Wednesday, 4 May 2016

நோடா – 49ஓ — வித்தியாசங்கள்

நோடாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் யாருக்கும் வெற்றி கிடைக்காது. மறு தேர்தல் வரும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா? என்று நண்பர் கேட்டிருந்தார்.
“நோடாவுக்கு வாக்களிப்பதற்கும் 49ஓ-விற்கும் வித்தியாசம் என்ன என்பதை எளிமையாக விளக்குவீர்களா?என்று மற்றொரு நண்பர் பேஸ்புக் தனிச்சேதியில் கேட்டிருந்தார்.


முதல் கேள்விக்கு விடையைப் பார்ப்போம்.
எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை, ஆனால் தேர்தலில் பங்கேற்பது என்னும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விரும்புகிறீர்கள் என்றால் நோடாவுக்கு வாக்களிக்கலாம். உங்கள் வாக்கை போலி வாக்களார் யாரும் போட முடியாமல் செய்யலாம். ஆனால் நோடாவுக்குக் கிடைத்த வாக்குகள் செல்லாத வாக்குகள் போல தனிக்கணக்காக வைக்கப்படுமே தவிர தேர்தல் முடிவை பாதிக்காது.

ஒரு தொகுதியில் 100 வாக்குகள் விழுகின்றன. அதில் ஒருவருக்கு 2 வாக்குகளும் இன்னொருவருக்கு 1 வாக்கும் கிடைத்து, நோடாவுக்கு 97 வாக்குகள் விழுந்தன என்று வைத்துக்கொள்வோம். 2 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுவார். (100 சதவிகிதம் நோடாவுக்கே விழுந்தால்...என்று நடைமுறை சாத்தியமற்ற கேள்வி கேட்கும் அதி...............கள் சற்றே ஒதுங்கிக் கொள்ளவும்.) 

*

இரண்டாவது கேள்விக்கான பதில் :
நோடா என்றால் None Of The Above (NOTA) – அதாவது, மேற்கண்ட வாக்காளர்கள் யாருக்கும் என் வாக்கு இல்லை.
49O என்பது, நான் வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பது.

நோடா – 49ஓ ஆகிய இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள்
1. இரகசியத்தன்மை.
2. 49ஓவில் நீங்கள் “வாக்களிக்க விரும்பவில்லை” என்று தெரிவிப்பீர்கள். நோடாவில், வாக்களித்தல் என்னும் கடமையைச் செய்ய விரும்புகிறேன், ஆனால் இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்று தெரிவிக்கிறீர்கள்.
3. நோடாவுக்கு வாக்களிக்கும்போது, நீங்கள் வேட்பாளருக்கு வாக்களித்தீர்களா, நோடாவுக்கு வாக்களித்தீர்களா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் 49ஓ என்பது உண்மையில் வாக்களித்தல் அல்ல. வாக்குச்சாவடியில் பதிவு செய்த பிறகு 17ஏ என்ற படிவத்தில், உங்கள் வாக்காளர் எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து, வாக்களிக்க விரும்பவில்லை என்று கையெழுத்துப் போட்டுக் கொடுப்பீர்கள். இதன் காரணமாக, ரகசியத்தன்மை இல்லாமல் போகிறது.

இன்னொரு முக்கிய விஷயம் - 49ஓ இப்போது இல்லை. இரகசியத்தன்மையை பிரதானமாகக் காரணம் காட்டியே உச்சநீதிமன்றம் இதை தடை செய்துவிட்டது. பீபிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற அமைப்பு தொடுத்த வழக்கில், 49ஓ-வை நீக்கிவிட்டு நோடா என்றொரு பொத்தானை அறிமுகம் செய்ய வேண்டும் என 2013 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பல நாடுகளின் தேர்தல் முறையை பரிசீலித்த உச்சநீதிமன்றம், வாக்குச்சீட்டு தாள் வடிவில் இருந்தாலும் சரி, எலக்டிரானிக் ஈவிஎம் இயந்திரமாக இருந்தாலும் சரி, நோடா என்றொரு பெயரை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை படிப்படியாக, வசதிப்போல செயல்படுத்தலாம் என்று கூறியது. இப்போது இந்தியாவில் எலக்டிரானிக் இயந்திரம்தான் பயன்படுத்தப்படுவதால் NOTA பொத்தான் கடைசியாக இடம் பெறுகிறது.

ஆக, நோடாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் மறுதேர்தல் ஏதும் வந்து விடாது. நோடாவுக்கு அடுத்தபடியாக யார் அதிக வாக்குகள் பெற்றாரோ அவர் வெற்றி பெறுவார். இப்போதைக்கு நோடா வாக்குகள் என்பது செல்லாத வாக்குகள் போலத்தான்.

நோடாவில் உள்ள சாதகங்கள் – 1. எத்தனை சதவிகித மக்கள் வேட்பாளர்களை வெறுக்கிறார்கள் என்பது தெரிய வரும். இதனால் அரசியல் கட்சிகளுக்கு பயம் வரக்கூடும், நேர்மையானவர்களை தேர்தலில் நிறுத்தக்கூடும். 2. ஒருவேளை நீங்கள் வாக்களிக்கச் செல்லவில்லை என்றால் போலிகள் உங்கள் வாக்கைப் பயன்படுத்த முடியாமல் செய்யும்.

இன்றைய நிலையில் நோடா போதுமான தீர்வு அல்ல. நிராகரிப்பதற்கான உரிமை - Right To Reject (RTR) வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. ஒரு தொகுதியில் NOTA அல்லது RTR-க்கு அதிக வாக்குகள் கிடைத்தால், மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்படாத வரையில் இதனால் பயன் ஏதும் இல்லை.

வாட்ஸ்அப்பில் சுற்றும் இதுபோன்ற தவறான தகவல்களை துண்டித்து மேலும் பரவாதிருக்கச் செய்வது எதிர்காலத் தலைமுறைக்கு நல்லது.


No comments:

Post a Comment