Tuesday, 3 May 2016

விதர்பா – மராத்வாடா விவசாயிகள் தற்கொலை - ஓர் அலசல்

பேஸ்புக்கில் ஒரு நண்பர் அனுப்பிவைத்த கேள்வி இது :
மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருக்கிறது. தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் விதர்பா பிராந்தியத்தில் உள்ள நாக்பூரில்தான் மையம் கொண்டிருக்கிறது. விதர்பா விவசாயிகள் நலனுக்காக இவர்கள் ஏதேனும் செய்திருக்கிறீர்களா? செய்திருந்தால் என்ன செய்தார்கள்? செய்யவில்லை என்றால், அவர்கள் எப்போதும் வெறும் மதவாத அரசியல் மட்டும்தான் நடத்திக்கொண்டிருப்பார்களா? நேரம் கிடைக்கும்போது பதில் அளிக்கவும்.
*
முதலாவதாக, விதர்பாவை தனித்துப் பார்க்க முடியாது; மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலவரத்தையும் மராத்வாடாவையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். மகாராஷ்டிரா மூன்று பிராந்தியங்களைக் கொண்டது மேற்கு மகாராஷ்டிரா, விதர்பா, மராத்வாடா. விதர்பா மட்டுமல்ல, மராத்வாடாவும் விவசாயிகள் தற்கொலையில் முன்னிலை வகிக்கும் பகுதிதான். மேற்கு மகாராஷ்டிரா வளமான பகுதி. ஒப்பீட்டில் மராத்வாடாவை விட விதர்பா சற்றே வளமான பகுதி.

விதர்பா என்பது இன்றைய மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதி. மாநிலத்தின் 31 சதவிகிதப் பரப்பளவையும், 21.3 சதவிகித மக்கள் தொகையும் கொண்டது. புவியியல்ரீதியாக, இதன் தெற்கே தெலங்கானா, கிழக்கே சத்தீஸ்கர், வடக்கே மத்தியப்பிரதேசம் உள்ளன. மராத்வாடா, மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தெற்கே கர்நாடகமும், தென்கிழக்கே ஆந்திரமும் (தெலங்கானா) உள்ளன.


விடுதலைக்கு முன்பு, மத்திய மாகாணம் மற்றும் பெரார் என்னும் ஆட்சிப் பகுதியில் இருந்தது விதர்பா. 1950இல் இது மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்ற மாநிலத்தின்கீழ் வந்தது. 1956இல் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்றபோது மராத்வாடா, ஹைதராபாத் நிஜாமின் கீழ் இருந்தது. 1948இல் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956இல் மாநில மறுசீரமைப்பின்போது, ஹைதராபாத் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மராத்வாடா பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960இல் பம்பாய் மாநிலம் மகாராஷ்டிரா, குஜராத் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. (மேலும் சில விவரங்களை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

மகாராஷ்டிரத்திலேயே விதர்பா, மராத்வாடா பிராந்தியம் மிகவும் வறட்சியான பகுதிகளாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் பகுதிகள்தான் மிகவும் பின்தங்கிய பகுதிகளும்கூட. எந்த அளவுக்குப் பின்தங்கிய பகுதி என்பதை கீழ்க்கண்ட அட்டவணை தெளிவாகக் காட்டும்.

Region
சிறு தொழில்கள் (%)
பெரிய தொழிற் சாலைகள் (%)
தனிநபர் வருமானம் (Rs)
சிறப்புப் பொரு. மணடலம்
அந்நிய நேரடி முதலீடு (%)
மராத்வாடா
07
11
60,013
10
02
விதர்பா
13
14
65,502
10
08
மேற்கு மகாராஷ்டிரா
80
75
105,488
96
90

விதர்பாவை விடவும் மராத்வாடா வறட்சியான பகுதி. பசுமையான மலைகள் அதிகம் இல்லை. பெரும்பாலும் பாறைகள் கொண்ட பகுதி. ஒரு காலத்தில் எரிமலைக்குழம்புகள் உருகி ஓடிய பகுதி. விதர்பாவின் முக்கியமான பெரிய நதி வெயின் கங்கா (பெஹன் கங்கா என்றும்கூட அழைக்கப்படுகிறது. பென் கங்கா நதிக்கரையோரம் இருந்த ஒரு காகித ஆலையில் நான் ஓராண்டு காலம் பணிபுரிந்திருக்கிறேன்.) மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தியாகி, விதர்பாவின் கிழக்குப் பகுதிகளில் ஓடி, தெலங்கானாவில் கோதாவரி நதியில் கலக்கிறது. மற்றபடி, பென் கங்காவைத் துணை நதியாகக் கொண்ட வார்தா, சிப்னா போன்ற சிறிய நதிகள் உண்டு. அவை தபதி நதியின் துணைநதிகள் ஆகும். இதைத்தவிர பெரிய நதிகள் ஏதும் இல்லை.

கனிம வளங்களும், நிலக்கரியும், காடுகளும் ஓரளவுக்கு உள்ள பகுதி விதர்பா. நாக்பூர், கோண்டியா, அமராவதி போன்ற மாவட்டங்கள் தொழில்துறையில் சிறந்து விளங்குகின்றன. விதர்பாவும் மழையை நம்பியுள்ள பகுதி என்றாலும், சில நதிகளும் அணைகளும் உண்டு. ஆனால் மராத்வாடா விவசாயத்திற்கு மழையைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. (இணைக்கப்பட்டுள்ள படத்தில் புவியமைப்பையும் மலைகள் / பசுமைப் பகுதிகளையும் காணலாம்.)


கடந்த இருபது ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் அதிகம்:
19951083; 1996 - 1981; 1997 - 1917; 19982409; 1999 - 2423; 2000 - 3022; 2001 - 3536; 2002 - 3695; 2003 - 3836;
1995-2003 மொத்தம் 23,902
20044147; 2005 - 3926; 2006 - 4453; 2007 - 4238; 2008 - 3802; 2009 - 2872; 2010 - 3141; 2011 - 3337; 2012 - 3786; 2013 - 3146; 2004-2013
மொத்தம் 36,848
1995-2013 மொத்தம் 60,750

விவசாயிகளின் தற்கொலைகளுக்கான காரணங்கள் என்ன? விவசாயத்தில் நட்டம், கடன்கள், அதிகரித்து வரும் விவசாயச் செலவுகள், விளைச்சலுக்கு உரிய விலை இன்மை, சிறிய விவசாயிகளுக்குக் கடன் கிடைப்பதில் சிரமம், நீர்ப்பாசன வசதி இன்மை, பூச்சிமருந்து அல்லது விஷம் போன்றவை எளிதாகக் கிடைத்தல், அரசியல்ரீதியாக தொலைநோக்கு இன்மை ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை என்ற பிரச்சினை 1990களில்தான் அதுவும் மகாராஷ்டிரத்திலிருந்துதான் - திடீரென கவனத்துக்கு வந்தது. பிறகு ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்தது. சொல்லப்போனால், 1967-97 இடைப்பட்ட 30 ஆண்டுகளில் 19 முறை வறட்சியால் பயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார் மொகந்தி என்னும் பேராசிரியர். அப்போதும் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2001 கணக்கின்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 9.4 சதவிகிதம் இருக்கிற மகாராஷ்டிரா, தற்கொலை எண்ணிக்கையில் 13.5 சதவிகிதம் பங்கு வகித்தது. நாட்டில் மொத்த இறப்புகளில் 1.3 சதவிகிதம் தற்கொலை என்றால், மகாராஷ்டிரத்தில் தற்கொலைகளின் பங்கு 2 சதவிகிதம். அதுவே 2012இல் தேசிய விகிதம் 1.36 என்றால், மகாராஷ்டிரத்தில் 3.3% ஆக உயர்ந்தது. இந்தியாவில் ஒரு லட்சம் விவசாயிகளில் சுமார் 10 பேர் தற்கொலை செய்கிறார்கள். இதுவே சராசரி தற்கொலை விகிதத்தைவிட அதிகம். அப்படியிருக்க, விதர்பா பகுதியில் 2006 கணக்கின்படி ஒரு லட்சம் விவசாயிகளில் 88 பேர் தற்கொலை செய்துள்ளனர். (ஆதாரம் - பெஹரா, பன்சால், சேவாகிராம் மருத்துவமனையில் உளவியல்துறைப் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரை.)

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது மகாராஷ்டிரா 23.5 விழுக்காடு. அடுத்து ஆந்திரம் 18.10%, உத்திரப்பிரதேசம் 16.80%, கர்நாடகம் 14.70%. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 1995 முதல் 2003 வரை மகாராஷ்டிரத்தில் மட்டும் 60,750 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தேசிய குற்றவியல் புள்ளிவிவர வாரியம், 1995 முதலாகத்தான் விவசாயிகள் தற்கொலை என்று தனித் தலைப்பின்கீழ் தொகுக்க ஆரம்பித்தது. எல்லா தற்கொலைகளும் கணக்கில் வருவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். 2012இல் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. மராத்வாடாவில் 6500 கிராமங்கள் உள்பட, 11,000 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுமார் 4000 கிராமங்களில் விளைச்சலில் 50% இழப்பு ஏற்பட்டது. அந்த ஆண்டில்தான் உச்சமாக 3786 விவசாயிகள் தற்கொலை செய்தனர்.
.
2014இல் மராத்வாடாவில் 900 பேர் - விதர்பாவை விட அதிகமாக - தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2015இல் தற்கொலை எண்ணிக்கை 3228 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் விதர்பா பகுதியில் 1541 பேர், மராத்வாடா பகுதியில் 1130 பேர், நாசிக் பகுதியில் 459 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதே ஆண்டில் வளமான மேற்குப்பகுதியில் புனே பகுதியில் 96 பேர் தற்கொலை செய்தனர் என்பதைப் பார்க்கையில், விதர்பா, மராத்வாடா பகுதியில்தான் மாநிலத்திலேயே அதிக தற்கொலைகள் என்பது தெளிவாகும்.

மரபணு மாற்றம் செய்த பி.டி. காட்டன்தான் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்ற வாதமும் உண்டு. சாதாரண பருத்தி விதையின் விலையைவிட பிடி காட்டன் விதை விலை இரண்டு மடங்கு அதிகம்தான். விவசாயிகள் தற்கொலைக்கு பிடி காட்டனும் ஒரு காரணியாக இருக்கலாமே தவிர, அதுவே காரணமாகி விடாது. ஏனென்றால், பிடி காட்டன் அறிமுகமானது 2002இல். விவசாயிகள் தற்கொலை துவங்கியது 1990இல். ஆயினும், தற்கொலை செய்பவர்களில் 95 விழுக்காடு பருத்தி விவசாயிகள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பருத்தி பயிர் செய்ய தண்ணீர் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதால் பலரும் பருத்தியைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. போதுமான மழை இல்லாதபோது பயிர் நஷ்டமாகிறது. பிடி காட்டன் அறிமுகமான காலத்தில் அரை ஹெக்டேருக்கு 300 கிலோ வரை விளைச்சல் கிடைத்தது, இது காலப்போக்கில் குறைந்து இப்போது 100 கிலோதான் கிடைக்கிறது. 2010இல் 100 கிலோ பருத்திக்கு 7000 ரூபாய் வரை வருவாய் கிடைத்தது, ஆனால் இப்போது 3000 ரூபாய்தான் கிடைக்கிறது. தவிர, பிடி காட்டன் பயிர் செய்வதைத் தொடர்ந்து ரசாயனங்களின் பயன்பாட்டால் மண்வளம் சீர்கெட்டுவிட்டது. பிடி பருத்தி அறிமுகத்துக்குப் பிறகுதான் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே, பிடி பருத்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு அதை ஏற்பதும் ஆபத்தானது. நேர்மையான, முறையான ஆய்வுகள் நடத்தி கணக்கெடுக்கப்பட்டால்தான் உண்மை தெரிய வரும்.

கடந்த பத்தாண்டுகளில் மக்களின் கவனம் பணப்பயிர்களின் பக்கம் திரும்பி விட்டது. நிலக்கடலை, சோளம், சோயா பீன், பருப்பு போன்ற பாரம்பரிய உணவு சார் பயிர்களிலிருந்து பணப்பயிருக்கு மாறும் போக்கு அதிகரித்து விட்டது. அதனால் இழப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து விட்டது. பருத்தியில் லாபம் காண முடியாது என்கிறபோது, கரும்பின்பக்கம் கவனம் திரும்புகிறது. கரும்புக்கு நிறைய தண்ணீர் தேவை. இதற்காக கிணறு வெட்ட வேண்டும், அல்லது ஆழப்படுத்த வேண்டும், அல்லது போர்வெல் போட வேண்டும். இதற்கு கடன் வாங்க வேண்டும். பல்லாயிரம் செலவு செய்தும் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் கதை முடிந்து போகும். நீர் குறைந்து போகும்போது விளைச்சல் இல்லாமல் போவது, கிணறு வெட்ட வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போவது, நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாவது, என இதன் தொடர்விளைவுகள் அபாயகரமானவை. அதன் விளைவுகளே தற்கொலைகள்.


விதர்பாவும் மராத்வாடாவும் பெரும்பாலும் ஊரகப்பகுதியாக இருப்பதால் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்கள் எளிதில் கிடைப்பதில்லை. மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களில் 80 விழுக்காடு வளமான மேற்குப் பகுதிகளுக்கே வழங்கப்படுகிறது; விதர்பா பகுதிக்கு வெறும் 8 சதவிகிதம்தான் போய்ச் சேருகிறது. எனவே, விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களை நாட வேண்டியிருக்கிறது. வட்டிவிகிதம் சுமார் 100-150%. வங்கியில் கடன் வாங்குவோரும்கூட அதை கந்துவட்டிக் கடனைத் திருப்பிச் செலுத்தவே வாங்குகிறார்கள். ஆக, இரண்டு பக்கத்திலும் கடனாளி ஆகிறார்கள்.

புதிய வங்கிக் கடன்களை வாங்கும்போது, வாகனங்களுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதால் விவசாயிகள் வாகனத்தின் பெயரால் வாங்குகிறார்கள். விவசாயிகளுக்கு வட்டித் தள்ளுபடியை அரசு வழங்கியபோது, கிராமங்களில் பைக்குகள் வாங்குவது அதிகரித்தது. இந்த வாகனங்கள் கடைசியில் கந்துவட்டிக்காரர்களிடம் போய்ச்சேருகின்றன என்றும் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.

ஏன் விவசாயிகள் கடன் வாங்க வேண்டும்? எனென்றால், விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. சான்றாக, மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கியப் பயிர் பருத்தி. (பம்பாய் இந்தியாவின் மான்செஸ்டர் என்று பள்ளியில் படித்தது நினைவு வருகிறதா?) பருத்தி பயிர் செய்வதற்கு கிலோவுக்கு 22 ரூபாய் முட்டுவழிச் செலவாகிறது. ஆனால் அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை 17-18 ரூபாய்தான். விதர்பா பகுதியில் சராசரி விளைச்சல், ஹெக்டேருக்கு 271 கிலோதான் - நாட்டிலேயே மிகக் குறைவான விளைச்சல் இது என்கிறார்கள். எனவே, கொள்முதல் விலை குறைவாக இருப்பது கடனுக்கு முக்கியக் காரணம். அரசு கொள்முதல் நிறுவனம் கிலோவுக்கு 22-25 ரூபாய் என்று இருந்ததை 17-18 ரூபாயாகக் குறைத்துவிட்டது.

2008இல் அரசாங்கம் வட்டி தள்ளுபடி அறிவித்ததைத் தொடர்ந்து தற்கொலைகள் குறைந்தன. 2009இல் 1600 தற்கொலைகள், 2010இல் 1740 தற்கொலைகள். அடுத்த சில ஆண்டுகளில் மழை ஓரளவுக்கு இருந்ததால் தற்கொலைகள் குறைந்தன. ஆனால் அதற்குப்பிறகு விவசாயிகள் நலனுக்கான சிறப்பு அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. எனவே மீண்டும் தற்கொலைகள் அதிகரித்தன. 2012இல் உச்சமாக 3786 தற்கொலைகள் நிகழ்ந்தன. 2014இல் 1949, 2015இல் மீண்டும் அதிகரித்து 3228 தற்கொலைகள்.

விதர்பாவை விட மராத்வாடா பிராந்தியம் வானம் பார்த்த பூமி. 87 விழுக்காடு நிலம் மழையை நம்பியுள்ளது. கடந்த ஆண்டில் ஜூன்-செப்டம்பர் காலத்தில் வழக்கமான மழையளவில் 25 சதவிகிதம்தான் கிடைத்தது. விவசாயிகள் பிரச்சினைகளுக்கு வறட்சியும் முக்கியக் காரணமாக இருக்கிறது; பருவம் தப்பிய மழையும் காரணமாக இருக்கிறது. 2009 எல்-நினோ விளைவுக்குப் பிறகு வறட்சி-வெள்ளம் என காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொலைநோக்கில் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஏதும் பெரிய அளவில் செய்யப்படாத்து முக்கியக் காரணமாகும். விதர்பா பகுதியிலிருந்து விவசாயிகள் யாரும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் குரல்கள் ஆட்சியாளர்களை எட்டுவதில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் தொழில்துறையில் இருக்கும் நிதின் கட்காரி போன்ற விவசாயிகள் தேர்வு செய்யப்படுவது விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை. பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளுக்கு தற்கொலை ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறுகிற அமைச்சர்களும் அதே மகாராஷ்டிரத்தில் இருப்பதுதான் இன்றைய துரதிர்ஷ்டம்.

நீர்ப்பாசன வசதியின்மை மற்றொரு பிரச்சினை. சான்றாக, ஜெயக்வாடி அணை 18 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு பாசன வசதி தரும் என்பதற்காகக் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் 70 சதவிகித நீர் பாசன வசதிக்கே தரப்பட்டது. 2012வாக்கில் அதில் 21 சதவிகித நீர், விவசாயம் சாராத நோக்கங்களுக்காக - நகரங்களில் குடிநீருக்காகவும், தொழிற்சாலைகளுக்கும் திருப்பிவிடப்பட்டது.

மகாராஷ்டிர அரசியலை நிர்ணயிப்பவர்கள் வளமான மேற்குப்பகுதியில் உள்ளவர்கள்தான். அது காங்கிரஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் கரும்பு ஆலை லாபிகள்தான் மகாராஷ்டிர அரசியலை, ஆட்சிகளை ஆட்டிப்படைக்கின்றன. 2012 வறட்சியின்போது ஜெயக்வாடி அணையின் நீர்மட்டம் அதன் கொள்ளளவில் வெறும் 2 சதவிகிதம் என்கிற அளவுக்குக் குறைந்தது. ஆனால் அதே நேரத்தில் புணே மற்றும் நாசிக் பிராந்தியத்தில் இருக்கும் மேலணைகளில் 80-90 சதவிகிதம் கொள்ளளவு நீர் இருந்தும்கூட ஜெயக்வாடி அணைக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.

மராத்வாடா பகுதி, மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 31 சதவிகிதம் கொண்டது. ஆனால் நீர்வளத்தில் வெறும் 14 சதவிகிதம்தான் அதற்குக் கிடைக்கிறது. மாறாக, மேற்குப் பகுதி 36 சதவிகிதம்தான் விவசாய நிலப்பரப்புக் கொண்டது, ஆனால் 47 சதவிகித நீர்வளத்தைப் பெறுகிறது. 30 சதவிகித விவசாய நிலத்தைக் கொண்ட விதர்பாவுக்கு 28 சதவிகிதம்தான் கிடைக்கிறது.

நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்ட அணைகளின் மூலம் திட்டமிடப்பட்ட விவசாய நிலப் பரப்பளவில் மராத்வாடாவில் 38 சதவிகிதம்தான் விவசாயம் நடக்கிறது. விதர்பாவில் 47 சதவிகிதம், மாநிலத்தின் இதர பகுதிகளில் 76 சதவிகிதம். இதில் அரசியல் சக்திகளின் பங்கு இருக்கிறது. மராத்வாடாவை மகாராஷ்டிரத்துடன் இணைத்தபோது, மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன, ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

மற்றொரு பக்கத்தில், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரண உதவி போய்ச்சேருவதிலும் சிக்கல்கள் உண்டு. 2015இல் தற்கொலை செய்த 3228 பேரில் 1814 பேர்தான் அரசு நிவாரணத்துக்குத் தகுதி உடையவர்கள். 484 பேருக்கு விசாரணைகள் நிலுவையில் இருக்கின்றன. 903 பேருக்கு உதவி பெறும் தகுதியில்லை.

பி.பி. மொகந்தி என்னும் பேராசிரியர் எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரை, விவசாயிகள் தற்கொலைகளை சமூகவியல் நோக்கில் அலசுகிறது. விவசாயிகளை அவர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார் — 20 ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருக்கும் பெரிய நிலச்சுவான்தார்கள், 10-20 ஏக்கர் வைத்திருக்கும் நடுத்தர விவசாயிகள், 10 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறிய விவசாயிகள். பத்து ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறிய விவசாயிகள் குடும்பத்தில் சராசரியாக 2-3 குழந்தைகளும் 3-4 பெரியவர்களுமாக, சராசரியாக 5-6 பேர் கொண்ட குடும்பமாக இருப்பார்கள். அவர்களுடைய விவசாய வருவாய் குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லை. தற்கொலை செய்து கொள்பவர்களில் 64 சதவிகிதம் பேர் சிறிய விவசாயிகள். இவர்களுக்கு முறையான கடன் உதவிகள் கிடைப்பதில்லை. கந்துவட்டிக்கார தனியாரையே நாட வேண்டியிருக்கிறது. விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, அறுவடை நேரத்தில் கடன்காரன் சரியாக வந்து விடுகிறான். வழக்கமான விலையைவிடக் குறைந்த விலையில் அவனுக்கே விற்க வேண்டிய அவல நிலையும் ஏற்படுகிறது.

சாதி வாரியாகவும் தற்கொலைகளை ஆராய்ந்திருக்கிறார் மொகந்தி. அதிக நிலம் வைத்திருக்கிற பிராமணர்கள், மராத்தா, குன்பி, ராஜ்புத் ஆகியோர் மேல்சாதியினர். மஹர், மாதங்க் போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். தற்கொலை செய்து கொள்பவர்களில் 70 சதவிகிதம் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்தான் என்றும் அவர் சுட்டுகிறார். விதர்பா பகுதியில் தற்கொலை செய்யும் விவசாயிகளின் சராசரி வயது 40 என்றால், மராத்வாடா பகுதியில் 23 வயதினரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் மராத்வாடாவின் பீட் மாவட்டத்திலிருந்து நான்கு லட்சம் தம்பதிகள் வளமான மேற்குப் பகுதியில் கரும்புத் தோட்டங்களில் கூலிவேலை செய்யப் போகிறார்கள். குழந்தைகள் அல்லது முதியோர் மட்டுமே கிராமத்தில் இருப்பார்கள்.

விவசாயிகள் தற்கொலைக்கும் பல காரணங்கள் உண்டு. வறட்சி அல்லது வெள்ளம் காரணமாக பயிர் நஷ்டம் 16.81%, தனியாரிடம் கடன் 15.04%, குடும்பப் பிரச்சினைகள் 13.27%, நாள்பட்ட நோய் 9.73%, மகளுக்குத் திருமணம் 5.31%, சொத்துத் தகராறு 2.65%, கடன் சுமை 2.65% போன்றவை முக்கியக் காரணங்கள். ஆனால் எந்தவொரு தற்கொலைக்கும் ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகளின்போது பதிலளித்தவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகளைக் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும், இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவைதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2008இல் மகாராஷ்டிர அரசு தனியார் கடன் வட்டி நெறிப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. வங்கிக் கடன் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கக்கூடாது என்று விதித்தது. ஆனால் நடைமுறையில் இது பயன்தருவதில்லை. செல்வாக்கற்ற சிறிய விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற முடியாதபோது தனியாரை நாடுவது தவிர்க்க முடியாதது. தனியார் வட்டி விகிதம் 100% முதல் 150% வரை இருக்கும்.

2010இல் மாநில அரசு நல்ல சில முயற்சிகளை எடுத்தது. கந்து வட்டிக்காரர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த நிர்ப்பந்திப்பதை சட்ட விரோதம் என அறிவித்தது. (ஆனால் இது நடைமுறையில் சாத்தியமற்றது என்பது வேறு விஷயம்.) சுய உதவிக் குழுக்களை உருவாக்கி கடனுதவி வழங்கும் என்றது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும், அதற்கான பிரிமியம் தொகையில் 50 சதவிகிதத்தை அரசும் 50 சதவிகிதத்தை விவசாயியும் வழங்க வேண்டும் என்றது. திருமணச் செலவும் தற்கொலைகளுக்கான காரணங்களில் ஒன்று என்பதால் சமுதாயத் திருமணத் திட்டத்தின் பெயரால் விவசாயிகளின் பிள்ளைகள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்க முன்வந்தது. துரதிர்ஷ்டம் என்னவென்றால், சலுகைகள் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்பது ஒருபுறம் இருக்க, இவற்றில் பலவும் தற்காலிக நிவாரணங்களாகவே இருந்தன. காலாகாலத்துக்கும் நிதியுதவி செய்து கொண்டிருக்க முடியாது என்பதை அரசுகள் கணக்கில் கொள்வதில்லை.

விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது. (அண்மையில் இக்கோரிக்கையை எழுப்பியவர் பாஜக எம்எல்ஏ என்று நினைவு.) 1853இல் நாக்பூரைத் தலைநகராகக் கொண்டு நாக்பூர் மாகாணம் என்றும், 1861இல் நாக்பூர் தலைநகராகக் கொண்டு மத்திய மாகாணம் என்றும் பிரிட்டிஷார் வகுத்தனர். 1903இல் பெரார் பகுதியும் மத்திய மாகாணத்தில் சேர்க்கப்பட்டது, அதற்கு மத்திய மாகாணம் மற்றும் பெரார் என்று பெயரிடப்பட்டது.

விடுதலைக்குப் பிறகு 1950இல் நாக்பூரைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதி மத்தியப்பிரதேசத்தில் இருந்தது. 1953இல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு, விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றே பரிந்துரை செய்தது. மஹா விதர்பா கோரிக்கை 1905இலேயே எழுந்து விட்டது. கட்டுரையின் முதல் பத்திகளில் குறிப்பிட்டதுபோல, இந்தி பேசும் மத்திய மாகாணம் மற்றும் பெரார் என்ற மாகாணத்திலிருந்து (இப்போது மத்தியப்பிரதேசம்) மராட்டி பேசும் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு, வளர்ச்சித் திட்டங்களில் இப்பகுதி புறக்கணிக்கப்பட்டதே காரணம். கோரிக்கை நியாயமானதுதான் என்று மாநில சீரமைப்புக் குழுவும் கூறியது.
Judged by the evidence submitted to us on behalf of the Madhya Pradesh Government, the distribution of expenditure as between Hindi and Marathi speaking areas, at any rate in recent years, has, by no means, been unfair. However, whatever the merits of such charges and counter-charges may be, it seems to us that the demand for the separation of the Marathi-speaking areas from the Hindi-speaking areas of the State can no longer be ignored. This demand has gathered such momentum that maintenance of the status quo will involve an increasingly severe strain on the political life and the administrative machinery of the State. We recommend, therefore, that a new State should be formed in this area consisting of the following Marathi speaking districts, namely, Buldana, Akola, Amravati, yeotmal, Wardha, Nagpur, Bhandara and Chanda.

ஏன் விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும்? மாநில மறுசீரமைப்புக் குழு கூறியது :
Only minor and medium irrigation works have been undertaken in this area so far. But in view of the proposals to utilise the waters of the Kanhan, Penganga and Wainganga rivers, large scale development may hereafter be possible. The further opening up of the Pench and Kanhan valley coal fields will benefit this State.

மாநில சீரமைப்புக் குழுவின் முடிவுரையில் கூறப்பட்டதாவது
Vidarbha. —A new State to be known as Vidarbha should be created, consisting of the following Marathispeaking districts of Madhya Pradesh, namely, Buldana, Akola, Amravati, yeotmal, Wardha, Nagpur, Bhandara and Chanda.

ஆக, 1956இல் மாநில சீரமைப்புக்குழு கூறிய கருத்துகளுக்கும் இன்றைய நிலைமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விதர்பா பகுதியில் பெரிய அளவுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி தெலங்கானா எவ்வாறு பிரிந்து தனி மாநிலம் ஆனதோ, அதே காரணங்கள் விதர்பாவுக்கும் பொருந்தும். மகாராஷ்டிரத்தின் விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஒரே கட்சி பாஜகதான். ஆனால், அதன் தோழமைக்கட்சியான சிவசேனை விதர்பா கோரிக்கையை எதிர்க்கும் கட்சி. விதர்பா தனி மாநிலம் ஆனால் தாக்குப்பிடிக்க முடியாது என்று விதர்பா பகுதியைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஸ்ரீகாந்த் ஜிக்கர் வாதிடுகிறார்.

மொழிவாரி மாநிலம் என்றான பிறகு, அதிலும் பம்பாய் மகாராஷ்டிரத்துடன் சேர்க்கப்பட்ட பிறகு, விதர்பா தனி மாநிலமாக இருக்க வேண்டுமா என்பது கேள்விக்குரிய விஷயம்தான். தெலுங்கு பேசும் ஆந்திரம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்படும்போது, மராட்டி பேசும் மாநிலமும் ஏன் இரண்டாகப் பிரிக்கப்படக்கூடாது என்ற கேள்வியும் நியாயமானதுதான். விதர்பாவும் மராத்வாடாவும் காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் என்பதை கட்டுரையின் முதல் பகுதியிலேயே பார்த்தோம். மாநிலத்தின் சராசரி தனிநபர் வருமானத்தில் மராத்வாடா பகுதியில் 40 விழுக்காடும், விதர்பா பகுதியில் 27 விழுக்காடும் குறைவாக உள்ளன. மாநிலத்தின் மின்சார உற்பத்தியில் 80 சதவிகிதத்தை வழங்குவது விதர்பா பகுதி. ஆனால் எல்லாம் மேற்குப் பகுதிக்கே போய்விடுகிறது, விதர்பாவும் மராத்வாடாவும் அதிக மின்வெட்டை எதிர்கொள்கின்றன. இனி வரும் காலத்தில் தனி மாநிலக் கோரிக்கைகள் வலுவடையலாம்.

கடைசியாக பாஜக-ஆர்எஸ்எஸ் கேள்விக்கு வருவோம். ஆர்எஸ்எஸ் நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை. அதற்கான அரசியல் முகம்தான் பாஜக. விதர்பாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற 25 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி பாஜகதான். ஆனால் இது பெயரளவுக்கான தீர்மானம் என்றுதான் கூற முடியும். முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸ் விதர்பாவைச் சேர்ந்தவர். மைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நிதின் கட்காரியும் விதர்பாவைச் சேர்ந்தவர். இவர்கள் மாநிலத்தின் வளங்களை தமது பகுதிகளுக்குத் திருப்பி விடுகிறார்கள், மராத்வாடாவுக்கு எதுவும் கிடைப்பதில்லை என்கிறார்கள் மராத்வாடா பகுதியினர். எல்லாம் வளமான மேற்கு பிராந்தியத்துக்குப் போய்விடுகிறது, விதர்பாவுக்கு எதுவும் கிடைப்பதில்லை என்கிறார்கள் விதர்பாவாசிகள். இதுதான் இந்திய அரசியல்.

பாஜக ஏன் தனி மாநிலம் கோருகிறது? ஏனென்றால், விதர்பா பகுதியில் பாஜகதான் வலுவாக இருக்கிறது. தனி மாநிலம் ஆகும்போது இன்னொரு மாநிலமும் அதன் ஆட்சியின்கீழ் வரும். சரத் பவாரின் என்சிபி கட்சி விதர்பா தனி மாநிலம் ஆவது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஏனென்றால், வளமான மேற்குப் பகுதியைத் தவிர இந்தப்பகுதியில் அதற்கு செல்வாக்கே இல்லை, இழப்பதற்கு அதற்கு ஏதுமில்லை. சிவசேனையைப் பொறுத்தவரை, விதர்பாவில் செல்வாக்கு கிடையாது, எனவே தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது என்கிறது. காங்கிரஸ் விதர்பா கோரிக்கையை ஏற்கவுமில்லை, மறுக்கவுமில்லை. ஏனென்றால், அண்மைக்காலம் வரை விதர்பாவில் காங்கிரஸ் வலுவாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தல்தான் காங்கிரசுக்கு சிக்கலானது. விதர்பாவின் 66 தொகுதிகளில் 44இல் பாஜக வெற்றி கண்டது. ஆக, பாஜக இப்போது சிக்கலில் இருக்கிறது. அதனால்தான் விதர்பாவை தனி மாநிலம் ஆக்க மாட்டோம் என்று கூட்டணிக் கட்சியான சிவ சேனைக்கு உறுதியளித்தவர் - விதர்பாவைச் சேர்ந்த ஃபட்னவிஸ் - முதல்வராக ஆகியிருக்கிறார்.

2014 சட்டமன்றத் தேர்தலின்போது, விதர்பாவை தனிமாநிலம் ஆக்குவோம் என்று முழங்கினார் பாஜகவின் நிதின் கட்காரி. சும்மா ஐம்பது பேர் கூடி ஐந்து நிமிடம் கோஷமிட்டு விட்டு கலைந்து போய்விடுவதில் பயனில்லை. தனி மாநிலம் கேட்டு தெலங்கானாவினர் செய்த்து போல இறுதிவரை போராட வேண்டும்என்றார். தேர்தலுக்கு முன்பு பேரணிகளும் கருத்துக் கணிப்புகளும்கூட நடத்தப்பட்டன. 90 சதவிகித மக்கள் தனி விதர்பாவை விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டது. விதர்பாவை தனி மாநிலமாக ஆக்குவோம் என்று கூறுபவர்களுக்கே (பாஜகவுக்கே) வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. மாநிலத்தைத் துண்டாடப் பார்க்கிறது பாஜக என்று குற்றம் சாட்டியது சிவசேனை.


இத்தனையும் அது போன மாசம், இது இந்த மாசம்கதையாகப் போயிற்று. சிவசேனை ஆதரவில்தான் பாஜக இப்போது ஆட்சியில் இருக்கிறது. ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டும் ஆகிவிட்டது. நிதின் கட்காரி அமைச்சராக இருக்கும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளும் ஆகி விட்டன. இப்போது பேச்சையே காணோம். எனவே, விதர்பாவை சமாதானம் செய்ய கூடுதல் சலுகைகளை வழங்குவது அல்லது வழங்குவது போல போக்குக்காட்டுவது மட்டுமே இப்போது அவர்கள் செய்யக்கூடியது. கடந்த டிசம்பரில் விவசாயிகளுக்காக 10,000 கோடி ரூபாய் மதிப்பில் சலுகைகளை ஃபட்நவிஸ் அறிவித்ததும் இதனை முன்னிட்டே. (ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவிக்கவில்லை.)

மகாராஷ்டிர மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த நிதின் ராவுத் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைமையிடமும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியதாகவும், காங்கிரஸ் அதை ஏற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். தனி மாநிலம் என வாக்குறுதி அளித்த பாஜக அதை நிறைவேற்றாத போது, காங்கிரஸ் இதைக் கையில் எடுப்பது அதற்கு அரசியல் லாபத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான். 2015 நவம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விதர்பா, மராத்வாடா பகுதிகளில் பாஜக பின்னடைவும் காங்கிரஸ் முன்னேற்றதையும் கண்டுள்ளன. ஆக, இனி வரும் காலத்தில் தனிமாநிலக் கோரிக்கையை காங்கிரஸ் கையில் எடுக்கலாம்.

இந்தியாவில் விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளைப் பின்வருமாறு பகுக்கிறார் கோலெய்ட் (Golait) : உற்பத்தித்திறன் குறைவு, நீர்ப்பாசன வசதியின்மை, குறைந்துவரும் நீர்மட்டம், அதிக வட்டிக் கடன், நிலையற்ற சந்தை மற்றும் தரகர்கள், மோசமான கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் விலை நிர்ணயம், விவசாயம் குறித்த ஆய்வுகள் இல்லாமை. இவற்றில் கடன் பிரச்சினையை மட்டும் கவனத்தில் கொள்வதால் எந்த முன்னேற்றமும் இருக்காது என்கிறார் அவர்.

ஆக, விதர்பாவும் மராத்வாடாவும் காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. தனிமாநிலம் அமையலாம், அமையாமல் போகலாம். ஆனால் விவசாயிகள் பிரச்சினைக்கு அரசுகள்தான் தீர்வைத் தர முடியும். அதையும் நேர்மையான நோக்கத்துடன் செய்தால்தான் தற்கொலைகளின் தீவிரத்தைத் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்க முடியும்.

1. தற்கொலைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது நேரடியான அல்லது மறைமுகமான கடன் சுமைதான் (75%). எனவே, சிறிய விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் எளிதாக கடனுதவி கிடைக்கச் செய்வது. கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது.
2. நிவாரணங்கள் தற்காலிகத் தீர்வையே அளிக்கும் என்றாலும் அவற்றை நிறுத்தி விடாமல் தொடர்வது.
3. இன்றைய சூழலில் சராசரி நபருக்கு ஆண்டுக்கு 2000 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. 2015இல் இது ஆண்டுக்கு 1000 கன மீட்டராகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது.
4. நேரு காலத்தில் அணைகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது போல இப்போதும் (சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற) தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுவது.
5. விவசாயிகளுக்கு உளவியல் ரீதியாக ஆதரவும், ஊக்கமும், விழிப்புணர்வும் அளிப்பது.
6. பிடி பருத்தி உள்பட தற்கொலைக் காரணிகளை முறையாக, நேர்மையான முறையில் ஆய்வு செய்வது.
7. விவசாயிகளில் 40 சதவிகிதம் பேர் வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தை விட்டு விடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வாறு விவசாயத்தைக் கைவிடுவோர் எல்லாரும் நகரம் நோக்கிப் புலம்பெயரும் கூலியாட்களாகவே ஆவார்கள். எனவே, சுய உதவிக் குழுக்களை ஊக்குவிப்பது, பால் பண்ணை போன்ற சிறுதொழில்களை ஆரம்பிக்க வழி செய்து அவர்கள் புலம்பெயராமல் தடுப்பது.
8. அவசர உதவித் தொண்டர் படைகள், மருத்துவ வசதிகள் உருவாக்குவது; தற்கொலை செய்வதற்கான பூச்சி மருந்துகள் கிடைக்கும் வாய்ப்புகளைக் குறைப்பது.
9. வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒன்று உருவாகி சுமார் 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியொரு அமைப்பு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. இதன் நடைமுறைகள் கொஞ்சம் குழப்படியானவைதான். மாநில அரசு ஒப்புதலுடன்தான் நடத்தப்பட முடியும். அண்மையில் பிரதம மந்திரி பயிர் பாதுகாப்புத் திட்டம் என்று ஒன்றை அறிவித்திருக்கிறார் பிரதமர். இதன் திட்டங்களும் செயல்பாட்டு முறைகளும் உண்மையில் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கும் பெரும் குழப்பமாகவே இருக்கிறது. இது எளிமைப்படுத்தப்பட்டு, மாநில அரசுகளின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
10. பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முக்கியமான தீர்வுகளை 2013இலேயே வழங்கியிருக்கிறது விஜய் கெல்கார் கமிட்டி. கரும்பு உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகம் செய்ய வேண்டும். கரும்புக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 15 மில்லியன் லிட்டர் நீர் தேவை. சொட்டு நீர்ப் பாசனத்தால் இதை 7.5 லட்சம் லிட்டராகக் குறைக்க முடியும். மராத்வாடா பகுதியில் கரும்புக்கு சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகம் செய்தால் அதற்கு 1480 கோடி ரூபாயும், தோட்டப் பயிர் பகுதிகளுக்கு 1067 கோடியும் தேவைப்படும். 

இவற்றைச் செய்ய முடியுமா என்றால், நிச்சயம் முடியும் - அது மக்கள்நல அரசாக இருந்தால்.

துணை நின்றவை
Farmers' Suicide In Vidarbha : Everybody's Concern, P.B. Behere & A. Bansal
Social Roots of Farmers’ Suicide in Maharashtra, B.B. Mohanty
http://www.unipune.ac.in/snc/cssh/egp/6%20Unpublished%20materials%20on%20EGS/14.pdf

Reorganisation of States in India, Saiyid Fazl Ali, Chairman; Hriday Nath Kunzru, Member; and Kavalam Madhava Panikkar, Member. NBT India, ISBN 978-81-237-7195-3; Rs. 285

4 comments:

  1. மிகவும் அருமையான கட்டுரை.

    விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகள், அரசின் பாராமுகம், திட்டங்களின் பலன் நேரிடையாக சேராதது, மரபணு விதைகளின் தாக்குதல் இப்படி பல்முனை தாக்குதல்களில் நம் விவசாயிகள் நிலைகுழைந்து போய் விட்டனர்.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை. விவசாயிகளின் தற்கொலைக்கான அடிப்படை காரணிகள், அரசின் கொள்கை, மரபணு மற்றும் வேதி உரங்கள் என எந்திர மையத்தில் உருகி விவசாயம் செய்வது என்பது இன்று விஷம் போல தெரிகிறது பலருக்கு, அதன் அடிப்படை காரணமே அரசின் பாராமுகம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் அறியாமை போன்ற செயல்கள் தான். கட்டுரை எழுதிய டெல்லி ஷாஜஹான் அண்ணனுக்கு வாழ்த்துகள். மேலும் கேள்வி கேட்டவருக்கும் ஏனெனில் ஒரு கேள்வி கொணர்ந்த விடையல்லவோ.fb ல உங்களுக்கு அனுப்பிய நட்பு அழைப்பு கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை. விவசாயிகளின் தற்கொலைக்கான அடிப்படை காரணிகள், அரசின் கொள்கை, மரபணு மற்றும் வேதி உரங்கள் என எந்திர மையத்தில் உருகி விவசாயம் செய்வது என்பது இன்று விஷம் போல தெரிகிறது பலருக்கு, அதன் அடிப்படை காரணமே அரசின் பாராமுகம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் அறியாமை போன்ற செயல்கள் தான். கட்டுரை எழுதிய டெல்லி ஷாஜஹான் அண்ணனுக்கு வாழ்த்துகள். மேலும் கேள்வி கேட்டவருக்கும் ஏனெனில் ஒரு கேள்வி கொணர்ந்த விடையல்லவோ.

    ReplyDelete
  4. அப்துல்லா,
    மன்னிக்கவும். ஆயிரக்கணக்கில் அழைப்புகள் இருப்பதால் தெரியவில்லை. உங்கள் ஐடியிலிருந்து ஓர் செய்தி இன்பாக்சில் அனுப்பவும்.

    ReplyDelete