Saturday, 23 July 2016

நூல் - நூலகம் - கல்வி

மனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான். ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அனுபவ அறிவைப் பயன்படுத்துவதுதான் அந்த வேறுபாடு. விலங்குகளும்கூட ஓரளவுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்தவே செய்கின்றன. இல்லையேல், கென்யாவின் காட்டெருமைகள் பல்லாயிரம் கிமீ இடம்பெயராது. குறிப்பிட்ட பருவத்தில் போதை தரும் பழங்களைத் தேடி யானைகளும் குரங்குகளும் குறிப்பாக ஒரு மரத்தைத் தேடி வர இயலாது. ஆனால் எந்த உயிரினமும் தனது அனுபவங்களை, அனுபவ அறிவை ஆவணங்களாகப் பதிவு செய்து வைப்பதில்லை. அந்தத் திறமை, அல்லது தேவை மனித இனத்துக்கு மட்டுமே உண்டு.


ஆரம்பத்தில் பாறைச் சித்திரங்களாகப் பதியத் துவங்கிய மனிதன் பின்னர் கல்வெட்டுகளாகப் பதித்தான். பிறகு பனையோலைகளில் வடித்தான். காகிதங்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு நூல்களாக உருவாக்கினான். இன்று மின்னூல்களாக வடிவமைத்திருக்கிறான். குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் பண்டைய பாறை ஓவியங்கள் முதல் நூல்கள் வரை எல்லா வடிவங்களும் இன்றும் சாட்சியங்களாக இருக்கின்றன. பனையோலைகளிலும் துணிகளிலும் காகிதங்களிலும் எழுதத் துவங்கி சில நூற்றாண்டுகளிலேயே அவற்றைத் தொகுத்து வைக்கவும் துவங்கி விட்டான் மனிதன். தமது அறிவும் ஞானமும் அனுபவங்களும் அடுத்த தலைமுறைக்குச் சேர வேண்டும் என்ற சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாகி, நூலகங்களாக உருப்பெற்றன. அன்று அவை நூலகம் என்ற பெயர் பெற்றிருக்கவில்லை என்றாலும் அவையும் நூலகங்களே. பண்டைய நூலகங்கள் குறித்து கட்டுரையின் இறுதியில் சுருக்கமாகப் பார்ப்போம்.

புத்தகங்கள் இல்லாத இல்லம் ஜன்னல்கள் இல்லாத வீட்டைப் போன்றதுஎன்பார் ஹோரஸ் மான். நூலகத்தைக் கொண்ட இல்லத்துக்கு ஆன்மாவும் இருக்கும்என்பார் பிளாட்டோ. நூல்களின், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து எத்தனையோ பொன்மொழிகள் இருந்தாலும் இந்தியர்களுக்கு வீட்டில் நூலகம் அமைக்கும் சிந்தனை இருப்பதில்லை. வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை எல்லாம் இருக்கும், வாசிப்புக்கென அறை இருக்காது. அண்மைக்காலங்களில் படித்த, வசதியுள்ளவர்கள் நூலகத்துக்கும் அறை ஒதுக்குகிறார்கள் என்றாலும் எண்ணிக்கை மிகக் குறைவுதான். காரணங்கள் எதுவாகவும் இருக்கட்டும், வீட்டில் நூலகம் இல்லாதவர்களுக்கு நூல்களை வாசிக்க உசிதமான இடம் பொதுநூலகம்தான்.

முந்தைய திமுக ஆட்சியின்போது கிராமங்கள்தோறும் நூலகம் அமைக்கும் முயற்சி துவங்கியது, பிறகு அடுத்த ஆட்சியில் தொய்ந்து போனது. நகரங்களில் இருக்கும் அரசு நூலகங்களுக்கும்கூட புதிய நூல்களை வாங்குவதில் அரசுகள் முனைப்புக் காட்டுவதில்லை. ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராக இருந்தவர், தனது 35 ஆண்டுகால சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்காகவே செலவு செய்தவர் கல்யாண சுந்தரம். இந்திய அரசால் சிறந்த நூலகர் என்றும், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவர் என ஐ.நா. மன்றத்தாலும் பாராட்டப்பட்ட கல்யாணசுந்தரம் வாழும் அதே தமிழ்நாட்டில், வாக்குகளுக்காக இலவசங்களை அள்ளிக்கொடுக்கின்ற கட்சிகளும் ஆட்சிகளும் வருங்காலத் தலைமுறையின் அறிவுத்தேடலுக்கான நூலகங்களின் பக்கம் குறைவாகவே கவனம் செலுத்துகின்றன என்பது அவலம்தான். ஆயினும், எத்தனை குறைகள் இருந்தாலும், ஒரு நூலகம் வாசிப்பு ஆர்வமுள்ளவனுக்கு அவனுடைய தேடலுக்கேற்ற நூல்களைத் தரக்கூடிய மையமாக இருக்கிறது. தனிநபராக வாங்கிச் சேர்க்க முடியாத நூல்களை நூலகத்தில் பெற்று வாசிக்க முடியும்.


நூலகங்களிலும் பல வகைகள் உள்ளன கல்விக்கூடங்களின் நூலகங்கள், சிறார் நூலகங்கள், தேசிய நூலகங்கள், பொது நூலகங்கள், ஆய்வு நூலகங்கள், சர்க்குலேட்டிங் லைப்ரரி எனப்படும் சுற்றுக்கு விடும் நூலகம், ரெஃபரன்ஸ் லைப்ரரி எனப்படும் நோக்கு நூலகம், சிறப்பு நூலகங்கள். எந்த வகையினதாக இருப்பினும் நோக்கம் ஒன்றே நூலை அல்லது தகவலைத் தேடுவோருக்கு அதை அடையும் வழி செய்கிறது. குறிப்பிட்ட ஒரு நூல் இல்லை என்றாலும், அந்நூல் குறித்த தகவலை நூற்பட்டியல் வழி தருகிறது.

ஒரு நூலகம் எந்தெந்த வழிகளில் தனிநபர்களுக்கு, அவர்களுடைய கல்விக்கு உதவுகிறது?
1.  பலதுறை சார் நூல்களைக் கொண்டவையாக இருப்பதால் எல்லாத் தரப்பினரின் தேவைகளையும் நிறைவு செய்கிறது; எல்லா வயதுப்பிரிவினரின் தேவைகளையும் நிறைவு செய்கிறது. பள்ளி அல்லது வீட்டுக்கு வெளியே அறிவுத்தேடலுக்கு தீனி போடுகிறது.
2.  நூலகத்துக்குச் சென்று வாசிக்கும் குழந்தைகள், பள்ளி அல்லது சுற்றுச்சூழலில் கிடைக்காத புதிய புதிய அனுபவங்களை நூல்களின் வாயிலாகப் பெறுகிறார்கள்; காலப்போக்கில் தீவிர வாசகர்களாக மாறுகிறார்கள்.
3.  பொருளாதார ரீதியாக வசதியற்றவர்களுக்கு நூலகம் மிகப்பெரிய வரம். சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் - பெரும்பாலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் - கிடைக்கிற சேவை இது.
4.  நூலகத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைவருக்கும் சம உரிமையும் மதிப்பும் வழங்கும் இடம் நூலகம். நூல்களை அல்லது சேவைகளை அணுகுவதிலும் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கிறது.
5.  நூலகத்தில் நேரத்தை செலவு செய்யும் வளரிளம் பருவத்தினருக்கு தீய பழக்கங்களின் தாக்கம் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன.
6.  நூலகத்தின் அமைதியும் ஒழுங்குமுறையும் அதன் பயனர்களுக்கும் தொற்றிக் கொள்வது இயல்பு.

ஆக, நூலகம் வாசிப்புக்கு மட்டுமல்ல, நல்ல குடிமகன்களை உருவாக்கவும் உதவுகிறது. சமூகம், அரசியல், வரலாறு, தத்துவம் எனப்பல துறைகளிலும் சாதனை படைத்த மனிதர்கள் தீவிர வாசிப்பாளர்களாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு. இன்று இருப்பதுபோல தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் அவர்களுக்குத் துணையாக இருந்தவை நூலகங்கள்தான். இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இந்தியர்கள் மேற்கல்வி பெறுவதற்கு பிரிட்டனுக்குத்தான் செல்லவேண்டியிருந்த்து. பிரிட்டிஷ் நூலகம், அன்றும் சரி இன்றும் சரி, முக்கியமான நூலகமாகத் திகழ்கிறது. கம்யூனிசத் தத்துவத்தை உலகுக்கு அளித்த காரல் மார்க்ஸ், பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்திலேயே இரவும் பகலும் வசித்தார் என்ற கதைகள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மூலதனம் என்ற அவருடைய படைப்பை நூலகத்தில்தான் பெரும்பாலும் எழுதினார். பிரிட்டிஷ் நூலகத்தில் பெருமளவு நேரத்தை செலவு செய்தவர்கள் பட்டியல் நீளமானது. சான்றாக சில தலைவர்கள், எழுத்தாளர்களைப் பார்ப்போம் மகாத்மா காந்தி, ஆஸ்கார் வைல்ட், சன்-யாட்-சென், ருட்யார்ட் கிப்ளிங், ஜார்ஜ் ஆர்வெல், பெர்னார்ட் ஷா, மார்க் ட்வைன், லெனின், முகமது அலி ஜின்னா, வர்ஜீனியா வுல்ஃப்.... (ஒரு நூலகத்தின் வலைதளத்துக்கான சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது பிரிட்டிஷ் நூலக வலைதளம். ஆர்வம் இருப்பவர்கள் பார்க்கலாம் - http://www.bl.uk/)
(பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் காரல் மார்க்ஸ் உறுப்பினர் அட்டை)

தமிழும் தமிழரும் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. உலகெங்கும் சுமார் 149 நாடுகளில் பரவியிருக்கிறார்கள் என்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். மேம்பட்ட வாழ்க்கையைத் தேடியும், வாழ்வுக்கே வழியில்லாமலும், சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் அகதிகளாகவும் என எந்த வகையினராக இருந்தாலும், புலம்பெயர்ந்த மக்களுக்கு தம் வேரைப்பற்றிய நினைவுகள் தவிர்க்க இயலாதவை. அவர்களது அடுத்த தலைமுறையினர் வேண்டுமானால் குடியேற்ற நாட்டின் பண்பாடுகளோடு ஒன்றிப்போகக்கூடும். ஆனால் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு அப்படியில்லை. அவர்களுக்கு தம் நாட்டுடன், தம் வேர்களுடனான இணைப்பைப் பராமரித்துக்கொள்ள உதவுபவை நூல்கள், இலக்கியங்கள்.

தில்லியில் தமிழர்களின் குழந்தைகள் எவ்வாறு தமிழ் வாசிக்கத் தெரியாமலே வளர்கிறார்களோ அதேபோலத்தான் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளும் தமிழ் தெரியாமலே வளர்கிறார்கள். (தமிழ்நாட்டிலும்கூட நிலைமை அப்படித்தான் மாறிவருகிறது.) வீடுகளில் தமிழ் பேசுபவர்களாய் இருக்கலாம். ஆனால் வாசிக்கவோ, தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்ளவோ, பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லவோ அவர்களால் இயலாது. இன்னும் பத்து-இருபது ஆண்டுகளில் புலம்பெயர் இலக்கியமே இருக்காது என்று ஜெர்மனியிலிருந்து வந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

தமது அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் தமது தாய்மொழியைக் கற்பிக்க விரும்பினால், அதற்கான நூல்களை எளிதில் வாங்கிவிட முடியாது. வேற்றுமொழிச் சூழலில் வளரும் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்பித்தல் எளிதானதல்ல. அவர்களுடைய சூழல் வேற்றுமொழிச் சூழலாக இருக்கும்போது, வாழ்க்கைத் தேவைகளை வேற்றுமொழியிலேயே / அல்லது வேற்று மொழியில்தான் நிறைவேற்ற முடியும் என்னும்போது, தாய்மொழித் தொடர்பு அற்றுப்போகிறது. ஆனாலும் அவர்களது பெற்றோர் தமது பிள்ளைகள் தாய்மொழியுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த இடத்தில் உதவியாக இருப்பவை நூலகங்களும் வலைதளங்களும்தான்.

அதேபோல, தில்லி போன்ற பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் தமது கல்வித்தேவைகளுக்காக தேவையான எல்லா நூல்களையும் வாங்கிவிட முடியாது. விலைக்கு வாங்கும் வசதி இருந்தாலும் நூல்கள் கிடைக்க வேண்டும், அவை பதிப்பாளர்களிடம் இருப்பில் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளில் தீர்வாக அமைபவை நூலகங்கள்தான். உதாரணமாக, அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழில் ஆய்வு செய்யும் மாணவர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் உண்டு. அவர்களுக்காக பல்கலைக்கழக நூலகத்தில் தமிழ் நூல்களும் உண்டு என்றாலும், அங்கே கிடைக்காத நூல்களை தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்திலிருந்து பெறுகிறார்கள். தில்லிப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் தமிழ்ச் சங்க நூலகம் உதவியாக இருக்கிறது. இந்த விஷயம் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்ல, எல்லா மொழிப்பிரிவினருக்கும் பொருந்தக்கூடியது.

“கற்றலுக்கும் புரிதலுக்கும் வேறுபாடு உண்டு” என்றார் அரிஸ்டாட்டில். நூலகங்கள் வாசிப்பு அனுபவத்தை மட்டும் வழங்குவதில்லை. பல நாடுகளை, இனங்களை, மதங்களை, பல மொழிகளை, பன்முகப் பண்பாடுகளைப் பற்றிய புரிதலையும் மேம்படுத்துகின்றன. அதனால்தானோ என்னவோ, பிற்போக்காளர்களுக்கும் மத-இன-மொழி வெறி கொண்டவர்களுக்கும் நூலகங்களே முதல் இலக்காக இருந்திருக்கின்றன.

உலகிலேயே முதல் நூலகம் எதுவாக இருக்கும்? உறுதியாகத் தெரியாது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்கில்) சுமேரில்தான் கிமு 2600இலேயே எழுதப்பட்ட களிமண் படிவத் தொகுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. நூல்களைக் கொண்ட நூலகம் என்பது கிரேக்கத்தில் 5ஆம் நூற்றாண்டில் இருந்தது, எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் உள்ள ராயல் நூலகம் அதற்கடுத்த பழைமையான வரலாறு கொண்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் படையெடுப்புகளின்போதும் போர்களின்போதும் நூலகங்களும் அழிக்கப்படுவது தொடர்கிறது. கி.மு. 206இல் சீனத்தில் சியாங் யு தொடுத்த போர், 1204இல் நான்காம் சிலுவைப்போர், 1814இல் பிரிட்டிஷ் படைகள் அமெரிக்காவின் மீது தொடுத்த தாக்குதல், 1981இல் சிங்களர்கள் அழித்த யாழ் நூலகம், அண்மையில் ஈராக்கில் ஐஎஸ் அழித்த நூலகங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நூலகங்களை அழிப்பது என்பது இன சுத்திகரிப்பின் அங்கமாகவும் இருக்கலாம், அறிவுச் செல்வத்தை அழிப்பதாகவும் இருக்கலாம்.


மற்றொரு பக்கத்தில், அழிக்கவே முடியாதபடி நூலகங்கள் உருவாகி வருகின்றன. தொழில்நுட்பம், கணினி நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கேற்ப நூலகங்களும் மாற்றம் பெற்று வருகின்றன. இன்று நூலகம் என்பது வெறுமனே நூல்களை அடுக்கி வைக்கும் இடம் மட்டுமல்ல. குறுந்தகடுகள், கணினிகள், புரொஜக்டர்கள், வீட்டில் இருந்தபடியே வாசிக்க வகைசெய்யும் இணையவழி இணைப்புகள் என நூலகங்களும் மாறி வருகின்றன. இந்த வசதிகள் எல்லாம் இந்தியாவிலும் நம் அனைவரையும் எட்டும் காலம் அருகில் இல்லை என்றாலும் என்றாவதொருநாள் எட்டத்தான் போகிறது.

இன்று நூலகம் என்பது வெறும் நூல்களை மட்டுமே கொண்டதாக இல்லை என்பதை முன்னரே பார்த்தோம். கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உள்ள நூலகங்கள், முக்கியமான இதர நூலகங்களில் இணைய வசதி இருக்கிறது. ஆனால், நூலகங்களுக்கு வரும் மாணவர்கள் இந்த இணைய வசதியை முறையாகப் பயன்படுத்துகிறார்களா? 2011ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இரண்டு பல்கலைக்கழங்களில் லாரன்ஸ் மற்றும் ஆமி நடத்திய ஓர் ஆய்வில், நூலகத்துக்கு வரும் மாணவர்களில் 18 சதவிகிதம் பேர்தான் இணையத்தை படிக்கும் நோக்கத்துக்காகப் பயன்படுத்துகின்றனர்; பெரும்பாலோர் பேஸ்புக் பார்த்தல், ஆன்லைன் ஷாப்பிங் செய்தல் போன்ற விஷயங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
  அச்சிட்ட கல்விசார் நூல்களைப் புரட்டிப் படிப்பதுதான் முதன்மையாக இருக்கிறது.
  பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் 11.4% நேரம்.
  கல்வியுடன் தொடர்பற்ற மற்றும் இணைய விளையாட்டு வலைதளங்களைப் பயன்படுத்துவதில் 9.3% நேரம்.
  கல்விசார் வலைதளங்களைப் பயன்படுத்துவதில் 4.9% நேரம்.
  இணையவழி நூல்களைப் பயன்படுத்துவதில் 5.9%.
  தூங்குவதில் 0.7%, செய்தி வலைதளங்களைப் பார்வையிடுவதில் 2.6%, யூடியூப் வீடியோக்களைப் பார்வையிடுவதில் 2.1% நேரம்.

இது கவலைதரும் விஷயம்தான். அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பார்க்க இயலாதபடியும், யூடியூப், டொரன்ட் போன்ற தளங்களை அணுக இயலாதபடியும் அமைத்திருப்பார்கள். சில நேரங்களில் மாணவர்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களிலும் கிடைக்கக்கூடும் என்பதால், நூலகங்கள் இப்படித் தடை செய்வதில் சிக்கல் இருக்கிறது.

பல்கலைக்கழகம் என்பது நூலகத்தைச் சுற்றிலும் அமைந்த கட்டிடங்கள்தான்என்றார் ஷெல்பி ஃபூட். நூலகங்களின் இருப்புதான் மனிதனின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கான சிறந்த சாட்சியம்என்றார் எலியட். நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய ஒரே விஷயம் நூலகம் எங்கே இருக்கிறது என்பதைத்தான்என்றார் ஐன்ஸ்டீன். இப்படி எத்தனையோ அறிஞர்களின் பொன்மொழிகளை எடுத்துக்காட்டலாம். இத்தனை அறிஞர்களும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் நூலகத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

பெரும்பாலான பல்கலைக்கழக நூலகங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால் கல்லூரிகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழு, ஒரு மாணவனுக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கல்லூரி நூலகங்களுக்கு உதவி தருகிறது. புதிதாக பாடம் அறிமுகமாகும்போது அந்தப் பாடத்துக்கேற்ப சிறப்பு நிதியுதவியும் செய்கிறது. ஆனால் மாநில அரசுகள் கல்லூரி நூலகங்களுக்கு நிதி அளிப்பதில்லை. கல்லூரி நூலகங்களிலும் வாங்கப்படும் நூல்களில் 60 விழுக்காடுதான் பாடம் தொடர்பான நூல்களாகவும் 20 விழுக்காடு நாவல்கள் என்றும் தெரிய வருகிறது. பல கல்லூரிகளில் நூலகங்களே இல்லாத நிலையும் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. யுஜிசி முயற்சியால் கல்வி நூலகங்களை இணைத்திட INFLIBNET வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அச்சிட்ட நூல்களின் நூலகம் என்பதிலிருந்து வர்ச்சுவல் நூலகம் என்ற நிலை உருவாகி வருகிறது. (ஆதாரம் : நூலகம் - அறிவுலக நுழைவாயில், முத்துச்செழியன், என்சிபிஎச் வெளியீடு.) இன்றைய உலகமயச் சூழலில், உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டியது மாணவர்களுக்குத் தேவையாகிறது. எல்லாத் துறைகளிலும் போட்டிகள் வலுவடைந்து கொண்டிருக்கும் சூழலில் தன்னை அப்டேட்ஆக வைத்துக்கொள்பவர்தான் வெற்றி காண முடியும். இந்த வகையிலும் நூலகங்கள்தான் மாணவர்களுக்கு உதவுகின்றன.

கணிதமேதை ராமானுஜனைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய கணித சூத்திரக் குறிப்புகள் பல இன்றும்கூட முழுமையாக விளக்கப்படாமல் இருக்கின்றன. சென்னையில் அவர் வசித்தபோதுதான் கணித சூத்திரங்கள் பலவற்றையும் எழுதினார். ஆனால் அந்த சூத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் இந்தியாவில் இருக்கவில்லை. சென்னையில் பொறியாளர் கல்லூரியில் கிரிஃபித், கல்வி இயக்குநர் ஏ.ஜி. போர்ன், அக்கவுன்டன்ட் ஜெனரல் கிரஹாம், லண்டனில் இருக்கும் ஹில் என பலரும் ராமானுஜனின் கணித சூத்திரங்களைப் பார்க்கின்றனர். இவரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிகிறது. ஆனால் முழுமையாக நம்ப முடியாமலும் இருக்கிறது. நண்பர்கள் அறிவுரைப்படி, லண்டன் கணிதவியல் கழகத்தின் தலைவர் பேக்கர், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹாப்சன் ஆகியோருக்கு அனுப்புகிறார். அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. 1913 ஜனவரி 16ஆம் நாள், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஜி.எச். ஹார்டிக்கு எழுதுகிறார். முதலில் ராமானுஜனின் மேதைமை குறித்து ஐயப்படும் ஹார்டி தன் சகா லிட்டில்வுட் அறைக்குச் சென்று ராமானுஜனின் கணித சூத்திரங்கள் குறித்து ஆராய்கிறார். ராமானுஜன், தனது கட்டுரைகளை ஆய்வுக்கட்டுரைக்கு ஏற்ற வடிவத்தில் எழுத அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று புரிகிறது. காரணம், கணிதத்தில் முன்னேறியிருந்த வெளிநாட்டினரின் வழிகாட்டலின்றி சுயமாக உருவானவர் ராமானுஜன். நூலகங்களில் ஆய்விதழ்களைப் படித்தறிந்து தன்னை செம்மைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அப்போது அவருக்கு இருக்கவில்லை. பேராசிரியர் ஹார்டிக்கு எழுதிய கடிதம்தான் ராமானுஜனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. ராமானுஜன் என்னும் வைரத்தை வைரம்தான் என்று கண்டுபிடிக்க ஒரு ஹார்டி தேவைப்பட்டார். எல்லாருக்கும் ஒரு ஹார்டி கிடைத்து விடுவதில்லை.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நூலகங்களும் மாறிவருகின்றன என்றாலும் இன்னும் செய்யக்கூடியவை உண்டு. நூலகம் என்றாலே அமைதியான சூழல் என்பதே எல்லாருக்கும் முதலில் நினைவு வரும். அமைதி நிலவுவது மட்டும் நூலகம் சிறப்புப் பெறுவதில்லை. வாசிப்பதற்கேற்ற வசதிகள், ஒளியமைப்பு, இருப்பிட வசதிகள், நூல்களை அணுகுவதற்கான வசதிகள் ஆகியவையும் முறையாக இருத்தல் வேண்டும். நூல்களை துறைவாரியாக, பொருள்வாரியாக அடுக்குகளில் வைப்பதற்கு ‘ஷெல்விங்’ என்று பெயர். பயனர்கள் நூல்களை எடுத்துச் சென்று திருப்பித்தந்த பிறகு முறையாக மீண்டும் அதற்குரிய இடத்தில் சேர்ப்பிப்பது அவசியம். தேடப்படும் நூல் நூலகத்தில் உள்ளதா என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கேட்லாக்கிங் அவசியம். (கணினிமயப் பரவலைத் தொடர்ந்து கேட்லாக்கிங் வழக்கொழிந்து வருகிறது, இன்னும் சில காலத்தில் முற்றிலும் இல்லாது போகலாம்.) இதற்கு கணினிகள் பெரிதும் உதவுகின்றன என்றாலும் இதற்கான மென்பொருள்கள் பரவலாகவில்லை என்பதாலும், மென்பொருள் விலை அதிகம் என்பதாலும் பயன்பாடு குறைவாகவே இருக்கிறது. இலவச மென்பொருள்கள் கையாள வசதியாக (user-friendly) இருப்பதில்லை. லிப்சிஸ் (LIBSYS) என்ற மென்பொருள் பிரபலமாக உள்ளது, ஆனால் விலை அதிகம். KOHA என்ற பென்பொருளும் பரவலாகப் பயன்படுகிறது. ஈகிரந்தாலயா என்ற மென்பொருள் 5000 ரூபாயில் கிடைப்பதாகவும், அரசுக் கல்லூரிகளுக்கு இலவசமாகவே கிடைப்பதாகவும் தெரிகிறது. ஆனால் பலரும் பயன்படுத்துவதில்லை.

இந்த இடத்தில் நூலக வகைப்படுத்தலில் சாதனை புரிந்த ஒருவர் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். நூல்களை துறைவாரியாக வகைப்படுத்துவதற்கு பல்வேறு கிளாசிஃபிகேஷன் முறைகள் உள்ளன. இந்தியாவுக்கு ஏற்ற, இந்தியாவிலேயே உருவான முறை கோலன் கிளாசிபிகேஷன் எனப்படும். இதை உருவாக்கியவர், நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரங்கநாதன் என்பவர். இயற்பெயர் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் சுருக்கமாக எஸ்.ஆர். ரங்கநாதன். 1892 ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தவர். சென்னை கிறித்துவக் கல்லூரியில் கணிதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றபிறகு பல பல்கலைக் கழகங்களிலும் கணிதம் கற்பித்தார். ஆசிரியராகப் பணியாற்றுவதே அவருடைய லட்சியமாக இருந்தது. 1923இல் சென்னை பல்கலைக்கழகம் தனது நூலகத்தை சீரமைக்க நூலகரைத் தேடியது. அப்போது வந்த 900 விண்ணப்பங்களில் நூலகர் தகுதியுள்ளவர் ஒருவர்கூட இருக்கவில்லை. இருந்த விண்ணப்பங்களில் ரங்கநாதன் ஒருவர்தான் பொருத்தமானவராகத் தெரிந்தார், நூலகராக நியமிக்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்தில் அந்தப் பணியில் சலித்துப்போன ரங்கநாதன், தனக்கு ஆசிரியப் பணியையே திருப்பித்தருமாறு கோரினார். ஆனால் பல்கலை நிர்வாகம் அவருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது. லண்டனுக்குச் சென்று நூலகவியல் கற்க அனுமதித்த்து.

லண்டன் பல்கலைக் கல்லூரியில் நூலகவியல் படித்த ரங்கநாதன், அப்போது வழக்கத்தில் இருந்த வகைப்படுத்தும் முறையில் ஒரே நூலை இரண்டு துறைகளின்கீழும் வகைப்படுத்த முடியும் என்ற குறையைக் கண்டார். அதை சரி செய்ய கோலன் கிளாசிபிகேஷன் (colon classification) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். உதாரணமாக, சிமென்ட் குறித்த நூல் என்றால், அது பொறியியல் துறையில், கட்டுமானப் பிரிவில், கட்டுமானப் பொருட்கள் வகையில் வரும். ஆக, அந்தந்தத் துறைக்கான குறியீட்டின் இடையே கோலன் ( : / ; ) குறியைப் பயன்படுத்துவதுதான் இவருடைய குறியீட்டு முறை. ரங்கநாதன் லண்டனிலிருந்து திரும்பி வரும்போது, அவர் பயணம் செய்த கப்பலின் நூலகத்தையும் இதே முறையில் சீரமைத்தார் என்பது சிறப்புச் செய்தி!


லண்டலிருந்து திரும்பிய பிறகு சென்னைப் பல்கலையில் நூலகராகப் பொறுப்பேற்றார். நாளுக்கு 13 மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்களும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிய வேலை-வெறியர் அவர். இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றியவர், சென்னை நூலகச் சங்கத்தை அமைத்தார். நாடெங்கும் இலவச நூலகங்களை அமைக்க வேண்டும், தேசிய நூலகம் உருவாக்க வேண்டும் என்று போராடினார். சென்னையில் இருந்தபோதுதான் நூலகவியலின் ஐந்து விதிகள் உருவாக்கினார். (five laws of library science) அந்த விதிகள் பின்வருமாறு:
1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை.
2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல்
3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்
4. வாசகருடைய நேரத்தைச் சேமிக்கவேண்டும்
5. நூலகம் ஒரு வளரும் உயிரினம் போன்றது

பிற்காலத்தில் பனாரஸ் பல்கலையிலும் தில்லிப் பல்கலையிலும் நூலகராகவும் பணியாற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன் நினைவாக அவருடைய பிறந்த நாள் ஆகஸ்ட் 12ஆம் நாள் தேசிய நூலக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான நூலகங்கள் இவர் உருவாக்கிய கோலன் வகைப்படுத்தலைப் பயன்படுத்துகின்றன என்றாலும், எல்லா நூலகங்களும் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு குறைதான்.

இந்தியாவில் நூலகங்களில் நூல்களுக்குத் தருகிற முக்கியத்துவம் ஆய்விதழ்களுக்குத் தரப்படுவதில்லை. மாணவர்களைப் பொறுத்தவரை, அண்மைக்கால முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் பற்றிய தகவல்கள் முக்கியமானவை. அவை இதழ்களின் மூலம்தான் கிடைக்க முடியும். தரமான இதழ்கள், ஆய்விதழ்களின் விலை அதிகமாக இருப்பதும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சிக்கலாக இருக்கிறது. நூலகத்தை மாணவர்களுக்குப் பெருமளவுக்குப் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்று துறைசார் பேராசிரியர்கள், நூலகர்கள், நிர்வாகம் மூன்றும் இணைந்து சிந்தித்தல் அவசியம்.

மற்றொரு பக்கத்தில், பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நூல்கள் தரப்படுவதில்லை, பேருக்காக நூலகம் இருக்கும், ஆனால் பூட்டி வைத்திருப்பார்கள். முறையாகத் திரும்பி வருவதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும், கல்வி வியாபாரமாக ஆகிவிட்டதும் ஒரு காரணம். வெறும் லாபநோக்கில் மட்டுமே அமைந்த கல்வி நிறுவனங்கள் முழுமையான சேவை அளிக்க இயலாது. இந்தப் பிரச்சினையில் மாணவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையை இறுதி செய்யும் நேரத்தில் ஏப்ரல் 23 நினைவு வருகிறது. 1971 அக்டோபர் 22 அன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸில் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்களும் புத்தகத் துறையுடன் தொடர்புடையவர்களும் அதில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டின் பயனாகவே 1972ஆம் ஆண்டு புத்தக ஆண்டாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புத்தகங்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்த, உலக புத்தக தினத்தை அனுஷ்டிக்க ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ முடிவு செய்தது. (23 ஏப்ரல் ஷேக்ஸ்பியர் மறைந்த நாள் என்பது மட்டுமல்ல, பல எழுத்தாளர்களின் நினைவு நாளும்கூட.) 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி முதல்முறையாக உலக புத்தக தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் உலக புத்தக தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் சிறப்புக் கண்காட்சிகள் நடத்துவார்கள். புத்தகம், வாசிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை நூலகங்கள் நடத்தும். உங்கள் பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கக்கூடும். அதில் பங்கு பெறுங்கள், பங்களியுங்கள், பலருக்கும் சொல்லுங்கள், பரிசளிக்கும்போது புத்தகங்களைப் பரிசாகக் கொடுங்கள், வாசிக்கும் தலைமுறையை உருவாக்குங்கள்.

தில்லியில் 2013 உலகப் புத்தகத் திருவிழாவின்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக சாகித்ய அகாதமி அனைத்திந்திய எழுத்தாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்திலிருந்து கவிஞர் சக்தி ஜோதி தமிழில் கவிதை வாசித்தார் என்பதால் அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். வாய்மொழி இலக்கியங்கள் குறித்த அமர்வில், தலைமையுரை ஆற்றினார் விஸ்வநாத் பிரசாத் திவாரி. அப்போது அவர் சொன்னார் : புத்தகங்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால், இன்றைய தொழில்நுட்ப சாதனங்களின் ஆதிக்கம். வீடுகளில் புத்தகங்கள் தமக்கான இடத்தைத் தேடுகின்றன. ஆனால் பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்குக் கிடைக்கும் இடம் ஆகக் கடைசியான இடம்தான்.தன் கவிதைத் தொகுப்பிலிருந்து பழைய கவிதை ஒன்றை வாசித்தார். அதை சுருக்கமாக தமிழில் தருகிறேன் :
     ஒரு நூல் இருளில் வைக்கப்பட்டிருக்கலாம்
     அணுகமுடியாத இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்
     பலப்பல ஆண்டுகளுக்கும் அப்படியே கிடந்திருக்கலாம்
     ஆனால் ஒருநாள் யாரேனும் ஒருவன் வருவான்
     அறிவையும் ஞானத்தையும் தேடி
     அப்போது அவன் புத்தகத்தைக் கண்டடைவான்
     புத்தகம் தனக்கான வாசகனைக் கண்டறியும்.
*
(புதுவை அஞ்சுமன் நூலகத்தின் 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "நூற்கண்டு" மலருக்காக எழுதிய கட்டுரை.)

3 comments:

  1. சிறப்பானதொரு கட்டுரை...
    வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. நீண்ட கட்டுரை. ஒவ்வொரு இல்லத்திற்கும் பூசை அறை போல கண்டிப்பாக ஒரு நூலக அறை தேவை. ஏன் பூசை அறை என்று சொன்னேன் என்றால் பல அடுக்கங்களில் சிறிய அலமாரிதான் பூசை அறை.எனவே குறைந்தது அந்த அளவிலாவது வேண்டும். நிறையப் பேர் படிப்பது பள்ளி யோடு முடிந்ததாகவே கருதுவது ஒரு காரணம். பள்ளிகளில் புத்தக வாசிப்புக்கு மாணவர்களின் பங்கு இல்லை. ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு பாடம் தாண்டிய வாசிக்கும் அனுபவத்தை ஊட்ட வேண்டியது அவர்கள் கடமை. புத்தகங்களை துணையாகக் கொண்டவனுக்கு எந்நாளும் தனிமை இல்லை. நல்ல நூலகத்திற்குள் சென்று ஆற அமர படித்த முகத்தை கட்டுரை தந்தது. நன்றி ஷாஜகான் சார்.

    ReplyDelete