Saturday, 3 August 2013

படித்ததில் பிடித்தது - கனவு ஆசிரியர்


ஆசிரியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? கல்வி ஏன் இப்படியாகி விட்டது? என்ற புலம்பல்களின் பின்னணியில் நாம் தொடர்ந்து ஆசிரியர்களை மட்டுமே எவ்வளவு காலத்திற்குக் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ... ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடப்புத்தக வடிவில் சொல்லாமல் கொஞ்சம் இலக்கிய ரசனையோடும் சமூகப் பார்வையோடும் ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையின் விளைவை இந்த நூல்.
- முன்னுரையில் தொகுப்பாசிரியர் க. துளசிதாசன் கூறுவதே இந்த நூலின் அறிமுகத்துக்கும் போதும்.

அசோகமித்திரனில் தொடங்கி, பிரபஞ்சன், பொன்னீலன், தியடோர் பாஸ்கரன், தமிழ்ச்செல்வன், பிரளயன், பாமா, ஞாநி, டிராட்ஸ்கி மருது, எஸ். ராமகிருஷ்ணன், த.வி. வெங்கடேசுவரன், இறையன்பு, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

* * *

திங்கட்கிழமைதோறும் அரைப்பக்கம் பிஸினஸ் லைன் என்ற தினப் பத்திரிகையில் எட்டு பிரமுகர்களைக் கட்டம் கட்டிய அமைப்பில் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அதில், உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி இருக்கிறது. எட்டு பேரில் ஆறு பேர் பள்ளி ஆசிரியர் ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார்கள்....

அசோகமித்திரன் கூறுவதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. கனவு ஆசிரியர் என்ற தலைப்பைக் கேட்டதுமே நம் ஒவ்வொருவருக்குமே இதேபோன்ற எண்ணம்தான் தோன்றுகிறது. அதேபோலத்தான் இந்த நூலில் கட்டுரை எழுதிய பலரும் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான கட்டுரைகள் இப்படிப்பட்ட நினைவலைகளாகவே இருக்கின்றன.

தன் பிள்ளை என் குறைவான மார்க் வாங்கினான் என்பதை ஆசிரியரிடம் கேட்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு. ஆசிரியர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பதிலளிக்க முடியாதவர்கள் தம் பணியைச் சரியாகச் செய்யத் தவறுகிறார்கள் என்று கருதுகிறது பிரெஞ்சு அரசு. வேலைக்குச் சேர்ந்து விட்டால் 60 வயது வரை எவனும் நம்மை ஆட்ட முடியாது என்கிற கித்தாப்பு பிரெஞ்சு அரசில் இல்லை என்கிறார் பிரபஞ்சன். மற்றபடி பிரபஞ்சனின் கட்டுரை தன் நினைவலைகளைப் பகிர்வதாக இருக்கிறது. 

பிரபஞ்சன் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். பிரபலப் பள்ளி ஒன்றில் தன் சிநேகிதியுடன் அவரது குழந்தையைச் சேர்க்கச் செல்கிறார். என்ன படித்திருக்கிறீர்கள் என்று பிரின்சிபல் கேட்க, பட்டதாரி சிநேகிதி, பத்தாம் வகுப்புவரை படித்ததாகச் சொல்கிறார். பட்டதாரிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே இடம் உண்டு என்கிறார் பிரின்சிபல். நான் எழுத்தாளன், இந்தப் பையனுக்கு நீங்கள் சீட் தரவில்லை என்றால் அதை எழுதி உலகத்தின்முன் கொண்டு செல்வேன் என்கிறார் பிரபஞ்சன். பையனுக்கு சீட் கிடைத்து விட்டது. 

பிரபல தனியார் பள்ளிகளின் அவலநிலையைச் சுட்டுவதற்காக எழுதப்பட்ட இந்தச்சம்பவம், என்ன சொல்ல வருகிறது? மறுக்கப்படுகிற ஒவ்வொரு குழந்தைக்கும் பிரபஞ்சன் ஆதரவாக வருவாரா அல்லது பிரபலத்தை அழைத்துச்செல்ல வேண்டுமா? பள்ளியின் பெயரையும் சுட்டி தோலையுரித்திருக்க வேண்டும் அல்லவா ஒரு எழுத்தாளர்?

மாணவர்களை அடிப்பது குறித்தும், ஆசிரியர்களின் சாதிப் பார்வைகளையும் அலசுகிறது தியடோர் பாஸ்கரனின் சுருக்கமான கட்டுரை. அவருடைய பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். இவரும் தன் ஆசிரியர்கள் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டுரைகளை அனுப்புமாறு அனைவருக்கும் கடிதம் எழுதிய தொகுப்பாசிரியர், கட்டுரைகளை கடித வடிவில் அனுப்புமாறு கூறியிருப்பார் போலத் தெரிகிறது. சில கட்டுரைகள் கடித வடிவில் உள்ளன. ஆனால் துவக்கம் கடித வடிவிலும் போகப்போக கட்டுரையாகவும் மாறி பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. குறிப்பாக, இந்திய ஆட்சிப்பணித்துறையைச் சேர்ந்த ஆர் பாலகிருஷ்ணன், இறையன்பு ஆகியோரின் கடிதக் கட்டுரைகள் உபதேச நடையில் உயிர்ப்பின்றி இருக்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவராக இருந்த, ஆசிரியப் பணி புரிந்த ச. மாடசாமியின் 3 கடிதங்களும் மேற்கண்ட வகையாகவே இருக்கின்றன.

பேராசிரியர் இரத்தின நடராசனின் நடை இரத்தினச் சுருக்கமான நடை. பட்டுப் பட்டென்று சின்னச்சின்ன வாக்கியங்களில் நினைவுகளைப் பகிர்கிறார். இறுதியில், நல்ல ஆசிரியருக்கான பத்து அம்சங்களை முன்வைத்திருக்கிறார். பிரளயனும் தன் நினைவலைகளைப் பகிர்கிறார் என்றாலும் சுவையான நடையில் சம்பவங்களை விவரிக்கிறார். 

பாமாவின் கடிதக் கட்டுரையும் முன்சொன்ன ரகமாக, கடிதமாகத் துவங்கி கட்டுரையாக முடிகிறது. முழுக்க முழுக்க தன் நினைவுப் பதிவுகளைக் கொண்டது. எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையும் கடிதமாக இருக்கிறது. உபதேசங்களின் குவியல். டிராட்ஸ்கி மருதுவின் சுருக்கமான கட்டுரையும் நினைவுகளைப் பகிர்கிறது. தலைப்புக்கு நியாயம் சேர்க்கவில்லை. 

நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஞாநி. முத்தாய்ப்பான வரிகள் - ஆசிரியன் வேலை அறிவாளியை உருவாக்குவது அல்ல. நல்ல மனிதனை உருவாக்குவது. ... என் மகனின் பள்ளித் தலைமையசிரியர் சகுந்தலா சொல்வார். தினமும் ஒரு குழந்தை ஸ்கூலுக்குப் போகணுமேன்னு அழறது. அப்படி இல்லாம, ஸ்கூல் முடியச்ச அய்யோ வீட்டுக்குப் போகணுமேன்னு அது அழுதாத்தான் அது நல்ல ஸ்கூல்.அப்படிப்பட்ட ஒரு பள்ளியை உருவாக்கும் ஆசிரியர்களில் ஒருவராகவே நான் இருக்க விரும்புவேன்.

த.வி. வெங்கடேசுவரன் கட்டுரை தன் கணித ஆசிரியர் சங்கரனைக் குறித்தது. கசப்பு எனக் கருதப்படும் கணிதத்தை எவ்வாறு சுவையாகக் கற்றுக்கொடுத்தார் என்று உதாரணத்தோடு விளக்குகிறார். சங்கரன் என்னும் வித்தியாசமான, புரட்சிகரமான ஆசிரியரை அறிமுகம் செய்கிறார்.

கீரனூர் ஜாகிர் ராஜா, பவா. செல்லத்துரை ஆகியோரின் கட்டுரைகளும் தன் ஆசிரியர்களின் நினைவலைகளைத் தாங்கியிருக்கிறது. க. துளசிதாசன் கட்டுரை, ஏதொவொரு சொற்பொழிவின் சுருக்கமாகத் தோன்றுகிறது. 

கடைசியாக இடம்பெற்றுள்ளது ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம். இது வலையுலகில் ஏற்கெனவே பலரால் பகிரப்பட்ட கடிதம். அதைப்பற்றித் தனியாகக் கூறத்தேவையில்லை.

இந்நூலின் மிகச்சிறப்பான கட்டுரைகள் என்றால் மூன்றைக் குறிப்பிடுவேன். மூன்றாம் இடம் பெறுகிற கட்டுரை ஆயிஷா இரா. நடராசனின் கட்டுரை. தன் அனுபவங்களைப் பகிர்கிற இவர், புத்தாக்க முறையில் கற்பித்த ஆசிரியர்களின் வழிகள் பலவற்றை உதாரணங்களாகச் சுட்டுகிறார். வாசிப்புச் சுவாரஸ்யத்துடன் தகவல் களஞ்சியமாகவும் திகழ்கிறது.

இரண்டாமிடத்தில் ச. தமிழ்ச்செல்வனின் கட்டுரை. இதைப்பற்றி விவரமாகச் சொல்லப் போவதில்லை. அப்புறம் யாரும் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். முத்தாய்ப்பாக இவர் சொன்னது வரலாற்றுக்கும், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக பாடத்திட்டம் என்னும் மேடையில் நின்று பேசுகிறவர் என் கனவு ஆசிரியர்.

ஆகச் சிறந்ததாகக் கருதும் கட்டுரையாசிரியர் பொன்னீலன். இவரது கட்டுரையைப் பற்றியும் நான் இங்கே எழுதப் போவதில்லை. பதிப்பகத்தாரிடம் அனுமதி பெற்று முழுக் கட்டுரையையும் தனிப்பதிவாக வெளியிட யோசித்திருக்கிறேன். அனுமதி கிடைத்தால் வெளியிடுவேன்

* * *

கடித வடிவிலான பலரின் கட்டுரைகள் எனக்கு ஏமாற்றம் என்று குறிப்பிட்டதை நீங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. நான் தீவிர வாசகன் மட்டுமல்ல, நூல்களை வடிவமைப்பதையும் செம்மைப்படுத்துவதையுமே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவன். எனவே எந்த நூலிலும் அதன் வடிவக் குறைகள் சட்டென என் கண்ணில்படும். எனவே, எனக்குக் குறைகளாகத் தோன்றுகிற நடைகள் உங்களுக்கும் குறைகளாகத் தோன்ற வேண்டும் என்பதில்லை. 

வாத்தியார் பிள்ளை மக்கு, கண்ணை மட்டும் விட்டுவைத்து விட்டு தோலை உரித்து விடுங்கள்... என்பது போன்ற வழக்குகள் நூலெங்கும் பரவிக்கிடக்கின்றன. எழுதியவர்கள் பெரும்பாலும் என்னைவிட மூத்தவர்கள் என்பதால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க... ஏன்னு கேக்க மாட்டேன்” – ஆசிரியராக இருந்த என் அப்பாவின் பொறுப்பில் மாணவனை விடவந்த பெற்றோர் ஒவ்வொருவரும் கூறிய வாசகம் இது. இன்றைய பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறிமுகம் இல்லாத வசனம் இது.

இந்நூல் ஆசிரியர்களுக்கு மட்டுமானதல்ல, பெற்றோருக்கும் பயன்தரக்கூடியது. நூலை வாசிக்க வாசிக்க, ஒவ்வொருவரும் தன் ஆசிரியர்கள், பள்ளி அனுபவங்கள், வாங்கிய அடிகள், வகுப்பறைச் சம்பவங்கள், சக நண்பர்கள் பற்றிய உங்கள் அனுபவங்களும் இணையாக மனதுக்குள் ஓடுவதை உணர்வீர்கள். உங்கள் கடந்த காலத்தை மறுபடி வாழ்ந்து பார்ப்பீர்கள். நீங்கள் அறியாமலே உங்கள் இதழ்களில் புன்னகை நெளிவதை உணர்வீர்கள். அந்த அனுபவத்துக்காகவும் இதைப் படிக்கலாம்.

கனவு ஆசிரியர், க. துளசிதாசன், பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, சென்னை-18.
978-93-81908570. ரூ. 90.


(அட்டைப்படத்தில் இடதுபுறம் ஆசிரியர் மாணவரை அணைத்திருக்கும் முகப்புப்படம் இணையத்தில் கிடைத்தது, பழைய அட்டை போலும். வலப்புறம் தெரியும் அட்டைப்படம் என்னிடம் இருப்பது, புதிய பதிப்பு எனத் தோன்றுகிறது.)

5 comments:

  1. காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆக்ஸ்ட் 10இல் சென்னை சென்று சேர்ந்தபிறகு தான் இனி உங்களைப் படிக்க வருவேன். அதுவரை உங்களுக்கு டாட்டா, சீரியோ, பை-பை. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  2. அருமையான நூலை அருமையாக
    அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அவசியம் வாங்கிப்படித்துவிடுவேன்

    ReplyDelete
  3. புத்தக அறிமுகத்திற்கு நன்றி......

    நேற்று தான் வேறு ஒரு தளத்தில் தனது ஆசிரியர் பற்றி எழுதியிருந்ததை படித்தேன்....

    தனது ஆசிரியரிடம் கிடைத்த மோசமான அனுபவங்களை எழுதியிருந்தார்....

    ReplyDelete
  4. செல்லப்பா, ரமணி, வெங்கட் - மூவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. உங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய தம்பி எட்வினுக்கு நன்றி. அவரது தளத்தில் தங்களின் அறிவியல கட்டுரைக்குப் பின்னூட்டம் இட்டபின் உங்கள் தளத்திற்கு வந்தேன். நண்பர் துளசிதாசனின் நூல் அறிமுகமே கவனமாக -வாங்கி- படிக்கத்தூண்டுவதாக இருந்தது. உங்கள் எழுத்து நேர்மைக்கு வணக்கம் கலநத பாராட்டுகள். நான் எழுதியிருக்கும் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே கட்டுரையும் எதார்த்தமாகவே கடித வடிவில அமைந்தது. நேரம்கிடைக்கும் போது படித்துக் கருத்துக் கூறினால் மகிழவேன் - நா.மு. http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html

    ReplyDelete