments:

Post a Comment