புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறும் உலகப் புத்தகத் திருவிழாவுடன் எனது உறவு 1992ஆம் ஆண்டில் தொடங்கியது. இதை ஏற்பாடு செய்யும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்துடன் புத்தக வடிவமைப்பில் எனது உறவு வலுப்பட்டதால் 2004 முதல் திருவிழாவுடனான உறவும் வலுப்பட்டது. இதன் பயனாக, ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின்போதும் தினமும் வெளியிடப்படும் நான்குபக்க நாளிதழ் வடிவமைக்கும் பொறுப்பு எனக்குக் கிடைக்கும்.
ஆரம்பத்தில் இருபொருள் தரும் வகையில் ஃபேர்டாக் (FairTalk) என்று இதற்குப் பெயர் இருந்தது. வாசிப்பு ரசனையற்ற ஒருவரின் தலைமை காரணமாக வேர்ல்ட் புக் ஃபேர் புல்லடின் (Bulletin) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவிலும் புல்லடின் வடிவமைப்புப் பணி எனக்குக் கிடைத்தது.
இந்தப் பணி இரண்டு வகைகளில் எனக்குப் பிடித்தமானது, திருப்தி தருவது. ஒன்று – திருவிழாவில் பகலில் நடைபெற்ற நிகழ்வுகளை மாலையில் தொகுத்து, இரவு இரண்டு மணிவாக்கில் வடிவமைப்பை முடித்து அச்சுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பும்போது மணி 3 ஆகி விடும். நான் அனுப்பிய குறுந்தகடு பிரச்சினை இல்லாமல் திறந்ததா, அச்சுக்கான ஏற்பாடு ஆகிவிட்டதா என்பதை உறுதிசெய்த பிறகுதான் உறங்கச் செல்வேன். அப்போதும்கூட உறக்கம் பிடிக்காது. நாள் முழுதின் நினைவுகள், சந்தித்த நண்பர்கள், கடைகள், பதிப்பாளர்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், வந்திருந்த பிரமுகர்கள், இன்னபிற நினைவுகள் அரைத் தூக்கத்தில் மங்கல் கனவுகளாக நிழலாடும். மறுநாள் காலை வெளிவந்த இதழைப் பார்த்ததும், பிள்ளை பெற்ற தாயைப்போல மனம் களிப்படையும். இப்படி பத்துநாட்கள் இரவுபகலாக உறக்கமின்றி அலைந்தாலும் களைப்பின்றி, பரபரப்பாக நாட்கள் நகரும். செய்த வேலைக்கு ஓரளவுக்குப் பணமும் கிடைக்கும்.
இரண்டாவது காரணம் – புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு இருக்கும் முக்கியப் பொழுதுபோக்கு. அரங்கம் அரங்கமாய் அலைந்து அலைந்து, ஒவ்வொரு புத்தகமாய் பிரித்துப் பிரித்து, பின்அட்டைகளைப் படித்துப் படித்து, வாங்கும் சக்திக்கு உட்பட்ட புத்தகங்களைத் தேர்வுசெய்து தினமும் வீடு திரும்பும்போது ஒரு கட்டுப் புத்தகங்களுடன் வருவது ஒரு தனி அனுபவம். மறுநாள் காலை என் மனைவி புத்தகங்களைப் பிரித்துப் பார்த்து முதல் பக்கத்தில் பெயரை எழுதி வைத்திருப்பார். முன்னர் இப்படிச் செய்ததில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய புத்தகங்களில் பாதி எப்படி, எப்போது, யாரால் இரவல் வாங்கிச் செல்லப்பட்டன என்பது புரியாமல் போனபோது, குறைந்தது பெயராவது இருக்கட்டுமே என்று முடிவுசெய்து விட்டார் அவர். நல்லதுதான், எந்தப் புத்தகம் எந்த ஆண்டு வாங்கியது என்பதும் இதில் தெளிவாகி விடும்.
1992இல் நான் பணியாற்றி வந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மட்டும்தான் தமிழ்ப் புத்தகக் கடையாகப் பங்கேற்கும். பிறகு சாந்தா பப்ளிஷர்ஸ் என்று ஒரு நிறுவனம் ஒரு ஸ்டாண்ட் புக் செய்யத் துவங்கியது. பிறகு காலச்சுவடு பங்கேற்கத் துவங்கியது. 2008இல் கிழக்கு வரத் துவங்கியது. 2010இல் பாரதி புத்தகாலயம் ஒரு ஸ்டாண்டை வாடகைக்கு எடுத்தது. மொத்தத்தில் பார்த்தால் தமிழ்க்கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போலத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. இந்த முறை சாந்தா பதிவு செய்தாலும் வரவில்லை. பாரதி, திருவிழா துவங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகுதான் தலைகாட்டியது – அதிலும் மிகக் குறைவான நூல்களுடன்.
கடந்த திருவிழாவில் காலச்சுவடு வெளியார் புத்தகங்களையும் நிறைய வைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு சொந்த நூல்களை அதிகம் வைத்திருந்தது. விற்காத நூல்களை திரும்ப எடுத்துச் செல்வது கடினமாக இருக்கிறது என்று காலச்சுவடு கண்ணன் கூறியது நியாயம்தான்.
1991 ஜனவரியில் தில்லிக்குப் புலம் பெயர்ந்தபோது ஒரு பதிப்பகத்தில் பணியாற்றி வந்ததால், 1992 திருவிழாவின்போது அதன் கடையை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. 1994இல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில் நான் அந்நிறுவனத்திலிருந்து விலகினேன்.
அதற்குப் பிறகு நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்துடன் உறவு வலுப்பட்டு, அதன் புத்தகங்களை வடிவமைக்கும் தொழிலில் முன்னிலை வகிக்கத் துவங்கினேன். 1996 முதல் 2002 வரையான பிந்தைய எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற வெறும் பார்வையாளனாக, வாசகனாக பிரகதி மைதானுக்குச் சென்று வந்தேன். அதிகம் புத்தகங்களை வாங்கியதில்லை. காரணம் – என்சிபிஎச் தவிர தமிழ்ப் பதிப்பாளர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது ஒன்று. ஆண்டுக்கொருமுறை தமிழகம் செல்லும்போது தில்லித் தமிழ்ச்சங்க நூலகத்துக்காக நானே ஒவ்வொரு பதிப்பகமாகத் தேடி நூல்களைத் தேர்வு செய்வேன். அப்படியே எனக்குப் பிடித்த நூல்களை, புதிதாக வந்தவற்றை சுடச்சுட வாங்கவும் முடிந்தது மற்றொரு காரணம். உலகப் புத்தகக் காட்சிக்கு வரும் நூல்களில் எல்லாமே புதியவையாக இருக்காது – எது அதிகம் விற்பனையாகுமோ அவைதான் அதிகமாக இடம்பெறும் நியாயம். காலச்சுவடும் கண்காட்சியில் பங்கேற்கத் துவங்கிய பிறகு, கண்காட்சியில் எனக்கும் பணிப்பங்கு கிடைத்த பிறகு நிலைமை மாறியது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கொருமுறை தமிழகம் செல்வது குறைந்து போனது. கடைசியாக தமிழகம் சென்றது நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த டிசம்பரில்தான். இந்த சூறாவளி சுற்றுப்பயணம் குறித்து தனியாக எழுதலாம். அது கிடக்கட்டும்.
எனவே இந்த முறையும் காலச்சுவடை மட்டுமே முக்கியமாக நம்ப வேண்டியிருந்தது. கிழக்கிலும் சில நல்ல நூல்கள் இருந்தன. ஆனால் கிழக்கில் இருந்தவை பெரும்பாலும் கனமான விஷயங்களை சாதாரண வாசகர்களுக்காகத் தருகிற புத்தகங்கள்தான். அவற்றில் பல நூல்கள் மொழியாக்கங்கள். மொழியாக்கம் செய்தவர் அல்லது ஆசிரியர் பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருந்தன. நூலின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்வதற்கு இந்த விவரங்கள் அவசியம். இருப்பினும் அங்கும் சில நூல்கள் வாங்க முடிந்தது. இந்தக் குறையை கிழக்கு பதிப்பக உரிமையாளரை சந்தித்தபோது தெரிவித்தேன். அவரும் இனிமேல் கவனிப்பதாகக் கூறினார்.
காலச்சுவடின் - கண்ணனின் நட்பில் ஒரு சௌகரியம் – தினமும் ஒரு விசிட் செய்து, விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்து என் பெயரில் தனியாக வைத்து விடலாம், பிறகு கடைசியாக எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வாங்கலாம்.
ஆங்கிலப் புத்தகங்களின் விலையுடன் ஒப்பிட்டால் தமிழ்ப் புத்தகங்களின் விலை குறைவுதான். ஆனாலும் தமிழில் நல்ல நூல்களின் விலை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகப் படுகிறது. இருந்தாலும் இந்த வாய்ப்பைத் தவற விட்டால் தமிழ் நூல்களை வாங்க முடியாது என்பதால் ஆர்வத்திற்கும் தீனிபோட்டு, செலவுக்கும் கணக்குப்போட்டு வாங்க வேண்டியிருக்கும். எது எப்படியிருந்தாலும் உலகப் புத்தகக் கண்காட்சியில் தமிழ் நூல்களை வாங்குவதற்கு அதிக செலவு செய்யும் தில்லித் தமிழன் நானாகவே இருப்பேன்.
எப்படியும் என் குழந்தைகள் இரண்டு முறை வருகை தருவார்கள், அவர்கள் இஷ்டத்துக்கு வாங்குவார்கள். கடந்த புத்தகத் திருவிழாவில் 6000 ரூபாய் செலவானது. இந்த முறை சுமார் 8000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டோம். கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் படிக்கத் தேவையான புத்தகங்கள் சேர்ந்து விட்டன. ஒரே பிரச்சினைதான் – அலமாரி நிரம்பி விட்டது. இப்போதைக்கு ஏதோ ஒரு இடத்தில் அடைத்து வைக்க வேண்டியுள்ளது.
வாங்கிய நூல்களைப் பற்றி பேசிப் பரிமாறிக்கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாக. வேணுகோபாலன் வருவார், எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்து தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரிரு நூல்களை மட்டும் இரவல் வாங்கிச் செல்வார். படிக்க நேரமில்லாத போது இரவல் வாங்கிச்சென்று வைத்திருப்பதில் என்ன பயன் என்று உண்மையைக்கூறுகிற ஒரே சத்தியசீலர். அதேபோல எடுத்துச் சென்றதை அடுத்தமுறை மறக்காமல் திருப்பித்தருபவரும் அவர்தான்.
தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற வாதம் தவறானது... எந்தக் காலத்திலும் புத்தகங்களின் தேவை குறையாது... அதனால்தான் பதிப்பகத்துறை முன்னர் இருந்ததைவிட செழிப்பாக இருக்கிறது... புதிய புதிய பதிப்பகங்கள் நுழைந்துள்ளன... புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன...
இந்த வாதங்கள் எல்லாம் நம்மை ஏமாற்றி்க்கொள்வதற்குத்தான். உண்மையிலேயே வாசிக்கும் வழக்கம் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. டிஜிடல் டிவைட் என்கிறார்களே, அதுபோல ஒரு இடைவெளி இங்கும் இருக்கிறது. மிகச்சிலர் மட்டும் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள், மிகப்பலர் மிகக்குறைவான நூல்களை வாங்குகிறார்கள். மிகச்சிலர் வர்க்கம்தான் பதிப்பகங்கள் பிழைத்திருக்க முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. மிகப்பலர் வர்க்கம் வாங்கும் மிகச்சில நூல்கள் அவர்களின் பொழுதுபோக்குப் பசிக்குத் தீனிபோடும் நூல்களேயன்றி சிந்தனைக்குத் தீனி போடும் நூல்கள்அல்ல. எனவே இந்த மிகப்பலர் வர்க்கம் காலம் செல்லச்செல்ல இன்னும் குறுகிக்கொண்டே போகும். மிகச்சிலர் வர்க்கம் மட்டும் விரிவடையுமா.... என் மதிப்பீட்டின்படி இதுவும் குறுகும். இந்த மிகச்சிலர் வர்க்கத்தின் அடுத்த தலைமுறையும் இதேபோல வாசிப்பு ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே இந்த மதிப்பீடு பொய்யாகும். ஆனால் அவ்வாறு நிகழும் என நம்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
செல்பேசி உண்மையிலேயே நல்லதொரு வசதிதான். ஆனால் தொலைக்காட்சி எந்த அளவுக்கு வாசிப்புக்குக் கேடு விளைவித்ததோ அதைவிட அதிகக்கேட்டை விளைவிக்கிறது செல்பேசி. முன்னர் அரைமணி நேரப் பேருந்துப் பயணத்துக்கும்கூட ஏதேனுமொரு நூலை அல்லது பத்திரிகையை கையில் எடுத்துச்சென்றதுபோல இப்போது யாரும் எடுத்துப்போவதில்லை. பாக்கெட்டில் செல்பேசி. காதுக்கு ஒலிவாங்கி இணைப்பு. பொழுதுக்கும் உளறிக்கொண்டிருக்கும் பண்பலைகள்... நினைவுச்சில்லுகளில் பதியப்பட்ட பாட்டுகள்.... கவைக்குதவாத குறுஞ்சேதிப் பரிமாறல்கள்... அழைப்புமணியோசைப் பரிமாறல்கள் இணைய வசதிகள்... பயணத்தின்போது பேசாத நேரங்களில் எல்லாரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. அப்போதும் புத்தகக் கண்காட்சிகள் இருக்கலாம். ஆனால் அங்கே அறிவுக்குத் தீனிபோடும் நூல்களைவிட பாடம்-படிப்பு-மேல்படிப்பு நூல்களை வாங்கத்தான் அதிகம்பேரைப் பார்க்க முடியும். நிச்சயம் இலக்கிய நூல்களைத் தேடுபவர்களை அல்ல.
அத்தகைய ஒரு காலத்தைப் பார்க்க நேர்வதற்கு முன் இங்கிருந்து விடைபெற்றுக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.