ஆமாய்யா. நம்மாளு பேசினாரு. செமையா பேசினாரு. அல்லாரும் கை
தட்டுனாங்க. எந்திரிச்சு நின்னு கை தட்டுனாங்க, உக்காந்திருந்து கை
தட்டினாங்க. 66 தடவை தட்டுனாங்க, 72 தடவை தட்டுனாங்கன்னு சொல்றீங்களே... அவரு என்னதான் பேசினாரு, எதுக்கு கை தட்டுனாங்கன்னு
யாராச்சும் சொல்றாங்களா...?
(45 நிமிசப் பேச்சுல 72 தடவை எந்திரிச்சு நின்னு கை
தட்டுனாங்கன்னா கொஞ்சம் மெர்சல் ஆகுதில்லே...!)
• சுதந்திரம், விடுதலை என்னும் இழைகள்தான் நம் இரண்டு நாடுகளையும் உறுதியாக இணைக்கின்றன.
— இந்தியா சுதந்திரத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாடு, சரி. நாம வேற எந்த நாட்டு
மேலேயும் போர் தொடுத்தில்லை, யாரையும் ஆட்டிப்படைக்க நினைக்கலேன்னு வச்சுக்குவோம். அமெரிக்காக்காரனுக்கு
ஒலகம் பூராவும் மக்கள் சுதந்திரமா இருக்கணும்கிறதுல அநியாயத்துக்கு
அக்கறையாக்கும்! எல்லாரும் சுபிட்சமா சுதந்திரமா அமைதியா இருக்கணும்கிறதுக்குதான்
ஆயுத வியாபாரம் செய்யறாங்களாக்கும்? வளைகுடா குழப்படி எல்லாம் மக்களுக்காகத்தான் செஞ்சாங்களாக்கும்! தெரியாதவங்க
இப்பவாச்சும் தெரிஞ்சுக்குங்க.
• இந்தியாவைக் கட்டமைத்த நமது முன்னோர்களும் இதே
நம்பிக்கைதான் கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு தனிநபருக்கும் சுதந்திரத்தை உறுதிசெய்ய விழைந்தார்கள். ஜனநாயகம்,
சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின்
அடிப்படையில் நமது முன்னோர்கள் நவீன இந்தியாவைக் கட்டமைத்தார்கள். அந்தப் பணியைச்
செய்யும்போது நமது பாரம்பரியமான பன்முகத்தன்மையைக் கொண்டாடும் விதத்தில் செய்ய
வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
— ஹப்பாடா... முன்னாடி ஆட்சியிலிருந்தவர்கள் உறுதியான
ஜனநாயகத்தைக் கட்டமைத்தார்கள்னு ஒத்துகிட்டார். ஆனா ஒரு விஷயம்தான் புரியலே.
அறுபது வருசமா நாடு குட்டிச்சுவராப் போச்சுன்னு உள்நாட்டுல புலம்பிகிட்டே
இருக்காரே அது பொய்யா, இல்லே இது பொய்யா...? ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரத்தையும் மதிப்போம்னு சொல்றாரு. நல்லது. எவன் என்ன
சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது, என்ன டிரெஸ் போடணும் என்ன போடக்கூடாதுன்னு இவரோட கட்சிக்காரங்களும் கட்சியை
ஆட்டிப்படைக்கிற ஆர்எஸ்எஸ்சும் விதவிதமா பேசறாங்களே... அதைப்பத்தி இங்கே என்னிக்காச்சும்
வாயைத் திறந்திருக்காரா? ஏண்டா கிறுக்கனுகளா இந்த மாதிரி உளறிகிட்டிருக்கீங்கன்னு கண்டிச்சிருக்காரா?
பாஜகவுக்கு ஓட்டுப்
போட்டா ராமர் ஜாதி, மத்தவங்களுக்கு ஓட்டுப் போட்டா நீச சாதின்னு இவரோட அமைச்சர் ஒருத்தர்
பேசினாங்களே, அவங்களை இவரு பதவியிலிருந்து நீக்கிட்டாரா? 2014 தேர்தல்ல காங்கிரஸ் இல்லாத
இந்தியா ஆக்கினோம், 2019 தேர்தல்ல முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவா ஆக்குவோம்னு இவரோட ஆளுக பேசறாங்களே,
அவங்களை வாயை மூடச்
சொன்னாரா? வெறுப்பை விதைக்கும் பேச்சுகளை இங்கே கட்டுப்படுத்தாம அங்கே போய் அளந்து
வுடறாரு?
• நவீன இந்தியாவுக்கு வயது 70. என்னுடைய அரசைப் பொறுத்தவரை
அரசமைப்புச் சட்டம்தான் புனித நூல். ... நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கொலம்பியா
பல்கலைக் கழகத்தில்தான் அம்பேத்கர் தன்னை உருவாக்கிக் கொண்டார்.
— அரசமைப்புச் சட்டம்னாலே அம்பேத்கர் ஞாபகத்துக்கு
வந்தாகணும். ஞாபகம் வந்த வரைக்கும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்னு சொன்ன
வரைககும் சந்தோஷம். ஆனா, அம்பேத்கர் ஒரு ஆணியும் புடுங்கலே, சும்மா காபி பேஸ்ட்தான் செஞ்சார்னு இவரால் நியமிக்கப்பட்ட
இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் சேர்மன் சொன்னாரே... அந்தாளை ஒரு
வாங்கு வாங்கி விட்டிருக்க வேணாமா? அவரைத் தூக்கி எறிய வேண்டாமா? இங்கே வாயை மூடிக்கிட்டு இருந்துகிட்டு அங்கே போய் அளந்து வுடறாரு? நமது முன்னோர் முன்னோர்னு
சொன்னாரே, நவீன இந்தியாவின் சிற்பி நேருவைப்பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லலியே...?
• லஷ்கர்-ஏ-தாய்பா, தாலிபான், ஐஎஸ்... இந்த பயங்கரவாதிகளின் கொள்கை பொதுவானது - வெறுப்பு, கொலைகள், வன்முறை.
— ரொம்ப கரெக்ட். அமெரிக்காவுக்குப் போகும்போது இஸ்லாமிய
தீவிரவாதம் பத்தி பேசாம இருக்க முடியுமா? கண்டிப்பா பேச வேண்டியதுதான். அந்தத் தீவிரவாதக்
குழுக்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனா ஒரு சந்தேகம்...
உள்நாட்டுல பஜ்ரங் தள்ளும் ஆர்எஸ்எஸ்சும் அந்த சேனாக்களும் இந்த சேனாக்களும் இதே
வெறுப்பு அரசியலை விதைச்சுட்டு இருக்காங்களே... அதைப்பத்தி இவரு ஒருவாட்டியாவது
உள்நாட்டில் கண்டிச்சிருக்காரா? அதெப்படி அசீமானந்தாவிலிருந்து கொடனானி வரைக்கும் அத்தனை பேரும் பெயில்ல வெளிய
வந்து ஜாலியா சுத்திட்டிருக்காங்க...?
• 80 கோடி இளைஞர்கள்
பொறுமையின்றி துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு
அரசியல் சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்க
வேண்டும் என்பதே என் இலக்கு
— இந்தியாவுடைய மக்கள் தொகை 125 கோடி. அதில் 80 கோடி இளைஞர்கள்னு சொன்னா,
கணக்கு ஒதைக்கலையா?
இந்த மாதிரி அடிச்சு
விடறது இவருக்கு வழக்கம்தான். அவரைச் சொல்லி தப்பில்லை, யாரு விஷயத்தைப் பார்க்கறா?
அடிச்சு விட்டா
அப்படியே அள்ளிட்டுப் போறவங்கதானே நம்ம சனங்கன்னு அவருக்கு நல்லாத் தெரியும். சரி
போகட்டும்.
இந்த இரண்டு வருசத்துல இந்த 80 கோடி இளைஞர்களில் (!)
எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளுக்காக என்ன செஞ்சிருக்கு இந்த அரசு? வேலை வாய்ப்பு எங்கே
அதிகரிச்சிருக்கு? பொருளாதார சுதந்திரம் பத்திப் பேசறாரே... மக்கள் மீது வரிச்சுமை
அதிகரிச்சுட்டே போறாரே? விலைவாசி ஏறிட்டே போயிருக்கே தவிர இதுவரைக்கும் இறங்கவே இல்லையே? பருப்பு விலை விவகாரம்
உச்சத்துல இருந்த சமயத்துல 40 ஆயிரம் டன் பறிமுதல் செஞ்சதா பத்திரிகைகளில் அமைச்சர்கள் எல்லாம்
சொன்னாங்களே... பருப்பு இப்பவும் 180 ரூபாக்கு விக்குதே... அவருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா?
• வாஷிங்டனுக்கு வந்து சேரும் முன் நான் மேற்கு
ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தேன். இந்திய உதவியால் கட்டப்பட்ட ஆப்கன்-இந்தியா
நட்பு அணையையும், 42 மெ.வா. நீர்மின் திட்டத்தையும் திறந்து வைத்தேன்.
— ரொம்ப சந்தோஷம். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு காலத்தில்
ரொம்பவே நெருக்கமா இருந்த நாடுகள். அந்த ஆப்கானிஸ்தானை இப்போ பிச்சைக்கார
நிலைக்குக் கொண்டு வந்ததே இந்த அமெரிக்காதானே? தீவிரவாதம் பத்தி பேசினாரே,
அந்த தீவிரவாதிகளை
வளர்த்து விட்டதே இந்த அமெரிக்காதானே?
இப்படியே கைதட்டல் கிடைச்ச ஒவ்வொரு விஷயத்தையும் அலசிட்டே
போனா, அந்தப் பேச்சுக்கும்
இந்தியாவில் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு புரியும். ஆனா இங்கே இருக்கிற
பலருக்கும் அந்த மாதிரி அலசறதுல எல்லாம் இஷ்டம் இல்லே. ஆஹா... நம்ம் தலைவர்
பேசினார்.... அமேரிக்காக்காரனே எந்திரிச்சு நின்னு கை தட்டினான்னு சொல்லிப்
பெருமைப்படறதுக்கு மேலே ஏதும் தேவையில்லை.
அமேரிக்காக்காரன் கை தட்டறது ஒண்ணும் புதுசும் இல்லே. 2013இல மன்மோகன்சிங்
பேசினப்பவும் எந்திரிச்சு நின்னு கைதட்டினான். என்ன, அந்தாளுக்கு இந்தாளு மாதிரி
தகிடுதத்தம் தெரியாது. பேஸ்புக்குல போட்டு பரப்பிக்கிடத் தெரியாது. பேஸ்புக்
மாதிரி சமூக ஊடகங்கள்ல ஆளுகளை வச்சு பரப்பவும் தெரியாது. ஏன்னா அந்தாளு ஒரு
எகானமிஸ்ட், அரசியல்வாதி இல்லை. அவங்களுக்கு இந்த விவரம் எல்லாம் பத்தாது. கேமரா எங்கே
இருக்குன்னு கண்டுபிடிக்கத் தெரியாது. ஆட்களை வச்சு பேஸ்புக்குல பில்டப் கட்டத்
தெரியாது.
அப்புறம் இன்னொரு விஷயம், அமேரிக்க ஜனாதிபதி இருக்காரே,
அவர் வெளிநாட்டுத்
தலைவர்களை வரவேற்கிறது, வழியனுப்பி வைக்கிறது இதிலெல்லாம் சில புரொட்டகால் இருக்கு. அந்த
புரொட்டகாலையும் மீறி ஒருத்தரை வழியனுப்பி வைக்கிறார்னா அது பெரிய விஷயமா
பார்ப்பாங்க. அந்த மாதிரி ஒபாமா எந்திரிச்சு வந்து மன்மோகனை வழியனுப்பி
வச்சிருக்காரு. ரீகன் ராஜீவ் காந்திக்கு குடை பிடிச்சிருக்காரு. நிக்சன் கூட
உக்காந்திருக்கும்போது இந்திரா கால் மேலே கால் போட்டுகிட்டு கம்பீரமா
உக்காந்திருக்காங்க. இதுக்கெல்லாம் புளகாங்கிதம் அடையணும்னா காங்கிரஸ்காரங்களுக்கு
பெருமை அடித்துக்கொள்ள எவ்வளவோ விஷயம் இருக்கு.
இதெல்லாம் ஒருவகை ராஜதந்திரம்னு புரிஞ்சுக்கத் தெரியணும்.
அமெரிக்கா ஒரு நாட்டுத் தலைவருக்கு மரியாதை குடுக்குதுன்னா அது அந்தாளுக்குக்
குடுக்கிற மரியாதை இல்லை. அந்த நாட்டின் தலைவனா யார் வந்தாலும் குடுக்கிற மரியாதை.
அந்த நாட்டுடன் உறவு வைத்துக்கொள்வதால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும்னு பாத்து
அதுக்காகக் குடுக்கிற மரியாதை. சுருக்கமாச் சொன்னா, சோழியன் குடுமி சும்மா
ஆடாது.
2009இல் 30 அணு உலைகள் அமைக்கிறதா
திட்டம் போட்ட அமெரிக்கா, 2013இல் அதை 5ஆகக் குறைச்சாச்சு. ஏற்கெனவே இயங்கிட்டு இருக்கிறதையும் அதுக்கான காலம்
முடியறதுக்கு முன்னாடியே மூடிட்டிருக்கு. ஆனா அணுஉலைகளை மத்த நாடுகளோட தலையில்
கட்டிட்டிருக்கு. இப்போ நம்ம தலையில 6 அணு உலைகள். இந்தியாவையே புரட்டிப் போட்டுட்டிருக்கார்னு
சொல்றவங்க யாரும் நியூக்லியர் லயபிலிடி விஷயம் என்னாச்சு, அந்தக் கம்பெனிகள் அதுக்கு
ஒத்துக்கிச்சா... நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னாகும்னு பேசறதே காணோம். (அணு உலை
வேண்டாம்னா, மின்சாரத்துக்கு மாற்று என்ன்ன்னு கேட்டார் ஸ்ரீதர். ஏன், எந்த அமெரிக்காகாரன் கை
தட்டினானோ அவன்கிட்டியே நம்மாளு கேக்கலாமே?)
அமெரிக்கா இந்தியாவின் இயற்கையான கூட்டாளி (நேச்சுரல்
அல்லைஸ்) அப்படீன்னு 15 வருசம் முன்னாடி வாஜ்பாயி பேசினாருன்னு சொல்லிட்டு, அதையே இப்போ இவரும்
சொல்லியிருக்கார். அந்த நேச்சுரல் அல்லை-தான் பாகிஸ்தானுக்கு இப்பவும் ராணுவ
உதவியும் ஆயுத வியாபாரமும் செஞ்சுட்டுதான் இருக்கு.
சரி போகட்டும். சர்வதேச விவகாரங்கள் இப்படித்தான்
இருக்கும்.
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு
திங்கு'ன்னு ஆடுச்சாம்.
அதுமாதிரி காங்கிரஸ் வேணாம்னு இவனுகளைக் கொண்டு வந்தா இவனுக அவனுகளுக்கே அப்பனா
இருக்காங்க. நான் வரி கட்டுற ஆள். இந்த கவர்மென்ட் வந்ததிலிருந்து எனக்கு
மாசத்துக்கு சுமார் 1500 ரூபா எக்ஸ்டிராவா டேக்ஸ்ல மட்டும் போகுது. வாழ்க்கைத் தரத்துல முன்னேற்றம்
ஏதும் இல்லை. வருமானம் அதிகரிக்கலே. வாடகை உள்விபட லைவாசி அதிகரிச்சதால்
செலவுகளைக் கட்டுப்படுத்தறேன், அல்லது முன்னாடி அனுபவிச்ச வசதிகளைக் குறைக்கிறேன். புள்ளைக படிச்சு
முடிச்சுடுச்சு, அதனால தப்பிச்சேன். இல்லேன்னா நானும் கல்விநிதியுதவி கேட்டுக் கையேந்த
வேண்டியிருந்திருக்கும். எனக்குத் தெரிஞ்சு, பெரும்பாலான மக்களுடைய
நிலைமை இதுதான்னு நினைக்கிறேன். அடுத்து ஜிஎஸ்டி வந்தா என்னவாகப் போகுதோ தெரியலே.
இந்தியாவுடைய ஜிடிபி-யில் 6 சதவிகிதம்தான் நேர்முக வரி. மத்ததெல்லாம் மறைமுக வரி. உலக நாடுகளிலேயே நம்ம
நாட்டில்தான் மறைமுக வரி விகிதம் அதிகமாக இருக்குன்னு நினைக்கிறேன்.
அவரு டெலிபிராம்ப்டர் வச்சுப் பேசுனாரா, கையில ஸ்லிப் வச்சுகிட்டு
பேசுனாரா, மாடர்ன் டைம்ஸ் படத்துல சார்லி சாப்ளின் கோட்டின் கைப்பகுதியில் ஸ்லிப்
வச்சுகிட்டு பேச நினைச்சாரே அந்த மாதிரி ஸ்லிப் மறைச்சு வச்சுகிட்டு பேசினாரா,
பள்ளிக்கூடப்
புள்ளைக மாதிரி மனப்பாடம் செஞ்சுகிட்டு பேசினாராங்கிறதெல்லாம் முக்கியம் இல்லே.
வெளிநாட்டில் ஒரு பேச்சு, உள்நாட்டில் ஒரு பேச்சு,
வெளியே சொல்றது
ஒண்ணு, உள்ளே செய்யறது
ஒண்ணுன்னு இல்லாம இருக்கணும். அதுதான் முக்கியம்.
எந்த காந்தியைப் பத்திப் பேசி அங்கே கைதட்டல் வாங்குனாரோ,
அந்த காந்தி எந்த
நோக்கத்துக்காக உயிரைக் கொடுத்தாரோ அந்த நோக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கிற
வேலையைத்தான் இவரும் இவருடைய கட்சியும் செய்துட்டிருக்கு.
பொருளாதார முன்னேற்றம் முக்கியம்தான். ஆனா அதைவிட முக்கியம்
சமூக நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும். இந்தியா வல்லரசு ஆகிறதுல எனக்கு எந்த
ஆர்வமும் கிடையாது. நல்லரசா இருக்கா... அதுதான் முக்கியம்.
அதுக்கு ஆக வேண்டியதைச் செய்யாம சும்மா வெளிநாட்டுல போய்
பீலா உட்டுகிட்டு உள்நாட்டுல வாயைப் பொத்திகிட்டு இருக்கிற வரை...
சொல் ஒன்றும், செயல் வேறாகவும் இருக்கும்வரை... குட்டிக்கொண்டுதான்
இருப்பேன்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்...
இது சும்மா பாடிக்கிறதுக்கு மட்டும் போதும்னு நினைக்கிறவா
போயிக்கிட்டே இருங்க.
அம்புட்டுதான்.
Very Good criticism.
ReplyDeleteசும்மா “பாடி”னாலும் கருத்துகள் ‘நச்’. கவுரவ் பந்தி-யை(முகப்புத்தகப்பக்கத்தில்)பார்த்தேன்.தோழர்...எல்லா ஊர்களிலும் ஒரு காலைநேரத்து குயில் கூவிக்கொண்டேயிருப்பதைப்போல் நாமும் குரல் கொடுத்துக்கொண்டேயிருப்போம்.
ReplyDelete
ReplyDeleteநல்லாவே கேட்டு இருக்கீங்க ஆனால் அதற்கு ஒரு பயலும் பதில் சொல்லமாட்டாங்க அதற்கு பதிலாக மோடி தூங்காமல் நாட்டுக்காக உழைக்கிறார் என பில்டப் கொடுப்பாங்க