Sunday, 15 July 2012

தமிழ்-இந்தி இலக்கிய உறவு


(தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தில்லிகை இலக்கிய வட்டம் நடத்தும் மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் 14-7-2012 அன்று ஆற்றிய உரை. தமிழும் பிற இந்திய மொழி இலக்கியங்களும் என்பது பொதுத் தலைப்பு. தமிழ்-இந்தி இலக்கிய உறவு என்பது எனக்குத் தரப்பட்ட தலைப்பு. தமிழும் இந்தியும் என்று மட்டுமே பேசினால், தமிழின் முன்னோடி மொழிபெயர்ப்பாளர்கள் பலரின் பெயர்கள் விடுபடும். இது பொதுத் தலைப்புக்கு துரோகமாக இருக்கும். எனவே இரண்டும் கலந்தே என் உரை அமைந்தது. அரைமணி நேர உரை என்பதால், நீளம் கருதி இரண்டு பகுதிகளாகத் தரப்படுகிறது. இது இரண்டாம் பகுதி. முதல்பகுதியைக் காண இங்கே சொடுக்கவும். நேரம் கருதி உரையில் சொல்லாமல் விடப்பட்ட விஷயங்களும் இதில் இருக்கும். வாப்பளித்த தில்லிகைக்கு - இப்பதிவின் படங்களுக்கும் சேர்த்து -  நன்றி.)


இந்தியிலிருந்து தமிழுக்கு வந்ததைப் பார்த்தால், சரஸ்வதி ராம்நாத் படைப்பாளியாகத் தொடங்கி, மொழிபெயர்ப்பாளராகப் புகழ் பெற்றவர். இந்தியிலிருந்து தமிழுக்கு பல நாவல்களை அளித்தவர். ஜெய் சோம்நாத், தர்பாரி ராகம், ராதையுமில்லை ருக்மணியுமில்லை ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்தி வழியாக அசாமி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ராஜஸ்தானி, மணிப்புரி, ஒரிய மொழிகளின் இலக்கியங்களையும் தமிழுக்குத் தந்தார் அவர். நிர்மல் வர்மா, அஜித் கெளர், அம்ரிதா ப்ரீதம், மோகன் ராகேஷ் போன்ற இந்தியின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளையும் தமிழாக்கம் செய்தவர்.

சௌரிராஜன், எச். பாலசுப்பிரமணியன் இருவருமே தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் ஏராளமான நூல்களைத் தந்திருக்கிறார்கள்.

சுருங்கச் சொன்னால், ஜைனேந்திர குமார், கிரிராஜ் கிஷோர், பீஷம் சாஹனி, விஷ்ணு பிரபாகர், முன்னர் குறிப்பிட்ட நிர்மல் வர்மா, மோகன் ராகேஷ் உள்ளிட்ட இந்தியின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரின் நூல்களும் ஓரளவுக்கு தமிழில் வந்து விட்டன.

நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள மொழியாக்க நூல்களை நான் பட்டியலிடப்போவதில்லை. நீங்களே எளிதில் அறிய இயலும்.

முத்தையா மொழிபெயர்ப்பில் வால்காவிலிருந்து கங்கை வரை எனக்குத் தெரிந்து 25 பதிப்புகள் கண்டிருக்கிறது. மாஜினி மொழிபெயர்ப்பில் சிந்து முதல் கங்கை வரையும் பல பதிப்புகள் கண்டுள்ளது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் கிட்டத்தட்ட அனைத்துப் படைப்பாளிகளின் எழுத்துகளும் தமிழுக்கு வந்துள்ளன. ஆனால் தமிழிலிருந்து இந்திக்குச் சென்றவை மிகக் குறைவே.

இதில் பெரிதும் பங்காற்றியிருப்பது சாகித்ய அகாதமியும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனமும்தான். என்பிடி, ஆதான் பிரதான் - கொடுக்கல் வாங்கல் - என்ற வரிசையின்கீழ் ஒரு இந்திய மொழியிலிருந்து வேறு இந்திய மொழிகளுக்கு நூல்களை மொழியாக்கம் செய்தது. சாகித்ய அகாதமி விருது பெறுகிற படைப்புகள் அனைத்தையும் என்பிடி விருது பெற்ற மொழியைத் தவிர வேறு மொழிகளில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த வழக்கம் அறிவிப்புகள் இல்லாமலே கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

சரஸ்வதி ராம்நாத் தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அகிலன், நீல.பத்மநாபன், தி.ஜானகிராமன், பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதிமணியன், சங்கர நாராயணன் என பலருடைய படைப்புகளை இந்தியில் தந்தவர். கனிமொழி, ரவி.சுப்ரமணியன், மகுடேசுவரன் ஆகிய இளங்கவிஞர்களுடைய கவிதைகளையும் மொழிபெயர்த்திருப்பதாக அறிய வந்தேன்.

'மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ' என்று காண்டேகரே கூறிய கா,ஸ்ரீ.ஸ்ரீ. இந்தி இலக்கியவாதிகளின் தற்பெருமையைக் கண்டு பொருமிப்போய் ஏராளமான சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இந்திக்கு வழங்கினார். பாரதியின் தராசு கட்டுரைகளை இந்திக்குத் தந்திருக்கிறார். இந்தியச் சிறுகதைகளின் தொகுப்பில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, போன்றோர் படைப்புகள் இடம்பெறச் செய்தார்.

இந்தியிலிருந்தும் குஜராத்தியிலிருந்தும் தமிழுக்குத் தந்த ரா. வீழிநாதன், ஜெகசிற்பியனின் ஜீவகீதம், ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம், கல்கியின் அலை ஓசை உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்திக்கு அளித்திருக்கிறார்.

கு. சின்னப்பபாரதி, நீல. பத்மநாபன் உள்ளிட்ட அண்மை எழுத்தாளர்கள் சிலரின் பல நூல்கள் இந்தியில் வந்துள்ளன என்றால் அதற்குக் காரணம் இந்திப் பதிப்பாளர்களிடம் இருக்கும் ஆர்வம் அல்ல. ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளர்களும், தமிழக அரசின் ஒரு துறை தமிழ் நூல்களை இந்திக்கு அறிமுகம் செய்ய எழுத்தாளர்களுக்கு மானியம் தருவதும்தான். மணிமேகலை பிரசுரம் வளரும் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கி நூல்களை வெளியிடுவது போல அந்த மானியத்தை வாங்கிக் கொண்டு ராஜ்கமல் போன்ற பதிப்பகங்கள் அச்சிட்டு லாபம் பார்க்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஜெயகாந்தன் போன்றவர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றி வடக்கே அதிகம் தெரியாது.

தில்லியில் இருக்கும் பேராசிரியர் ஆர்.கே. சேத் அவர்களின் தலைமையில், தொழிலதிபர் மகாலிங்கம் அவர்களின் நிதியுதவியாலும் பாலசுப்பிரமணியன் உழைப்பாலும் திருவாசகம் உள்ளிட்ட பல சைவ சித்தாந்த நூல்கள் இந்தியில் வெளிவந்துள்ளன. சேத் உடல்நலம் குன்றியிருக்கிறார். பாலசுப்பிரமணியனும் பல நூல்களின் பணியில் இருக்கிறார். எனவே இதுபோன்ற நூல்கள் இந்தியில் இனி வெளிவரும் சாத்தியம் இல்லை.

சங்க இலக்கியங்கள் பதினெட்டையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியில் மொழிபெயர்த்துள்ளது.

திருக்குறள், பாரதியார் கவிதைகள், சைவ இலக்கியங்கள், கருணாநிதியின் ஒரே ரத்தம் உள்பட 24 நூல்களை இந்திக்குத் தந்திருக்கிறார் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட, சென்னை மாகாணக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த என். சுந்தரம்.

பேராசிரியர் நாச்சிமுத்து வழிகாட்டலில், தொல்காப்பியத்தை பாலசுப்பிரமணியன் இந்தியில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்ததிகாரம் முடிந்து விட்டது. சொல்லதிகாரம் இறுதிநிலையில் உள்ளது.

91இல் இந்தியச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிடத் துவங்கிய கதா, தமிழின் புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சு.ரா., அசோகமித்திரன், இமயம் உள்பட சில நாவல்களையும் வெளியிட்டுள்ளது.

சின்னப்பபாரதி, ராஜம் கிருஷ்ணன், சு. சமுத்திரம், சூடாமணி, பிவிஆர், அகிலன், நா.பா., லட்சுமி, இரா. முருகன் என பலருடைய எழுத்துகளை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார் விஜயலட்சுமி சுந்தர்ராஜன் என்பவர்.

பட்டியல் முழுமையானதல்ல என்றாலும் இந்தியில் எப்படி தமிழ் நூல்கள் வெளி வந்துள்ளன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். எனவே, இப்போது  இதில் உள்ள சிக்கல்களை சற்றே பார்ப்போம்.

இலக்கிய விருது மட்டுமே வழங்கி வந்த சாகித்ய அகாதமி, மொழியாக்க விருதுகளையும் வழங்கத் துவங்கியது. இந்த விருது, இணைப்பு மொழிவழியாக இல்லாமல், இந்திய மொழிகளில் நேரடி மொழியாக்கத்துக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த விருதுகளில் பெரும்பாலான நூல்கள் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்பது சிறப்புச் செய்தி. அதாவது, தரமான நேரடி மொழிபெயர்ப்புகள் மற்ற பதிப்பகங்களால் வெளியிடப்படுவது மிகக் குறைவே என்பது தெரிகிறது. விருதுகளின் பட்டியல் இருக்கிறது. அதை நான் படிக்கப்போவதில்லை.

தமிழிலிருந்து இந்திக்கு வரவேண்டியவை என்று பட்டியலிடுவது எனக்குக் கடினம். இந்தியிலிருந்து தமிழுக்கு வர வேண்டிய எழுத்தாளர்கள் என்று எனக்குத் தோன்றும் சிலரை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழில் மொழியாக்கப்பதிப்புகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழில் இலட்சியவாத எழுத்துகளுக்கு பெரும் ஈர்ப்பு இருந்ததால் காண்டேகர் மிகவும் பிரபலம் ஆனார். அதே காலகட்டத்தில் இந்தியில் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதுடன், தமிழுக்கு அறிமுகம் இல்லாத தேசப் பிரிவினையின் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

இன்றைய சமூகச் சூழலில், மதவாதம் புதிய முகத்துடன் ஊடுருவிக் கொண்டிருக்கிற நேரத்தில், இந்தக் கதைகளை தமிழுக்குத் தருவது அவசியம் என நான் கருதுகிறேன். உதாரணமாக, அண்மையில் ஞானபீட விருது பெற்ற அமர் காந்த், ஏற்கெனவே இந்த விருது பெற்ற மகாதேவி வர்மா, சுமித்ரநந்தன் பந்த், ஏராளமாக எழுதி 48 வயதுக்குள் மறைந்து போன ஜெயசங்கர் பிரசாத், நிராலா எனப்படும் சூரியகாந்த் திரிபாடி, இவர்களுடைய எழுத்துகள் எதுவும் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் எல்லாருமே கவிஞர்களாகவும் இருந்தவர்கள் என்பது சிறப்பு.

அந்தா யுக் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகத்தையும், சூரஜ் கா சாத்வான் கோடா என்னும் நாவலையும் அளித்த தரம்வீர் பாரதியின் நாவல்கள். ஹரிவன்ஷ் ராய் பச்சனின் கவிதைகள் என இன்னும் பலரது படைப்புகளை நாம் தமிழில் அறிய வேண்டியிருக்கிறது.

இவையெல்லாம் தமிழில் வருமா... வரக்கூடிய சாத்தியம் உண்டா... சாத்தியங்கள் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. காரணம் ஒன்றல்ல, பல. நான் முன்னர் குறிப்பிட்ட பாரதி, சேநாபதி, குமாரசாமி, உள்ளிட்ட பலரும் பன்மொழி வித்தகர்கள். அவர்களுடைய நோக்கம் மொழியாக்கம் செய்து பொருள் சேர்க்க வேண்டும் என்பதாக மட்டும் இருக்கவில்லை. தான் சுவைத்தவற்றை தமிழர்க்குத் தரவேண்டும் என்ற ஆர்வம் காரணம். அதனால்தான் அவர்கள் பெயர்கள் நிலைத்து நிற்கின்றன. அத்துடன், மொழியாக்கம் செய்யும்போது தமிழுக்கு அறிமுகம் இல்லாதவற்றை அடிக்குறிப்புகளாக விளக்கினார்கள். அதற்காக சிரத்தை எடுத்துக்கொண்டார்கள்.

சான்றாக, ஹோம்கமிங் என்பது தாகூரின் கதை. சிறுவர் கதை என்றுதான் கூற வேண்டும். அதை மொழிபெயர்த்த பாரதி, வீடு திரும்புதல் என்றோ, வீடு சேருதல் என்றோ தலைப்பு வைக்கவில்லை. ரஜாக்காலம் என்று தலைப்பு வைத்தார். பண்பாட்டுரீதியாக தமிழர்களுக்கு அறிமுகமில்லாத செய்திகளுக்கு அடிக்குறிப்புகள் கொடுத்திருக்கிறார். கிரிபாலா என்ற கதையில், மொழிபெயர்ப்பாளரின் ஆட்சேபம் என்றேகூட ஒரு அடிக்குறிப்பு கொடுத்திருக்கிறார் என்கிறார் சலபதி. அதேபோல, கா.ஸ்ரீ.ஸ்ரீ. த.நா. சகோதரர்கள் உள்ளிட்டோர், தலைப்புகளை நேரடி மொழியாக்கம் செய்யவில்லை.

ஆனால் இன்று அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் மொழியாக்கம் செய்பவர்கள் குறைவு. போதாதற்கு, கல்வித்துறையில் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழ்மீதான ஆர்வம் குறையும்போது பிறமொழிகளைக் கற்கும் ஆர்வம் இருக்கும் சாத்தியமும் இல்லை. எனவே வருங்காலத்தில் நேரடி மொழிபெயர்ப்புகள் இன்னும் குறையும் சாத்தியம்தான் இருக்கிறதே. அப்படியே ஆனாலும் அதன் தரம் குறைவாகவே இருக்கும்.

அடுத்த பிரச்சினை பதிப்பகங்கள். தமிழகத்தின் வர்த்தகப் பதிப்பகங்கள் பலவும் மொழியாக்க நூல்களில் கவனம் செலுத்துவதை அதிகரித்துள்ளன என முன்னர் குறிப்பிட்டேன். இந்த நூல்கள் அனைத்துமே இலக்கியங்களா - நல்ல இலக்கியங்களா என்பது பெரும் கேள்வி. உதாரணமாக, தமிழகத்தின் பிரபலமான ஒரு பத்திரிகை மலையாளத்திலிருந்து ஏராளமான குறுநாவல்களை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானவை வாசகனைக் கிளர்ச்சி அடையச்செய்கிற நாவல்கள். வாசகனை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்கிற எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை.

பதிப்பகங்கள் எது விற்குமோ அதை மொழியாக்கம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். தொடங்கிய பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும், முதலீடு முடங்கக்கூடாது என்பதுதான் அவர்களின் அக்கறையாக இருக்கும், அப்படித்தான் இருக்கிறது. அதனால்தான், மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு படைப்பை மீள்பார்வை செய்து செப்பனிடும் வழக்கத்தை எந்தப் பதிப்பகமும் பின்பற்றுவதில்லை. தன் மொழியாக்கம் எவ்வாறு செப்பனிடப்பட்டது என்பதை ஸ்ரீதரன் எழுதியதைப் படித்தது இங்கே நினைவு வருகிறது.

தனியார் பதிப்பகங்கள் மட்டுமல்ல, அரசு நிறுவனங்களான சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் கூட இப்போதெல்லாம் பிரதியை செப்பனிடும் பணியைச் செய்வதில்லை. அப்படியும் சில நல்ல மொழியாக்கங்கள் வருகின்றன என்றால் என்னைப் போன்றவர்களின் சிரத்தைதான் காரணம் என்பதை தற்பெருமை ஏதும் இல்லாமல் பொறுப்புடன் ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமும் இல்லை. பதிப்பகங்களின் இந்தப் போக்கினால் யாரும் பாதிக்கப்படுவதாக கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. மொழியாக்கம் செய்தவருக்கு பணம் கிடைத்து விட்டது, அவருடைய தன்விவரக் குறிப்பில் இன்னொரு நூல் சேர்ந்து விட்டது, பதிப்பகத்துக்கு புத்தகம் வந்து விட்டது, வாசகனுக்கு படிக்க புத்தகம் கிடைத்து விட்டது. மொழியாக்கப் புள்ளிவிவரத்தில் இன்னொரு நூல் சேர்ந்து விட்டது.

மற்றொரு பிரச்சினை, இணைப்பு மொழியின் வாயிலாக மொழியாக்கம் செய்யப்படுவது. சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர், கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒரு சிறுகதையை தமிழில் தருகிறார். அவரே மொழியாக்கம் செய்கிறாரா என்பதே எனக்கு சந்தேகம்தான். அதுவும், உருது, ஒரியா, பஞ்சாபி, இந்தி என பல்வேறு மொழிக்கதைகள். அத்தனையும் ஆங்கிலவழி மொழியாக்கம் செய்யப்பட்டவைதான். இருந்தாலும் ஆங்கிலவழி மொழியாக்கம் என்று அவர் குறிப்பிட்டதே இல்லை.

மொழிபெயர்ப்பாளன் மூலமொழியிலும் இலக்குமொழியிலும் புலமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. புலமை இருந்தால் மட்டும் போதாது, இரண்டுமொழிப் பண்பாடுகளையும் புரிந்தவனாக, புரியாதவற்றைக் கேட்டு அறிந்துகொள்ளத் தயங்காதவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இன்று குறைவு.

தமிழுக்கும் இந்திக்கும் - பால - சுப்பிரமணியன் என பாராட்டப்படும் எச். பாலசுப்பிரமணியன் அவர்கள் ஏராளமான நூல்களை இரண்டு மொழிகளிலும் மொழியாக்கம் செய்திருக்கிறார். பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதைகள் நூல் மொழியாக்கத்துக்காக சாகித்ய அகாதமி விருதும் பெற்றிருக்கிறார். மலையாளத்திலிருந்தும் மொழியாக்கம் செய்தவர். வைரமுத்துவின் கவிதைகளை பிந்து சிந்து கீ ஓர் என இந்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருதமும் தெரியும். அவர் எந்த மொழியாக்கப் பணியை மேற்கொண்டாலும், பிரதியை எழுதும்போதே தனித்தாளில் தன் ஐயங்களை பக்க எண்களுடன் குறித்துக்கொள்வார். அந்தந்த மொழியினரிடம் தயங்காமல் சென்று தெளிவுபடுத்திக் கொள்வார். அதனால்தான் அவருடைய மொழியாக்கங்கள் சிறப்பாக அமைகின்றன.

இப்படி தனக்குத் தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கும் மனப்பக்குவம் இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலரிடமும் இல்லை. நான் எதற்கு மற்றவனிடம் கேட்க வேண்டும் என்ற ஆணவம், கேட்டால் தன் மதிப்புக் குறைந்துவிடுமோ என்ற தயக்கம், கேட்க விரும்பினாலும் வாய்ப்பு இல்லாத சூழல் - இவையெல்லாம் சேர்ந்து மொழியாக்கத்தை சிதைத்து விடுகின்றன.

இன்னொரு முக்கியப் பிரச்சினை தமிழின் தனித்தன்மை. கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் திராவிட மொழிகள்தான் என்றாலும் வடமொழிச் சொற்கள் பலவற்றை தனதாக்கிக்கொண்ட மொழிகள் அவை. தமிழுக்கும் இந்திக்கும் உள்ள இலக்கண வேறுபாடு மிக அதிகம். தமிழிலும் பல தமிழ்கள் - செந்தமிழ், கொங்கு தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ். ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனையோ சொலவடைகள். அவற்றில் பலவற்றை மொழியாக்கம் செய்வது சிரமம் அல்ல, சாத்தியம்கூட இல்லை என்பதே உண்மை. சரியான புரிதல் இல்லாவிட்டால் மொழியாக்கம் தோற்றுப் போகும்.

சுவையான ஒரு உதாரணம் காட்டலாம். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் என்ற நூல். தமிழில் வெளியாக உள்ளது. அந்த நூலில் ஒரு இடத்தில் பீபி ஷான் சொன்னார் என்று இருந்தது. திருப்பித்திருப்பி வாசித்துப் பார்த்தும் புரியவில்லை. காந்தியின் ஆசிரமத்தில் பீபி என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லையே என்னவாக இருக்கும் என்று குழம்பினோம். மூலத்தை சரிபார்த்தபோது - Bibishan என்று இருந்தது. அப்புறம்தான் புரிந்தது விபீஷணனை ஆங்கிலத்தில் பிபீஷன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது புரியாமல் தமிழ் மொழிபெயர்ப்பாளர் பீபி ஷான் ஆக்கி விட்டார். இதுபோல பலநூறு உதாரணங்கள் என்னிடம் உண்டு. அதற்கெல்லாம் நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

மொழியாக்கம் செய்பவர்கள் மூலமொழி பேசப்படும் பகுதியில் வசித்தால் அந்த மொழியாக்கம் சிறப்பாக அமைகிறது. கிருஷ்ணமூர்த்தி கோல்கத்தாவில், பாவண்ணன் பெங்களூரில், பாலசுப்பிரமணியன் தில்லியில். தி.சா. ராஜு ராணுவத்தில் பணிபுரிந்ததால் பஞ்சாபில் இருந்து தமிழுக்குத் தந்தார். குஜராத்தியிலிருந்து யாரும் இல்லாததால்தான் இருக்கிற நூல்களிலேயே குறைவான நூல்கள் குஜராத்திலிருந்து வந்துள்ளன. அண்மையில் மறைந்த தி.சு. சதாசிவம் பெங்களூரில் வசித்து ஏராளமான நூல்களை தமிழுக்குத் தந்தவர். விஜயலட்சுமி சுந்தர்ராஜன் மத்தியப்பிரதேசத்தில் பிறந்து மகாராஷ்டிரத்தில் படித்து வளர்ந்தவர். ஒடியாவிலிருந்து யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. ஒரிய மொழியாக்கத்துக்காக சாகித்ய அகாதமியின் விருது பெற்ற இந்திரன் ஒரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்பது மிகுந்த தேடலுக்குப் பிறகுதான் தெரிய வந்தது. தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மாரியப்பன் அசாமிய நாவலை ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்த்தார். அஸாமியா அறிந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு ஜாம்பவான்கள் அனைவருமே படைப்புத்துறையில் இருந்தவர்கள். இருந்தாலும் மொழியாக்கமும் செய்திருக்கிறார்கள். அத்தகைய பழங்கால ஆசாமிகளுக்கு படைப்பு மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்ததே தவிர, தான் பெரிய எழுத்தாளன், மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது என்ற சிந்தனை இருக்கவில்லை.

சிறப்பான ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், நேஷனல் புக் டிரஸ்ட் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட ஒரு நூல். ஆமையும் முயலும் என்ற சிறுவர் கதை. எல்லாரும் அறிந்த இந்தப் பழைய கதையை எழுதியவர்-மொழிபெயர்த்தவர்-சித்திரம் வரைந்தவர் பெயர்களைக் கேட்டால் நீங்கள் வியப்படைவீர்கள். கதைசொன்னவர் ஜாகீர் உசேன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அதற்கு சித்திரம் வரைந்தவர் எம்.எப். உசேன். இந்த மாபெரும் மனிதர்களுக்கு சிறுவர் கதைதானே என்ற எண்ணம் எழவில்லை. ஆனால் நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு மொழியாக்கம் என்பது கீழானதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய படைப்புகள் எல்லா மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்ற பேராசை மட்டும் இருக்கிறது. தான் மட்டும் எதையும் மொழியாக்கம் செய்யும் விருப்பம் இருப்பதில்லை.

இந்தப் பின்னணியில், ஓய்வு நேரங்களில் புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் மறைந்துபோய் செல்லிடப்பேசிகளின் ஒலிப்பான்களைக் காதில் செருகிக் கண்களை மூடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிற திருப்புமுனைக் காலகட்டத்தில் மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் என்ன செய்யலாம்....

முதலாவதாக, வாசிக்கும் வழக்கத்தை நம் குழந்தைகள் மனங்களில் விதைக்க வேண்டும். சுற்றிலும் உள்ள சூழலின் தாக்கத்தில் உள்ள குழந்தைகளை இவ்வாறு மாற்றுவது சற்று சிரமம்தான் என்றாலும், வாசிப்பை மட்டும் நேசிக்கக் கற்றுவிட்டால் அவர்களால் அதை நிறுத்த முடியாது. அடுத்து -இங்கே இந்த அரங்கில் இருக்கும் என்னையும் உங்களையும் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். ஆனால் அதற்கான முனைப்பும் ஆர்வமும் நம்மிடம் இல்லை. சிலருக்கு ஆர்வம் இருக்கும், ஆனால் நம்மால் முடியுமா என்ற நம்பிக்கையின்மை. நம்மைப்போல ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கிற புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் மொழியாக்கத் துறையை இன்னும் சிறப்பிக்க முடியும். புலம்பெயர்ந்த பகுதியில் பிறந்து வளரும் நம் குழந்தைகளிடம் இதை அதிகம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் பிறந்து, தமிழ் ஆர்வத்தோடு வளர்ந்து தில்லியில் வசிக்கிற நாம் சற்றே முனைப்புக் காட்டினால் இந்தியை நன்கு பயன்படுத்த முடியும். தமிழிலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கம் செய்ய முடியும்.

நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் சரியான மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்காமல் தவிக்கின்றன. இதுதவிர தேசிய மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றும் துவங்கியிருக்கிறது. அதன் இலக்குகள் பிரம்மாண்டமானவை. தமிழ் செம்மொழி ஆனபிறகு தமிழின் இலக்கியங்களை பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்ய மானியமும் கிடைக்கிறது. உதயம் சீனிவாசன் அண்மையில் திருக்குறளை கன்னடத்தில் மொழிபெயர்த்து அது நூலாக வெளிவர இருக்கிறது. இவை தவிர, தொழில்முறை மொழியாக்கப் பணிகளும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. சாகித்ய அகாதமி மொழியாக்க விருது மற்றும் திசை எட்டும் மொழியாக்க விருதுக்கான வாய்ப்புகளும் உண்டு. எனவே, மொழியாக்கப் பணிகளுக்கு இலக்கிய அங்கீகாரத்துடன் பொருளாதார ரீதியான லாபங்களும் உண்டு.

எனக்கு தாய்மொழி உருதுதான். சிறுவயதில் வீட்டில் உருது எழுதவும் படிக்கவும் கற்றவன்தான். ஆனால், ஊரில் நூலகத்தோடு ஏற்பட்ட உறவும், வாழ்க்கைச் சூழலும் தமிழோடு மட்டும் உறவை வலுப்படுத்தி விட்டது. இன்று உருது மொழியில் முதல் எழுத்து தவிர அட்சரம் தெரியாது. இதற்காக வருந்தாத நாளே கிடையாது. மொழியை இழப்பது சுலபம், கற்பது கடினம் என்பது புரிந்தபோது மிகவும் தாமதமாகி விட்டது. உருது தெரிந்திருந்தால் எத்தனை நூல்களை தமிழுக்குத் தந்திருக்கலாம், தமிழ் நூல்களை உருதுவுக்கு அறிமுகம் செய்திருக்கலாம் என்ற வருத்தம் அழுத்துகிறது.

இந்தியை நான் முறையாகப் பயின்றதில்லை. ஆனால் சுயமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டேன். இன்று இந்தியில் பிழைதிருத்தம் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். தமிழ் எனக்கு சோறுபோடுகிறது என்று முன்னர் ஒருமுறை கூறினேன். இப்போது இந்தியும் எனக்கு சோறு போடுகிறது என்று பெருமையாகக் கூற முடியும். சிறிய நூல்களை மொழியாக்கம் செய்யும் அளவுக்குத் தேர்ச்சி உண்டு என்றாலும் நேரமின்மை தடையாக இருக்கிறது. இங்கே இருக்கிற யாரேனும் இந்திமொழி கற்றுக்கொண்டு மொழியாக்கம் செய்ய முன்வருவார்களே ஆனால் இயன்ற அளவுக்கு ஊக்கப்படுத்தத் தயாராக இருக்கிறேன்.

வடக்கே உள்ளவர்களில் பலருக்கு தெற்கே நான்கு மொழிகள் உள்ளன என்பதே தெரியாது. அவர்களைப் பொருத்தவரை எல்லாம் மதராசிதான். இவர்களில் பலருக்கும் இந்தி உசத்தி என்ற எண்ணமும் உண்டு. நீங்களெல்லாம் இந்தி கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அது உங்கள் தேவை - தலைவிதி, எனக்கு தமிழ் கற்க வேண்டிய தேவை இல்லை என்ற சிந்தனை இங்கே உள்ளவர்களுக்கு அதிகம். எனவே இங்கே இருப்பவர்கள் தமிழ்ப் படைப்புகளை தமது மொழிகளில் பெயர்ப்பார்கள் என்று எவரும் கற்பனைகூடச் செய்யத் தேவையில்லை. தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்குத் தருவதானால் அதைத் தமிழர்கள்தான் செய்ய முடியும். ஆகவே, புலம்பெயர்ந்த காரணத்தால் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புள்ள நமக்கு இரட்டைப் பொறுப்பு இருக்கிறது. புரிந்து செயல்பட்டால் தமிழ் சிறக்கும்.




10 comments:

  1. இரண்டு பகுதிகளையும் ஒன்றே படித்து முடித்தேன். நேற்று நேரக் குறைவின் காரணமாக விட்ட சில விஷயங்களையும் இன்று படித்தபோது ரசித்தேன்.

    நல்ல பகிர்வு. உங்கள் பக்கத்தினைப் பற்றி என் வலைப்பதிவிலும் விரைவில் எழுதுகிறேன் - உங்கள் அனுமதியுடன்...

    ReplyDelete
  2. நன்றி வெங்கட். உரையை விட கட்டுரை நன்றாகவே இருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. உங்கள் வலைப்பூவில் பகிர்வதில் மகிழ்ச்சி.
    நான் தில்லிப் பதிவர்கள் அனைவரின் வலைப்பூக்களையும் வலதுபக்கத்தில் எப்போதும் பகிர்ந்து வருகிறேன். என் பக்கத்துக்கு வந்தவர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் பக்கங்களுக்குச் செல்வதை டிராபிக் விவரங்களில் காண முடிகிறது. ஆனால் பலர் தொடர்ந்து எழுதாதது வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. அருமையான உரை. நேரில் காண இயலவில்லை. மன்னிக்கவும். இங்கு பதிவிட்டமைக்கு நன்றிகள்.

    காண்டேகரைப் பற்றி தாங்கள் கூறியதைப் படித்தவுடன் அவருடைய ‘சுவர்’ (மு.வ. அவர்கள் மொழிபெயர்த்தது என்று நினைவு) ஞாபகம் வருகிறது.

    பல நல்ல தகவல்கள்.

    நன்றிகள்

    ReplyDelete
  4. நன்றி வெங்கட் சீனிவாசன்.
    நீங்களும் தில்லிப் பதிவர் என்று இப்போதுதான் பார்த்தேன். உங்கள் வலைப்பூவுக்கும் என் பக்கத்தில் இணைப்புக் கொடுத்து விட்டேன் - உங்கள் அனுமதி இல்லாமலே.

    ReplyDelete
  5. சிறப்பான உரை . பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. நிறையத் தகவல்கள் அறிந்துக் கொண்டேன் ... இந்தி இலக்கியத்தில் நமக்கு அறிவு கம்மி !!! அப்டேட் பண்ணனும் ..

    ReplyDelete
  7. // உங்கள் வலைப்பூவுக்கும் என் பக்கத்தில் இணைப்புக் கொடுத்து விட்டேன் - உங்கள் அனுமதி இல்லாமலே.//

    கரும்பு தின்ன கூலியா? இதற்கு அனுமதி எதற்கு? நன்றி அல்லவா நான் சொல்ல வேண்டும்.

    நன்றிகள்.

    ReplyDelete
  8. விரிவான பயனுள்ள கட்டுரை.
    பொதுவாக மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் சொல்லப்பட்ட விஷயத்தை மற்றொரு மொழியின் சாத்தியக்கூறுகள்,அர்த்தப்படும் விதம் ஆகியவற்றை முதலாகக் கொண்டு -ஒன்றை மற்றொன்றாக - இழைத்து உருவாக்குவது தான். எனவே அதன் முக்கியத்துவம் மிக அதிகம். ராதுகா பதிப்பகம் தந்த பல ரஷ்ய நாவல்கள் இடைமொழி ஒன்றில்லாமல் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதால் தான் அந்த மொழியின் கூறுகள் அந்த கலாசாரத்தின் பின்னணி போன்றவற்றை -ஓரளவு- நம்மால் அறியமுடிந்தது. உணரமுடிந்தது என்பதே சரி.
    இடைமொழியாக ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும்போது அதன் சாரத்தில் பாதி கரைந்து விடும் என்பது உண்மை என்பதால் அந்தந்த மொழிப் படைப்புகளை இரு மொழியும் நன்கு அறிந்த ஒருவர் கையாளும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கிறது என்ற விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு ஹெச்.பாலசுப்ரமணியம் செய்து வரும் மொழி பெயர்ப்புகளையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் பயன்தரும் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
    உங்கள் பதிவுகளில் மிக முக்கியமான ஒன்றாய் இதைக் கருதுகிறேன்.

    ReplyDelete
  9. பாராட்டுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
    இலக்கியத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலுமே "நாம் பெற்ற அறிவு" கம்மிதான் இக்பால் செல்வன். உங்கள் பின்னூட்டம் கண்டதும் நினைவுக்கு வந்தது வெங்கட் ஸ்ரீநிவாசனின் வலைப்பூ நினைவு வந்தது - கையளவுமண்.பிளாக்ஸ்பாட்.காம். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  10. நன்றி சந்துரு. தலைப்புக்குப் பொருந்தாது என்பதால் ரஷ்ய மொழிபெயர்ப்புகள் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருந்தும் தொடவே இல்லை.

    ReplyDelete