மக்கள் நலக்கூட்டணியுடன் விஜய்காந்த் தொகுதி உடன்பாடு செய்து கொண்டார். சமூக வலைதளங்கள் கலகலவென்றிருக்கின்றன. (திமுக நண்பர்கள் கலகலத்துப்போயிருக்கிறார்கள்.)
இதன் காரணமாக மக்கள் நலக்கூட்டணி மதிப்பிழந்து விட்டது என்பது பலருடைய கருத்து.
ஓரளவுக்கு சரிதான். அதிலும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்த் என்று பார்க்கும்போது
எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்? எல்லாமே நாம் விரும்பியபடியே
நடக்க வேண்டும் என்றால் ஆகிற காரியமா? கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு நல்லவர் வல்லவர்
என்கிறோம். ஆனால் அவரை கோவையில் தோற்கடிக்கவில்லையா நாம்? ஆர்கே நகர் தொகுதியில்
மகேந்திரனுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன?
சரி, மக்கள் நலக்கூட்டணியை இப்போது கலாய்ப்பவர்கள் எத்தனை பேர் அதற்கு உறுதியாக
வாக்களிப்பதாக இருந்தார்கள்? திமுக-அதிமுகவுக்கு மாற்று என்று உறுதியாக நம்பினார்களா? நிச்சயமாக இல்லை. (இங்கே
கலாய்ப்பவர்களின் தாக்கம் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்கிற நிலை இப்போதைக்கு
இந்தியாவில் இ்லலை.)
இப்போது மக்கள் நலக்கூட்டணியையும் விஜயகாந்தையும்
கலாய்ப்பதில் முன்னிலை வகிப்பவர்கள் திமுகவினர்தான். அவர்களுடைய ஆதங்கம், ஏமாற்றம், விரக்தி, எல்லாம் புரிந்து
கொள்ளக்கூடியதே. விஜய்காந்த் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருக்கிறது, அவர் வருவார் என்று முந்தநாள்கூட கலைஞர் நம்பிக்கையுடன் அறிவித்தார்.
அரசியலில் களம் கண்ட சாணக்கியர் (!) கலைஞரே விஜயகாந்த் வருவார் என்று
நம்பிக்கையுடன் காத்திருந்தது தப்பில்லையாம். விஜயகாந்த் மோசமானவராக இருந்தாலும்
திமுகவுடன் சேர்ந்தால் தப்பில்லையாம், மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால் கூட்டணியே
நாறிவிட்டதாம். ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? விஜயகாந்த் கூட்டணி இல்லை
என்றால் திமுக அணி தோல்வி காணும் என்ற அச்சம்தானே முதன்மைக் காரணம்...? மாற்றான் தோட்டத்து மல்லிகை
நம் பக்கம் வந்தால்தான் மணக்கும்.
தேர்தலும் கூட்டணிகளும் கொள்கைகளால் மட்டுமே முடிவு
செய்யப்படுவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். வாக்குகள்தான் முக்கியம்.
மக்கள் நலக்கூட்டணிக்கும் அதற்கே உரிய தேர்தல் நிர்ப்பந்தங்கள் உண்டு. இன்றைய
தேதியில், கடந்த தேர்தல்களின் வாக்குகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் – முந்தைய தேர்தலைவிட இப்போது வாக்குகள்
குறைந்திருந்தாலும் - கணிசமான வாக்குகள் வைத்திருக்கிற தனிக் கட்சி தேதிமுகதான்.
மக்கள் நலக்கூட்டணியினர் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறார்களோ இல்லையோ,
கணிசமான
இடங்களையாவது பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கும் இருக்கிறது. இல்லையேல்
ஐந்தாண்டுகளில் கட்சிகளின் இருப்பே கேள்விக்கு உள்ளாகும். எனவே கூட்டணியில்
சேர்த்துக்கொண்டார்கள். திமுக எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று
துடிக்க உரிமை இருக்கிறது என்றால், மக்கள் நலக்கூட்டணிக்கும் அதேபோல ஆவல் இருக்கக் கூடாதா என்ன? அல்லது கணிசமான இடங்களைப்
பிடிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கக்கூடாதா என்ன?
இப்போது இவ்வளவு கிண்டல் செய்பவர்கள் என்ன செய்திருக்க
வேண்டும்? தமது கட்சித் தலைமை இறங்கிவந்து விஜய்காந்த்துடன் பேசச் செய்திருக்க வேண்டும்.
அதிக இடங்களைக் கொடுக்க திமுக முன்வரவில்லை, விஜயகாந்த் மக்கள்
நலக்கூட்டணியின் பக்கம் போய் விட்டார். திமுக ஏன் இறங்கி வரவில்லை? தேதிமுக-வுக்கு
தன்னைவிட்டால் வேறு நாதியில்லை என்ற தைரியம். அதே நேரத்தில், அதிக இடம் கொடுத்தால்,
தேர்தலுக்குப் பிறகு
ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வருமோ என்ற அச்சம். மக்கள் நலக்கூட்டணியே உருவாகாமல் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை திமுக தவறவிட்டது. எப்போதும்போல ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியே அழைத்து தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டது. இத்தனை காலமும் பயன்தந்த அந்த சூத்திரம் இந்த முறை பயன் தரவில்லை. தான் மட்டுமே – கலைஞர் குடும்பம் மட்டுமே - முழு அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே இதன் காரணம். கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை?!
எல்லாம் நடந்து முடிந்த கதைகள். இப்போது கூட்டணிகள் இறுதியாகி விட்டன. இனியாவது அதிமுகவின் பி-டீம், பாஜகவின் சி டீம்
என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருப்பதைவிட்டுவிட்டு, திமுக ஏன் வெற்றிபெற
வேண்டும், எப்படி வெற்றி பெறலாம் என்பதில் கவனம் செலுத்தலாம். பன்றிகளின் படங்களைப்
போட்டு போட்டோஷாப் பிரச்சாரம் செய்ததுபோல செய்யத்துவங்கினால் அவர்களுக்குத்தான்
கெட்ட பெயர். நகைச்சுவைகள், மீம்கள், கிண்டல்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன. என்னாலும் சிரிக்க முடிகிறது.
ஆனால் இது மட்டும்தான் தேர்தலா? நாம் கவனிக்க வேண்டியதும் அலச வேண்டியதும் இவைமட்டும்தானா? சிரித்துவிட்டுப் போய்க்
கொண்டே இருக்கலாமா...?
தமிழக வாக்காளர்கள் பார்க்க வேண்டியது கூட்டணியில் யார்
யார் என்பதை மட்டுமல்ல. தேர்தல் வாக்குறுதிகளாக எதை முன்வைக்கிறார்கள்? குறைந்தபட்ச வேலைத்திட்டம்
முன்வைக்கிறார்களா? டாஸ்மாக் சீர்கேட்டை சரி செய்வார்களா? மணல்கொள்ளை, ஏரிகுளங்களின் ஆக்கிரமிப்புகள், காடுகளை வளங்களைக் கொள்ளையடித்தல், நீர்வளத்தை சீர்கெடுத்தல்
ஆகிய பிரச்சினைகளில் யார் என்ன சொல்கிறார்கள்?
இப்படி மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள் யார்
என்பதைத்தான் வாக்காளர்கள் கவனிக்க வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு,
காலம் காலமாக
இலவசங்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக ஆக்கியவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா
அல்லது உங்களிடமே பணம் கேட்டு வாக்குக் கேட்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா ?
(எனக்கு தமிழகத்தில்
வாக்கு இருந்திருந்தால் நிச்சயம் மக்கள் நலக் கூட்டணிக்குத்தான்
வாக்களித்திருப்பேன்.)
ஒருவேளை மக்கள்நலக்கூட்டணி ஆட்சி அமைந்தால் (!!!) அது
கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். இடதுசாரிகள் நிச்சயமாக கடிவாளமாக இருப்பார்கள்
என்று நம்பலாம். அது திமுக-அதிமுக ஆட்சிகளை விட மோசமாகவா இருந்துவிடப்போகிறது?
smile emoticon இந்த இரண்டு கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்து வந்தவர்கள், மூன்றாவது தரப்புக்கு ஒரு
வாய்ப்பு அளித்துத்தான் பார்க்கலாமே...?
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று யாரும்
கணித்துவிட முடியாது. ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்போம் என்று மதிள்மேல் பூனைகளாக
இருப்போர்தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கிறார்கள்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும்
திமுக-அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இப்போது அதிமுகவின்
தலைமையின்கீழ் சர்வாதிகார ஆட்சி என்றால், முந்தைய ஆட்சியில் கலைஞர் குடும்பம் ஆட்டம் போட்டது
அதற்குள் மறந்து போய்விட்டதா என்ன? இன்றைய நிலையில் திமுக பெட்டர் என்று நிச்சயம் நானும் சொல்லுவேன்தான். ஆனால்
திமுக மட்டும்தான் சிறந்தது என்று திமுககாரர்களே சொல்ல முடியாது. (ஓவரா கிண்டினா
பழைய கதையெல்லாம் எடுத்து விட வேண்டியிருக்கும், வேண்டாம்.)
ஒருவேளை திமுக-அதிமுக இரண்டுக்கும் பெரும்பான்மை
கிடைக்காமல் போனால், திமுக கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தால், மக்கள் நலக் கூட்டணிதான்
அவர்களுக்கு நேச்சுரல் கூட்டணியாக இருக்க முடியும். அதையும் மனதில் கொள்ளலாம்
திமுக நண்பர்கள்.
தங்களோடு கூட்டணி சேரவில்லையே....
ReplyDeleteவட போச்சே..
மொமென்ட்
தங்களுடன் கூட்டணி சேரவில்லையே என்ற ஆதங்கம்...
ReplyDeleteவட போச்சே மொமென்ட்....😊
நல்ல கட்டுரை...
ReplyDelete