ரக்ஷா என்றால் பாதுகாப்பு, பந்தன் என்றால் பிணைப்பு
அல்லது கட்டு. சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையிலான அன்பைக் கொண்டாடும்
பண்டிகை இது. இந்தியாவின் வட பகுதியில்தான் பிரதானம் என்றாலும் இப்போது தெற்கிலும்
பரவி வருகிறது. மொரிஷீயஸ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் ஆகியோர் கொண்டாடுகின்றனர்.
இப்போதெல்லாம் மத சம்பிரதாயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு
இதர சமூகத்தினரும் கொண்டாடுவதுண்டு. கொண்டாடப் படுகிறவர் சொந்த சகோதரராகவும்
இருக்கலாம், சகோதரராக வரித்துக் கொண்டவராகவும் இருக்கலாம். மதம், சாதி, இனம் போன்ற பிரிவினைகளைக்
கடந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான புனித உறவை வலுப்படுத்துவதால்,
சமாதான
சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்குமான கருவியாகவும் இது அமைகிறது எனலாம். ரக்ஷா
பந்தன் போலவே பாய்-தூஜ் என்றொரு பண்டிகையும் வடக்கே கொண்டாடப்படுகிறது. அன்றைய
தினத்தில் தில்லியில் பெண்கள் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அரசு
அறிவிப்பதும் உண்டு.
ராக்கி என்பது ஒரு பெண் தானாகவே செய்த சாதாரண நூலாகவும்
இருக்கலாம், அலங்காரம் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம், கடைகளில் வாங்கியதாகவும்
இருக்கலாம், வைரம் பதித்து தங்கத்தால் செய்த வளையாகவும் இருக்கலாம். அவரவர் தகுதியைப்
பொறுத்தது. அதேபோல, சகோதரன் தரும் பரிசும் அவரவர் தகுதியைப் பொறுத்தது. தில்லியில் ராக்கியை
முன்னிட்டு தெருக்களெல்லாம் சிறப்புக் கடைகள் முளைக்கும். நகைக்கடைகளில்
செல்வந்தர்கள் கூட்டம் குவியும். ராக்கி வாழ்த்து அட்டைகளும் வந்து விட்டன.
தொலைவில் இருக்கிறவர்களுக்கு அஞ்சலில் அனுப்பும் வழக்கமும் வந்தாயிற்று.
பேஸ்புக்கில் படங்களால் ராக்கி வாழ்த்துச் சொல்லும் வழக்கமும் வந்து விட்டது
என்பதை சொல்லத் தேவையில்லை.
இதற்கு ராக்கி பூர்ணிமா அல்லது ராக்கி என்றும் பெயர் உண்டு.
ராக்கி என்றால் புனித நூல் என்று பெயர். சரவண மாதத்தின் பவுர்ணமி அன்று கொண்டாடப்
படுவதால் ராக்கி பூர்ணிமா. பொதுவாக ராக்கி என்றே வழங்கப்படுகிறது. இந்தப் புனித நூலை
சகோதரரின் கையில் கட்டுகிறாள் சகோதரி. அவனுடைய நெற்றியில் திலகமிட்டு, இனிப்பு வழங்கி, சகோதரரின் நலனுக்காக
வேண்டுகிறாள். சகோதரன் அவளை எந்தச் சூழலிலும் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்
என்று உறுதி பூணுகிறான். (நடைமுறையில் அப்படி நடக்கிறதா என்று யாரும் கேட்க
மாட்டீர்கள்தானே...)
காலப்போக்கில் இது நாடுகளுக்கு இடையிலான நட்புமுறை
உறவுகளுக்காகவும், மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டதாக கதைகள் உண்டு. ரக்ஷா
பந்தன் குறித்து நிறைய புனை கதைகளும் உண்டு. எது கற்பனை, எது வரலாறு என்று பிரித்தறிய
முடியாத அளவுக்கு மக்களிடையே நம்பிக்கை பரவிவிட்டது என்பதும் உண்மை. எனவே, சில சுவையான கதைகளை மட்டும்
பார்ப்போம்.
ராக்கி கட்டி, ஆரத்தி எடுத்து, திலகமிட்டு, இனிப்பு வழங்கி, பரிசு வாங்குவது வழக்கம். பிரார்த்தனை செய்யும் வழக்கம் எல்லாரும் செய்வதாகச்
சொல்ல முடியாது. கண்ணனின் கையில் யசோதை ராக்கி கட்டிய பிறகு பாடும் பாடல் விஷ்ணு
புராணத்தில் இருக்கிறது.
பவிஷ்ய புராணம் - அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் கடும்போர்
மூண்டது. அசுரர் கை ஓங்கியது. வருண பகவான் இந்திரன் கலங்கிப்போனான்.
பிருஹஸ்பதியிடம் ஆலோசனை கேட்டான். அப்போது உடனிருந்த இந்திரனின் மனைவி இந்திராணி
விஷ்ணுவிடம் ஆலோசனை கேட்க, விஷ்ணு அவளிடம் ஒரு புனித நூலைக் கொடுத்தார். அதை இந்திரனின் கையில்
கட்டினாள். இந்திரன் போரில் வெற்றி பெற்றான். இது நடந்த்து சரவண மாதத்தின்
பவுர்ணமி நாளில். (இந்தக் கதையில், ராக்கி கயிறு என்பது சகோதரர்களுக்கு மட்டும் கட்டுவதல்ல என்று தெரிகிறது.)
பாகவத புராணம், விஷ்ணு புராணம் – தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரில் தேவர்கள் வென்றனர்.
மூவுலகையும் வென்றார் விஷ்ணு. தோல்வி கண்ட அசுரர்களின் மன்ன்ன் பலி, கடும் தவம் புரிந்து,
விஷ்ணு எப்போதும்
தன்னுடனேயே இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். விஷ்ணுவின் மனைவி லட்சுமிக்கு
இது பிடிக்கவில்லை. தாம் இருவரும் மீண்டும் வைகுண்டம் போக வேண்டும் என்றே
விரும்பினாள். எனவே, அவள் பலியிடம் சென்று, ராக்கி கட்டி, சகோதரன் ஆக்கிக் கொண்டாள். பதிலுக்கு என்ன பரிசு வேண்டும் என்று பலி கேட்டான்.
கூடவே இருப்பேன் என்று விஷ்ணு அளித்த வாக்குறுதியைத் திருப்பித்தர வேண்டும்
என்றாள் லட்சுமி. அவளை சகோதரியாய் ஏற்றுக்கொண்ட பலி ஒப்புக்கொண்டான்.
கணேசனுக்கு இரண்டு மகன்கள் – சுபம், லாபம். ரக்ஷா பந்தன்
தினத்தன்று, கணேசனின் தங்கை அவனுக்கு ராக்கி கட்டினாள். தமக்கு ராக்கி கட்ட யாரும் இல்லையே,
எங்களுக்கு சகோதரி
வேண்டும் என்று புதல்வர்கள் கேட்டார்கள். கணேசன் இசையவில்லை. நாரதர் குறுக்கே
நுழைந்து, கணேசனுக்கு அறிவுரை கூறினார். கணேசன், தன் மனைவிகள் ரித்தி-சித்தி ஆகியோரின் மூலம் சந்தோஷி மா
என்ற மகளைப் பெற்றான். புதல்வர்கள் சந்தோஷி மா – திருப்தியின் தேவதை –
என்ற சகோதரியைப்
பெற்றார்கள்.
கிருஷ்ணன் – திரௌபதியை தங்கையாக நினைத்தான் கிருஷ்ணன். சிசுபாலனின் தலையைத்
துண்டிக்கும்போது கிருஷ்ணனின் கையில் வெட்டுக்காயம் பட்டுவிட்டது. திரௌபதி உடனே
தன் புடவையைக் கிழித்து கிருஷ்ணனின் கையில் கட்டுப் போட்டாள். இந்த அன்பில்
கட்டுண்ட கிருஷ்ணன், அந்தக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் உரிய பரிசை நேரம் வரும்போது
தருவேன் என்றான். திரௌபதிக்கு சோதனை வந்தபோது கிருஷ்ணன் வந்து காப்பாற்றிய கதைதான்
எல்லாருக்கும் தெரியுமே...
எமன் 12 ஆண்டுகள் தன் தங்கை யமுனாவைப் பார்க்கச் செல்லவே இல்லை. யமுனை, கங்கையிடம் ஆலோசனை கேட்டாள்.
கங்கை எமனுக்கு நினைவுபடுத்தினாள். எமன் தங்கையைப் பார்க்க வந்தான். மகிழ்ச்சியில்
திளைத்த தங்கை, அண்ணனுக்காக பெரு விருந்து படைத்தாள். என்ன பரிசு வேண்டும் என்றான் அண்ணன்.
மீண்டும் விரைவிலேயே பார்க்க வர வேண்டும் என்றாள் யமுனை. அன்பில் திளைத்த எமன்,
யமுனைக்கு என்றும்
அழிவில்லை என்று வாழ்த்தினான். வடக்கே அண்ணன்-தங்கை இடையிலான உறவைக் கொண்டாடும்
பாய்-தூஜ் என்னும் பண்டிகைக்கு இதுதான் அடிப்படை.
வரலாற்றுப் புனைவுகள்
அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தபோது, மன்னன் போரஸ் மட்டுமே கடும்
எதிர்ப்புக் காட்டினான். போரசின் மனைவி, அலெக்சாண்டருக்கு ஒரு புனித நூலை அனுப்பி, தன் கணவனுக்குத் தீங்கு
ஏற்படுத்தக் கூடாது என்ற கேட்டுக்கொண்டாள். போரின்போது அலெக்சாண்டரை எதிர்கொண்ட
போரஸ் அவன் கையில் ராக்கி இருந்த்தைப் பார்த்து, இது யார் கட்டியது என்று
கேட்டான். அவனுடைய மனைவி கட்டியது என்றான் அலெக்சாண்டர். அப்படியானால், அலெக்சாண்டர் தன் மைத்துன்ன்
ஆகிறான் என்பதற்காக அவனைக் கொல்லாமல் விடுகிறான்.
இதே கதையை அலெக்சாண்டரின் மனைவி போரசுக்கு ராக்கி கயிறு
கட்டி தன் கணவனுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடாது என்று வாக்குறுதி வாங்கியதாகவும்,
அதனால் அலெக்சாண்டரை
போரஸ் கொல்லாமல் விட்டதாகவும்கூட ஒரு திரிபு உண்டு.
இந்தக் கதையை வைத்து ஹிந்தியில் சிக்கந்தர்-ஏ-ஆஸம் என்ற திரைப்படம் வந்தது. (அலெக்சாண்டர் இந்தியில் சிக்கந்தர் என அழைக்கப்படுகிறார்.) தாரா சிங் அலெக்ஸாண்டராகவும், ப்ரித்விராஜ் கபூர் போரசாகவும் நடித்தனர். அதற்கு முன்னர் 1941இல் வந்த சிக்கந்தர் படத்தில் பிருத்விராஜ் கபூர் அலெக்சாண்டராகவும் சோரப் மோடி போரஸாகவும் நடித்தனர்.
இந்தக் கதையை வைத்து ஹிந்தியில் சிக்கந்தர்-ஏ-ஆஸம் என்ற திரைப்படம் வந்தது. (அலெக்சாண்டர் இந்தியில் சிக்கந்தர் என அழைக்கப்படுகிறார்.) தாரா சிங் அலெக்ஸாண்டராகவும், ப்ரித்விராஜ் கபூர் போரசாகவும் நடித்தனர். அதற்கு முன்னர் 1941இல் வந்த சிக்கந்தர் படத்தில் பிருத்விராஜ் கபூர் அலெக்சாண்டராகவும் சோரப் மோடி போரஸாகவும் நடித்தனர்.
மேலே சொல்லப்பட்ட இரண்டையுமே புனைகதைகள் என்றே சொல்ல
வேண்டும். ஜீலம் நதிப் போரில் போரஸை அலெக்சாண்டர் தோற்கடித்து, போரசின் காலாட்படையினர் 20,000 பேரும், குதிரைப்படையினர் 3000 பேரும் மடிந்தனர் என்பதும்,
இறுதியில் போரசிடமே
அரசை ஒப்படைத்துவிட்டு அலெக்சாண்டர் திரும்பினான் என்பதும் வரலாறு.
கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க
வரும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்
குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த மன்னர்கள் தங்கள் படைகளை
அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையில், சித்தோர் ராணி கர்ணாவதி முகலாய சக்ரவர்த்தி ஹுமாயூனுக்கு
ராக்கி கட்டியதாக வருகிறது. கணவனை இழந்த ராணி கர்ணாவதி, 1535இல் பகதூர் ஷா
படையெடுத்தபோது, தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தாள். ஹுமாயூனுக்கு ராக்கி
அனுப்பினாள். அந்த அன்புக்குக் கட்டுண்ட ஹுமாயூன் தன் படைகளை சித்தோருக்கு
அனுப்பினான். ஆனால் அதற்குள் தாமதமாகி விட்டது.
1905இல் பிரிட்டிஷார் வங்கத்தைத்
துண்டாட முனைந்தபோது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை
எற்படுத்த ரவீந்திரநாத் தாகூர் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
இப்போதும் வங்கத்தில் அவர் துவக்கி வைத்த ராக்கி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ராக்கி இப்போதெல்லாம் அரசியலிலும் பயன்படுகிறது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்.
கடைசியாக, ராக்கி குறித்து தாகூர் எழுதிய கவிதை -
The love in my body and heart
For the earth's shadow and light
Has stayed over years.
With its cares and its hope it
has thrown
A language of its own
Into blue skies.
It lives in my joys and glooms
In the spring night's buds and
blooms
Like a Rakhi-band
On the Future's hand.
தொகுப்பு – விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்
No comments:
Post a Comment