படித்ததில் பிடித்தது - 2
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில் – இரா. முருகேசன், விடியல் பதிப்பகம், கோவை வெளியீடு.
உலகமயமாக்கல் என்பது சந்தையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது, சக்திமிக்கவர்களின் நலன்களுக்காகவே ஆனது, எனவே இதன் விளைவுகள் பாதகமாகவே இருக்க முடியும். உதாரணமாக, பொருளாதாரச் சுரண்டல், வேலையின்மை, அரசு வழங்குகிற பொதுமக்கள் சேவைகள் குறைதலும் சீர்கெடலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைவளங்களுக்குப் பேரழிவு, ஏழைகள்-செல்வந்தர்களிடையே அதிகரிக்கும் வேறாபாடு, ஏழைநாடுகளை தாழ்மையுணர்வு கொள்ளச்செய்யும் முறையற்ற போட்டி... அமெரிக்கப் பொருளாதார முறையில் நவீன-தாராளவாதம் நியோ-லிபரலிசம் என்று அறியப்படும் இக்கொள்கை எந்தெந்த நாடுகளை எல்லாம் எட்டியதோ அங்கெல்லாம் இவையும் இன்னும் பல சீர்கேடுகளும்தான் எதார்த்த நிலைமை. இந்தப் பொருளாதார முறை லாபத்தையும் சந்தையின் விதிகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கணக்கில் கொள்கிறது, தனிமனிதர்களுக்கே உரிய கண்ணியத்தையும் மதிப்பையும் புறம்தள்ளுகிறது.
- போப் ஜான் பால்-2
பொருளாதார அடியாள்... இந்தச் சொற்றொடரை நான் கேள்விப்பட்டதேயில்லை. எதைப்படித்தாலும் உடனே மொழியாக்கம் செய்து பார்த்துப் பழகிப்போன எனக்கு இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தாலும் புரியவில்லை. நிகரான ஆங்கிலச்சொல் கிடைக்கவில்லை. நூல்விவரப் பக்கத்தில் இதற்குப் பதில் தெரிந்தது – Confessions of an Economic Hitman.
எகனாமிக் ஹிட்மேன் என்ற சொற்றொடரும் முற்றிலும் புதியது. அதுவே புத்தகத்தை மேலும் படிக்கத் தூண்டியது. படிக்கப் படிக்க கண்முன் விரிந்தது புது உலகம். இத்தனைகாலம் நான் புரிந்து வைத்திருப்பதாக எண்ணியிருந்த உலக அரசியல் வெறும் கைம்மண் என்று புரிந்தது.
உலகமயம், தாராளவாதம், சந்தைப்பொருளாதாரம், திறந்த சந்தை... இவையெல்லாம் நம் வாழ்வில் கலந்து விட்ட சொற்களாகி விட்டன. உலகமயம் என்ற பாதையிலிருந்து திரும்பிச்செல்ல இயலாத அளவுக்கு நாம் வெகுதூரம் பயணித்தாகி விட்டோம். அல்லது விரும்பியோ விருப்பமில்லாமலோ இழுத்துச்செல்லப்பட்டு விட்டோம். இந்த உலகமயமும் சந்தைப்பொருளாதாரமும் சராசரி இந்தியனுக்கு – அல்லது எந்தவொரு நாட்டின் சராசரிக் குடிமகனுக்கு – என்ன நன்மையைத் தரப்போகின்றன என்ற விவாதங்கள் அதிகம் இடம்பெறாமலே நம் அரசியல்வாதிகள் நம்மை இந்தப்பாதையில் இழுத்துச்சென்று விட்டார்கள். லத்தீன் அமெரிக்காவின் எத்தனையோ நாடுகள் இந்தப்பாதையில் சென்று பேரழிவைச் சந்தித்தன என்ற வரலாறு கண்முன்னே தெரிந்த பிறகும் நம் கண்களைக்கட்டி – அல்லது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே நாம் பயணித்துவிட்டோம்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகமயமாக்கலுக்கு முன்பு ஏழைகளின் எண்ணிக்கை 13.5 கோடி. 1999இல் இது 20.4 கோடி. தாராளச் சந்தையும், கட்டமைப்புச் சீர்திருத்தங்களும், அரசின் பங்கைக்குறைக்கும் தனியார்மயமாக்கலும் இங்கே சிறுபான்மை மக்களுக்கே பயன்தந்தன. 1980-89 காலகட்டத்தில் நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயில் இருந்த லத்தீன் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4 கோடி.
காரணம் நமக்குத் தெரியாதது அல்ல. போட்டியை மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தால் உள்நாட்டுத்தொழில்கள் நசிய, பன்னாட்டு நிறுவனங்கள் அசுரத்தனமாக வளரும். படிப்படியாக உள்நாட்டுத்தொழில் நிறுவனங்கள் மடியும், அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூலிக்கு மாரடிக்கும் வேலையைச் செய்யும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாக அள்ளிச் செல்லும். பகாசுரத் தொழிற்சாலைகளில் தானியங்கு முறை வேலைவாய்ப்பைக் குறைக்கும். வேலையிழந்தவர்கள் வருவாய் குறையும், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதற்கு எளிய உதாரணம் நம் நாட்டின் குளிர்பான நிறுவனங்கள். இருபது ஆண்டுகளில் கோலாவும் பெப்சியும் உள்நாட்டு குளர்பான நிறுனங்கள் அனைத்தையும் அழித்தன. சில நிறுவனங்கள் கோலாவுக்கும் பெப்சிக்கும் புட்டியில் நிரப்பும் – பாட்டிலிங் - கூலி வேலையைச் செய்கின்றன. இப்படி உள்நாட்டு நிறுவனங்களை அழித்தொழிக்க பகாசுர நிறுவனங்கள் கையாண்ட வழிகள் பலவிதம். இதில் ஒன்று, சிறு நிறுவனங்களின் பாட்டில்களை கடைகளிலிருந்து எடுத்துச்சென்று வேலியிட்ட பகுதிகளில் சும்மா கொட்டி வைத்துவிடுவது. கடைக்காரர்களுக்கு இதற்காக சிறு தொகை கொடுக்கப்படும். சிறு நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் புதிய பாட்டில்களை வாங்கிக்கொண்டிருக்க முடியாது. சுற்றுக்குவிட பாட்டில்கள் இல்லாததால் சப்ளை செய்ய முடியாது. கடையில் நாம் கேட்டாலும் உள்நாட்டு பானம் கிடைக்காது. பதிலாக பன்னாட்டு நிறுவன பானங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, தங்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கும். கூடவே குளிர்பதனப் பெட்டிகளும் இலவசமாக அல்லது சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும் என்பதால் கடைக்காரர்களுக்கும் வசதி. போதாதற்கு நமது திரைப்பட நட்சத்திரங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி மக்களின் மூளையைச் சலவை செய்யும். இது ஒரு விஷக்கூட்டணி. காலப்போக்கில் உள்நாட்டு நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும். பார்லேவுக்கு சொந்தமான தம்ஸ்அப் போன்ற பெரிய நிறுவனங்கள் சிலகாலம் தாக்குப்பிடித்துப்பார்த்தன. அதுவும் முடியாமல் போகும்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலையாயின. இன்று இந்திய பானச் சந்தையில் 95 சதவிகிதம் இந்த கோகா கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களிடம்தான் இருக்கிறது.
இப்படி அசுரத்தனமாக உள்நாட்டுச் சிறுதொழில்களை அழித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வது உலகமயமாக்கலின் ஒரு சிறு பக்கம்தான். நமக்குத் தெரியாத மற்றொரு பக்கம் இருக்கிறது – அதைத்தான் இந்தப் புத்தகம் விவரிக்கிறது, துப்பறியும் நாவலின் விறுவிறுப்புடன் நம்மை அசரச் செய்கிறது.
அந்த மற்றொரு பக்கத்தை நடத்துபவர்கள் மேலை நாடுகளின் அரசுகள், அவர்களின் கைக்கூலி நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள். இவர்களின் சுரண்டல் திட்டங்களுக்கு விதை போடும் பணியைச் செய்பவர்கள்தான் பொருளாதார அடியாட்கள். அப்படிப்பட்ட பொருளாதார அடியாளாக இருந்த ஒருவர் எழுதியதுதான் இந்தப் புத்தகம். ஒருவகையில் இது ஒரு சுயசரிதை, இன்னொரு வகையில் பாவமன்னிப்புக் கோரும் முயற்சி. நூலாசிரியரே இதைக் குறிப்பிடுகிறார் – ஒரு இடத்தில் அல்ல, நூலின் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார்.
இவரது பணி முறையை சற்று விவரித்தால்தான் விஷயம் புரியும்.
ஏதேனுமொரு வளரும் நாடு அல்லது ஏழை நாட்டை எடுத்துக்கொள்வது. அந்நாடு புவியரசியல்ரீதியாக (ஜியோபொலிடிகல்) மேலைநாட்டுக்கு முக்கியத்துவம் உடையதாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு. அந்நாட்டில் ஏதேனுமொரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் வலுப்படும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை குறையும் என்பதுபோன்ற வெற்றுவாதங்களை உண்மையைப் போலக் காட்டுவதற்காக ஊகப் புள்ளிவிவரங்களைத் தயாரிப்பதுதான் இவர்களது பணி. இதற்கு அவர்களுக்குத் துணையாக பல நிபுணர்களும் இருப்பார்கள். அந்தப் பலரில் சிலர் திட்டத்தின் உள்நோக்கத்தை அறிந்தவர்களாகவும் இருக்கலாம், அறியாதவர்களாகவும் இருக்கலாம்.
அவர்கள் அந்நாட்டில் தங்கி, புள்ளிவிவரங்களை அலசி, எந்தத் திட்டம் பயன்தரும் என்று மதிப்பிட்டு, அது தொடர்பான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தயாரித்து வெளியிடுவார்கள். பலதுறை நிபுணர்களும் அதில் இருக்கும்போது, அத்திட்டத்திற்கு உண்மைமுகம் கிடைத்து விடுகிறது.
பிறகு மேலைநாடுகளின் பகாசுர நிதி நிறுவனங்கள் அரசியல்வாதிகளை அல்லது ஆட்சியாளர்களை வலைக்குள் போடும். திட்டம் அந்நாட்டில் திணிக்கப்படும். திட்டத்தை நிறைவேற்றுதற்கான கடனுதவி வழங்கப்படும். அந்த நிதி, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் வாயிலாக மீண்டும் அதே நாட்டுக்குத் திரும்பி விடும். கடன் அப்படியே இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காது என்பது மக்களுக்குப் புரியாது. அப்படியே புரிந்தாலும் அவர்கள் செய்யக்கூடியது ஏதும் இல்லை. காரணம், அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியாளர்கள் தமக்கு லாபம் கிடைக்கும் என்றால் பெண்டாட்டியைக்கூட விற்றுவிடக்கூடியவர்கள்.
ஆக, திட்டத்தின் பயன் அந்நாட்டின் மிகச்சிலருக்கு மட்டும் லாபத்தைத் தரும். ஆனால் நாடு கடனாளியாகவே இருக்கும். அதை சரிசெய்ய அந்நாட்டின் அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளைக் கைவிடும் அல்லது குறைக்கும். அதே சேவைகளை தனியார்துறைகள் வழங்குவதற்கு முன்வரும். முன்பு இலவசமாகக் கிடைத்துவந்த அதே சேவையை மக்கள் பணம்கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்.
இதற்கு ஏராளமான உதாரணங்களை இங்கேயே காட்டலாம். 90கள் வரையில் சாலைப்போக்குவரத்தும் அரசிடமே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நுழைந்து, எண்ணற்ற இடங்களில் கட்டணச் சாலைகள் உருவாகி விட்டன. குடிநீர் வழங்கல் எப்போதுமே அரசின் கடமைதான். ஆனால், நமது பெருநகரங்களில் அனைவரும் நம்பியிருப்பது அரசையல்ல, பிஸ்லெரி போன்ற தனியார் நிறுவனங்களை. விமானப் போக்குவரத்துத் துறை அரசிடமே இருந்தது. அரசு அதற்கு மானியம் வழங்கி வந்தது. இப்போது ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் நுழைந்து விட்டன. கட்டணங்கள் குறைந்திருக்கின்றன என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வரிமேல் வரி போட்டு விலையை உயர்த்தும் அரசு, விமான நிறுவனங்களின் நஷ்டம் என்ற அழுகுரல் கேட்டு உடனே விமானத்திற்குத் தேவையான டீசலுக்கு வரிச்சலுகைகள் அள்ளித் தருகிறது, பலவகையான பொருளாதார சலுகைகளும் வழங்குகிறது. இது அரசு வழங்குகிற மானியத்தில் சேராது. ஏதோ தனியார் துறைகள் லாபத்தில் இயங்குவது போலவும், அரசுத் துறைகள் சரியாக செயல்படுவதில்லை என்பது போலவும் அரசே காட்டுவதற்கு முயலும். அப்போதுதான் மேலும் தனியார்மயப்படுத்த முடியும்.
நவீன இந்தியாவின் கோயில்கள் என்று நேரு வர்ணித்த பிரம்மாண்ட அணைக்கட்டுகள் நாட்டுக்கு நன்மை தரும் என்று பெரும்பாலானவர்களைப் போல நானும் நம்பியவன்தான். ஆனால் சுற்றுச்சூழல் பற்றிய புரிதலும் அரசியல் தெளிவும் கிடைக்கக்கிடைக்க பழைய பார்வைகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்போது, மேதா பாட்கர் போன்றவர்கள் முன்வைக்கும் வாதங்களின் நியாயங்கள் புரியும்போது நாம் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம் என்பது புரிகிறது. முட்டாள்கள் மட்டுமல்ல, சுயநலவாதிகளாகவும் இருக்கிறோம். இன்று நம் நாட்டில் முன்வைக்கப்படும் திட்டங்கள் எல்லாமே பெருநகர-நகர்ப்புற மற்றும் மேல்தட்டு-நடுத்தட்டு வர்க்கத்தினரின் நலனுக்காக மட்டுமே என்பது நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டே போகும்போது, இந்நூலாசிரியர் போலவே எனக்குள்ளும் மனச்சாட்சியின் குத்தல் உறங்க விடாமல் செய்கிறது.
பகாசுர பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவும், அரசியல்வாதிகளின் விலைபோகலும், நகர்ப்புறம் சார்ந்த கட்டமைப்பு வசதிகளின் உருவாக்கங்களும், மேலும் அன்னிய முதலீடுகளும் என இது ஒரு விஷச்சுழலாகத் தொடரும்.
இதற்கான அஸ்திவாரம் போடும் பணியைச் செய்பவர்கள்தான் பொருளாதார அடியாட்கள். நூலாசிரியர் தான் ஒரு அடியாளாக இருந்தபோது எந்தெந்த நாட்டில் என்னென்ன திட்டங்களுக்கு பொய்யான புள்ளிவிவரங்களை தயாரித்துக் கொடுத்தாரோ அவற்றை எல்லாம் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
என் விருப்பம் எல்லாம், மெய்யான பொருளாதாரத் தன்னிறைவில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்நூலைப் படிக்கவேண்டும் என்பதுதான்.
No comments:
Post a Comment