இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னும், குழந்தையின் வளர்ச்சி
தொடர்பான அந்தக்கால அனுபவங்கள் எல்லாமே இப்போது நினைவில் இல்லை. இப்போது தாத்தா ஆகிவிட்டேன்.
பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சுகிறவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு கூரையில்
தொங்குகிற ஃபேனைக் கண்டு சிரித்துச் சிரித்து வாயைக் குவித்து ஏதேதோ குரல்கள்
எழுப்புதல், கை-கால்களை உதறுதல்... தலையில் மண்டைஓட்டு எலும்புகள் இன்னும் இணையாத இடைவெளி
மென்மையாய் இருத்தல், அந்த இடத்தில் உற்றுக் கவனித்தால் உள்ளே மூளை துடிப்பதன் அடையாளம் இவற்றை
எல்லாம் புதிதாகக் காண்பது போலவே இருக்கிறது. குழந்தைக்கு எது எது எப்போது நிகழும்
என எல்லாவற்றையும் இணையத்தில் தேடித் தெளிவுபெற வேண்டியிருக்கிறது.
இப்படி யோசித்திருந்த நேரத்தில்தான் திடீரென ஒரு நூல்
நினைவு வந்தது. ‘குழந்தை வளர்ச்சி’ என்பது அதன் தலைப்பு. தில்லியில் ஒரு
பதிப்பாளர் அந்த நூலின் தமிழாக்கத்தை எனக்கு அனுப்பி, அதை நூலாக வடிவமைத்துத் தரச்
சொன்னார். தமிழாக்கத்தைப் படித்தபோது, துறைசார் ஆட்களால் மொழிபெயர்க்கப்பட்டு, அது தமிழ் முழிபெயர்ப்பாக
இருந்ததைக் கண்டேன். “இந்தத் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பயனில்லை, நீங்கள் விரும்பினால்
முழுமையாக செம்மைப்படுத்தித் தருகிறேன்” என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் தமிழாக்கம்
செய்தவர்கள் பெயரைப் பயன்படுத்த வேண்டுமே என்றார். “என் பெயர் வர வேண்டும் என்ற
கவலை எனக்கு இல்லை. நான் செம்மைப்படுத்திய பிறகு துறைசார் வல்லுநர்களுக்கும்
அனுப்பி சரிபார்த்துக்கொள்ளலாம். விரும்பினால் என் பெயரை எங்காவது சேர்த்துக்
கொள்ளுங்கள், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நூல் சிறப்பாக வெளிவர வேண்டும்” என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு,
நான் கேட்ட தொகையைத்
தரவும் ஒப்புக்கொண்டார். மொழிபெயர்ப்பில் உதவி என்ற பகுதியில் என் பெயருடனும் நூல்
வெளி வந்தது. இது நடந்தது சுமார் 2008 இறுதியில். இந்த நூலைப் பற்றி இப்போது திடீரென எனக்கு
நினைவு வந்தது. (தேவைதான் ஆசான் என்பது எவ்வளவு பொருத்தம் ! )
அமெரிக்காவில் மருத்துவத் துறையில் இருக்கிற இந்தியர்கள்
சிலர் நண்பர்களாக கூடிப்பேசிக்கொண்டிருக்கும்போது, ஆரோக்கியம் தொடர்பான நம்பகமான
தகவல்கள் இந்திய ஊடகங்களில் வருவதில்லையே என்ற விஷயம் அலசப்பட்டிருக்கிறது.
நோயாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் சரியாக பதிலளிக்காத, பதிலளிக்க நேரமில்லாத நிலைமை
ஒருபக்கம். நோயாளியும் கேள்வி கேட்கத் தயங்குகிற நிலை இன்னொரு பக்கம். இந்தச்
சூழலில், இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, தரமான தகவல்களை வழங்கும்
வகையில் வலைதளம் தொடங்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். இந்த வலைதளத்துக்கு
ஸ்பான்சர் செய்ய என்டிடிவி முன்வந்தது. எனவே DoctorNDTV.com என பெயர் சூட்டப்பட்டது.
அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தார்கள். முற்றிலும்
இலவசமாக நடத்தப்பட்டது இந்தச் சேவை. (இப்போது NDTV தொடர்பு இருப்பதாகத்
தெரியவில்லை. தளமும் முன்னர் இருந்த வீரியத்துடன் செயல்படுகிறதா என்று
தெரியவில்லை.)
இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளையும், அவற்றின் பதில்களையும்
வகைப்படுத்தி, குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், இளைஞர்கள் என பல பிரிவுகளாகப் பிரித்தனர். அதேபோல மருத்துவத்தின்
துறைகள்வாரியாகப் பிரித்தனர். அந்தக் கேள்வி-பதில்கள் நூல்கள் DoctorNDTV சீரிஸ் என வெளிவந்தன. இவற்றை
வெளியிட்ட பைவேர்ட் புக்ஸ் நிறுவனம், சில நூல்களை மட்டும் இந்திய மொழிகளிலும் வெளியிட
முன்வந்தது. அவற்றில் ஒன்றுதான் குழந்தை வளர்ச்சி – Child Development.
இந்த நூலில், பச்சிளம் குழந்தை முதல், வளரிளம் பருவத்தினர் வரையான
குழந்தைகள் தொடர்பான கேள்விகள் இடம்பெற்றுள்ளன. குழந்தை வளர்ச்சியின் அடையாளங்கள்,
சமூக நடத்தை,
உண்ணும் வழக்கம்,
பேச்சுத்திறன்
கோளாறுகள் என பல விஷயங்கள் குறித்த அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன. அதையடுத்து,
பல கேள்விகள்
இடம்பெறுகின்றன. மாதிரிக்காக சில :
• குழந்தையின் மொழித்திறனை எப்படி அதிகரிப்பது?
• ஏன் கீழ் உதட்டை சப்புகிறான்?
• ஏன் முரடாக நடந்து கொள்கிறான்?
• ஏன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான்?
• குழந்தையை தனியாகப் படுக்க வைக்கலாமா?
• அடம்பிடிக்கிற குழந்தையை எவ்வாறு சமாளிப்பது?
• படிப்பில் நாட்டம் குறைந்து விட்டதை எப்படி சரி செய்வது?
• வன்முறையிலிருந்து எப்படி பாதுகாப்பது?
• என் குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருக்கிறதா?
• ஓவியத்தில் உள்ள ஆர்வம் கல்வியை பாதிக்குமா?
• பொய் பேசுவதை எப்படித் தடுப்பது?
• தோல்வி மனப்பான்மையை மாற்ற என்ன செய்யலாம்?
• நண்பர்களை உருவாக்கிக் கொள்வதில் எப்படி உதவலாம்?
• இணையப் பயன்பாட்டை எப்படி நெறிப்படுத்துவது?
இவை மாதிரிகள்தான். மொத்தம் 135 கேள்விகள் உள்ளன. அது தவிர
பிற்சேர்க்கையில் பேச்சுத்திறன் கோளாறுகள், கற்பதில் பிரச்சினைகள்,
வளரிளம்
பருவத்தினரின் ஆரோக்கியம், தேர்வுகளை சமாளித்தல் ஆகியவையும் உண்டு.
நான்கு நாட்களுக்கு முன்னால் பதிப்பாளர் நண்பர்
சின்ஹாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி, 2 பிரதிகள் அனுப்புமாறு வேண்டினேன். இன்று கைக்கு வந்தது. (விலை
கொடுத்துத்தான்.)
பச்சிளம் குழந்தை என்ற பருவத்திலிருந்து வளரிளம் பருவம் வரை
குழந்தை பல்வேறு உணர்ச்சிகளுக்கும் உடலியல் மாற்றங்களுக்கும் ஆளாகிறது. சில
மாற்றங்கள் விரைவாக நிகழ்பவை என்பதால் பெற்றோர் பொறுமையிழக்கிறார்கள். குழந்தை
வளர்ச்சியில், வளர்ப்பி உங்களுக்கு அவ்வப்போது ஏற்படுகிற சந்தேகங்களைத் தீர்க்கவும், குழந்தை வளர்ப்பை மகிழ்ச்சி
தரக்கூடிய அனுபவமாக ஆக்கவும் உருவாகியுள்ளது இந்த நூல். ஆர்வம் இருப்பவர்கள்
வாங்கலாம். விலை 199 ரூபாய்.
Byword Books Pvt Ltd, Virat
Bhawan, Mukherjee Nagar Commercial Complex, Delhi – 110009.
E-mail:
bywordbooks@gmail.com Website: www.bywordbooks.in
பயனுள்ள தகவல்.
ReplyDeleteபரிசளிக்க உதவியாக இருக்கும். முகவரியைச் சேமித்துக் கொண்டேன்.