Thursday, 9 June 2016

புத்தகத் திருவிழா புத்திமதிகள்

புத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே...



எல்லா பதிப்பாளர்களும், எல்லா வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கூடுகிற ஒரே வாய்ப்பு புத்தகத் திருவிழாதான். ஒரு குடும்பத்தில் பலவகைப்பட்ட ரசனைகளைக் கொண்ட அத்தனை பேருக்கும் அவரவர் விருப்பப்படி புத்தகங்களை வாங்குவதற்கான வாய்ப்பை புத்தகத் திருவிழாக்கள் வழங்குகின்றன. முற்போக்கு, பிற்போக்கு, பொழுதுபோக்கு, நவீனம், பின்நவீனம், முன்நவீனம், இந்திய தேசியம், தமிழ் தேசியம், அந்த இஸம், இந்த இஸம், நொந்த இஸம் என எல்லாவகை இலக்கியங்களையும் வாங்கலாம். சமையல் அல்லது அழகுக் குறிப்புகள், குழந்தைகளுக்கான நூல்கள், ஆன்மீக நூல்கள், ஜக்கி போன்ற போலிச் சாமியார்களின் உபதேசங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், பாடத்துணை நூல்கள், காமிக்ஸ்கள், .................. உங்கள் விருப்பப்படி காலி இடத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

எந்தெந்த வகையில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. தேவையான புத்தகங்களை 10 சதவிகித (அல்லது அதற்கும் அதிகமான) கழிவில் வாங்க முடியும் என்பதற்காகவே புத்தகத் திருவிழா எப்போது வரும் என்று காத்திருந்து செல்பவர்கள் ஒரு வகை. புத்தகத் திருவிழாவுக்குப் போகவில்லை என்று தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காகச் செல்பவர்கள் ஒரு வகை. வாங்கியதில் ஒரு புத்தகம்கூட வாசிக்காவிட்டாலும், வீட்டுக்கு வருகிறவர்களிடம் பெருமையடிப்பதற்காகவே ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்கி அலமாரியில் அழகாக அடுக்கி வைத்து அழகு செய்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப்பில் போட்டோ போடுவதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. சக நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. டெல்லி அப்பளத்தை சுவை பார்க்க அல்லது மாலைநேர அவுட்டிங்காக அல்லது சும்மா சைட் அடிக்க செல்பவர்கள் ஒரு வகை. நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் நண்பர்கள் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டும் (ஹும்... இதெல்லாம் வாங்கியாக வேண்டியிருக்கே) என்று செல்பவர்கள் ஒரு வகை.

இப்படி பல வகையினர் உண்டு என்றாலும், நீங்கள் புத்தகங்களை வாங்கவே செல்கிறவர் என்று அனுமானித்துக்கொண்டு, உங்களுக்காகவே சில டிப்ஸ். எல்லாம் அனுபவத்திலிருந்து சொல்வதாக்கும். எல்லாம் உங்கள் நன்மைக்காகவே. எனவே இதைப் புறக்கணித்து விட்டு பிற்பாடு அவதிப்பட வேண்டாம்.

கையில் எக்கச்சக்கமாக பணம் வைத்துக்கொண்டு விலையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பின்னட்டையில் இருக்கும் விவரத்தைப் படிப்பதுபோல பாவனை செய்துகொண்டே அதில் இருக்கும் பொடி எழுத்தில் உள்ள விலையை ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள், புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுபோல இரண்டாம் பக்கத்தில் தரப்பட்டுள்ள விலையை நோட்டம் விடுபவர்கள், பதிப்பகத்தின் பெயரைப் பார்த்தே விலகிச் செல்பவர்கள், என அனைவருக்கும் உதவக்கூடிய சில குறிப்புகள் இவை. இது சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டிய பதிவு என்பதால் அது தொடர்பாக சில விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்.

புத்தகத் திருவிழாவில் புத்தகக் கடைகள் இருக்கும் பகுதியில் நுழைவதற்கு முன்னால் வெளியே இருக்கும் கரும்பு ஜூஸ், டெல்லி அப்பளம், டீ-காபி, ........................... கடைகள் உங்களை இழுக்கும். வந்த களைப்பைப் போக்கிக்கொள்வோம் என்று உடனே அங்கே போய் விடாதீர்கள். முதலில் புத்தகங்களின் பக்கம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கொஞ்சம் களைத்துப்போனபிறகு புசிப்பின் பக்கம் திரும்பலாம். தெம்பேற்றிக்கொண்டு மீண்டும் புத்தகங்களைப் பார்க்கப் போகலாம்.

உள்ளே நுழைவதற்கான சீட்டை நீங்கள் நுழையும்போதே கிழித்துக் கொடுத்து விடுவார்கள். அதுதான் உள்ளே நுழைந்தாயிற்றே, இனி எதற்கு நுழைவுச்சீட்டு என்று அதை உடனே எறிந்து விடாதீர்கள். வெளியே போய்விட்டு மறுபடி நுழைய மீண்டும் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டியிருக்கலாம். எனவே, வெளியே போகும்போது வாசலில் இருப்பவரிடம், “டீ குடிச்சுட்டு வந்தா இதே டிக்கெட்டில் உள்ளே நுழையலாம் இல்லையா?” என்று நல்ல பிள்ளைபோல ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டுச் செல்வது நல்லது. திரும்பி வரும்போது அதே வாயில் வழியாக இன்னொரு புன்னகையைப் பரிசளித்து விட்டு நுழையலாம். 10 ரூபாய் மிச்சமாகும். திருவிழாக்காலம் முழுவதும் செல்வதற்கான சீசன் டிக்கெட் 50 ரூபாய் என்று நினைவு.

திருவிழாவுக்குச் செல்வதற்கு முன்பே சமூக ஊடகங்கள் அல்லது பத்திரிகைகளின் மூலம் என்னென்ன நூல்கள் புதிதாக வந்துள்ளன, அவற்றில் உங்களுக்குத் தேவையானவை எவை, அவற்றின் பதிப்பகம் எது என்ற விவரங்களை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு செல்வதும் நல்லது. பங்கேற்கிற பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் பட்டியல் நுழைவாயிலில் கிடைக்கும். அதை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளுங்கள். (சென்னை புத்தகத் திருவிழாவுக்காக விகடன் இப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.) வீண் அலைச்சலை இது குறைக்கும். தேவையான கடைக்கு மட்டும் போய் வேண்டியதை மட்டும் வாங்கிக்கொண்டு வரலாம்.

உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் படுகிற கடைகளில் புத்தகங்களை அள்ளி விடாதீர்கள். அப்புறம் அடுத்தடுத்த கடைகளுக்குப் போய், உங்களுக்குத் தேவையான நூல்களை வாங்க நினைக்கும்போது கையில் காசு இல்லாமல் போய்விடக்கூடும். இந்தப் புத்தகத்தை வாங்காம இருந்திருக்கலாம், அந்தப் புத்தகத்தை அப்புறமா வாங்கியிருக்கலாம் என்று பிற்பாடு மனதுக்குள் புலம்புவதைத் தவிர்க்கலாம். நேரம் இருந்தால், கண்காட்சியை முதலில் ஒரு சுற்றுச் சுற்றி பார்வையிட்டுவிட்டு பிற்பாடு வாங்கும் வேலையைத் துவங்கலாம்.

புத்தக ஆர்வலர்கள், தீவிர வாசிப்பர்களுக்கு சில கடைகள் பிடித்தமாக இருக்கும். உதாரணமாக, இடதுசாரி சார்பு நூல்கள் பிடித்தவர்களுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அல்லது பாரதி புத்தகாலயம்; வெகுஜன வாசகத் தரத்துக்கு கிழக்கு; தீவிர இலக்கியங்களுக்கு காலச்சுவடு; அல்லது எதிர் அல்லது அடையாளம் அல்லது சந்தியா. அவர்களுடைய கால்கள் தானாகவே அந்த விருப்பக் கடைகளுக்கே செல்ல முனையும். அப்படிச் செய்ய வேண்டாம். உங்கள் அபிமானக் கடைகளில் இருப்பதைவிடச் சிறந்த நூல்கள் வேறு கடைகளில் இருக்கக்கூடும்.

ஏகத்துக்குப் பணம் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வாங்கச் செல்பவர்கள் டிராலி பேக் எடுத்துச்செல்வது நல்லது. சுமைவலி தாங்க முடியாமல் கை மாற்றிக் கை மாற்றி விரல்கள் மாற்றி விரல்கள் மாற்றி அவஸ்தைப்படத் தேவையில்லை. சக்கரப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டு இஷ்டைலாக இழுத்துக்கொண்டு போகலாம்.

அளவாகப் புத்தகம் வாங்குபவர்களும் ஜோல்னாப்பை போல பைகளை எடுத்துச்செல்வது நல்லது. முதுகுப்பையும் கொண்டு போகலாம்தான். ஆனால் ஜோல்னாப்பை அறிவுஜீவி லுக் கொடுக்கும், முதுகுப் பை காலேஜ்/ஐடி பையன் லுக் கொடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. (நான் இரண்டையும் வைத்துக்கொள்வது வழக்கம்.)

சில பதிப்பாளர்கள் மெல்லிய பாலிதீன் பைகளில் புத்தகங்களைப் போட்டுக்கொடுப்பார்கள். புதிய மொடமொடப்பான புத்தகம் சில நிமிடங்களில் பாலிதீன் பையைக் கிழித்துவிடும், அல்லது ஒரு கைப்பிடி கிழிந்து புத்தகங்கள் பொத்தென்று கீழே விழும். பையில் ஒருபக்கக் கைப்பிடிதானே போயிற்று, இன்னொரு பக்கக் கைப்பிடி இருக்கிறதே என்று சமாளித்து விரல்களில் சுற்றிப் பிடித்துக்கொண்டு நடக்க முனைந்து விடாதீர்கள். சில நிமிடங்களில் விரலில் ரத்தம் கட்டிக்கொள்ளும். எந்தப் பையாக இருந்தாலும் சரி, பையில் கொள்கிறதே என்று ஏகப்பட்ட புத்தகங்களை அமுக்காதீர்கள். பீலிபெய் சாக்காடும்..... சாலமிகுத்துப் பெயின் திருக்குறள் பள்ளியில் படித்தது நினைவிருக்கும்தானே?

சில கடைகளில் நோட்டுப்புத்தகங்களுக்கு அட்டைபோடும் பிரவுன் கவரில் போட்டுக் கொடுப்பார்கள். ஏதோ கவரில் போட்டுக் கொடுக்கிறார்களே என்பதற்காக அதை வாங்காதீர்கள். ஒரு மண்ணுக்கும் உதவாத உறை அது. அதிகபட்சம் அந்தந்தக் கடையில் வாங்கியது என்று தனியான அடையாளமாக வைத்துக்கொள்ள உதவுமே தவிர, அந்தக் காகிதப்பைகள் உறுதியோ, மீள்பயன்பாட்டு வசதியோ இல்லாதவை. அத்தகைய கவர்களில் போட்டுக்கொடுப்பவர்களிடம், கவர் வேண்டாம் அப்படியே கொடுங்க என்று கூறி கடைக்காரரின் மதிப்பையும் பெறலாம்.

ஒவ்வொரு கடையிலும் பில்களை வாங்கத் தவறாதீர்கள். வீடுபோன பிறகு எவ்வளவுக்கு வாங்கினோம் என்று கணக்குப்போட வசதியாக இருக்கும் என்பது மட்டுமல்ல. சில புத்தகங்களில் பைண்டிங் கோளாறு இருக்கலாம், பக்கங்கள் விடுபட்டிருக்கலாம். மிக அரிதாக என்றாலும், மேலட்டை ஒன்றாகவும் உள்ளே புத்தகம் வேறாகவும் இருக்கலாம். இதெல்லாம் வீடு போய்ச்சேர்ந்த பிறகு, அல்லது வாசிக்க எடுக்கும்போதுதான் தெரியும். திருட்டுப்பய இப்படி ஏமாத்திப்புட்டான் என்று திட்டாதிருக்கவும், மிகவும் அவசியமான புத்தகம் என்றால் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு வேறு பிரதி வாங்குவதற்கும் பில் அவசியம் தேவைப்படும்.

பிரபலங்கள் திடீரென்று நுழையக்கூடும். கூட்டம் அவர் பின்னே ஓடும். எல்லாரும் ஓடுகிறார்களே என்று நீங்களும் ஓடாதீர்கள். அவர் உங்களுக்குப் பிடித்த அல்லது அறிமுகமான எழுத்தாளராக இருந்தாலும். அந்தக் கூட்டத்தில் உங்களை சந்தித்ததை அவர் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஓரிரு விநாடிகள் அவரோடு பேசி நீங்கள் அடையப்போவதும் ஏதுமில்லை. உங்களுக்குத் தேவை அவருடைய எழுத்துதானே தவிர, ஆள் அல்ல. எழுத்தாளர்களிடம் உரையாட அதிகம் ஏதும் இருப்பதில்லை. என்ன பேசுவது என்று தெரியாமல் கெக்கே பிக்கே என்று உளறிக்கொண்டிருப்பது தவிர அந்தக் குறுகிய நேரத்தில் பெரிதாக இலக்கிய விசாரத்தில் ஈடுபடப்போவதுமில்லை.

ஒருவேளை யாராவது ஒரு எழுத்தாளர் ஒரு கடையில் இருந்தால், உரையாட நேரமும் வாய்ப்பும் கிடைத்தால், சந்திப்பதில் தவறில்லை. சில பதிப்பாளர்கள் தமது பிரபல எழுத்தாளர்களை வரவழைத்து, கடையில் உட்கார வைத்து, அவருடைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தால் அதில் கையெழுத்துப்போட்டுத்தர ஏற்பாடு செய்திருப்பார்கள். மிகவும் அவசியமான, நீங்கள் வாங்க விரும்பிய நூல் என்றிருந்தால் தவிர அந்த வலையில் விழுந்து விடாதீர்கள்.

சில எழுத்தாளர்கள் திருவிழாவில் பந்தாவாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாசிப்புக்காக புத்தகம் எழுதவே அவதாரம் எடுத்தவர் போலவும், ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவர் போலவும், நீங்கள் அவருடைய நூல்களை வாங்குவது உங்களுடைய கடமை என்பது போலவும் அவருடைய பாவனைகள் இருக்கக்கூடும். அவருடன் பேசியபிறகு அவர்மீதான உங்கள் மதிப்பு சரியக்கூடும். அதனால்தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், எழுத்தாளனின் எழுத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.

வழியில் நண்பர்கள் எதிர்ப்படக்கூடும். நண்பர் அந்தப் பக்கம் போகிறாரே என்று அவர்களோடு நீங்களும் இணைந்து விடாதீர்கள். அப்புறம் உங்களுக்கு விருப்பமான நூல்களை வாங்குவதற்குப் பதிலாக அவருக்கு விருப்பமான நூல்களை வாங்க நேரிடும். அவரிடம் பைசா காலியாகி உங்கள் பைசா கடனாகப் போகக்கூடும், அல்லது அவரிடம் நீங்கள் கடன் வாங்கவும் நேரக்கூடும்.


வெளியே மைதானத்தில் மாலைநேரத்தில் யாராவது பிரபலங்களின் உரைகள் இருக்கக்கூடும். நீங்கள் மிகவும் மதிக்கிற, தவறவிடக்கூடாத பிரபலம் என்றால் அவருடைய பேச்சைக் கேட்க நேரம் செலவு செய்யலாம். சாலமன் பாப்பையா அல்லது லியோனி வகையறாக்கள் என்றால் அதற்காக நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. எத்தனையோ காலமாக டிவிக்களில் பார்த்த/கேட்ட அதே விஷயங்கள்தான் அங்கும் உளறப்படும். அந்த நேரத்தை நீங்கள் புத்தகங்களை வாங்குவதில் செலவு செய்யலாம்; அல்லது டெல்லி அப்பளமோ சமோசாவோ தின்பதில் செலவு செய்யலாம்; அல்லது திருவிழா முடிந்து எல்லாரும் ஒரேநேரத்தில் கூட்டமாக வெளியே போய் ஆட்டோவோ பஸ்ஸோ பிடிக்க அவதிப்படுவதைத் தவிர்க்க சற்று முன்னதாகவே புறப்பட்டு வீடு போய் சேரலாம். 

ஓலா போன்ற கால் டாக்சிக்காரர்கள் அந்தப் பக்கம் வர மறுக்கிறார்கள். மாலைநேரத்தில் கால் டாக்சி கிடைப்பதும் கடினம். போர் நினைவுச்சின்னம் இருக்கும் பகுதியை ஒட்டி வெளியேறினீர்கள் என்றால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பேருந்துகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆட்டோக்களை அங்கே நிற்க அனுமதிப்பதில்லை. சற்றே முன்னே நடந்து போய்த்தான் ஆட்டோ பிடிக்க வேண்டும். உங்கள் கைகளில் சுமைகளும் இருக்கும்போது, ஏற்கெனவே நடந்து நடந்து களைத்துப்போன முகங்களுடன் வெளியே வரும் உங்களிடம் எப்படிக் கறக்க வேண்டும் என்று ஆட்டோக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். சனி ஞாயிறுகளைத் தவிர்ப்பது உத்தமம். அல்லது பகலிலேயே போய்விட்டுத் திரும்பிவிடுவது நல்லது. 

சென்னை புத்தகத் திருவிழா அரங்கிற்குள் செல்பேசிகளின் சிக்னல் கிடைப்பது சிரமமாகவே இருந்தது. தொடர்புகளுக்கு செல்பேசியை அதிகம் நம்பியிருக்க வேண்டாம்.

கடைசியாக...
மழையில் நிறைய நூல்கள் நனைந்து போய் பலருக்கும் நஷ்டம் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால், திட்டமிட்ட பட்ஜெட்டுக்கும் மேலே இரண்டு அல்லது நான்கு நூல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு வரலாம்.


வாசிப்பை நேசிப்போம்.

4 comments:

  1. நல்ல வழிகாட்டல். நிறைய பேர் புத்தகக் கண்காட்சியில் வீட்டிற்கு வந்த பின்பே வேறு புத்தகம் வாங்கி இருக்கலாமோ என்று நினைப்பர். அந்தச் சூழலில் முதலில் தேவைப்படும் அல்லது படிக்க விரும்பும் புத்தகம் எந்தப் பதிப்பகத்தால் வெளியில் பட்டது என்பதை அறிந்து கொண்டு அந்த பதிப்பகம் ஸ்டால் சென்றால் அதிகம் அலைய வேண்டாம். என்ன மாதிரி புத்தகம் தேவை என்பதை உறுதி செய்து கொண்டு கண்காட்சிக்கு வந்தால் நல்லது. அறிவியல் சம்பந்தமான புத்தகம் என்றால் அது எந்தப் பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது என்பதை அறிந்து செல்வது சிறப்பு. ஷாஜகான் சார் இதையும் உங்கள் tips இல் சேர்க்கலாமா.
    அன்புடன்,
    வெ.சுப்ரமணியன்.

    ReplyDelete
  2. எல்லாஞ்சரி! போகும்போது மறக்காமக் குடையை எடுத்துக்கொண்டு போகவும் என்றும் சேர்த்துருக்கலாம்!

    புத்தகத்திருவிழா... போக ஆசையாத்தான் இருக்கு.......... ஆனால்........

    ReplyDelete
  3. அருமையான ஆலோசனைகள் .

    ReplyDelete
  4. நீயெல்லாம் ஒரு ஆளு..

    ReplyDelete