Friday, 18 November 2016

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 1

? கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500/1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த நடவடிக்கையை நீங்கள் எதிர்க்கிறீர்கள். கறுப்புப்பணத்தை ஒழிக்க வேண்டாமா?
•-• கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டாம் என்று நாட்டு நலனில் அக்கறை உள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். நான் கேள்வி கேட்பது, ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த முறையையும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசரத்தனத்தையும்தான். அதனால்தான் நாடு முழுவதும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.


? அறிவித்த முறையில் என்ன தவறு கண்டீர்கள்?
•-• நிறைய உண்டு. முதலாவதாக, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 8ஆம் தேதி இரவு மோடி அறிவித்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள். இன்னிக்கி ராத்திரி, அதாவது 8 நவம்பர் 2016 இரவு 12 மணிக்குப் பிறகு 500/1000 ரூபாய் நோட்டுகள் லீகல் டெண்டர் ஆக இருக்காது. 500/1000 ரூபாய் நோட்டுகள் இப்போ வெறும் காகிதத் துண்டுக்கு சமானம்.
மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த நடிகரும்கூட. இந்த விஷயத்தை நாடகபாணியில் சொல்லும்போது அவர் முகத்தில் தெரிந்த பாவமும் அலட்சியமும் விவரம் தெரியாத மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். ஒரு பிரதமர், நாட்டின் அனைத்து மக்களையும், ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசும்போது பீதியைக் கிளப்பாமல், புரியும் வகையில் சொல்லாமல் எப்போதும் பேசுகிற தேர்தல் நேரப் பாணியிலேயே பேசியிருக்கிறார். அடுத்த நாள் சில மரணங்கள் நிகழ்ந்தமைக்கும், சில இடங்களில் ரூபாய் நோட்டுகள் குப்பைக்கூடையில் கிடந்ததற்கும் இந்த நாடகபாணிப் பேச்சு காரணமாக இருந்திருக்கும்.

? அறிவித்த அடுத்த நாள் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலரால் சில குழப்பங்கள் நேர்ந்திருக்கலாம். அதன்பிறகு எல்லாருக்கும் புரிந்திருக்கும். இதற்காகவா எதிர்க்கிறீர்கள்?
•-• இதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இப்போது இந்த நடவடிக்கை எதற்கு? இதனால் ஏற்படக்கூடிய பயன்கள் என்ன? விளைவுகள் என்ன? விளைவுகளால் ஏற்படும் நஷ்டங்கள் என்ன? பயன்களின் மதிப்பு அதிகமாக இருக்குமா நஷ்டங்களின் மதிப்பு அதிகமாக இருக்குமா? இந்தக் கேள்விகள் எதுவுமே கேட்கப்படாமல், பரிசீலிக்கப்படாமல் அரசியல் அதிரடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ரிசர்வ் பேங்கின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார ஆலோசகர் பாசு ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கையால் பயன்களை விட நஷ்டமே அதிகம் என்று கூறியிருக்கிறார்கள்.
அது ஒருபக்கம் இருக்க, முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் அவசரகோலத்தில் செய்ததுதான் மிகப்பெரிய குழப்பத்துக்கு வழி வகுத்தது.

? முன்னேற்பாடுகள் என்று எதைச்சொல்கிறீர்கள்? முன்னதாக அறிவித்திருக்க வேண்டுமா அல்லது கால அவகாசம் தந்திருக்க வேண்டுமா?
•-• கால அவகாசம் தந்திருந்தால் இந்த நடவடிக்கையின் நோக்கமே அடிபட்டுப்போகும் என்று சொல்கிறார்கள். போகட்டும். முன்னறிவிப்பு என்பது வேறு, முன்னேற்பாடுகள் என்பது வேறு. வரக்கூடிய விளைவுகளை, பாதிப்புகளை முன்கூட்டியே ஊகித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மிகமிக மோசமாக, மிகமிக அலட்சியமாக இருந்திருக்கிறது அரசு. சிறந்த பொருளாதார, தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசிக்கப்படாமல், வெறும் அரசியல் லாபம் என்ற கோணத்தை மட்டுமே சிந்தித்தார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பயன்களைப் பற்றி மிகவும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்திருக்கிறார்கள். இது பொருளாதார நடவடிக்கை அல்ல, அரசியல் விளம்பர நடவடிக்கை. அதனால்தான் பயன்களைவிட விளைவுகளால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்கிறேன்.

? முன்னேற்பாடுகள் குறித்து அப்புறம் பார்ப்போம். கறுப்புப்பணம் ஒழிவது பயன் இல்லையா?
•-• முதலில் கறுப்புப்பணம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். கறுப்புப்பணம் என்பது திரைப்படங்களில் வில்லன் அரசியல்வாதிகளின் வீட்டில் மூட்டை மூட்டையாக வைத்திருப்பதாகக் காட்டப்படுவது மட்டுமே கறுப்புப்பணம் அல்ல. கறுப்புப் பொருளாதாரம்’ (பிளாக் எகானமி) எனும் பிரம்மாண்டத்தின் சிறியதோர் அங்கம்தான் கறுப்புப் பணம்’. கணக்கில் காட்டப்படாத வருமானங்களும், அந்த வருமானத்தை நுகர்வுக்காக அல்லது முதலீட்டுக்காகப் பயன்படுத்துவதும் கறுப்புப் பொருளாதாரம்ஆகும். இந்தக் கறுப்புப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி பணம்என்ற வடிவில் இருக்கும்போது அது கறுப்புப் பணம்என அழைக்கப்படுகிறது. லஞ்சம் ஊழல் போன்ற சட்டவிரோத வழிகளில் திரட்டப்பட்டதுதான் கறுப்புப் பணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது மட்டுமே கறுப்புப்பணம் அல்ல, இது கறுப்புப் பணத்தின் ஒரு சிறிய பகுதிதான். ஆகவே, கறுப்புப் பொருளாதாரத்தை முடக்காமல் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.

? கறுப்புப் பொருளாதாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
•-• ஓர் ஆசிரியரோ, மருத்துவரோ தனித்தொழில் மூலம் பணம் சம்பாதித்தால் அது சட்டவிரோதம் அல்ல. ஆனால், சம்பாதித்த பணத்தை தன் வருமானக் கணக்கில் காட்டவில்லை என்றால் அது கறுப்புப் பணம் ஆகிறது. இதை சாமானியர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதைவிடப் பெரிய பல விஷயங்கள் உள்ளன. ஓரிரண்டை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒரு சர்க்கரை ஆலை முதலாளி, வாங்குகிற கரும்பு அல்லது உற்பத்தி செய்த சர்க்கரையின் கணக்கை எடை குறைத்துக் காட்டுகிறார்; இதன் மூலம் கொள்முதல், உற்பத்தி, விற்பனை என ஒவ்வொரு கட்டத்திலும் கணக்கில் வராத வருமானம் அவருக்குக் கிடைக்கிறது.
இன்னொருவர், ஆலைக்கான இடம் அல்லது இயந்திரங்களுக்கு முதலீட்டுக்கான செலவை மிகைப்படுத்திக் (ஓவர் இன்வாய்சிங்) காட்டுகிறார். இதன் மூலம், ஆண்டுதோறும் தேய்மான மதிப்பு அதிகமாகக் காட்டப்படும், எனவே லாபம் குறைவாகக் காட்டப்படும்.
இன்னொருவர் ரியல் எஸ்டேட்டில், நிலத்தின் மதிப்பைக் குறைத்துக்காட்டுவார். இதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் குறையும், முதலீட்டு விற்பனை லாபமும் குறைத்துக்காட்டப்பட்டு, அதற்கான வரியும் குறைவாகவே செலுத்தப்படும்.
இவை தவிர, கணக்குகளைத் திருத்துவது, இரண்டுவிதமான கணக்குகளை வைத்திருப்பது என பல்வேறு வழிகளில் கறுப்புப்பணம் உருவாக்கப்படுகிறது.

? இந்தியாவில் கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு என்ன? கறுப்புப்பணத்தின் பங்கு என்ன?
•-• இதற்கு துல்லியமான மதிப்பீடு ஏதும் இல்லை, இருக்கவும் முடியாது. இந்தியப் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகம் கறுப்புப் பொருளாதாரம் என்பது சிலர் மதிப்பீடு. கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். மொத்த கறுப்புப் பொருளாதாரத்தில் 10% வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று கருதப்படுகிறது. இதில் ஒரு பகுதி அங்கேயே செலவும் செய்யப்படுகிறது. இன்னொரு பகுதி இந்தியாவுக்கே திரும்பிக் கொண்டுவரப்படுகிறது அது ஹவாலா மூலமாகவோ, மொரீஷியஸ் போன்ற சிறிய நாடுகளின் வழியாகவோ இருக்கலாம்.
கறுப்புப் பணம் குறித்த மதிப்பீடும் உத்தேசமானதுதான். சிலர் 6% என்கிறார்கள். சிலர் 10% என்கிறார்கள். அதிகபட்சமாக 20% என்பார் சிலர். இந்தக்கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி புழக்கத்திலும் இருக்கலாம், ஒரு பகுதி முடக்கத்திலும் இருக்கலாம். புழக்கத்திலிருக்கும் பணம் கறுப்பாகவே இருந்தாலும் அது சில பயன்களை அளிக்கும். ஆனால் அதன் மூலகாரணமான கறுப்புப் பொருளாதாரம் சாமானிய மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பலன்களை சுரண்டும்.

? சரி, கறுப்புப் பொருளாதாரத்துக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?
•-• இந்த நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவை பல்வேறு சுயநல சக்திகள்தான் வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசின் அதிகார வர்க்கம் ஆகியவை அவை. இந்தக் கூட்டணிதான் கறுப்புப் பணத்தின் உண்மைப் பயனாளி. இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் ஹவாலா ஆபரேட்டர்கள் மீதும், சட்டவிரோதமான பணப் புழக்கத்தில் ஈடுபட்டிருப்போர் மீதும் ரெய்டு நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் ரவுடி யார் என்று போலீசுக்குத் தெரியாமல் இருக்காது. அதேபோல, கறுப்புப்பணத்தை வைத்திருப்பவர்கள் யார், ஹவாலாகாரர்கள் யார் என்பதும் அரசுக்கும் அதன் துறைகளுக்கும் தெரியாமல் இருக்காது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. அதை இந்த அரசுகள் செய்யாது.

? இதெல்லாம் தவறுதானே? தவறுகள் நிகழாதிருக்கத்தானே ரூபாய் நோட்டின் மீதான நடவடிக்கை?
•-• இதெல்லாம் தவறுதான். தவறு யார் செய்தார்களோ அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும். இப்போது குடிமக்கள் அனைவருக்கும் அல்லவா தண்டனை தரப்பட்டிருக்கிறது?
அது தவிர, தவறு செய்தவர்களை தண்டிக்க சட்டங்கள் இல்லையா? எப்படிப்பட்ட ஊழலையும், மோசடிகளையும், ஏமாற்றுகளையும் கண்டுபிடித்து தண்டிக்க எண்ணற்ற சட்டங்கள் இருக்கின்றன, பல்வேறு துறைகளும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, சட்டங்களை கறாராகப் பின்பற்றி, கறுப்புப் பணக்காரர்களைப் பிடித்து தண்டித்தால் எல்லாரும் பாராட்டுவோம். பெரும்பெரும் ஊழல் செய்தவர்களை எல்லாம் சுதந்திரமாக உலவ விட்டுவிட்டு, அவர்களோடு கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்துவிட்டு, “உங்களிடம் இருக்கும் பணம் செல்லாதுஎன்று அப்பாவிக் குடிமக்களைத் தண்டிப்பது என்ன நியாயம்?

? பெரும்பெரும் ஊழல் செய்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?

•-• உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். பெலகேரி துறைமுகத்தின்வழியாக, கணக்கில் காட்டாமல் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்த இரும்புத்தாது சுமார் 3 கோடி டன். அதன் மதிப்பு 1,22,28,14,22,854 கோடி ரூபாய். இதில் அதானி உள்பட முக்கியமான நான்கு நிறுவனங்களுக்குப் பங்கு உண்டு. சுமார் 250 சுரங்க நிறுவனங்களின் மூலமாக, திட்டமிட்ட முறையில், ஒவ்வொரு லாரி லோடுக்கும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் 2-3 டன் அதிகப்படியாக ஏற்றி வந்து துறைமுகத்தில் சேர்த்து, அதை கணக்கில் காட்டாமல் ஏற்றுமதி செய்த மிகப்பெரிய ஊழல் இது. ஊழல் மட்டுமல்ல, சுற்றுச்சூழலையே நாசம் செய்து நாட்டின் எதிர்காலத்துக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம் இது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்பரேட்டுகள் கள்ளக்கூட்டு என்பதன் சிறந்த உதாரணம் இது. இதுகுறித்து லோகாயுக்தா அறிக்கை வெளியே வந்து, கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பதை உச்சநீதிமன்றம் மொத்தமாகத் தடைசெய்து, பிறகு குறிப்பிட்ட அளவுக்குள் அகழ்ந்தெடுக்க அனுமதி அளித்ததெல்லாம் பழைய கதை. மேற்கண்ட ஊழலில் அரசுக்குச் சேர வேண்டிய லட்சம் கோடி ரூபாய்க்காக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள்மீது மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எந்த நாட்டுக்குப் போகும்போதும் அமைச்சர்களை உடன் அழைத்துச்செல்கிறாரோ இல்லையோ, அதானியை அழைத்துச் செல்கிறார் பிரதமர்! எங்கே ஒளிந்திருக்கிறது என்றே தெரியாத கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்காக எல்லா குடிமக்கள் மீதும் நடவடிக்கை எடுப்பவர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய்களை சுருட்டியவர்கள் குறித்து தெரிந்திருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
... தொடரும்

No comments:

Post a Comment