தமிழ்நாட்டில் நடப்பதுபோல “விடிய விடிய தீபாவளி, விடிஞ்சா அமாவாசை” என்ற ரீதியில்
ஒருநாள் தீபாவளி வடக்கே கிடையாது. இங்கே ஐந்து நாட்கள் தொடரும். தீபாவளி எப்படி
வந்தது என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு. உழைத்துக் களைக்கும் மனிதனுக்கு
அவ்வப்போது உற்சாகம் ஊட்டிக்கொள்ள பண்டிகைகள் பிறந்திருக்கலாம். அவற்றை அதே
மனிதர்களில் சிலர் சுயநலத்துக்காக வணிகமயமாக்கிக் கொண்டார்கள். இப்போது அந்த
விஷயங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. தீபாவளி குறித்து பழைய பதிவிலிருந்து
திருத்திய பதிவு.
தீபாவளி கொண்டாடுவதற்கான
காரணம் பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தெற்கே நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாடுவதாக
ஒரு நம்பிக்கை. ஒருநாள் பண்டிகையோடு இது முடிந்து விடுகிறது. வடக்கே இது ஐந்து
நாள் பண்டிகை. வடக்கே தீபாவளி கொண்டாட பல காரணங்கள் நம்பிக்கைகளாக உலவுகின்றன.
இராமன் வனவாசம் முடித்து திரும்பி வந்ததைக் கொண்டாடுகிறார்கள். இராமன் இராவணனை
வென்று சீதையை மீட்டு வந்ததையும் கொண்டாடுகிறார்கள்.
தில்லியில் தீபாவளி பெரும்
கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடைகள் எல்லாம் மாறி விடுகின்றன. நடைபாதைகள்
எல்லாம் கடைகள் முளைத்து விடுகின்றன. எந்தக் கடை எதை விற்பது என்ற வேறுபாடின்றி
எல்லாக் கடைகளும் எதையெதையோ விற்பனை செய்யும். அதுவும் தன் தேரஸ் நாளில்
கடைவீதிகளில் கூட்டம் சொல்லி முடியாது. சீரியல் விளக்குகள், அலங்காரப் பூக்கள், பட்டாசுகள், பாத்திரங்கள்... என்னது...
பாத்திரங்களா...? பாத்திரங்கள் எதற்கு
என்று கேட்பீர்கள். சொல்கிறேன்.
தன் தேரஸ் என்றால் என்ன
தெரியுமா? தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்காது. செல்வத்தின் திருமகளான லட்சுமி எப்படி வந்தாள்
என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாற்கடலைக் கடையும்போது உருவானவள் லட்சுமி,
இல்லையா? ஆனால் லட்சுமி மட்டும் இருந்தால் போதுமா? அதை அனுபவிக்க ஆரோக்கியமும் ஆயுளும் வேண்டும் அல்லவா? அதற்காக மீண்டும் கடைந்தபோது கையில் அமிர்த
கலசத்துடன் வந்தவர்தான் தன்வந்தரி. தன்வந்தரிதான் தேவர்களுக்கே மருத்துவராம்.
தன்வந்தரியைக் கொண்டாடுவதுதான் தன் தேரஸ்.
தன்வந்தரி கையில் கலசத்துடன்
வந்தார் அல்லவா? அதனால்தான் தன் தேரஸ்
தினத்தில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வாங்குவது நல்லது என்று நம்புகிறார்கள். பணம்
கொழித்தவர்கள் தங்கம் வாங்குகிறார்கள். குறைவாக இருப்பவர்கள் வெள்ளியில் ஏதேனும்
வாங்குகிறார்கள். அதுவும் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு பாத்திரமேனும் வாங்குவார்கள்.
அதனால்தான் தன் தேரஸ் நாளில் கடைவீதிகளில் கடும் நெரிசல் இருக்கும்.
வியாபாரிகளுக்கு இந்த நம்பிக்கை மிகவும் வசதியாகி விட்டது. ஏகப்பட்ட விளம்பரங்கள், ஏகப்பட்ட வியாபாரம். படத்தில் இருப்பது தி.நகர்
போன்ற பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை. சாதாரணமாக தெருவில் அமைந்திருக்கும் கடைவீதிதான்.
தன்தேரஸ் நாள் மாலையில் என் வீட்டு வாசலிலிருந்து எடுத்தது.
பலருக்கும் தெரியாத இன்னொரு
செய்தி – இந்த தன் தேரஸ்
தினத்தைத்தான் இந்த ஆண்டு முதல் ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த
ஆண்டுக்கான மையக்கருத்து ‘சர்க்கரை நோயைத்
தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஆயுர்வேதா’.
இனிப்புகள் முக்கியப் பண்டமாக இருக்கிற தீபாவளி நேரத்தில் சர்க்கரை நோய்
பற்றிப் பேசுவது நகைமுரண். சர்க்கரை நோயால் ரொம்பவுமே வாட்டப்பட்ட எவனோ ஒரு
அதிகாரி முடிவு செய்திருக்கலாம்.
ஆக, தில்லி போன்ற வடபகுதிகளில் முதல் நாள் – அதாவது வெள்ளிக்கிழமை – தன் தேரஸ் முடிந்தது. சனிக்கிழமை சின்ன தீபாவளி – அதாவது நரக சதுர்தசி. ஞாயிற்றுக்கிழமைதான் தீபாவளி – லட்சுமியைப் போற்றுகிற நாள். லட்சுமியை எப்படி
வேண்டுமானாலும் பெறலாம். எனவே இரவு முழுவதும் சீட்டு விளையாட்டும் சூதாட்டமும்
நடைபெறுவதுண்டு. அடுத்த நாள் – பட்வா - கணவன்-மனைவி
உறவைக் கொண்டாடும் நாள். தலை தீபாவளியும் இதுதான். கடைசியாக பாய் தூஜ், அல்லது பையா தூஜ் – சகோதரன்-சகோதரி உறவைக் கொண்டாடும் நாள்.
ஆக, பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஐந்து நாட்களிலும்
வேலைகள் ஓடாது. பெரிய தலைகள் பலான காரியங்களில் ஈடுபடுவதற்கென்றே
ஒதுக்கப்பட்டிருக்கும் பண்ணைவீடுகள் ஒன்றில் தீபாவளி ஸ்பெஷல் சூதாட்ட கேசினோவில்
சில கோடி ரூபாயும் சில ஆட்களும் பிடிபட்டார்கள் போன வாரம்.
*
- என்ன தாத்தா... உங்க
ஏரியாவில தீபாவளி எல்லாம் எப்படி?
- தீவாளியா...
தீவாளியும் இல்லே ஒண்ணும் இல்லே.
- ஏன் என்னாச்சு
- எங்கத்த...தீவாளின்னா
பட்டாசு சத்தம் கேக்கணும். பட்டாசு சத்தமே காணமே.
- இன்னிக்கிதானே இங்கே
தீபாவளி. ராத்திரி வெடிப்பாங்க.
- இருந்தாலும்
நேத்திக்கி வெடிக்கோணுமில்லே. ஒண்ணும் சத்தமே காணம்.
- ஏன்... மக்கள் கையில
காசு பஞ்சமா
- காசு பஞ்சமும்தான்.
வெலவாசி அப்படி இருக்கில்லே... அல்லாரும் கைய இறுக்கிப் புடிச்சுட்டாங்க.
- யாரு?
- வேற யாரு? அவியவிய அவியவிய கைய இறுக்கிப் புடிச்சுகிட்டாங்க.
முன்னமாரி இல்லே
- அப்படியா... பட்டாசு
வேணாம்னு புரிஞ்சுகிட்டாங்களா.
- பின்னே...? பட்டாசுக் கடையப் பாத்தீங்களா... போயிப் பாருங்க.
ஒரு கடையில ஒரு சனத்தையும் காணம். இப்படியே போனா அடுத்த வருச பட்டாசுக் கடையே
இருக்காது.
மேலே உள்ள பகுதி எங்கள்
வீட்டுக்கு வேலை செய்ய வரும் தாத்தா-பாட்டியுடன் நடந்த உரையாடல். கடந்த ஆண்டு
எழுதியது. இந்த ஆண்டு பட்டாசுகள் இன்னும் குறைவு என்பது பட்டவர்த்தனமாகத்
தெரிகிறது. தொழில்கள் படுமந்தமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு அத்தியாவசியச்
செலவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வைத்திருக்கிறது. தீபாவளியைப் பொறுத்தவரை
பட்டாசுகள் குறைவது மகிழ்ச்சியான விஷயம். தீபாவளி தீபங்களை மட்டுமே கொண்ட பண்டிகையாக
இருந்தது. அதில் பட்டாசுகள் எப்படி நுழைந்தன என்பதையும் இணையத்தில் தேடிப்
படித்தறியுங்கள்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னால்
தில்லியின் தீபாவளி குறித்து வலைப்பூவில் எழுதிய பதிவை இங்கே காணலாம்.
இப்போதும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. வாசித்துப்பாருங்கள், சுவையாகவே இருக்கும்.
there will not be any work during the five days in delhi govt offices....
ReplyDeletei became sad...
how could india improve...
fifty petrcent of the indian population eat only one time in a day...