எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தரப்பட்டது. 15 நாள் எதற்கு என்றும்
கேட்கலாம், 15 நாள் போதாது என்றும் சொல்லலாம். அவரவர் சார்பு நிலைப்படி. ஆனால் 15 நாள் என்பது பொதுவாக
முறையான அவகாசம் எனக் கருதப்படுவது.
கடந்த ஆண்டு, அருணாசலப் பிரதேச கவர்னர் ததகதா ராய், 16ஆம் தேதி பெரும்பான்மையை
நிரூபிக்க வேண்டும் என 14ஆம் தேதி அறிவித்தார். அதற்கு முதல்வர் நாபாம் துகி, குறைந்தது 15 நாட்களாவது தேவை என்று
கூறினார்.
ஆந்திரத்தில் ராமாராவ் கதை எல்லாம் எத்தனை பேருக்கு
நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ராமா ராவுக்கு எதிராக அவருடைய அமைச்சரவையில்
இருந்த பாஸ்கர ராவ் கிளர்ச்சி செய்தார். ராமாராவுக்கு பெரும்பான்மை இருந்தும்கூட,
அவர் 163 எம்எல்ஏக்களின் பட்டியலைக்
கொடுத்தும்கூட, பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் ராம்லால் 3 நாள் அவகாசம்கூட கொடுக்கவில்லை.
ராமாராவை டிஸ்மிஸ்
செய்துவிட்டு, பாஸ்கர ராவை நியமித்து, அவருக்கு 30 நாள் அவகாசம் கொடுத்தார். பிற்பாடு கடும் விமர்சனம் எழுந்து, கவர்னர் பதவி விலகினார்,
சங்கர் தயாள் சர்மா
கவர்னர் ஆனார். பாஸ்கர ராவ் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை. ராமாராவ் முதல்வர்
ஆனார்.
இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் இப்போது பெரிதும் கவனம்
செலுத்தப்படுகிறது. 15 நாட்கள் என்று சொல்வதால் 15ஆவது நாளில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இது ஒரு மரபு போல. தமிழகத்தில்
எடப்பாடியார் ஓரிருநாளுக்குள் செய்வார், அதுதான் அவருக்கும் நல்லது என்று
எதிர்பார்த்தேன். அதன்படியே நாளை பெரும்பான்மையை நிரூபிக்கப் போகிறார்.
அடுத்து, இந்தப் பெரும்பான்மை நிரூபிக்கும் செயல்பாடு குறித்துப் பார்த்தால், அவருக்கு எத்தனை உறுப்பினர்
ஆதரவு தேவை? சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள். ஜெயலலிதா இல்லை. எனவே 233 உறுப்பினர்கள். ஒரு
சபாநாயகர் கழித்து 232. எனவே, 117 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதும். இதுதான் பொதுவான கருத்து. அதாவது,
அப்சலூட்
மெஜாரிட்டி. அறுதிப் பெரும்பான்மை.
ஆனால், நான் புரிந்து கொண்டவரையில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி உறுப்பினர்களின் ஆதரவு
தேவையில்லை. அன்றைய தினத்தில் அவையில் இருக்கிற உறுப்பினர்களில் பெரும்பான்மை
பெற்றால் போதும். அதாவது, சிம்பிள் மெஜாரிட்டி - பெரும்பான்மை.
இன்னொரு வகை ஃப்ளோர் டெஸ்ட் இருக்கிறது. அதற்கு காம்போசிட்
ஃப்ளோர் டெஸ்ட் என்று பெயர். எடப்பாடியார் - பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனக்கே
பெரும்பான்மை இருப்பதாகக் கோரினால், இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாக்குச்சீட்டு மூலம்
வாக்களிக்குமாறு செய்து, பெரும்பான்மையை நிரூபிப்பது. மைய அரசின் அட்டர்னி ஜெனரல் இத்தகைய காம்போஸிட்
ஃப்ளோர் டெஸ்ட் நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார் என்றும், மைய சட்ட அமைச்சர் அது
தேவையில்லை என்று சொன்னதாகவும் செய்திகள் கூறுகின்றன. என்புரிதலின்படி, இப்போது நடக்க இருப்பது
மேற்குறிப்பிட்டது போன்ற போட்டி அல்ல, சாதாரண நம்பிக்கை வாக்கெடுப்பு.
இதற்கிடையில் அந்தக் குழுவில் சிலர் மனம் மாறினால், மனம் மாற்றினால், திமுகவும் காங்கிரசும்
சேர்ந்து எதிர்த்து வாக்களித்து தோல்விகாணச் செய்யவும் முடியும்.
* * *
சும்மா சொல்லக்கூடாது. கூவாத்தூர் குரூப்பை நன்றாகவே
கட்டுக்குள் வைத்திருந்தார்கள். நிறையப்பேயர் பிய்த்துக்கொண்டு வெளியே வருவார்கள்
என்கிற எதிர்பார்ப்பு எல்லாம் பொய்யாகிப் போனது. பன்னீர் பக்கம் ஆட்கள் வரும்
என்று எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருக்கவில்லை. இவர்கள் எல்லாருமே
யாராவது ஒரு தலைமைக்கு அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள். அவ்வளவு சுலபமாக
சுய முடிவு எடுக்க மாட்டார்கள். பன்னீர் உட்படத்தான் சொல்றேன். அவ்வளவு சுயமாக முடிவெடுக்கிற
ஆளாக இருந்திருந்தால் தீபாவை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. குடும்ப
ஆதிக்கம் கூடாது என்றால், தீபா மட்டும் யார்? இந்தக் கூத்தையெல்லாம்
பார்க்கும்போது 1988 நினைவு வருகிறது.
1987இல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகிக்கு எதிராக
ஜெயலலிதா வந்தார். தினமும் பால்கனியில் நின்று ஆதரவாளர்களுக்குக் கையசைப்பார்.
அப்போது அவருக்கு காளிமுத்து வைத்த பெயர் “பால்கனி பாவை”. இப்போது தீபாவுக்கு இரண்டாம் பால்கனி பாவை என்ற பெயரை
யாரும் வைக்கவில்லை. மக்களுக்கு வரலாறு மறந்து போய் விட்டது போல...!
எத்தைத் தின்னா பித்தம் தெளியும் என்பது போல கிடைக்கிற
துரும்பையெல்லாம் பிடித்துக்கொண்டு கரையேற நினைத்தார் பன்னீர். கணக்கு தப்பிப்போனது.
அவர் பக்கம் போன மாஃபா பாண்டியராஜன் எதிர்ப் பக்கத்திலிருந்து அனுப்பி
வைக்கப்பட்டவர் என்றுதான் இப்போதும் எனக்கு சந்தேகம். மீண்டும் அந்தப்பக்கம்
போகக்கூடும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம்.
சட்டமன்றத்தில் என்ன நடக்கும்?
எதுவும் நடக்கலாம். பன்னீர் பக்கம் அதிக ஆட்கள் இருந்தால்
தைரியமா நிக்கலாம். ஆனா இருப்பது வெறும் பத்து பேர். சசிகலா குரூப் எம்எல்ஏக்கள்
அடிதடியில்கூட இறங்கலாம். அப்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கவும் வாய்ப்பு
உண்டு.
மீண்டும் 1988 சம்பவங்களுக்குப் போவோம். அப்போது
அதிமுகவுக்கு 132 உறுப்பினர்கள் (இப்போது 135). அப்போது பொறுப்பு முதல்வராக
இருந்தவர் நெடுஞ்செழியன் (இப்போது பன்னீர் மாதிரி). கவர்னர் குரானா. பெரும்பான்மை
நிரூபிக்க தனக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார் நெடுஞ்செழியன். சரி,
பார்க்கிறேன் என்று
சொன்னார் குரானா. ஆனால், எம்ஜிஆர் மனைவி வி.எம்.
ஜானகி தரப்பில்
ஆர்.எம். வீரப்பன், எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்கி், ஜானகியை முதல்வராக தேர்வு செய்வதாக கடிதம் கொடுத்தார்.
அதையே ஏற்றுக்கொண்டு குரானா ஒப்புதல் கொடுக்க, ஜானகி முதல்வர் ஆகி விட்டார்.
வீரப்பன் 87 அதிமுக எம்எல்ஏக்களை பஸ்சில் ஏற்றி ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தார்.
ஜெயலலிதா-நெடுஞ்செழியன் கோஷ்டி, 32 எம்எல்ஏக்களை சென்னையில் ஒரு ஃபைவ்-ஸ்டார் ஹோட்டலில் அடைத்து வைத்தது. (பன்னீர்
பக்கம் அதிக எம்எல்ஏக்கள் இருக்கவில்லை, இருந்திருந்தால் அவரும் ஒரு கூவாத்தூரை
கண்டுபிடித்திருப்பார்.)
ஜனவரி 28 நம்பிக்கை வாக்கெடுப்பு. காங்கிரசுக்கு அப்போது 64
உறுப்பினர்கள். காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்று ஜெயலலிதா - ஜானகி இரண்டு
அணிகளும் நம்பினார்கள். ஜானகி அணிக்கு ஆதரவு இல்லைன்னு தில்லியிலிருந்து காங்கிரஸ்
உத்தரவு கடைசி நேரத்தில் வந்தது.
சபாநாயகர் - வானளாவிய அதிகாரம் கொண்ட பி.எச். பாண்டியன்.
அன்று நடந்தது இந்திய சட்டமன்றங்களின் வரலாற்றிலேயே இல்லாதது. அதை எல்லாம் விவரமாக
எழுத பத்துப்பக்கம் கட்டுரை எழுதலாம். சுருக்கமாகத் தருகிறேன்.
234 உறுப்பினர்களில் 10 திமுக உறுப்பினர்கள் பதவி
பறிக்கப்பட்டிருந்தது. எனவே 224. இதில் அப்சல்யூட் மெஜாரிட்டிக்கு, அதாவது 113 தேவைப்படுமானால், ஜானகியிடம் எண்ணிக்கை இல்லை. ஜெயா அணி ஆதரவு தர மறுத்து விட்டது. எனவே
காங்கிரசை நாடுகிறார். காங்கிரசிடம் 64 உறுப்பினர்கள்.
ஜானகி அணிக்கு ஆதரவு தருவதா என்று காங்கிரசிலும் குழப்பம்.
ஏன் என்றால், வீரப்பன் அணியினர், அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய விவகாரத்தில் காங்கிரசை எதிர்த்தவர்கள்.
ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. அதனால் இரண்டு தரப்பிடமிருந்தும்
ஒதுங்கி இருப்போம் என்று முதலில் நினைக்கிறது காங்கிரஸ். இருந்தாலும், ஜானகிக்கு ஆதரவு தர முடிவு
செய்தது. ஆனால் கடைசி நேரத்தில், வாக்கெடுப்பு
நடைபெறுவதற்கு சற்று முன்னர் முடிவு மாறி விட்டது. யார்,
எதற்காக அந்த முடிவை
மாற்றினார்கள் என்று தெரியவில்லை. அப்போது ராஜீவ் காந்தி சிக்கிமில் இருந்தார்.
சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் மெஜாரிட்டி
தேவையில்லை, வாக்கெடுப்பு நாளில் அவையில் வந்திருக்கிற உறுப்பினர்களில் மெஜாரிட்டி இருந்தால் போதும் என்கிறார்
குரானா. அதாவது அப்சல்யூட் மெஜாரிட்டி தேவையில்லை, மெஜாரிட்டி போதும்.
ஜனவரி 28 காலை அவை கூடுகிறது. ஜானகிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் கட்சி
உத்தரவு தரப்பட்டதாக செய்திகள் கசிகின்றன.
அதைத் தொடர்ந்து, காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் தமது பதவியை
ராஜினாமா செய்வதாக தொலைபேசியில் ஒரு செய்தி கிடைத்தது என்று கூறிய சபாநாயகர்
பாண்டியன் அவையை ஒத்தி வைக்கிறார். இப்படிச் செய்ய எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
பெரும் குழப்பம். ஜானகி அணி திமுக உதவியை நாடுகிறது. திமுக
தயங்குகிறது.
மறுபடி அவை கூடியதும் இன்னொரு அதிர்ச்சித்தகவலை சொல்கிறார்
பாண்டியன். அதிமுகவினர், திமுகவினர் உள்பட 5 பேர் கட்சி முடிவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார்கள் என்பதால்
பதவியிழக்கிறார்கள் என்கிறார். மீண்டும் அவையை ஒத்தி வைக்கிறார்.
காங்கிரஸ் உறுப்பினர் சிவராமன், சபாநாயகர் நாற்காலியில்
அமர்ந்து, பாண்டியனின் முடிவை ரத்து செய்து உத்தரவிடுகிறார். பாண்டியனை நீக்குகிறார்.
3 மணிக்கு அவை கூடியதும் பாண்டியனும் வருகிறார். மோதல்,
அடிதடி, குண்டர்கள் நுழைவு.
பாண்டியன்தான் அதிகாரபூர்வ சபாநாயகர். போலீசை வரவழைக்கிறார். போலீஸ் கமிஷனர்
தேவாரம்! லத்தி சார்ஜ். காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் ரத்தக்காயம், எலும்பு முறிவு.
அடுத்த சற்று நேரத்தில், 110 உறுப்பினர்கள் மட்டுமே
இருந்த நேரத்தில், பாண்டியன் மீண்டும் அவையைக் கூட்டுகிறார். 97 அதிமுக, ஒரு நியமன உறுப்பினர், ஒரு
பார்வார்ட் பிளாக் உறுப்பினர் ஜானகிக்கு ஆதரவு தருகிறார்கள். கட்சிக்கு எதிராக
செயல்பட்டதால் ஜெ அணியின் 27 பேர் பதவி பறிபோவதாக அறிவிக்கிறார் பாண்டியன்.
ஆக, 99 உறுப்பினர் ஆதரவுடன் ஜானகி அணி பெரும்பான்மை நிரூபித்ததாக அறிவிக்கிறார்
பாண்டியன்.
இப்போது நிகழ் காலத்துக்கு வருவோம்.
இப்போது ஜெயலலிதா இடத்தில் பன்னீர். ஆனால் பன்னீர் ஜெயலலிதா
இல்லை. 1988இல் நடந்த அளவுக்கு இப்போது நடக்காது. மீடியாவின் மூலம் மக்களுக்கு
செய்திகள் தெரியும் வாய்ப்புகள் இப்போது மிகவும் அதிகம். அது போக, உள்ளே கலவரம்
செய்தால் சட்டமன்றத்தையே கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்ய
முடியும். இப்படியொரு நிலைமை வருவது பாஜகவுக்கு அல்வா போல. 1988இல் பிடுங்கி
எடுத்த மைக்குகளுடன் ஆட்கள் வீரநடைபோட்டு வெளியே வந்த காட்சிகள் பத்திரிகைகளில் பார்த்த
ஞாபகம் இப்போதும் உண்டு. இந்தக் காட்சிகளிலும் பெரும்பாலான காட்சிகள் நாளை
அரங்கேறாது என்பது நிச்சயம்.
ஆனாலும் இரண்டு குழுக்களும் எதிரிகளாகப் பாவித்துக்
கொள்ளும் மனநிலையும், சிறைக்குப் போகுமுன் சிங்கமாய் சீறி சின்னம்மா செய்த சபதமும் பற்றி யோசிக்கும்போது எதுவும் நடக்கலாம் என்றும் ஓர்
அச்சம் இருக்கிறது.
எடப்பாடியார் எத்தனை நாளைக்கு முதல்வரா இருப்பார்? தெரியாது.
மன்னார்குடி கும்பலுக்கு நெருக்கமானவர்களுக்கே அமைச்சர்
பதவிகள் பெரும்பாலும் இருக்கும்.
பன்னீர் மாதிரி கொஞ்ச நாளில் மன்னார்குடியாருக்காக இவரும்
இறங்குவாரா? தெரியாது. சாத்தியம் உண்டு.
கொங்குமண்டலத்து ஆண்ட பரம்பரை - தென் மாவட்ட ஆண்ட பரம்பரை
மோதல் வருமா? வரக்கூடும். அதுபோக, கொங்கு மண்டலத்தின் இரண்டு வாள்கள் ஒரே உறையில் –
செங்கோட்டையன், பழனிச்சாமி - எத்தனை நாட்களுக்கு ஒரே உறையில் இருக்க முடியும்?
எடப்பாடியார் பக்கம் மத்திய அரசுடன் தைரியமாக பேசக்கூடிய
ஆட்கள் இருக்கிறார்களா என்று தெரியாது. ஜிஎஸ்டி விஷயத்தில் மாஃபா
பாண்டியராஜனைத்தான் ஜெயலலிதா மத்திய அரசுடன் பேச அனுப்பியதாக ஞாபகம். இப்போது அவர்
பன்னீர் பக்கம். ஆக ஒன்று மட்டும் நிச்சயம். வலுவான தலைமை கிடையாது. மத்திய
அரசுக்கு இணக்கமாகப் போய், அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, தலையாட்டிக் கொண்டே காலம் கழிக்க
வேண்டியிருக்கும். அதனால் மக்களாகிய நாம்தான் இவர்களுடைய செயல்பாடுகள் குறித்து இன்னும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குடியரசு ஆட்சி கொண்டுவந்து....♥ மறு தேர்தல் நடத்தினால்.... நிச்சயமாக அது பஜகவிற்கு அல்வா தான் கொடுக்கும்....அதன் பலன் திமுகவிற்கு போகும் என்பதால் தான்....♥ இன்னமும் அதிமுகவை வளைப்பதிலேயே பஜக இருக்கிறது....
ReplyDelete^
கடைசி பாராவிற்கு முந்தைய பாராவில்...♥
இரண்டு கத்திகள் ஒரே வாளில் என்பதற்கு பதிலாக..♥ ஒரே உறையில் என்று வரும் என்று எண்ணுகிறேன்...
நன்றி சாதிக். திருத்தி விட்டேன்.
ReplyDelete