Monday, 15 July 2013

எண்களின் வலைகளில்...


எண்ணிப் பார்க்கிறேன்
எப்படி நிகழ்ந்ததென
எதுவும் புரியவில்லை.

ஒற்றை உலகத்தின் நிகழ்வுகள் எல்லாம்
சில எண்களுக்குள் அடங்கிப் போனது
எப்படி நிகழ்ந்ததென எதுவும் புரியவில்லை.

இரட்டைக் கோபுரங்களில் இடித்த விமானங்கள்
மக்களாட்சியை மலரச் செய்யவும்
இல்லாத ஆயுதங்களை இருப்பதாய்க் காட்டவும்
ஆப்கனும் ஈராக்கும் இடிபாடுகளாயின
ஆழ்கடலின் அடியே நிலம் நடுங்கியது
ஆர்ப்பரித்து எழுந்தன ஆழிப் பேரலைகள்
பூகம்பங்கள் சூறாவளிகள் குண்டுவெடிப்புகள்
ஓரிரு நாள்கள் ஓரிரு வாரங்கள்
பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்
தீனிகளாய் கிடைக்கின்றன செய்திகள்
இறுதியில் மனித உயிர்கள்
வெறும் புள்ளி விவரங்களில்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் மட்டும்
உயிரோடு இருக்கும் இன்னும் பல காலம்.

கவிதை வேண்டும் என்றால்
எத்தனை வரிகளில் என்றார்கள்.
கதை ஒன்று வேண்டும் என்றால்
எத்தனை பக்கங்களில் என்றார்கள்.
கட்டுரை வேண்டும் என்றால்
எத்தனை வார்த்தைகளில் என்றார்கள்.
உரையாற்ற வேண்டும் என்றால்
எத்தனை நிமிடங்களில் என்றார்கள்.
படைப்பையும்கூட எண்களில் அடக்கிய விந்தை
எப்படி நிகழ்ந்ததென எதுவும் புரியவில்லை.

செல்பேசிப் புரட்சிக்குப் பின்
எண்களை வைத்தே
அந்தஸ்தும் அளக்கப்படுகிறது.

9868
இல் துவங்கும் டால்பின் எண்களில்
இளக்காரப் பார்வையை எதிர்கொள்ள நேரும்
9811
வோடபோன் என்றால்
பரவாயில்லை பார்வை முதுகை வருடும்
9810...
ஏர்டெல்காரர்தான்
எல்லாரிலும் சிறந்தவர்.

சக்கரங்களை வைத்தும் நீங்கள் யார் என்பது
தீர்மானிக்கப்படும் என்பதை
சக்கரத்தைக் கண்டுபிடித்தவன்
சற்றேனும் எண்ணியிருப்பானா?

இருசக்கர வாகனக்காரர்கள் இழிந்தவர்கள்
நான்கு சக்கர வாகனத்தார் நட்புக்கு உரியவர்கள்
ஆறுசக்கரப் பேருந்து பயணியா நீங்கள்...
அடப்பாவமே... பிழைக்கத் தெரியாதவர்.

பேருந்துகளுக்கும் எண்கள்
பெரும்பெரும் விமானங்களுக்கும் எண்கள்
விரைந்தோடும் ரயில்களுக்கும் எண்கள்
வீதிகளுக்கும் வீடுகளுக்கும் எண்கள்.

தொலைபேசி எண்கள் செல்பேசி எண்கள்
வங்கிக்கும் எண்கள் வங்கிக்கடன்
அட்டைக்கும் எண்கள்
அட்டைகளை பயன்படுத்தும்
சாவிகளுக்கும் எண்கள்

வீடு வேண்டும் என்றால்
எத்தனை அறைகள் என்றார்கள்
மனை வேண்டும் என்றால்
எத்தனை சதுரஅடி என்றார்கள்
நகரத்திலிருந்தும் விமான நிலையத்திலிருந்தும்
எத்தனை தூரம் பயணத்திற்கு
இவைதான் இன்றைய முக்கியக் கேள்விகள்

அண்டை வீட்டாரை அறியவும் வேண்டாம்
நட்புக் கரங்களை எண்ணவும் வேண்டாம்
அடுக்கு மாடிகளில் ஆயிரம் வீடுகள்
அத்தனையும் தனித்தனித் தீவுகள்
பெயர்களால் அறியப்பட்ட மனிதர்கள்
எண்களால் அறியப்படும் வீடுகளாகிப் போனார்கள்

திரைப்பட நடிகர் பெறுகிற
கோடிகளை வைதே புகழ்
கொடி கட்டிப் பறக்கும் படத்துக்கு
செலவிட்ட கோடிகளை வைத்தே
படத்தின் தரமும் மதிக்கப்படும்
திறமைகள் பெரும்பாலும் ஒற்றை பூஜ்யம்தான்

மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை
உள்ளடக்கங்கள் எல்லாம் உதவாக்கரைகள்
கொள்முதல்-லாப விகிதம் மட்டுமே
கொண்டவர்க்கு இன்னும் வெற்றிகள் வெற்றிகள்

கணினி யுகம் இன்று வெறும்
கணக்குகளில் அடக்கி விட்டது
ஒன்று-பூஜ்யம் என இரண்டே எண்களில்
ஒற்றை உலகம் உருவாகி விட்டதாம்

சராசரிக்குள் அடங்காத சிலபேர் கையில்
சகலமும் அடங்கியிருக்கிறது

பங்குட் சந்தையும் விலை வீக்கமும்
எண்களில் அடங்கி விட்டன
பணம் இழந்தவர்களும்
பட்டினி கிடப்பவர்களும்
அடுத்தடுத்த புள்ளி விவரங்களில் அலசப்படுவார்கள்.

நாடாளும் முறையையும்
மாற்றி விட்டன இந்த எண்கள்
சட்டமன்றங்களில்
சரிபாதிக்கும் மேல் கிடைக்க
சகல வழிகளையும் பயன்படுத்தலாம்.

சராசரி ஆயுள் அதிகரித்து வருகையில்
பிறப்புகளின் எண்ணிக்கை கூடி வருகையில்
பிறப்பில் இறப்புகள் குறைந்து வருகையில்
அச்சமாக இருக்கிறது எனக்கு
பேரக் குழந்தைகளுக்கு பெயர்கள் இல்லாமல்
எண்களை வைத்தே அழைக்க நேருமோ
என்று அச்சமாக இருக்கிறது எனக்கு.

கண்களை எங்கு திருப்பினாலும்
எண்களின் கண்ணாமூச்சி ஆட்டம்

எண்களின் ராஜ்ஜியத்தை இப்படியே தொடர்ந்தால்
கடிகார முட்களுக்கும் கண்கள் செருகும்

விடைகொடுங்கள் நான்
விரைய வேண்டும் உறக்கத்திற்கு
எண்களின் கட்டுக்குள்
என்றுமே அடங்காதவை
கனவுகள் மட்டும்தான்.
எத்தனை கனவுகளென்ற
எல்லைகள் ஏதுமின்றி
எத்தனை நொடிகளென்ற
வரம்புகள் ஏதுமின்றி
கனவுகளைத் தருவது உறக்கம் மடுமே

எனவே
விடைகொடுங்கள் நான்
விரைய வேண்டும் உறங்குவதற்கு.

7 comments:

 1. அட சொல்லிட்டீங்களே ஷாஜஹான் ஜி.... யாராவது ஒரு நாளைக்கு ஒரு கனவு தான் காணனும்னு சட்டம் கொண்டு வந்துட போறாங்க!

  நல்ல கவிதை.

  ReplyDelete
 2. ஏ அப்பா!
  எண்கள் மீது ஏன் அவ்வளவு கோபம்?
  உலகம் முழுவதும் உணரக்கூடிய ஒரே மொழி எண் மொழிதான் நண்பரே!

  //பெயர்களால் அறியப்பட்ட மனிதர்கள்
  எண்களால் அறியப்படும் வீடுகளாகிப் போனார்கள்// முற்றிலும் உண்மையே.

  //பேரக் குழந்தைகளுக்கு பெயர்கள் இல்லாமல்
  எண்களை வைத்தே அழைக்க நேருமோ// இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கோ?

  அதுசரி, ஒருநாளுக்கு எவ்வளவு நேரம் தூங்குவீங்கன்னு சொல்லவேயில்லை!!

  ReplyDelete
  Replies
  1. Sorry. Next 7 days I won't be able to make even 1 comment in Tamil. Sorry a 2nd time.

   Delete
 3. அருமையான பதிவு மனதில் பல கேள்விகள் வந்துவந்து செல்கின்றன

  ReplyDelete
 4. ஆம், எண்கள் என்றுமே அழகானவை. அழகானவை என்றுமே புதிரானவை தானே! Fibonacci Numbers என்று படித்திருக்கிறீர்களா? இயற்கையும் எண்களும் எவ்வளவு நெருக்கமானவை என்று அந்த நாளிலேயே ஆராய்ந்து வைத்திருக்கிறார்கள். ராமனுஜனும் இதற்கு மயங்கித் தானே கிடைக்கும் நோட்டுக்களிலெல்லாம் கிறுக்கி வைத்தார்!

  ReplyDelete
 5. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பபூ அறிமுகம்மானது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/6_24.html?showComment=1377308895348#c7692767288255196790 வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
  பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
  வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
  பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை//
  இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.வித்தியாசமாக சிந்தித்து எண்ணங்களை கோர்வையாக்கியிருக்கிறீர்கள்.ரசித்தேன்.

  ReplyDelete