தில்லிக்கு வந்த உடனே
தமிழ்ச் சங்கத்தில் பங்கேற்கத் துவங்கிய சில மாதங்களில் அறிமுகமானவர் ரங்கநாதன். இங்கே
நிறைய ரங்கநாதன்கள் இருந்தார்கள். இவர் பி.எஸ். ரங்கநாதன். ஆனால் ரங்கநாதன் என்றால்
தில்லிவாசிகளுக்குத் தெரியாது, கடுகு என்றால்தான்
தெரியும்.
அகஸ்தியன் என்ற பெயரில்
எழுதினார். நகைச்சுவை எழுத்தில் விற்பன்னர். மனைவி கமலா, மைத்துனன் தொச்சு என்ற பாத்திரங்களை வைத்து எழுதிய
நகைச்சுவைக் கதைகளுக்கு என் மகள்களும் ரசிகைகள். அவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில்
நிறையவே பார்க்கலாம். குறிப்பாக, kadugu-agasthian.blogspot.com என்ற வலைப்பூவில் அவரே எழுதியதையும் பார்க்கலாம்.
அரசின் அஞ்சல்
துறையில் பணியாற்றிய பிறகு, விளம்பரத்துறைக்கு
மாறினார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில்
ஈடுபாடு. தில்லியில் உள்ள ஆன்மீக அமைப்புகள் வெளியிடும் புத்தகங்களை வடிவமைப்பதில்
உதவி வந்தார்.
தில்லியைவிட்டுப்
போகும்போது அவருடைய மாருதி காரை என் நண்பர் ஜெய்சங்கருக்குத்தான் கொடுத்துவிட்டுப்
(மிக மலிவான விலையில்) போனார். கிரீன் பார்க்கில் ஜெய்சங்கர் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம்
நடத்தி வந்தார். அவருடைய நிறுவனம் இருந்த இடத்திலேயே பகுதி வாடகைக்கு என்னுடைய டைப்செட்டிங்
யூனிட்டும் சில காலம் இயங்கியது. கிரீன் பார்க்குக்கு எதிர்ப்புறம் கௌதம் நகரில்தான்
கடுகு சாரின் வீடும். அவர் யூனிட்டுக்கு வந்தால், ஜெய்சங்கர் அலுவலகத்தில் வேலை செய்த வடகிழக்குப்
பெண், என் யூனிட்டில் வேலை செய்து
வந்த மைதிலி, கடுகு ஆகிய மூன்று
பேரும் சேர கலகலவென்று இருக்கும்.
1996இல் நான் டைப்செட்டிங்
யூனிட் ஆரம்பித்த காலத்தில் எழுத்துருக்கள் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருந்தது.
இவர் தானே தமிழ் எழுத்துருக்களை வடிவமைக்க ஆரம்பித்தார். அதில் சாதித்தும் காட்டினார்.
அவருக்கு வேலைகள் அதிகமாகிப்போனதால், அவருடைய வாடிக்கையாளர்களை என் பக்கம் அனுப்பி வைத்தார்.
இதோ... இந்தப் பதிவை
நான் எழுதிக்கொண்டிருக்கும்போது அமர்ந்திருக்கும் நாற்காலியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு
முன்னால் இதேபோல நான் அமர்ந்திருக்க, பக்கத்தில் அமர்ந்து, என் கணிப்பொறிக்கு
மொழிகளுக்கான சாப்ட்வேர்களை போட்டுக்கொடுத்து, அதை எப்படி இயக்குவது என்றும் சொல்லிக்கொடுத்தார்.
அவர் கொடுத்த பிளாப்பிதான்
இது. நான் காசு கொடுத்து வாங்கி வைத்திருந்த ஒரு மென்பொருள் சரியாக வேலை செய்யாதபோது,
அதற்கான நிரலை சரி செய்து
சமஸ்கிருத (இந்தி) வேலை செய்வதற்காக அவர் கொடுத்த பிளாப்பி இது. MS-DOS கமாண்ட்கள் நிறையவே பயன்படுத்திக் கொண்டிருந்த காலம்
அது.
அமெரிக்காவில் நிரந்தரமாக
குடியமர்ந்து விட்ட அவருடைய நினைவாக பத்திரமாக வைத்திருந்தேன். அமெரிக்காவிலிருந்தாலும்
அவ்வப்போது மின்னஞ்சலில் தொடர்பு உண்டு.
2012ஆம் ஆண்டு,
அவருக்கு விருது வழங்கப்படும்
செய்தியை அழைப்பிதழுடன் அனுப்பியிருந்தார்.
I am glad to inform you all that
Appusami-Seethapatti Humour Trust has selected me for this year's award. Please
see the invitation for the Award Function.
*
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னால் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அப்போது தில்லி நண்பர்கள் வட்டத்தில் கவியரங்குக்காக
வைத்துக்கொண்ட புனைபெயரான புதியவன் என்ற பெயரால்தான் நான் அறியப்பட்டேன். இப்போதும்
சிலர் மட்டும் அதே பெயரால் அழைக்கிறார்கள்.
என்னுடைய முகவரி தவறவிட்டு
விட்டதாலோ என்னவோ, தங்கை முகவரிக்கு
அனுப்பி, எனக்கு எழுதியிருந்தார்.
ஏதோ அவசரத்தில் எழுதியிருப்பார போல! அதை அப்படியே கீழே தருகிறேன் :
அன்புள்ள புதியவன்
எணும் பழைய நண்பருக்கு,
வணக்கம்.
நலம். நாடுவதுவும்
அதுவே.
இரு உடவி.
முன்பொரு சமயம் தாங்கள்
என் கதைகளைத் தட்டச்ச்சு செய்து கொடுத்தீர்கள். இப்போது Ebook ஆகப் போட ப்திப்பகத்தார் கேட்கிறார்கள். என்னிடம்
ASTERIX TAMIL - font அது உங்கள் கம்ப்யூட்டரில்
இருந்தது. அது இன்னமும் உங்களிடம் இருந்தால் எனக்க அனுப்பி உதவவும். இல்லாவிட்டால்
நான் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டி இருக்கும்.
நான் அமெரிக்காவில்
உள்ளேன்.
உங்களிடமும் இல்லாவிட்டால்
கவலைப் படாதீர்கள்.
பி எஸ் ஆர்
-----
அவர் ஒருகாலத்தில்
எனக்குச் செய்த உதவிக்கு நன்றிக்கடன் செய்யும் வாய்ப்பு இது. பதில் எழுதினேன் :
வணக்கம் ஐயா.
நலம், நாடலும் அதுவே.
உங்கள் அஞ்சல் கண்டதிலேயே
மகிழ்ச்சி.
ASTERIX TAMIL - font என்னிடம் உண்டு. ஆனால் அது ஏடிஎம் ஃபான்ட். உங்களுக்குத்
தெரியும்.
எனவே, அதே நிறுவனத்தின், அதே குடும்பத்தைச் சேர்ந்த ஆக்ருதி தமிழ் ஃபான்ட்கள்
இணைத்துள்ளேன். இவை டிடிஎஃப் பான்ட்கள். எனவே தொல்லை இல்லாதவை. ஆஸ்டிரிக் ஃபான்ட்களில்
என்னென்ன பெயர்களில் ஃபான்ட்கள் உள்ளதோ அதே பெயர்களில் உள்ள இந்த பான்ட்களைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு ASTERIX
குடும்ப ஃபான்ட்கள்தான் தேவை
என்றால் தெரிவிக்கவும். அதையும் தேடி அனுப்பி வைக்கிறேன்.
அன்புடன்
ஷாஜஹான்
-----
மகிழ்ச்சி தரும் வகையில்
பதில் வந்தது :
ஒரு font கேட்டேன். ஒரு மூட்டையையே அனுப்பி விட்டீர்கள்.
ஆக்ருதி அமுதம் எழுத்துருவை
இன்ஸ்டால் செய்தேன். அப்படியே பட்டுக் கத்தரித்தது போல் லே அவுட்டைக் கடுகளவும் மாற்றாமல்
உட்கார்ந்து விட்டது.
எப்படி நன்றி சொல்வது
என்று தெரியவில்லை. கிட்டதட்ட 20 வருஷத்திற்கு முந்தி
டைப் செய்த மேட்டர்.
பி எஸ் ஆர்
*
ஏப்ரல் 3ஆம் தேதி வலைப்பூவில் பதிவு எழுதியிருக்கிறார்
:
என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்.,
அனைவரும் நலமாக இருக்கிறீர்கள்
என்று நம்புகிறேன்.
நான் விலகி மட்டும்
இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன்.
இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப்
பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
-- கடுகு
வலியிலும் தன் நகைச்சுவையைக்
கைவிடாத கடுகுவின் அடுத்த பதிவு இனி வராது.
சில நிமிடங்களுக்கு
முன்புதான் பார்த்தேன். சுதா பதிவு எழுதியிருந்தார்.
ஜூன் 2ஆம் தேதி இரவு
மறைந்து விட்டார் என்று.
அன்னாரின் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பக்கத்தை தற்போது தான் பார்க்க கிடைத்தது. பள்ளி நாட்களில் வார பதிப்புகளில் சிறு கதைகள் மற்றும் கல்கி நாவல்கள படித்தது. பின்னர் கவனம் திசை திரும்பி படிப்பின் சுவை மறந்தேன்.
ReplyDeleteதற்போது திரு. ஷான் மற்றும் க்ஷிதர் ஆகியோரது எழுத்துக்களை பார்த்து வருகிறேன். நீங்கள் செயல்படுத்தும் உதவிகள் என்னை பெரிதும் ஈர்த்து வருகின்றது.. அதன்படி நானும் என்னால் இயன்றதை செய்து வருகின்றேன்.
நன்றி!