Saturday, 5 November 2016

புகை உயிருக்குப் பகை-2

அனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 2

(பகுதி 1 இங்கே வாசிக்கலாம்)

  • சோகமாய் இருந்தால் ஒரு சிகரெட்
  • சந்தோஷமாய் இருந்தால் ஒரு சிகரெட்
  • டீயோ காப்பியோ அருந்தியதும் ஒரு சிகரெட்
  • உணவருந்தி முடித்ததும் ஒரு சிகரெட்
  • பட்டினியாகக் கிடந்தால் ஒரு சிகரெட்
  • சினிமா இடைவேளையில் ஒரு சிகரெட்
  • காதலிக்காகக் காத்திருக்கையில் சிகரெட்
  • காதல் தோல்வி கண்டால் சிகரெட்
  • தீவிரமாக புத்தகம் வாசிக்கும்போது சிகரெட்
  • புத்தகம் போரடித்து மூடி வைத்தால் சிகரெட்
  • நண்பர்களோடு கும்மாளமிடுகையில் சிகரெட்
  • விவாதம் சூடாகும்போது ஒரு சிகரெட்
  • மதுபானப் பார்ட்டியில் ஒரு சிகரெட்
  • வேலையின் இடைவேளையில் ஒரு சிகரெட்
  • வேலை டென்ஷனாக இருந்தால் சிகரெட்

....
சிகரெட் புகைப்பதற்குத்தான் எத்தனை சந்தர்ப்பங்கள், எத்தனை காரணங்கள்!

விளையாட்டாக, பொழுதுபோக்காக, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக என எப்படியோ துவங்கிய புகைப்பழக்கம் நாம் அறியாமலே ஒரு போதையாக நிலைபெற்று விடுகிறது. புகைப்பது தவறு, உடலுக்குக் கெடுதல், விட்டொழிக்க வேண்டும் என எல்லாமே புரிகிறது. ஆனால் நிறுத்த முடிவதில்லை. “நான் நினைச்சா எப்போ வேணாலும் விட்டுடுவேன். எனக்கு வில் பவர் உண்டு” என்று சொன்னவர்கள் எல்லாரும் வில்ஸ் பவருக்கு அடிமை ஆகிவிட்டதை உணரும்போது தாமதமாகி விட்டிருக்கும். அவர்கள் சிகரெட்டை விட நினைத்தாலும் சிகரெட் அவர்களை விடுவதில்லை. இதுதான் புகைப்பவர்கள் பலரின் மனநிலை. சிகரெட்டுக்கு அடிமை மட்டுமல்ல, குறிப்பிட்ட ஒரு பிராண்டுக்கும் அடிமை ஆகிறோம். பதிவின் துவக்கத்தில் சிகரெட் பிடிக்கும் சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டேனே, அதில் பெரும்பகுதியைப் பிடித்துக் கொண்டிருந்தது கோல்ட் ஃபிளேக் – என் விருப்ப பிராண்ட். ஆம், இந்தியாவில் விற்பனையாகும் சிகரெட்டுகளில் FMCG brand – Fast-moving consumer goods - அதாவது, விரைவாக விற்பனையாகும் பொருளாக சுமார் 70 சதவிகித இடத்தைப் பிடித்திருக்கிறது கோல்ட் பிளேக் பிராண்ட்.



புகைப் பழக்கத்தை ஏன் நிறுத்த வேண்டும்? சிகரெட் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்க இல்லற வாழ்வின் நிம்மதியை பாதிக்கும். நடுத்தர வர்க்கமாக இருந்தால் குடும்ப பொருளாதாரத்தை பாதிக்கும். அதன் விளைவாக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

2015இல் ஒரு கணக்கின்படி, புகைக்கப்பட்ட சிகரெட்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட குறைந்து விட்டது. 2014இல் சுமார் 96 பில்லியன் சிகரெட்டுகள், 2015இல் 88 பில்லியன். (இன்னொரு கணக்கின்படி, 110 பில்லியனாக இருந்தது 95 பில்லியனாகக் குறைந்து விட்டது என்கிறார்கள்.) உண்மையில் சிகரெட் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்று உறுதியாகத் தெரியாது. இந்தக் கணக்குகள் எல்லாம் தொழில்துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட, பதிவாகிய கணக்குகளின் அடிப்படையில் மதிப்பிட்டது. சட்டவிரோத உற்பத்தியும், வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்படும் சிகரெட்டுகளும் இதில் சேராது. சட்டவிரோத சிகரெட்டுகளின் பங்கு 2014இல் 19 சதவிகிதமாக இருந்தது 2015இல் 21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என ஓர் அறிக்கை கூறுகிறது.



என் காசில்தானே புகைக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். காசு நம்முடையதுதான். ஆனால் இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமல்ல, இன்னும் பலருக்கும் சொந்தம். எதிர்காலத் தலைமுறைக்குச் சொந்தம். புகைத்துவிட்டுத் தூக்கி எறியும் பில்டர் துண்டினைப் பார்த்திருக்கிறீர்களா? மென்மையான ஸ்பாஞ்ச் போலத் தோன்றுகிறதே, அது எதனால் செய்யப்பட்டது என்று தெரியுமா? முதல் பார்வைக்கு, பஞ்சினால் செய்யப்பட்டதாகத் தோன்றும். உண்மையில் அது செல்லுலோஸ் அசிடேட் என்ற வகையைச் சேர்ந்த பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதாகும். ஒரு பில்டரில் சுமார் 12000 இழைகளை ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பின்னி உருவாக்கப்பட்டதுதான் பில்டர். இது இயற்கையில் மக்கும் பொருள் அல்ல என்பது பலருக்கும் தெரியாது. அது மக்குவதற்கு ஒன்றரை ஆண்டு முதல் பத்தாண்டுகள் வரை எடுக்கும். ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் பவுண்ட் சிகரெட் துண்டுகள் கழிவில் சேர்கின்றன.

நகர்ப்புறங்களில் கடலை அடையும் கழிவுகளில் 50 சதவிகிதம் சிகரெட் துண்டுகள்தான். புகைக்கும்போது நிலவாழ் உயிர்களுக்குத் தொல்லை தருகிறோம், புகைத்து முடித்து தூக்கி எறியும்போது நீர்வாழ் உயிர்களுக்குத் தொல்லை கொடுக்கிறோம். புகையிலை மெதுவாகக் கொல்லும் விஷம். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன். நீங்களும் பாருங்கள்.

சிகரெட் / பீடித் தொழில் மிகப்பெரிய வணிகம். உலகிலேயே புகையிலை உற்பத்தியில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம். இந்தியப் புகையிலையில் 11 சதவிகிதம்தான் சிகரெட்டில் பயன்படுகிறது. ஆனால், 2015இல் இந்திய அரசுக்கு புகையிலையிலிருந்து கிடைத்த வருவாய் 29 ஆயிரம் கோடி, அதில் சிகரெட்டிலிருந்து கிடைத்த வருவாய் மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய். (பீடி உள்ளிட்ட இதர பொருட்களுக்கு வரி குறைவு.) வரி வருவாயே 26 ஆயிரம் கோடி என்றால், சிகரெட்டில் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று யோசித்துக்கொள்ளலாம். அதைவிட முக்கியமான செய்தி, புகையிலையால் வரும் நோய்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் செலவு செய்யும் தொகை சுமார் ஒரு லட்சம் கோடி. சொந்தக் காசில் சூனியம் என்பது இதுதான். காசு கொடுத்து சிகரெட் வாங்கி, அதனால் ஏற்படும் நோய்களுக்கு அதைவிட அதிகமாக காசு கொடுக்க வேண்டியிருக்கும்.

1 comment:

  1. காலையில எந்திரிச்சதும் காபித்தண்ணி குடிச்சாத்தானே வெளிய தெருவ போக முடியும்ன்னு எங்கப்பா இன்றும் எழுந்ததும் காபி கேட்கச் சொல்லும் வாசகம்.... இதே நகரத்தில்... அதுவும் இங்கு நண்பர்கள் சிகரெட் புடிச்சாத்தான் பாத்ரூம் போக முடியுது என அதிகாலை குளியலுக்கு முன்னர் சிகரெட்டுடன் எழுகிறார்கள்....

    புகை நமக்கு மட்டுமல்ல... சுற்றியிருப்பவர்களுக்கும் பகை என்பதை ஏன் உணர்வதில்லை...?

    சிறப்பான கட்டுரை சார்... தொடர்கிறேன்...

    ReplyDelete