Thursday, 6 April 2017

ஃபுட் பாய்ஸன் - டீஹைடிரேஷன்

ஜவஹர்லால் நேரு பல்கலையில் சில மாதங்கள் படிக்க வந்திருக்கும் ஒரு மாணவி, என் வீட்டுக்குப் பக்கத்தில் பேயிங் கெஸ்ட் போல தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறாள். அவளை இங்கே சேர்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள், என் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து, அவளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிச் சென்றார்கள். எப்போது என்ன உதவி தேவை என்றாலும் தாராளமாக வீட்டுக்கு வரலாம், வீட்டுச் சாப்பாடு தேவை என்று தோன்றினாலும் வரலாம், என்று எல்லாருக்கும் சொல்கிற உபதேசங்களை அந்தப் பெண்ணுக்கும் சொல்லி அனுப்பி வைத்தேன். சரி சரி என்று அவளும் மண்டையை ஆட்டிவிட்டுப் போனாள். மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது இது.

போனவாரம் திடீரென்று பல்கலையிலிருந்து பேராசிரியர் அழைத்தார். அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் நிற்கவில்லையாம். கொஞ்சம் கவனியுங்கள் என்றார். துணைவியாரை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தேன். டீஹைடிரேஷன் ஆகிவிடக்கூடாது என்று விளக்கி, எலக்டிரால் வாங்கிவந்து கொடுத்து, வீட்டிலேயே சற்றுநேரம் படுக்க வைத்திருந்து, மாலையில் எதிர்வீட்டு டாக்டர் வந்ததும் காட்டி ஊசியும் மருந்து கொடுத்து அனுப்பி வைத்தோம். காலையில் வீட்டுக்கு வா, இட்லி சாப்பிடலாம் என்றேன். தலையை ஆட்டிவிட்டுப் போனவள்தான். பத்து மணிக்கு போன் செய்து, நன்றாகவே இருக்கிறேன், ரொட்டி சாப்பிட்டு விட்டேன், என்றாள்.

இதுதான் நம் குழந்தைகள். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூச்சத்துடன் ஒதுங்கும் குழந்தைகள். சரி, அது கிடக்கட்டும். அவளுக்கு ஏன் வயிற்றுப்போக்கு வந்தது? முந்தைய தினம் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை, அதுதான் விஷயம்.

ஒரு விருந்துக்குப் போய் வந்திருப்போம், அல்லது குடும்பத்துடன் ஹோட்டலுக்குப் போய் சந்தோஷமாக சாப்பிட்டு வந்திருப்போம். வீட்டிலேயே பிடித்த உணவுகளை தயாரித்து உண்டிருப்போம். ஆனால் சற்று நேரத்தில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கூடவே வாந்தியும் சேர்ந்து விடுகிறது. எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. மலம் கழிக்கப்போனால் நீர்போல பீய்ச்சுகிறது. சாப்பிட்ட உணவு சரியில்லாமல் போனதே பெரும்பாலும் இதற்குக் காரணம். இதை ஃபுட் பாய்ஸன் (food poison) என்கிறோம்.

ஃபுட் பாய்ஸன் என்றால் என்ன? அது என்ன செய்யும்?
ஃபுட் பாய்ஸன் என்றால் ஏதோ சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டதாக அர்த்தமில்லை. உணவு உண்பதற்கு முன் அல்லது உண்டதற்குப் பின் சில பாக்டீரியாக்களால் உணவு நச்சாக மாறுவது, அதன் விளைவாக ஆரோக்கியம் கெடுவதுதான் ஃபுட் பாய்சனிங் எனப்படும். அதாவது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்பட்ட நச்சுப் பொருட்களின் காரணமாக ஏற்படுவது ஃபுட் பாய்ஸன்.


பொதுவாக எல்லாருமே ஏதேனுமொரு கட்டத்தில் இதற்கு ஆளாகியிருப்பார்கள். சிலருக்கு இதன் விளைவு சில மணி நேரங்களில் சரியாகி விடும். சிலருக்கு ஓரிருநாள் தொடரும். சரியான உணவுமுறையைப் பின்பற்றாவிட்டால் சில நாட்கள் தொடரும். கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் கூடும்.

அடிவயிற்றில் இசிவு எடுத்தாற்போன்ற வலி எடுக்கும், வாந்தி வரும், வயிற்றுப்போக்கு கடுமையாக இருக்கும். எதுவுமே சாப்பிடாதபோதும், அல்லது நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டாலும்கூட, வயிற்றுப்போக்கின்போது எப்படி அவ்வளவு நீர் வெளிவருகிறது என்று வியப்பாக இருக்கும். பொதுவாக நாம் உண்ணுகிற உணவு சிறுகுடல்-பெருங்குடல் வழியாக செரிக்கப்பட்டு சக்கை மட்டுமே மலமாக வெளிவரும். ஆனால் நச்சுணவு என்னும்போது, சிறுகுடல் ஏராளமான நீரை உருவாக்கும். செரிப்பதற்கு நேரமில்லாமல் அத்தனையும் உடனே வெளியேறும். அதனால்தான் தண்ணியாப் போகுதுஎன்கிறோம். இதனால் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும்.

நச்சுணவு எதன் காரணமாக ஏற்படுகிறது?
சில உணவுகளை உண்பதற்கு முன்பே அதில் நச்சு உருவாகி இருக்கலாம். சில உணவுகளை உண்ட பிறகு, வயிற்றுக்குள் போன பிறகு நச்சு உருவாகலாம். சாப்பிடுவதற்கு முன்பே நச்சு உருவாகி இருந்தால், அதன் விளைவு சில மணி நேரத்திலேயே தெரிந்து விடும். சாப்பிட்ட பிறகு. வயிற்றுக்குள் போன பிறகு நச்சு உருவானால், அறிகுறிகள் தாமதமாகவே தெரியும்.

எந்த பாக்டீரியாக்கள் நச்சு உருவாக்குகின்றன? எப்படி?
எல்லா உணவுப் பொருட்களுமே குறிப்பிட்ட நேரத்துக்குப் / காலத்துக்குப் பிறகு கெட்டுப்போகும் என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். கெட்டுப்போகாதிருக்க குளிர்பதனப் பெட்டியில் வைக்கிறோம. அப்படியும்கூட கெட்டுப்போவதுண்டு. காரணம் பாக்டீரியாக்கள். உதாரணமாக, சில பாக்டீரியாக்களும், அவை இருக்க்க்கூடிய உணவுகளும் கீழே
Norovirus (காய்கறிகள், பழங்கள், கடலுணவுகள்)
Salmonella (முட்டை, இறைச்சி, பால் பொருட்கள்)
Clostridium perfringens (இறைச்சி, கோழி, பண்ணைப் பொருட்கள்)
Campylobacter (இறைச்சி, தண்ணீர்)
Staphylococcus (முட்டை, பால், கிரீம்)

Staphylococcus aureus என்னும் பாக்டீரியா பொதுவாக எல்லாருடைய உடல்களிலும் மூக்கில், மூச்சுக்குழலில், தோலில் இருக்கும். அதே பாக்டீரியா உணவுப் பொருட்களை கெடுக்கவும் கூடியது. மீந்துபோன இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றில் விரைவாக பல்கிப் பெருகி அவற்றை நச்சாக்கி விடும். Salmonella, Campylobacter, Botulism என உணவை நச்சாக்குகிற பாக்டீரியாக்கள் பல உண்டு. இவை தவிர, ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள், ஒவ்வாமை ஏற்படுத்துகிற பொருட்கள் ஆகியவையும் உணவை நச்சாக்கலாம்.

மீந்துபோன உணவுகளால், இறைச்சிப் பொருட்களால் மட்டும்தான் புட் பாய்சனிங் ஏற்படும் என்பதில்லை. புட்டியில் அடைக்கப்பட்ட canned foods உணவுகளால்கூட ஃபுட் பாய்சன் ஏற்படலாம். பச்சைக் காய்கறிகளின் சலாட், அல்லது பாதி வேகவைத்த காய்கறிகள் காரணமாக ஏற்படலாம். பச்சை முட்டை, பச்சைக் காய்கறிகள், பால் பொருட்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பச்சையாக அல்லது அரைவேக்காடாக உண்பதை தவிர்ப்பது நல்லது. பாக்டீரியா வளர முடியாத அளவுக்கு வெப்பம் அல்லது குளிர்ச்சியில் உணவுப் பொருட்களை வைப்பது நல்லது. அதாவது, வாங்கி வந்த காய்கறிகளை, கீரைகளை வெளியே வைக்காமல் ஃபிரிஜ்ஜில் வைப்பதும், பயன்படுத்தும் முன்னால் சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது. பிரிஜ்ஜிலிருந்து எடுத்து வெளியே வைத்த உணவுப் பொருட்களை குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகும் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. பிரிஜ்ஜிலிருந்து ஒரு முறை எடுத்தபிறகு பயன்படுத்திவிட வேண்டும். மறுபடி உள்ளே வைப்பது, மறுபடி எடுத்துப் பயன்படுத்துவது கூடாது.

கைக்குழந்தைகளை சுத்தம் செய்தபிறகு, டயபர்களை மாற்றிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். E. coli தொற்று குழந்தைகளின் கழிவிலிருந்தும்கூட ஏற்படக்கூடும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உணவின் காரணமாக ஏற்பட்ட வயிற்றுப்போக்கு என்றால் பொதுவாக 24 மணிநேரத்தில் சரியாகி விடும். அதிக நாட்கள் நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இருப்பினும், நாமாகவே மேற்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உண்டு.
வீட்டில் சாப்பிட்ட பிறகு பிரச்சினை ஏற்பட்டிருந்தால், எந்த உணவு காரணமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறதோ, அதை முதலில் தூக்கி எறியவும்.
ஓரிரு மணி நேரம் எதையும் அருந்தாமல், உண்ணாமல் தவிர்க்கவும்.
தேநீர் / காபி, பால் கலந்த பானங்கள், மது அவசியம் தவிர்க்கவும்.
சிறுகுடல் அதிக நீரை வெளியேற்றிவிடும், வாந்தியின் காரணமாகவும் நீர் குறைந்து போகும். எனவே நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். அதைத் தவிர்க்க, கொஞ்சம் கொஞ்சமாக, நிறைய நீரை அருந்த வேண்டும். டீஹைடிரேஷன் ஏற்பட்டால், ரீஹைடிரேஷன் செய்ய வேண்டும்.
உப்பு-சர்க்கரை-நீர் மூன்றும் கலந்து அருந்தலாம். இதுவே ஓரல் ரீஹைடிரேஷன் எனப்படும். (ஓஆர்எஸ்) எலக்ட்ரால், எனர்ஜி டிரிங்க் என்ற பெயர்களில் கிடைப்பவை இவைதான்.
மோர் அருந்தலாம்.
கொழுப்புச்சத்து, நார்ச்சத்து உள்ள பொருட்கள் செரிப்பது கடினம். எனவே கொழுப்பு, நார்ச்சத்துப் பொருட்களை தவிர்க்கவும்.
வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்க்கவும்.
செரிப்பதற்கு எளிதான பொருட்களை உண்ணலாம். உதாரணமாக பிரெட், நன்றாக வேக வைத்து குழைய வைத்த சோறு, கஞ்சி, இட்லி, முட்டையின் வெள்ளைக்கரு, வாழைப்பழம்.
இஞ்சி செரிமானத்துக்கு உதவும், வேறு பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றால் இஞ்சிச்சாறு அருந்தலாம்.

மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கோடை காலத்தில் டீஹைடிரேஷன் ஏற்படும்போதும் உதவும். குறிப்பாக தில்லி போன்ற வெயில் மிக அதிகமாக இருக்கும் நகரங்களில். 
தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திக்க நேற்றும் சென்றிருந்தேன். சிலருக்கு டீஹைடிரேஷன் ஆகியிருப்பதாகத் தெரிந்தது. ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை யாரோ விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அடுத்த முறை சந்திக்கச் செல்லும்போது நானும் கொஞ்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். 


எச்சரிக்கை 1 — இந்த சுய உதவிக் குறிப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்று அல்ல. ஓரளவுக்கு திடமாக உள்ளவர்கள், தைரியமாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் பயன்படுத்தலாம். அவர்களுக்கும்கூட 48 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தால் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். குழந்தைகள் அல்லது முதியவர்கள் என்றால் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம். குழந்தைகளுக்கு நீடித்த வயிற்றுப்போக்கு உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும்.

எச்சரிக்கை 2 — வயிற்றுப்போக்கு-வாந்தி விஷயத்தில் கடையில் நாமாகவே மருந்துகளை கேட்டு வாங்கிப் பயன்படுத்துவது நல்லதல்ல. ஃபுட் பாய்சனிங் அறிகுறிகளை வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், களைப்பு, மயக்கம், தலைவலி, மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் என பல்வேறு அறிகுறிகளைப் பொறுத்தே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய மருந்து மற்றொருவருக்குப் பயன்படும் என்பதில்லை.

3 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவலை அழகாக பதிவாக்கி தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. இதை போன்ற விபரங்களை அரசாங்கமே அவ்வப்போது பிரின்ட் செய்து மக்களிடையே விநோகிக்கலாம் மிகவும் பயனளிக்கும்

  ReplyDelete
 3. கோடை காலத்திற்கு ஏற்ற பயனுள்ள ஆலோசனை. முக்கியமாக் கீரைகளை பிரிஜ்ஜில் வைப்பதைப் பற்றியது.

  எந்தக் கீரையானாலும், கழுவிய பிறகு பிரிஜ்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அந்தக் கீரையைச் சமைக்கக்கூடாது.

  கடையில் இருந்து வாங்கிவந்த உடனே அதை உரிய பிளாஸ்டிக் கவரில் வைத்து மூடி, பிரிஜ்ஜில் வைப்பதுதான் முறை. சமைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுத்து, அதை பதினைந்து நிமிடமாவது அறையின் உஷ்ணத்திற்கு வரும்வரை தொடாமல் இருந்து, அதன் பிறகு நன்கு கழுவிச் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

  எனக்குத் தெரிந்தவரை கீரைகளை இம்மாதிரி கையாளாமல் போனவர்கள், பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரமாவது வயிற்று போக்கால் அவதிப்பட்டிருக்கிறார்கள்.

  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete