தமிழகத்திற்குப் பயணம் செய்ய
வேண்டியிருந்ததால் பதிவு ஏதும் எழுத நேரமே இருக்கவில்லை என்பதை முந்தைய பதிவில்
எழுதியிருந்தேன். இந்தப் பயணம் - இதுவரையிலான மற்ற பயணங்களைப் போலவே - புதிய
அனுபவங்களையும் படிப்பினைகளையும் அளித்தது.
இந்தப் பயணத்துக்கான ரயில் டிக்கெட்டுகளை
வாங்கிய வழிமுறை நான் முற்றிலும் விரும்பாத வழிமுறை. தலைநகரில் இருப்பவர்களைப்
பற்றி ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு - In Delhi, Everybody is
Somebody. இந்த முறை நானும் ஒரு சம்படி ஆகி பர்த்களை உறுதி செய்து
கொண்டேன். நன்றியை எதிர்பார்க்காத நண்பர்களுக்கு நன்றி.
எவரொருவரும் தன் காரியத்தை
சாதித்துக்கொள்ள எந்தவழியையும் பின்பற்றத் தயங்காத நகரம் இது. நேர்வழியோ
குறுக்குவழியோ, சேர வேண்டியதுதான் முக்கியம். இதற்கு எவர் காலையும் மிதிக்கலாம்,
எவர் தோளிலும் ஏறலாம், எவர் தலையிலும் கால்வைத்துத் தாண்டலாம் என்று எல்லாருமே ஏற்றுக்கொள்ளப்பழகிப்போய் பல்லாண்டுகள்
ஆகிவிட்டன. நேர்வழி என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களின் வழி, தமிழ்ப்
பழமொழியில் சொல்வதானால் அம்மணமாச் சுத்தற ஊருல கோவணம் கட்டியவனின் வழி. இருந்தாலும்
இன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறது மனது. பார்ப்போம் எதுவரைக்கும்
என்று... இதை எழுதும்போது இரண்டு நாட்களுக்கு முன் நாளிதழில் படித்த வாசகம் நினைவு
வருகிறது - It
is not the years in your life that count, but the life in your years.
இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஏசி கோச்
பயணம். ஒரு கன்பர்ம் டிக்கட் வைத்திருந்த ஒவ்வொரு நபரும் ஒரு வெயிட்டிங் லிஸ்ட்
நபரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்த பெட்டி அது. அதிலும் ஒரு மலையாளப் பெண், ரிசர்வ்
செய்த ஒரே ஒரு பர்த் டிக்கெட்டுடன், 15 வயது மகன்கள் இருவர், நான்கு வயது மகன்
ஒருவன் என நான்கு பேருடன் நான் இருந்த அதே பகுதியில் வந்திருந்தார். இதெல்லாம்
போதாது என்பது போல கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் இரு-இருக்கைப் பகுதி,
போர்வைகள்-தலையணைகள் வைக்கும் அலமாரி போல மாற்றப்பட்டிருந்தது. ஆனால் அதற்கும்
இரண்டு டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தது ரயில்வே. கதவை ஒட்டிய இரண்டாவது வரிசை
என்னுடையது என்பதால், அந்த இரண்டு இருக்கைகளில் அமர்ந்திருக்க வேண்டியவர்களும் என்
பகுதியில் ஆக்கிரமிப்பு. பகலில் உட்கார இடம் கிடைப்பதே போதும் போதும் என்றாகி
விட்டது. கதவுப்பகுதியில் நான்கு இளைஞர்கள் பெட்டிகளுடன் உட்கார்ந்தும் நின்றும் சற்றுநேரம் உள்ளே எங்காவது இடம்பிடித்துக் கொண்டும் பயணம் செய்தனர். கதவை அடைக்கவே இயலவில்லை. போதாததற்கு, ஏசி சரியாகவே இயங்கவில்லை. ஏ.சி. கோச்சுக்குள் வியர்த்தபடி
பயணம். விஜயவாடா வந்த பிறகுதான் ஏசி சரிபார்க்கப்பட்டு கொஞ்சம் நிவாரணம்
கிடைத்தது.
ஆமாம், டிடிஈ என்று ஒருவர் இருப்பாரே...
அவர் இந்த மாதிரி ஆட்களை எல்லாம் வெளியேற்றி விடுவாரே என்று பின்னர் ஒரு நண்பர்
கேட்டார். அந்தப் பயணத்தில் மூன்று டிடிஈ-க்கள் வந்தார்கள். டிக்கெட்டுகளையும்
தம்மிடமிருந்த பட்டியலையும் சரிபார்த்தார்களே தவிர வெளியார் யார் இருக்கிறார்கள்
என்று மூவரில் ஒருவர்கூடக் கவலைப்படவே இல்லை.
நான் வாங்கியிருந்தது ஈ-டிக்கெட்.
என்னுடன் பயணம் செய்தவர்கள் ஐந்து பேர். வாங்கியிருந்தது ஏழு டிக்கெட்டுகள்.
இரண்டு டிக்கெட்டுகளை ரத்து செய்து டிடிஈ எழுதிக் கொடுத்தால்தான் பணம் திரும்பப்
பெற முடியும். ஆனால் மூன்று டிடிஈ-க்களில் இருவருக்கு இப்படி ஒரு விதி இருப்பதே
தெரியவில்லை. மற்றொருவர் விவரமானவர். டிக்கெட்டுகளை சரிபார்த்து விட்டு உங்கள்
விஷயத்தை கவனிக்கிறேன் என்று கூறிச்சென்றவர் வரவே இல்லை.
கிடைத்த படிப்பினை -
எப்போதும் செய்வது போலவே முறையான வழியில் முன்பதிவு செய்து குறைவான சாமான்களுடன்
பயணம் செய்வதே சிறந்தது.
எல்லா பயணங்களின்போதும் - பயணத்துக்கு
முன்பு பெட்டி கட்டுவதில் துவங்கி சென்றடையும் இடத்தில் பொருட்களுடன் இறங்கும் வரை
நிலவும் பதற்றத்துக்கு இந்தப் பயணத்திலும் குறைவில்லை. ரயில் நிலையத்தை எப்படி
அடைவது, பெட்டிகளுக்கு ஆட்டோ போதாது, டாக்சி முனீர்க்காவுக்குள் வராது, அப்படியே
வந்தாலும் இத்தனை பெட்டிகளை எப்படி எடுத்துச் செல்வது, ரயில் நிலையத்தில்
இறங்கியதும் போர்ட்டர்களின் தொல்லை, எவ்வளவு கேட்பார்களோ, இத்தனை பெட்டிகளையும் எப்படி
எங்கே அடைப்பது...
எல்லாப் பயணங்களின்போதும் நிகழ்வது போலவே
இப்போதும் எல்லாம் நிகழத்தான் செய்தது. ஒரே மாருதி ஆம்னிக்குள் அத்தனையையும்
அடைத்துக்கொண்டு போக முடிந்தது. முன்னுறு ரூபாய்க்கு போர்ட்டர்கள் வந்தார்கள். சக
பயணிகள் எங்களுக்கும் மேல் ஆளுக்கு மூன்று நான்கு பெட்டிகளை எடுத்து வந்ததால் எனக்குக்
குற்ற உணர்வு ஏற்படாமல் தப்பியது இன்னொரு திருப்தி. இறங்க வேண்டிய ஈரோட்டில்
இறக்குவதற்கும் அழைத்துச் செல்லவும் உறவுகள் காத்திருந்தது ஒரு வசதி. எப்படியோ,
சென்றடையும் பயணம் முடிந்தது.
கிடைத்த படிப்பினை - எது நடந்ததோ அது நன்றாகவே
நடந்தது, எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
எல்லாப் பயணங்களிலும் செய்வதுபோலவே
இந்தமுறையும் இயன்ற அளவுக்கு உறவுகளையும் நண்பர்களையும் சந்தித்துத் திரும்பினேன்.
இதை எழுதுகிற கணத்தில் தோன்றுகிறது - எப்போது போனாலும் இப்படி நண்பர்களையும்
உறவுகளையும் தேடிச் சந்திப்பதில்தான் முனைப்பாக இருந்திருக்கிறேனே தவிர பக்கத்தில்
இருக்கும் சுற்றுலாத்தலங்களை பார்க்க ஆர்வம் எனக்குள் எழுந்ததே இல்லை. பல
ஆண்டுகளுக்கு முன்பு திருமூர்த்தி மலை அருவிக்குச் சென்றதும்கூட குடும்பத்தின்
வற்புறுத்தலால்தான். விட்டிருந்தால் அன்றைக்கும் நண்பர்கள் யாரையாவது தேடிக்கொண்டு
போயிருப்பேன்.
இந்தப் பயணத்தில் இரண்டு உறவினர்களின்
வீட்டில் நடந்த உரையாடல்களும் சுவையானவை.
ஒருகாலத்தில் ஆறு அடி ஆழத்திற்கு இருபுறமும் கான்கிரீட் கரைதொட்டு ஓடிய வாய்க்கால் |
பேசிக்கொண்டிருக்கும்போது முதியோர்
ஓய்வூதியம் பற்றிய நினைவு எனக்கு வந்தது.
“ஏன் சித்தி,
முதியோர் ஊய்வூதியத்துக்கு விண்ணப்பம் செய்யலாமே... மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக
கேள்விப்பட்டேனே?” என்றேன்.
“நல்லாக் கேட்டே
போ... நானா மாட்டேங்கிறேன். உன் சித்தப்பாதான் மாட்டேன் என்று பிடிவாதம்
பிடிக்கிறார்” என்றார் சித்தி.
“உங்களுக்கும்தான்
கிடைக்குமே” என்றேன்.
“இல்லையப்பா. எனக்கு
மூணு வருசம் வயசைக் குறைச்சு எழுதியிருக்காங்க. அதனால இப்ப எனக்கு 62 வயசுதானாம்.
பென்ஷன் கிடைக்காதாம். ”
“சரி,
சித்தப்பாவுக்கு கிடைக்குமே. ”
“அவரு என்ன
சொல்றாரு தெரியுமா... அதெல்லாம் அனாதரவான ஆளுங்களுக்குத்தானாம். நமக்கென்ன
கொறைச்சல்... மகளுடைய சொந்த வீட்டுல இருக்கோம். நாம அதை வாங்கறது நியாயமில்லையாம்.
மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டாரு. ”
பக்கத்தில் நாற்காலியில் நடுங்கும் கைகளை
வைத்துக்கொண்டு, பேசப்படுவது தனக்கு சம்பந்தமற்ற விஷயம் என்பது போல அமர்ந்திருந்தார்
அந்தப் படிக்காத மேதை.
அன்னூர் என்ற சிறு நகரில் என் அக்காவின்
மகள் வீடு. அவளுடைய கணவர் சிறிய அச்சகம் நடத்தி வருபவர். காலை எட்டு மணிமுதல் இரவு 8-9 மணி வரை அச்சகத்தில் சகல வேலைகளையும் செய்யும் கடுமையான உழைப்பாளி.
அவர்களுக்கு மகன்கள் இருவர், 9 வயதில் மகள். ஆண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள்
திறக்கும் நேரத்தில் பல்லாயிரம் புத்தகங்கள் பைண்டிங் செய்வதற்காக வரும். இந்த மூன்று
பேரும் தம்மால் இயன்ற அளவுக்கு பைண்டிங் வேலையில் துணை செய்வார்கள். பெற்றோரின் கல்வியறிவு சுமார்தான்.
பெரிய மகன் பிளஸ்-டூவில் 1100 மதிப்பெண்
பெற்று மேற்படிப்புக்கான கவுன்சிலிங்குக்காக காத்திருக்கிறான். சிறியவன் 456
மதிப்பெண்கள் பெற்று பிளஸ்-ஒன் செல்கிறான். நான் அங்கு இருந்த நேரத்தில் இரவுகளில்
அவர்கள் எல்லாரும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்
பார்ப்பது வழக்கம். அபத்தமான கேள்விகள் என்ற என் எண்ணத்தை மறைத்துக்கொண்டு, பொது
அறிவை வளர்க்கக்கூடிய தரமான நிகழ்ச்சி என்னும் அவர்களின் கருத்தை மதித்து நானும்
அவ்வப்போது பார்த்திருக்கிறேன். நிகழ்ச்சியின் இறுதியில் ஏதோ ஒரு அறக்கட்டளை பற்றிய
விவரம் அளித்து, தகுதியுள்ள மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம்
செய்வார் சூர்யா.
ஒருநாள் இரவு நிகழ்ச்சி முடிந்ததும், “ஏம்ப்பா...
பெரியவன் இதற்கு அப்ளிகேஷன் போடலாம் இல்லியா? ” என்று கேட்டார்
அக்கா.
“அட... ஆமாம். நல்ல
மார்க் வாங்கியிருக்கிறானே... போடலாமே” என்றேன் நான்.
“ஆனா அவன்
மாட்டேங்கிறான் என்கிறான். ”
“ஏன்... என்னவாம். ”
“நமக்கு என்ன
குறைச்சல்... அப்பா சம்பாதிக்கிறாரு. பீஸ் கட்டி படிக்க வைக்க அவரால முடியும்.
நான் அப்ளை பண்ணி எனக்குக் கிடைச்சுதுன்னு வச்சுக்குங்க... நிஜமாவே தேவைப்படற வேற ஒருத்தருக்குக்
கிடைக்காம போயிருமில்லே அப்படீங்கிறான்.”
கொள்ளுத்தாத்தாவின் மரபணு
கொள்ளுப்பேரனில் வேலை செய்கிறது போலும் என்று நினைத்துக்கொள்வதைத்தவிர என்னிடம்
பதில் ஏதும் இருக்கவில்லை.
Being idealistic is not necessarily foolish,
maybe it is the only way to be.
உடுமலைப்பேட்டையில்
என் சகோதரி வீடு. அவர் சுமார் பத்தாண்டுகளாக கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். பறக்க
இயலாமல் மாடியில் விழுந்து கிடந்தது அது. பெரிய கூண்டு ஒன்றைச் செய்து தன்
கவனிப்பில் அபாரமான அன்பு காட்டி வளர்த்து வருகிறார். அதற்குப் பெயர் சாந்த்னி -
நிலவொளி என்று பொருள். அந்தக் கிளியைப் பற்றிச் சொன்னால் நம்பவே முடியாத எத்தனையோ
விஷயங்களில் - சில்லி சிக்கனை விரும்பிச் சாப்பிடுவதும், ஸ்பிரைட் பாட்டிலை
பிரிஜ்ஜிலிருந்து எடுத்ததுமே எழுப்புகிற கூச்சல்களும், கடற்கொள்ளையர்
திரைப்படங்களில் தலைமைக் கொள்ளையன் தோளில் உட்கார்ந்திருப்பது போல, வீட்டில் அக்கா
இருக்கும்போது அவர் தோளிலேயே எந்நேரமும் அது இருப்பதும், அப்போது அவருடைய கணவரேகூட
அக்காவைத் தொடமுடியாது என்பதும் அடங்கும்.
மைத்துனருக்கு
சிறு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒருவாரம் கோவை மருத்துவமனையில் இருக்க
நேர்ந்ததால் கிளியை மற்றொரு சகோதரியின் மகன் வீட்டில் விட்டிருந்தனர். நான்
போயிருந்த நேரத்தில் அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கிளியும்
வந்தது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பது மனிதர்களுக்கு மட்டுமே
பொருந்தும். அக்காவைக் கண்டதும் அது எழுப்பிய கூச்சல்களை இங்கே எழுத்தில் விளக்கவே
முடியாது. தோளில் உட்கார்ந்து கொண்டு நீளநீளமாக என்னென்னவோ சொல்லிக்
கொண்டிருந்தது. குழந்தைகளுடன் நாம் தலையை முட்டு-முட்டு என்று சொல்லி விளையாடுவது
போல அக்காவின் தலையோடு முட்டி முட்டி விளையாடியது. மைத்துனரின் உடல்நலம் விசாரிக்க
வந்தவர்களுடன் அக்கா பேசிக்கொண்டிருந்தால், என்ன நீ என்னுடன் பேசாமல் யாருடனோ
பேசுகிறாய் என்பதுபோல இடைவிடாமல் பேசிக் கொண்டே இருந்தது.
கிடைத்த
படிப்பினை - கிளி பொருளறிந்து பேசுவதில்லை, சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்வது
போல ஒலி எழுப்புகிறது என்பது முற்றிலும் தவறு.
இணைப்பு
புதுக்கோட்டையில்
இயங்கிவரும் ஞானாலயா என்ற நூலகம் குறித்து தற்செயலாக ஒரு செய்தியை இணையத்தில்
பார்க்க நேர்ந்தது. புதுக்கோட்டைக்காரர்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம்.
அது சரி,
அது ஏன் ஞானாலயா... அறிவுத் திருக்கோவில் என அழகு தமிழில் பெயர் வைத்திருக்கலாமே
என்று மனதுக்குள் கேள்வி எழ, உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாது... எவனாவது ஒருத்தன் ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுல என்னடா குத்தம் கண்டுபிடிக்கலாம்னு காத்துக் கிட்டு இருப்பீங்களே என்று உள்மனம் அடக்க, ஞானாலயா பற்றிய காணொளி இணைப்பு கீழே தருகிறேன். ஞானாலயா
பார்த்தபின் பங்களிக்க விரும்புவோருக்கு வங்கி விவரம்:
Account Holder: Sri B.
KRISHNAMOORTHY
S B Account Number:
1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI
(Tamilnadu India).
Branch Code: 000112
ஸ்ரீ பா.
கிருஷ்ணமூர்த்தி,
ஞானாலயா,
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0)
9965633140
நல்ல படிப்பினைகள்... ஒவ்வொரு பயணத்திலும் இப்படி ஏதாவது ஒன்று நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா?
ReplyDeleteஅடுத்த வாரம் ”தில்லிகை” யில் உங்கள் பேச்சு. மூன்று மணிக்கு என்பது தான் சற்று இடிக்கிறது. வர முயற்சிக்கிறேன்.
It is really very interesting to read about your experiences. I am really touched by your relatives who do not want to accept any charity; they want to live with dignity and self respect; in today's world many people are enjoying previleges which they do not deserve./or not entitled to.
ReplyDeleteநெகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகள். இக்காலத்திலும் காணக் கிடைக்கும் மனிதர்கள்.
ReplyDelete