Saturday, 25 June 2016

சினிமாவும் கினிமாவும்

படச்சுருள் இதழ் கைக்கு வந்தது. திறந்ததும் உள்ளடக்கத்தைப் பார்த்தேன். முக்தா சீனிவாசன் எழுதிய தமிழ் சினிமாவின் பெண் தயாரிப்பாளர்கள்என்ற கட்டுரை முதலில் கவனத்தை ஈர்த்தது. தமிழில் முதல் பேசும் படமான காளிதாசில் நடித்த டி.பி. ராஜலட்சுமி என்ற பெயரைப் பார்த்ததும் மனதுக்குள் மணியடித்தது.தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, மணமான பின் வரதட்சணைக் கொடுமையால் பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்தவர். பிழைப்புக்கு என்ன செய்வது என்று கலங்கி இருந்த நேரத்தில், அவருடைய சங்கீத ஞானம் கைகொடுத்தது. சி.எஸ் சாமண்ணா அய்யர் என்பவரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் திரைப்பட நடிகையாகி, தமிழின் முதல் பெண் படத் தயாரிப்பாளர் ஆனார். 1936இல் வெளிவந்த மிஸ் கமலா திரைப்படத்தின் கதை வசனம் இயக்கம் தயாரிப்பு எல்லாமே இவர்தான். மேற்கண்ட கட்டுரையில் வந்த இந்த விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ். இதைத் தயாரித்தவர் தமிழர் அல்லர், பம்பாய்க்காரர் - அர்தேஷிர் இரானி. இந்தியாவிலேயே முதல் பேசும்படம் ஆலம் ஆரா 1931இல் வெளிவந்தது. அதைத் தயாரித்தது, இரானியின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனி. ஆலம் ஆரா தயாரிக்கப்பட்ட அதே அரங்கில்தான் காளிதாசும் தயாரிக்கப்பட்டது. இதில் நாயகி டி.பி. ராஜலட்சுமி. (இதற்குப் பிறகு சிவாஜி நடித்த மகாகவி காளிதாஸ் உள்பட பல காளிதாஸ்கள் வந்து விட்டன. அவற்றை இந்தக் கட்டுரையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.)

காளிதாஸ், மகாகவி காளிதாசன் பற்றிய கதை. காளிதாசன் கதை தெரியும் அல்லவா? நுனிக்கிளையில் உட்கார்ந்து மரத்தை வெட்டும் அளவுக்கு முட்டாளாக இருந்தவன் காளியின் அனுக்கிரஹத்தால் கவிஞன் ஆகிறான். இந்தக் கதையில் நாயகி என்ன பாடல் பாடுகிறாள்?
இந்தியர்கள் நம்மவர்க்குள்
ஏனோ வீண் சண்டை?
இந்தியரே! நம்மவரை
வந்தவர்கள் ஆட்சி செய்ய
தந்திர உபாயம் நமது
சுயச் சண்டையே!
ஒருதாய் வயிற்றில் வந்த
உத்தம சகோதரர் நாம்
பெருகு மதஜாதி
பேதம் பேசலாகுமோ?
இந்து முசல்மான் ஒற்றுமை
நிறைந்த அல்லாகு அக்பர்
வந்தேமாதம் புகன்று
வாழந்திடுவோம்!

பாடலைப் பாடி நடித்தவர் டி.பி. ராஜலட்சுமி. இதில் இன்னொரு பாட்டுக்கு குறத்தி நடினம் ஆடியவர் மிஸ் ஜான்சி பாய். குறத்தி நடனப் பாட்டு
ராட்டினமாம் காந்தி கைபாணமாம்
பாரில் நம்மைக் காக்கும் பிரபாணம் சுதேசியே!

எந்தக் கதையாக இருந்தாலும், எந்தப் படமாக இருந்தாலும் அதில் தேசபக்தியையும் புகட்டிய அன்றைய திரைப்படங்களைப் பற்றி இப்போது பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.

இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்ல வேண்டும். காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தில் பாட்டுகளை எழுதியவர் பெயர் இல்லை. ஆனால் குறத்தி நடனப் பாட்டில் அதற்கான குறிப்பு இருக்கிறது.
வீட்டுக்கு வீடது மெய்யாக வேண்டுமே
மீட்சி பெறத் தூண்டுமே பாஸ்கரன்
ஆட்சி பிறந்தாண்டுமே!
ஆம், மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்கள்தான் இவை. குறத்தி டான்சில் வந்த மிஸ் ஜான்சி வேறு யாருமல்ல, அதே ராஜலட்சுமிதான்.

இப்படி இன்னும் பல விவரங்களைத் தந்துதவிய நூல் - அறந்தை நாராயணன் எழுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுதந்திரப் போரில் தமிழ் சினிமா. 1980களில் வாசித்த நூலை மீண்டும் ஒரு முறை வாசிக்கும் வாய்ப்புக் கொடுத்தவர் சுரேஷ் கண்ணன். அவருக்காக நான் எடுத்து வைத்த சினிமா தொடர்பான நூல்களில், தன்னிடம் இந்த நூல் ஏற்கெனவே இருக்கிறது என்று சொன்னதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகள்.

காளிதாஸ் திரைப்படத்தைப் பார்த்த கல்கி, 1931 நவம்பர் 16 ஆனந்தவிகடன் இதழில் விமர்சனம் எழுதினார். அவருக்கே உரித்தான எள்ளலுடன் கூடிய விமர்சனத்தையும் படித்து மகிழுங்கள்.


இன்னொரு சுவையான விஷயம். சுதேசமித்திரனில் காளிதாஸ் திரைப்படத்துக்கான விளம்பரத்தில், திரையரங்கின் பெயர் கினிமா சென்டிரல் என்று இருக்கிறது? அது எது தெரியுமா?முருகேச முதலியார் என்னும் பெரிய பணக்காரர் சென்னையை ஒட்டியிருக்கும் பொன்னேரியிலிருந்து சென்னைக்கு வந்து, மின்ட் அருகே பத்து கிரவுண்ட் இடத்தை வாங்கி வியாபாரத்தை ஆரம்பித்தார். வியாபாரம் சரிவராததால், அந்த இடத்தை மெஜஸ்டிக் தியேட்டர் என்று மாற்றினார். தமிழின் முக்கிய நாடகக் கலைஞர்கள் எல்லாரும் நடித்த நாடகங்கள் அங்கே அரங்கேறின.

மும்பைக்குச் சென்ற முருகேச முதலியார் அங்கிருந்து ஒரு திரைப்பட புரொஜக்டரை வாங்கி வந்தார். அவர் ரயிலில் வந்து இறங்கியபோது, புரொஜக்டரைக் காண மக்கள் திரளாக வந்தார்களாம். வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களாம். ஆக, தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் அந்த மெஜஸ்டிக் தியேட்டர்தான்.

இன்னொரு முதல் விஷயம் - 1923இல் அவர் அதே இடத்தில் இன்னொரு தியேட்டரும் கட்டினார். வேல்ஸ் இளவரசர் வருகையை ஒட்டி, அந்தத் தியேட்டருக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்தார். அந்தத் தியேட்டருக்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், மூடப்பட்டது. இல்லையேல் தமிழ்நாட்டின் முதல் மல்ட்டி-தியேட்டர் அதுவாகவே இருந்திருக்கும்!

1931இல் மெஜஸ்டிக் தியேட்டர் பெயர் மாற்றப்பட்டு கினிமா சென்ட்ரல் ஆனது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட முதல் பேசும்படம் ஆலம் ஆரா இங்குதான் திரையிடப்பட்டது. பிறகு, 1931 அக்டோபரில் தமிழின் முதல் பேசும்படம் காளிதாஸ் இங்கே திரையிடப்பட்டது. (முருகேச முதலியார் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் 1948இல்இதை முருகேசன் டாக்கீஸ் எனப் பெயர் மாற்றினார். 2011இல் அது இடிக்கப்பட்டது.) இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளிதழில் மோகன் வி. ராமன் எழுதிய இந்தக்கட்டுரையில் காணலாம்.
அது சரி, எல்லாரும் சினிமா cinema என்று எழுதும்போது, இது மட்டும் ஏன் கினிமா kinema என்று பெயர் கொண்டிருக்கிறது? சினிமாவை கினிமா என்றும் உச்சரிப்பார்களாம். கிரேக்கச் சொல்லான கினிமா, கினிமாடோஸ் (kinema, kinematos) என்பதற்கு அசைவு, நகர்வு (movement, motion) என்று பொருள். முருகேச முதலியார் அப்பவே அப்படி!!!

No comments:

Post a Comment