Friday, 6 May 2016

தேர்தலும் கருத்துக் கணிப்புகளும்

தேர்தல் கருத்துக் கணிப்புகள் இந்தியாவில் 1960களில் துவங்கின. ஆரம்பத்தில் வெறும் 500 வாக்காளர்களில் துவங்கியது, 1970களில் 10000 ஆனது, இப்போது 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை எட்டியிருக்கிறது. அதாவது, நாடு முழுமைக்குமான நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிலை.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 81 கோடி. கருத்துக்கணிப்புகளில் பதிலளித்தவர்கள் சுமார் ஒரு லட்சம். இப்படிப்பட்ட கணிப்புகள் உண்மை நிலையை சித்திரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒப்பீட்டில், கருத்துக்கணிப்புகளை விட தேர்தல் நாள் கணிப்புகள் முடிவுகளுக்கு சற்றே நெருங்கி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவையும் தோல்வி கண்டது உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 165 முதல் 200 இடங்கள் வரை பிடிக்கும், காங்கிரஸ் கூட்டணி 175 முதல் 235 வரை பிடிக்கும் என்று பல்வேறு கணிப்புகள் கூறின. நடந்தது என்ன? பாஜக கூட்டணி 157, காங்கிரஸ் கூட்டணி 262.

2014 தேர்தல் சற்றே வித்தியாசமானது. மோடியை முன்னிறுத்தியது பாஜக. எனவே கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு வெகுகாலம் முன்பே துவங்கி விட்டன. 2013 ஜனவரியில் துவங்கி, 2014 ஏப்ரல் வரை தொடர்ந்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. 2013 ஜனவரியில் காங்கிரஸ் கூட்டணி 150 இடங்கள் வரை பிடிக்கும் என்றிருந்தது, 2014 ஏப்ரலில் 120 எனக் குறைந்தது. 2013 ஜனவரியில் பாஜக கூட்டணி 180 இடங்களைப் பிடிக்கும் என்ற மதிப்பீடு, 2014 ஏப்ரலில் 250 வரை எட்டியது. எக்சிட் கணிப்புகள், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 முதல் 150 இடங்கள் வரையும், பாஜக கூட்டணிக்கு 270 முதல் 350 இடங்கள் வரையும் அளித்தன. உண்மையில் நடந்தது என்ன? பாஜக கூட்டணி 336 இடங்களைப் பிடித்தது, காங்கிரஸ் கூட்டணி வெறும் 60 இடங்களையே பிடித்தது. இதில் சி-வோட்டர் கணிப்புதான் முடிவுகளுக்கு சற்றே நெருங்கி வந்தது.

தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை விட்டு விட்டு, தமிழக அளவில் அலசிப் பார்ப்போம்.
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் அதிமுக அணி 164 இடங்களும், திமுக அணி 105 இடங்களும் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டது. வாக்களிப்பு நாள் கணிப்பில் எக்சிட் போலில், அதிமுக அணி 100 முதல் 130 இடங்களும், திமுக 100 முதல் 130 இடங்களும் பிடிக்கும் என பல்வேறு கணிப்புகள் கூறின. நடந்த்து என்ன? அதிமுக கூட்டணி 203, திமுக கூட்டணி வெறும் 31. (இங்கும் எக்சிட் போலில் சி-ஓட்டர் கணிப்பு மட்டும்தான் பெருமளவு நெருக்கமாக வந்தது.)

2006 தமிழக தேர்தல் கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய கணிப்பும், தேர்தல் நாள் கணிப்பும் உண்மை முடிவுகளுக்கு நெருக்கமாக இருந்தன. இத்தேர்தலில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் அதிமுக அணியில் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாமகவும் திமுக அணியில் இருந்தன.

தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கொட்டை போட்ட நிறுவனங்களின் கணிப்புகே இந்தக் கதி என்றால், நியூஸ்7, தினமலர், வகையறாக்களின் கணிப்புகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியுமா? அரித்மெடிக் கணிப்பு வாக்குகளின் விகிதத்திலான மதிப்பீட்டை செய்து பார்ப்போம். இது கடந்த தேர்தல் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், வாக்குகளின் அடிப்படையிலான மதிப்பீடு மட்டுமே.

நடக்கவிருக்கும் தேர்தல் முந்தைய தேர்தல்களைவிட வித்தியாசமானது. அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்த் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியாக சேர்ந்து விட்டன. திமுகவில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளும் ம.ந.கூ.வில் இருக்கிறது. திமுக அணியில் இருந்த பாமக இப்போது தனியாக இருக்கிறது, காங்கிரஸ் திமுகவிலேயே இருக்கிறது. காங்கிரசிலிருந்து பிரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் ம.ந.கூ.வில் இருக்கிறது.

ஆக, முந்தைய தேர்தலில் அதிமுக கூட்டணிக்குக் கிடைத்த 51.9% அப்படியே இப்போதும் இருக்காது. திமுகவுக்குக் கிடைத்த 39.5% இப்போதும் இருக்காது.

2006 தேர்தலில் திமுக அணி பெற்றது 44.8%, அதிமுக அணி பெற்றது 40%. தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக பெற்றது 8.4%. திமுகவுக்கு தனியாகக் கிடைத்தது 26.5%, அதிமுகவுக்குத் தனியாகக் கிடைத்த்து 32.6%. ஆக, கூட்டணி காரணமாகவே திமுக ஆட்சியைப் பிடித்தது என்பது தெளிவு. எனவே, கடந்த தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவிகித பலத்தை வைத்து கணிப்பது இந்த முறை சாத்தியமே இல்லை அதிமுகவைத் தவிர்த்து.

கடந்த தேர்தலில் அதிமுக தனியாகப் பெற்றது 38.34%. திமுக தனியாகப் பெற்றது 22.4%. அதிமுக தோல்வி கண்ட 2006இல் கிடைத்த 32.6% அதன் பலம் என்று கொண்டால், அதன் செல்வாக்கு சற்றே சரிந்த்து என்றே வைத்துக்கொண்டாலும், திமுகவில் இருந்த கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய கட்சிகள் இல்லாத நிலையில், அரித்மெடிக் கணக்கில் திமுகவின் நிலைமை கவலைக்குரியதுதான்.

அதேபோல, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த வாக்காளர்களில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை வைத்து கணக்கிடுவது சாத்தியமே இல்லை. தொகுதிக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் வேறுபடும்.

மற்றொரு முக்கிய அம்சம் முடிவு செய்யாத வாக்காளர்கள். இவர்கள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள்.
2006 தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் திமுக-அதிமுக கடும்போட்டி என்ற நிலை இருந்த்து. திமுக அணிக்கு 44%, அதிமுக அணிக்கு 46% என கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் திமுக அணி வென்றது. கிடைத்தது 44.8%. அதிமுக அணி தோற்றது. கிடைத்தது 39.9%. கடைசி நேரத்தில் முடிவு செயதவர்கள் காரணமாக அதிமுகவுக்கு 6% குறைந்தது. அது திமுகவுக்கு சாதகமாகவில்லை, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றது.

2011 தேர்தலின்போது கருத்துக்கணிப்புகள் திமுக அணிக்கு 50%, அதிமுக அணிக்கு 49% – கடும்போட்டி என்று காட்டின. தேர்தல் நாள் எக்சிட் போலில், திமுக 48%, அதிமுக 46% என வந்தது. உண்மையில் அதிமுக அணி பெற்றது 52%, திமுக அணி 40%. கடைசி நேரத்தில் முடிவு செய்தவர்கள் காரணமாக அதிமுகவுக்கு 6% அதிகரித்தது, திமுகவுக்கு 8% குறைந்தது.


தேர்தல் கணிப்புகளை நம்பிக்கொண்டிருக்கிற, அல்லது அவற்றின் அடிப்படையில் விவாதித்துக் கொண்டிருக்கிற, சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிற, சண்டை போட்டுக் கொண்டிருக்கிற நண்பர்கள் மேலே இருக்கும் கேலிச்சித்திரத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

1 comment:

  1. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete