Sunday 15 July 2012

தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்


(தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தில்லிகை இலக்கிய வட்டம் நடத்தும் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் 14-7-2012 அன்று ஆற்றிய உரை. தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும் என்பது பொதுத் தலைப்பு. தமிழ்-இந்தி இலக்கிய உறவு என்பது எனக்குத் தரப்பட்ட தலைப்பு. தமிழும் இந்தியும் என்று மட்டுமே பேசினால், தமிழின் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்கள் பலரின் பெயர்கள் விடுபடும். இது பொதுத் தலைப்புக்கு துரோகமாக இருக்கும். எனவே இரண்டும் கலந்தே என் உரை அமைந்தது. அரைமணி நேர உரை என்பதால், நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது. இது முதல் பகுதி. இரண்டாம் பகுதியைக் காண இங்கே சொடுக்கவும். நேரம் கருதி உரையில் சொல்லாமல் விடப்பட்ட விஷயங்களும் இதில் இருக்கும். வாப்பளித்த தில்லிகைக்கு - இப்பதிவின் படங்களுக்கும் சேர்த்து - நன்றி.)


தமிழும் பிற இந்தியமொழி இலக்கியங்களும் என்னும் தலைப்பை பேசுபொருளாக எடுத்துக்கொள்ளும்போது, எங்கே துவங்குவது என்ற கேள்வி முதலில் எழுகிறது. உடனே முதலில் நினைவுக்கு வருவது கம்பராமாயணம். அடுத்து நினைவுக்கு வருவது பாரதியின் பெயர். கூடவே, கம்பராமாயாணம் வடமொழி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பா, தழுவலா, புதுக் காப்பியமா என்ற சர்ச்சைக்குரிய கேள்விகளும் எழுந்து விடுகின்றன. அத்துடன், கம்பராமாயணத்திலிருந்து தொடங்குவது என்றால், கம்பர் காலத்தை 9ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குவதா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடுவதா என்ற கேள்வியும், அதற்குப் பிறகு சுமார் எட்டு-பத்து நூற்றாண்டுகள் தொடர்ச்சி இல்லாமல் போனதைப் பற்றியும் பேச வேண்டியிருக்கிறது. காளிதாசன் தமிழைத் தழுவி எழுதினானா, தமிழர்கள் காளிதாசனைத் தழுவி எழுதினார்களா என்ற மற்றொரு சர்ச்சைக்குரிய கேள்வி பிறக்கிறது. வடமொழியில் முதன்முதலில் சிறப்பாகக் காவ்யாதர்சம் என்னும் அணியிலக்கணம் தொகுத்த தண்டி (கி.பி. 650-700) - தண்டியலங்காரம் இயற்றியவர் - தென்னாட்டவர் என்றால், திருக்குறள் ஏன் வடமொழிக்குச் செல்லாமல் போனது? கம்பருக்கு முன்பு சாகுந்தலமோ மகாபாரதமோ ஏன் தமிழுக்கு வராமல் போனது? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எல்லாம் அலசிப் பார்த்தாலும் அது தமிழும் வடமொழியும் என்ற அளவில்தான் இருக்குமே அல்லாமல் தமிழும் பிற இந்தியமொழிகளும் என்று ஆகாது.

தமிழையும் வடமொழியையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பிற இந்திய மொழிகள் எல்லாமே காலத்தால் இளையவை. எனவே, தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்குமான உறவும் கால அளவுகோலின்படிப் பார்த்தால் மிகக் குறைவு. எனவே, இந்தப் பேசுபொருளை கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் என்று வரையறுத்துக்கொள்வதே சரியாக இருக்கும் என்று கருதி, அதன் அடிப்படையில் என் உரை அமைகிறது.

மொழிகளுக்கு இடையிலான உறவின் மையமாக இருப்பது மொழியாக்கம். கல்வெட்டு, ஓலை, சீலை போன்ற வடிவங்களில் பதியப்பட்டும், வாய்மொழியாகவும் இலக்கியங்களின் பரிமாற்றம் இருந்தவரையில் மொழிகளுக்கு இடையிலான உறவுகள் ஒரு மட்டுக்குள்தான் இருந்திருக்க முடியும். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சுக்கலை உருவாகி, அடுத்த நூற்றாண்டிலேயே இந்தியாவில் அறிமுகமாகி, பதினெட்டாம் நூற்றாண்டில் வேரூன்றியது. ஐரோப்பாவிலிருந்து வந்த இத்தொழில்நுட்பம் கடற்கரைப் பகுதிகளையே முதலில் எட்ட முடியும் என்பதால் தென்மாநிலங்கள் இதன் பயனை முதலில் பெற்றன. கேரளத்திலும் தமிழகத்திலும்தான் பெரும்பாலான அச்சகங்கள் உருவாயின. வேதாகமத்தை அச்சிடுவதில் துவங்கிய இத்தொழில்நுட்பம், மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் உதவியது.

இந்த விவரங்களைக் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்திய மொழி இலக்கியங்களின் பரிமாற்ற அளவுகளை ஆராயும்போது, பிற மொழிகளிலிருந்து வேறெந்த மொழிக்குச் சென்றதைவிடவும் தமிழுக்குத்தான் மிக அதிக படைப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன என்றே எனக்குத் தெரிந்த பதிப்பு வரலாறு காட்டுகிறது. சான்றாக, 1941-50 ஆண்டுகளில் தமிழ் வெளியீடுகளில் 8.6 விழுக்காடு மொழியாக்க நூல்களாக இருந்திருக்கின்றன. 1951-70 காலகட்டத்தில் தமிழ்ப் பதிப்புலகில் 51 விழுக்காடு மொழியாக்கமாக இருந்தது என வியப்பூட்டும் தகவலை பதிவு செய்கிறார் அமரந்தா. இதை அச்சுக்கலைக்கு முன்னோடியாக தமிழகம் இருந்ததன் பின்விளைவாகக் கருதலாம் என்பது என் எண்ணம்.

தமிழ் இலக்கியம் குறித்துப் பேசுவதானாலும், தமிழ் குறித்துப் பேசுவதானாலும் பாரதியைத் தொடாமல் பேசவே முடியாது. அதிலும் மொழியாக்கம் குறித்துப் பேசும்போது பாரதியின் பாடலையும் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
மொழியாக்கம் பண்பாடுகளிடையே பரிமாற்றத்தையும், சமூகங்களைப் பற்றிய புரிதலையும் உருவாக்குகிறது, வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு இனச் சமூகங்களுக்கு இடையே உறவுகளை உருவாக்குகிறது, வலுப்படுத்துகிறது, வளப்படுத்துகிறது எனப்பல மொழியாக்கப் பயன்களை முற்றமுழுக்க உணர்ந்திருந்த முன்னோடி பாரதி என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. நான் முன்னோடி என்று குறிப்பிடுவது தமிழ்ச்சூழலிலோ இந்தியச் சூழலிலோ மட்டுமல்ல. வானொலிகூட வந்திருக்காத அக்காலத்தில், அச்சு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே பிறமொழி இலக்கியங்களைப் பரிச்சயம் செய்து கொள்ளும் சாத்தியம் இருந்த பாரதியின் சமகாலத்திய உலகப்பெரும் படைப்பாளிகள் யாரேனும் மொழியாக்கத்தின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்களா என்று இன்றைய நவீனத் தொழில்நுட்பம் கொண்டு தேடிப் பார்த்தால், மேலைநாட்டில் அப்படி யாரும் எழுதியதாகத் தெரியவல்லை. இலக்கியத்திலும் தத்துவத்திலும், அச்சுக்கலையிலும் முன்னோடிகளாக இருந்த சீனத்தில் இதுகுறித்து ஏதும் கூறப்பட்டிருக்கலாம். ஸ்ரீதரன் போன்றவர்கள் இதை ஆராய்ந்தால் தகவல்கள் கிடைக்கலாம்.

ஆக, மொழியாக்கத்தின்வழி பிறமொழிப் படைப்புகள் தமிழுக்கு வரவேண்டும், தமிழ்மொழிப் படைப்புகள் பிறமொழிகளை அடைய வேண்டும் எனக் கூறிய பாரதி அதைச் செய்தும் காட்டியவர். பாரதியே மொழியாக்கம் செய்தவை பற்றி இங்கே நான் குறிப்பிடத் தேவையில்லை.

பகவத் கீதையையும், பங்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரத்தையும் அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். தானே ஏராளமாக எழுதிக் குவித்த பாரதி, குறிப்பாக தாகூரின் பல கதைகளையும், கவிதைகளையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூர் படைப்புகளின் மொழியாக்கங்கள் பற்றிய அருமையான ஒரு கட்டுரையை சலபதி எழுதியிருக்கிறார். பாரதி பின்பற்றிய மொழியாக்க உத்திகளும் குறிப்பிடத்தக்கவை. அதுகுறித்துப் பின்பு பார்ப்போம்.

இப்போது இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த பதிப்பகங்கள், மொழிபெயர்ப்பாளர்கள், படைப்புகள், பற்றிப் பார்ப்போம். இந்தப் பட்டியல் குறையுடையதாகவே இருக்கும் என்று கூறுவதில் தயக்கமோ வெட்கமோ எனக்கு இல்லை.

த.நா. சேநாபதி, த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, பாரதிதாசன், புதுமைப்பித்தன், க.நா.சு., கு.ப.ரா., எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு என்கிற நாராயணசாமி, தி.ஜ.ர., குமுதினி, சந்தானம், என ஏராளமான பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. மேலைக் கதைகளைத் தமிழுக்குத் தந்த புதுமைப்பித்தன், தழுவலை வெறுத்தவர், பாரதிதாசனின் புரட்சிக் கவி, பில்கணியத்தின் தழுவல்தானே என்று ஒரு கட்டுரையில் கூறுகிறார்.

18ஆம் நூற்றாண்டில்,  மராத்தி மூலத்திலிருந்து பஞ்ச தந்திரக் கதைகள் வீரமார்த்தாண்ட தேவரால் கவிதை வடிவில் மொழிபெயர்க்கப் பெற்றது. என இணையம் காட்டுகிறது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, 1950 முதல் 70 வரை கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துப் பதிப்பகங்களும் மொழியாக்க நூல்களை வெளியிட்டன. அலயன்ஸ், பாரி நிலையம், நவயுக பிரசுராலயம், ஜோதி பதிப்பகம், சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஜெனரல் பப்ளிஷர்ஸ், கற்பக வித்யா பதிப்பகம், கலைமகள், மங்கள நூலகம், பாரதி பதிப்பகம், கவிதா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார், வாசகர் வட்டம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் நீளமானது. இரண்டரை ரூபாய், மூன்றரை ரூபாய் என மலிவு விலையில் பாரி நிலையமும் பூம்புகாரும் கே.ஏ. அப்பாசின் நூல்களை வெளியிட்டுள்ளன. அப்பாசின் தீவிர ரசிகனாக அனைத்து நூல்களையும் வாங்கியிருக்கிறேன்.

மொழியாக்க நூல்களை வெளியிடுவதில் முன்னோடிகளாக இருப்பவை சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள். சாகித்ய அகாதமி 1954இல் பிறந்தது, நேஷனல் புக் டிரஸ்ட் 1957இல் பிறந்தது. அதாவது, தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் ஏராளமாக வந்த பிறகு உருவானவை இவை. அரசுப் புள்ளிவிவரங்கள், பிரதமர்களின்-குடியரசுத் தலைவர்களின் உரைகள் போன்ற நூல்களை வெளியிட்டு வந்த தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பதிப்பகத் துறையும் இப்போது பலவகை நூல்களை வெளியிட்டு வருகிறது. தமிழ்ப் பதிப்புலகில் அண்மைக்காலத்தில் தரமான மற்றும் விவரமான வியாபாரப் பதிப்பகங்கள் ஏராளமான மொழியாக்க நூல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தப் போக்கு விரைவாக அதிகரித்தும் வருகிறது.

தமிழுக்கு வந்த பிறமொழிப் படைப்புகளைப் பார்க்கப்போனால், வங்கத்திலிருந்தே முதலில் வந்ததாகத் தெரிகிறது. பாரதியை முன்னரே குறிப்பிட்டேன். வ.வெ.சு. அய்யர், தாகூரின் கதைகளை மொழிபெயர்த்தார். தமிழின் முதல் சிறுகதை எனக் கருதப்படும் குளத்தங்கரை அரசமரம் தாகூரின் காடேர் கதா - படித்துறையின் கதை என்ற சிறுகதையின் தழுவல் எனக் கருதப்படுகிறது. இக்கதையில் பாதிக்குப்பாதி வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதைக் காணலாம்.

த.நா. சேநாபதி, வங்கத்திலிருந்து சரத்சந்திரரை தமிழில் பிரபலம் ஆக்கியவர். ஆசிரியப் பணியை விட்டு விட்டு, மஞ்சரி இதழில் ஆசிரியராக ஆனவர். மஞ்சரி சிறந்த மொழிபெயர்ப்பு இதழாக உருவானது. தாகூரின் நூல்களை வங்கத்திலிருந்து தமிழுக்குத் தந்தவர். பட்டியல் நீளமானது. அமர ஜோதி காந்திஜி என்ற நூலும், சிறுகதைகளும் இவரே எழுதியவை.

வங்கத்திலிருந்து மற்றவர் சேநாபதியின் சகோதரர் த.நா. குமாரசாமி - வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திரர், தாகூர், தாரா சங்கர் பானர்ஜி, நேதாஜி ஆகியோரை மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய சொந்தப் படைப்புகள் - ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்கள், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகள். சேநாபதி-குமாரசாமி இருவரும் சேர்ந்தும் வங்கத்திலிருந்து தமிழுக்கு அளித்தவை ஏராளம். தாகூரின் கிட்டத்தட்ட அனைத்து நாவல்களையும் சிறுகதைகளையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள்.

ஆர்.ஷண்முகசுந்தரம், தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பாந்தோபாத்யாய, சரத்சந்திர சட்டோபாத்யாயா, மாணிக் பந்த்யோபாத்யாய எழுதிய பல சிறப்பான மொழிபெயர்ப்புகளைத் தந்தவர். அழியாக் கோலம், மாயத் தாகம் ஆகியவை இவரே எழுதியவை.

இன்று வங்கத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து வங்கத்துக்கும் மொழியாக்கம் செய்து வருபவர்களில் முக்கியமானவர் - என்னுடைய பார்வையில் ஒரே ஒருவர் - சு. கிருஷ்ணமூர்த்தி. புதுக்கோட்டையில் பிறந்த இவர், கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வங்கம், இந்தி, ஜெர்மன், ஆங்கிலம் அறிந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோல்கத்தாவில் வசிப்பவர். வங்கத்திலிருந்தும் அஸாமியாவிலிருந்தும் 25க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும், திருக்குறளை வங்கத்திலும் மொழியாக்கம் செய்தவர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காண்டேகரின் எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது. அதவும் மொழியாக்கம் என்றுகூடத் தெரியாமல் தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள் என்றே அவற்றை வாசித்திருக்கிறேன். அவ்வளவு ஏன், காண்டேகர் எப்படி இருப்பார் என்றுகூட ஒரு உருவத்தை வரித்துக் கொண்டிருந்தேன். வாசகன் என்ற முறையில் என் மனதில் இருப்பதை இங்கே பகிர்ந்து கொள்வது கொஞ்சம் சுவையாக இருக்கும்.

அக்காலத்தில் காண்டேகர்-கண்டசாலா இரண்டு பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. ஆனால் இரண்டுமே பிரபலம். ஒலிப்பொருத்தம் காரணமாக இரண்டு பெயர்களும் எப்படியோ எனக்குப் பிடித்த பெயர்களாக ஆயின. கண்டசாலாவின் பாடல்கள் பலவற்றில் நடித்தவர் தமிழிலும் புகழ் பெற்ற நடிகர் ரங்கா ராவ் என்ற தெலுங்கர். கம்பீரமான உருவம் கொண்டவர். அன்புச் சகோதரர்கள் படத்தில் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற கண்டசாலா பாடலுக்கு நடித்தவர் ரங்கா ராவ். முத்துக்கு முத்தாக பாடலைக் கேட்டு கொட்டகையில் கண்ணீர் சிந்தாமல் வந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தப்படத்தில் சகோதரர்கள் ஐந்து பேர். எங்கள் வீட்டில் நானும் சகோதரிகளுமாக ஐந்துபேர். ஆக, காண்டேகர்-கண்டசாலா-ரங்காராவ் முக்கோணத்தால், காண்டேகராக என் மனதில் பதிந்திருப்பது ரங்கா ராவ். இந்தச் சித்திரம் பொய்யாகி விடக்கூடாது என்பதற்காகவே, இந்தக் கட்டுரையை எழுதும்போதுகூட காண்டேகரின் படத்தை நான் தேடிப்பார்க்க விரும்பவில்லை. தலைப்புக்குப் பொருந்தாத உளறல்களை விட்டு மீண்டும் தலைப்புக்கு வருகிறேன்.

காண்டேகரை மராத்தியில் அறிந்தவர்களைவிட தமிழில் அறிந்தவர்கள் அதிகம் என்று காண்டேகரே கூறியதாக நினைவு. தமிழ் எனக்குப் புகழையும் இந்தி பணத்தையும் கொடுத்தது என்றார் காண்டேகர். அந்த அளவுக்கு அவருடைய படைப்புகளை தமிழுக்குத் தந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. 1913இல் பிறந்த கா.ஸ்ரீ. ஸ்ரீனிவாசாச்சாரியார், சமஸ்கிருதம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். கா.ஸ்ரீ.ஸ்ரீ என்ற புனைபெயரில் எழுதியவர். விந்தை என்னவென்றால், கா.ஸ்ரீ.ஸ்ரீ என்றதுமே நினைவுக்கு வருவது காண்டேகர்தானே தவிர, கா.ஸ்ரீ.ஸ்ரீ எழுதிய நாவல்களோ சிறுகதைகளோ அல்ல. கலைமகளில் பணியாற்றிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. பாரதியின் தராசு கட்டுரைகளையும், சைவ சித்தாந்தத்தையும, சொக்கநாதர் வெண்பாவையும் இந்திக்கு அளித்தார். இன்று கேலியாகப் பார்க்கப்படுகிற, அன்று மிகவும் மதிக்கப்பட்ட லட்சியவாத எழுத்துகளில் நா.பா., அகிலன், மு.வ. போன்றோருடன் சேர்த்து வாசிக்கப்பட்டவர் காண்டேகர். காரணமாக இருந்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

கே.ஏ. அப்பாசின் நாவல்களை பெரும்பாலும் முக்தார் என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருடைய நாவல்கள் தமிழில் செம்மொழி நடையில்தான் எழுதப்பட்டுள்ளன.

மலையாளத்திலிருந்து தமிழுக்குத் தந்தவர்களில் முன்னோடி தூக்கு மர நிழலில் புகழ் சி.ஏ. பாலன். தகழியின் ஏணிப்படிகள், இரண்டு படி, கயிறு என்னும் மூன்று பாக நாவல், மலயாற்றூர் ராமகிருஷ்ணனின் பொன்னி, எஸ்.கே. பொற்றேகாடின் ஒரு கிராமத்தின் கதை, ராமன் நாயரின் வாழ மறந்தவள், கேசவ தேவின் நான்..., ஓர் அழகியின் சுயசரிதை ஆகிய மலையாள நூல்களை தமிழுக்குத் தந்தவர் சி.ஏ. பாலன். குஞ்ஞாலி மரைக்கார் மொழிபெயர்த்தவர்கள் சி.ஏ. பாலனும் கே. பத்மநாபன் நாயரும். தகழியின் தோட்டியின் மகன், செம்மீன் - சுந்தர ராமசாமி தமிழுக்குத் தந்திருக்கிறார்.

சுந்தர ராமசாமி நாவல்களையும், ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலையும் மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா தந்திருக்கிறார். அசோகமித்திரனின் தண்ணீர், பி.கே. சீனிவாசன் மொழியாக்கம் செய்தார். தோப்பில் முகமது மீரான் நாவல்களும் மலையாளத்தில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

இன்று குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழ் நடத்தி வரும் குறிஞ்சி வேலன். இளம்பாரதி என்று அறியப்படும் ருத்ர. துளசிதாஸ், குளச்சல் யூசுப்.

ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் ஆகியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கின்றார்.

தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதியதை மு.கு. ஜகந்நாதராஜா தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். சாகித்ய அகாதமியின் மொழியாக்கப் பரிசை தமிழில் முதலில் பெற்றவர் இவர்.

தமிழ் தெலுங்கு, ப்ராகிருதம், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பாண்டித்யமும் அறிவும் பெற்றிருந்த பன்மொழிப் புலவர் மு.க. ஜகன்னாத ராஜா. பல மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றதுக்கு மொழிபெயர்த்துள்ள நூல்கள் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் இருக்கும். பாரதி கவிதைகள், திருக்குறள், முத்தொள்ளாயிரம் புற நானூறு போன்ற பல தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவரைப் போல பல மொழிகளை அறிந்து மொழிபரிமாற்றம் செய்துள்ளவர்கள், ஒரு பாலமாகத் திகழ்ந்தவர்கள் தமிழில் இல்லை. என்கிறார் வெங்கட் சாமிநாதன்.

தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பா. பாலசுப்பிரமணியம் - பாப்பா என்று அழைக்கப்பட்டவர், தெலுங்கிலிருந்து பல நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரிப் பேராசிரியர் சுஹ்ராவர்தி என்பவர் திருக்குறளை உருதுவில் தந்திருக்கிறார். இது ஆங்கிலவழி மொழியாக்கம் எனத் தெரிகிறது. முக்தார் பத்ரி என்பவரும் உருதுவில் தந்திருக்கிறார். பேராசிரியர் யூசுப் கோகான் என்பவர் அரபியில் மொழியாக்கம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுவும் ஆங்கிலவழி மொழியாக்கம் என்றே கருத இடமிருக்கிறது.

திருக்குறளை பல மொழிகளிலும் பலரும் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சுமார் 30, இந்தியில் 10, குஜராத்தி, ஒடியா, சௌராஷ்டிரா, ராஜஸ்தானி, பஞ்சாபியில் ஒவ்வொன்று, கன்னடத்தில் 5, மலையாளத்தில் 7, ஒடியாவில் 1, உருது 2, தெலுங்கு 2.

தமிழ்ச் சங்க நூலகத்தில் மட்டும் சுமார் ஐநூறு மொழியாக்க நூல்கள் தமிழில் இருக்கின்றன என்பதிலிருந்தே தமிழில் எத்தனை ஆயிரம் நூல்கள் வந்திருக்கும் என ஊகிக்கலாம்.

இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தவை, தமிழிலிருந்து இந்திக்குச் சென்றவை, மொழியாக்கத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

7 comments:

  1. "தமிழ் இலக்கியம் குறித்துப் பேசுவதானாலும், தமிழ் குறித்துப் பேசுவதானாலும் பாரதியைத் தொடாமல் பேசவே முடியாது. அதிலும் மொழியாக்கம் குறித்துப் பேசும்போது பாரதியின் பாடலையும் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது" Bharathi avargalai ninaivupaaduthiyatharkku nandri sir

    ReplyDelete
  2. பல அரிய தகவல்களை தந்த கட்டுரை. அலுவலக அலுவல் காரணமாக தில்லிகை சந்திப்பிற்கு இம்முறை வர இயலவில்லை. ஒரு நல்ல உரையை கேட்கும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறேன்

    ReplyDelete
  3. தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும்
    என்கிற அருமையான தலைப்பும்

    பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
    தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும
    திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
    அதை வணக்கம் செய்தல் வேண்டும்.-

    என்னும் பயன் மிக்க பகிர்வுகளும் பாராட்டுக்குரியன.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. கருத்துச் செறிவு மிக்க நல்ல கட்டுரை. வாழ்த்த வயதில்லை , எனினும் வாழ்த்துக்கள் எங்கள் ஊர்க்காரர் என்ற உரிமையில்.......

    ReplyDelete
  5. நன்றி தடாகத்தான் பாரதி. எங்கள் ஊர்க்காரர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களைப்பற்றிய அறிமுகம் கிடைத்தால் இன்னும் மகிழ்வேன்.

    ReplyDelete
  6. சற்றுத் தாமதமாகப் படித்தாலும், சுவையாகவே இருக்கிறது ஷா. நல்ல பட்டியலையும் கொடுத்திருக்கிறீர்கள். குறிப்பாக காண்டேகர்- கண்டசாலா- ரங்காராவ் நல்ல காம்பினேஷன். ரசித்துச் சிரித்தேன்.

    தெலுங்கிலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்புகளை சாந்தா தத் நிறையச் செய்திருக்கிறார்.

    ReplyDelete
  7. அருமையான தெளிவான உரையை கேட்ட நிறைவு .

    ..காண்டேகர்- கண்டசாலா- ரங்காராவ்..இந்த ஒப்பீடு வாசகனாக ரசிகனாக பலரின் ஆழ்மனதிலும் பதிந்த பிம்பம்தான் ....சிவன் என்றால் திருவிளையாடல் சிவாஜி நினைவிற்கு வருவது தவிர்க்க முடிவதில்லை அப்படிதான் உங்களின் எதார்த்த பேச்சை ரசித்தேன் நல்ல பல தகவல்களை கொடுத்த தளம் நன்றி

    ReplyDelete