Friday, 28 October 2011

இன்னுமொரு தீபாவளி



இருபதாண்டு கால தில்லி வாழ்வின் அவதானிப்பில் தலைநகரம் பெருமளவு மாறி விட்டது. தீபாவளியும். இந்த தீபாவளி சற்றே திருப்தியையும் வியப்பையும் அளித்த தீபாவளி. 1991இல் தில்லிக்கு வந்தபின் முதல் சில ஆண்டுகளில் சந்தித்த தீபாவளி எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. சென்னையில் சில ஆண்டுகள் வசித்த நகரவாசியாக இருந்தாலும் ஓலை வெடி, ஊசி வெடி, கேப், சுருள் கேப், லட்சுமி வெடி, ஆடம் பாம் ... இதற்கு மேல் மனதளவில் பழக்கப்பட மறுத்து வந்தவனுக்கு தில்லியின் தீபாவளி மற்றுமொரு பண்பாட்டு அதிர்ச்சி.
ஒவ்வொரு குடும்பமும் பல்லாயிரம் ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்க, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வெடிச்சத்தம் துவங்கி விடும். தில்லிக்காரர்களுக்கு எல்லாமே பெரிசு.... ஆக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் புரிந்தது. தீபாவளி இரைச்சலுடன் ஒட்ட முடியாமல் தவித்துப்போனேன். இன்று பெரியவளாகி வேலைக்குப் போகும் மூத்த மகள் அன்று ஒருவயதுக் குழந்தை. தீபாவளி வாரம் முழுவதும் வெடிச்சத்தம் கேட்டு இரவில் திடுக் திடுக்கென விழித்தெழுந்து அழுதது நினைவில் நிற்கிறது. சின்ன தீபாவளி - அது என்ன சின்ன தீபாவளி என்று இன்று வரை எனக்குத் தெரியாது - நாளும் இரவில் நீண்ட நேரம் பட்டாசுகள் வெடிக்கும். 

கரோல் பாகில் புகழ்பெற்ற அஜ்மல்கான் ரோட்டை ஒட்டி அப்போது எங்கள் வீடு. தீபாவளிக்காக அஜ்மல்கான் சாலை வியாபாரிகள் சங்கம் கிலோமீட்டர் நீள சரவெடிக்கு ஏற்பாடு செய்யும். கரோல்பாக் காவல் நிலையம் இருக்கிற தேஷ்குப்தா மார்க் முனையில் துவங்கி பூசா ரோடு வரை அஜ்மல்கான் ரோட்டில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு சரவெடி... பற்றவைத்தால் குறைந்தது அரைமணி-முக்கால் மணி நேரம் தொடர்ந்து வெடித்து முடியும். தீபாவளி என்றால் தீபம் பிளஸ் ஆவளி - அதாவது, தீப வரிசை என்று லேடி ஸ்ரீராம் கல்லூரிப் பேராசிரியை, தமிழ்ச் சங்கத்தின் அன்னாள் துணைத்தலைவர் திருமதி இந்திராணி மணியன் கூறியதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 
ஊரில் நாங்கள் வசித்த பகுதியில் ஒரே இஸ்லாமியக் குடும்பம் எங்களுடையது. பக்கத்து வீட்டார்கள் தரும் முறுக்குகளும் தீனிகளும் வீட்டில் நிறைந்திருக்கும். அவர்கள் வீட்டில் தீர்ந்துபோன பிறகும் எங்கள் வீட்டில் பல நாட்களுக்கு தீனி இருப்பில் இருக்கும். பக்கத்து வீட்டு யூனியன் ஆபீஸ் கேஷியர் மாமா தன் மகன்களுக்கு பட்டாசுகள் வாங்கும்போது எங்களுக்கும் சேர்த்து வாங்கி வருவார். அதுதவிர, பட்டாசுகளை வெடிக்க எங்களையும் சேர்த்துக்கொள்வார். அது வேறு தீபாவளி...
தில்லி தீபாவளியுடன் ஒட்ட முடியாமல் போனதற்கு இன்னும் சில காரணங்கள். எனக்குத் தெரிந்த தமிழக தீபாவளி நரகாசுரனுடன் தொடர்புடையது. தில்லி தீபாவளியோ ராமன் வனவாசம் முடிந்து திரும்பியதை, பாண்டவர்கள் காட்டிலிருந்து திரும்பியதைத் தொடர்புபடுத்தியது.... தீபாவளிக்கு லட்சுமி வர வேண்டும், அதற்காக சீட்டாடியாவது பணம் பண்ணலாம்... தீபாவளிக்கு முன் அனுஷ்டிக்கப்படுகிற தன் தேராஸ்... அன்றைய தினம் வீட்டுக்கு ஏதாவது தங்கமோ வெள்ளியோ வாங்க வேண்டும்... தீபாவளிக்கு அடுத்த நாள் தொழிலகங்களில் ஆயுத பூஜை... அடு்த்த நாள் பாய் தூஜ்...
இப்படி கேள்விப்பட்டேயிராத பண்டிகைகளுடன் என்னால் ஒட்ட முடியவில்லை.
1992இல் பத்து வயதுச் சிறுவன் ஒருவன், நான் போன வருடம் 50000 ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கினேன், இந்த வருடம் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்குவேன் என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் தீபாவளியை ஒட்டி வந்த செய்தியைப் படித்து அதிர்ந்து போனதும் இன்று நினைவு வருகிறது.
இந்த தீபாவளி இரைச்சலைத் தவிர்ப்பதற்காக நாங்களும் இன்னொரு குடும்பத்தினரும் 1995இல் தில்லியை விட்டு வெளிநடப்புச் செய்ததைப் பற்றி இன்னொரு பதிவு எழுதலாம்.
என்னிடம் சில ஆண்டுகள் கணினி ஆபரேட்டராக இருந்த சீனிவாசன் என்ற இளைஞனின் நினைவு வருகிறது. மார்பை நிமிர்த்திக்கொண்டு துடுக்காக நடந்து திரிவதே வழக்கமாகக் கொண்டிருந்த அவன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளி நாள் இரவு பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்தான். கையிலும் மேல்சட்டை-கால்சட்டைப் பைகளிலும் நிறைய மெழுகுவர்த்திகள். இதை வச்சுக்குங்க சார் என்றான். பாதி எரிந்தவை, கால்வாசி எரிந்தவை, முழுமையானவை என பல வண்ணங்களில் ஒரு நூறு இருக்கும். எதற்கப்பா இது என்றேன். ரோட்டுல வந்துட்டிருந்தேன். எல்லா கடை வாசல்லயும் சும்மா எரிஞ்சுட்டிருக்கு. ரோட்டுல ஆளுமில்ல, பேருமில்ல... எதுக்கு வீணாக்கணும்னு ஒவ்வொண்ணா அணைச்சு எடுத்துட்டு வந்துட்டேன் என்றான். தீபாவளி ஆடம்பரங்களின் மீதான அவன் வெறுப்பு இந்தச் செயலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
சில ஆண்டுகள் முன்னால் வந்தது உச்சநீதிமன்ற உத்தரவு - இரவு பத்து மணிக்கு மேல் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்ற சட்டம் ஓரளவு இரைச்சலையும் குறைத்தது, பட்டாசுகளையும் குறைத்தது. குழந்தையும் வளர்ந்து விட வெடிச்சத்த வெறுப்பும் சற்றுக் குறைந்தது.
அடுத்து வந்தது பள்ளிகளில் பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம். பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று பள்ளியில் உறுதிமொழி எடு்த்துக்கொண்ட சின்ன மகள் கொஞ்சம் மத்தாப்பும், பூவாளியும் என்று கெஞ்சியபோது உபதேசம் செய்ய மனம் வரவில்லை.
இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு பட்டாசுகளின் ஒலி குறையத் துவங்கியது தெளிவாகத் தெரிந்தது. தில்லியில் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்பது உண்மைதான். இருந்தாலும் பத்து மணி வரை என்ற சட்டம் பதினொன்று - பனிரெண்டு வரைதான் நீடித்தது என்பதே பெரிய வியப்புத்தான்.
இந்த ஆண்டு...
தீபாவளிக்கு முதல்நாள் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது என்றாலும் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் பட்டாசுகளின் ஒலி அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளி நாள் மாலைக்குப் பிறகுதான் வெடியொலிகள் கேட்கத் துவங்கின. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் பதினொன்றரை மணிக்கு சத்தம் நின்று விட்டிருக்கிறது. மழைக்குப் பிந்தைய இடியொலிகள் போல அவ்வப்போது தொலைவில் எங்கிருந்தோ சில வெடிகளின் ஒலி மந்தமாக ஒலிக்கிறது.
இந்த ஆண்டின் தீபாவளிக்காக வாங்கும் முன்னுரிமைகளில் பட்டாசுகள் பின்தள்ளப்பட்டு விட்டன என்று தோன்றுகிறது. விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை பெரிதும் பாதித்திருப்பதே இதன் காரணம் என்று தோன்றுகிறது. தீமையிலும் ஒரு நன்மை என்பது இதுதானோ....
இந்த ஆண்டும் தீபாவளிக்கு கடைகள் நிரம்பி வழிந்தன. எந்தக் கடை என்ன விற்பனை செய்யும் என்ற லஜ்ஜையின்றி எல்லாம் இருந்தன. ரேடியோ ரிப்பேர் கடை வண்ணப் படங்களை விற்றுக் கொண்டிருந்தது. சிகரெட்-பீடி-பான் விற்கும் பெட்டிக்கடை மெழுகுவர்த்திகள் வைத்திருந்தது. துணிக்கடை முன்னால் வீட்டு அலங்காரப் பொருட்கள். பழக்கடைக்காரன் மஞ்சள் பல்ப் விளக்கொளியில் மினுமினுக்கும் பித்தளைப் பொருட்களை அடுக்கி வைத்திருந்தான். சைக்கிளிலும் கேரியரிலும் செவந்திப்பூ மாலைகளை சுமந்து கொண்டிருந்த திடீர்க் கடைகள். கடையே இல்லாமல் மடக்குக் கட்டிலைப் பிரித்துப்போட்டு அனுமதி இல்லாத பட்டாசுக்கடைகள்.
இந்த ஆண்டும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கடை கடையாக அலைந்தார்கள். சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாயின. பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் மோட்டார் பைக்காரர்களை மடக்கி காசு பார்த்தார்கள். தன் தேராஸ் நாளில் 1800 கார்கள் வாங்கப்பட்டதாக செய்திகள் கூறின. பெண்கள் மின்னும் ஜரிகைப் புடவைகள் கட்டிக்கொண்டு முழங்காலுக்குத் தூக்கிப் பிடித்துக்கொணடு குதிகால்உயர செருப்புகளுடன் தத்தக்கா-பித்தக்கா என்று நடந்தார்கள். குழந்தைகளின் பெயரால் அப்பாக்கள் வெடிகளை வெடித்தார்கள். டிராய் உபயத்தால் குறுஞ்சேதி வாழ்த்துகள் குறைந்து போயின.
ஆனால் இந்தத் தீபாவளியில் எனக்குப் புதிய கவலை முளைத்து விட்டது. இந்தியா-சீனா உறவு எல்லைப்புறத்தில் அவ்வப்போது சிக்கல்களைச் சந்தித்தாலும் மலிவான சீன மின்சாதனங்கள் கடந்த சில ஆண்டுகளாக திடமான இடம் பிடித்து வருகின்றன. சீனத் தயாரிப்பு ஏதேனும் ஒன்று இல்லாத வீடே இன்று தில்லியில் இருக்க முடியாது. இப்போது சீனத்துச் சர விளக்குகள் உள்ளூர் விளக்குகளின் இடத்தைப் பிடித்து விட்டன. மண்ணால் ஆன அகல் விளக்குகளின் இடத்தில் மெழுகுவர்த்திகள் வந்தபோது இவையும் நமது நாட்டின் உற்பத்திகள்தானே... இதிலும் சிறுதொழில் முனைவோரும் எளியோரும்தானே பயன் பெறுகிறார்கள் என்கிற மனச்சமாதானம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு...
ஐம்பது ரூபாய்க்கு தொடர்ந்து எரிகிற, விட்டு விட்டு எரிகிற, வரிசை மாறி எரிகிற மூன்று புரொக்ராம்கள் கொண்ட சர விளக்குகள். அகல் விளக்கு போலவே காட்சி தருகிற மின் விளக்குகள். இவை போதாதென்று மெழுகுவர்த்தி போன்ற அதே வடிவத்தில் சர விளக்குகள்.
அடுத்த சில ஆண்டுகளில் இவை இன்னும் பரவலாகும். சாலையோரத்தில் குயவர் குடும்பங்கள் காணாமல் போகும்... மெழுகுவர்த்திகள் விற்பனை குறையும். தில்லியில் மின்தேவை இன்னும் அதிகரிக்கும். தீபாவளி நாளிலும் மின்வெட்டு ஏற்படும். மறுநாள் செய்தித்தாள்களில் மாநில அரசை பத்திரிகைகள் சாடும். அப்புறம் இதுவே வழக்கமாகி, சடங்காகிப் போகும்.
அதற்குள் தில்லியை விட்டுப் போய்விட வேண்டும்.
(காமிரா கெட்டுப் போய் விட்டதால், இங்கே உள்ள படங்கள் எல்லாம் இணைய உபயம்)

Sunday, 2 October 2011

காந்தியும் என் வலைப்பூவும்

இந்த வலைப்பூவை வடிவமைத்தது மூன்றாண்டுகளுக்கு முன்பு. தொடர்ந்து எழுத முடியாதவன் எதற்காக எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற தயக்கம் இத்தனை காலமும் யாருக்கும் தெரிவிக்காமல் மூடிவைத்திருந்ததற்கு முக்கியக் காரணம். சந்திரமோகனுக்கு மட்டும்தான் என் வலைப்பூ முகவரி தெரியும். அப்படியிருந்தும் யாரோ ஒருவர் இதைத் தொடர்ந்திருக்கிறார் என்பது எனக்கே வியப்பளிக்கிற விஷயம். நண்பர்கள் சிலர் வலைப்பூவில் எழுதும்படி எனக்கு பலமுறை ஆலோசனை அளித்தார்கள். நான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கிறேன் என்று தெரிந்தவர்கள் முகவரி கேட்டார்கள்.

கணினி பற்றி எதுவுமே தெரியாமல், 1995-96இல் 386 கணினி வாங்கி முதல் முதலாகத் தொட்டுப்பார்த்து நாள் முதல் தொடங்கி, நாளுக்கு 8 - 10 - 12 என்று அதிகரித்துக்கொண்டே போய் இன்று நாளில் சராசரியாக 14 மணி நேரம் கணினியின் முன் கழிகிறது. ஆனாலும் வலைப்பூவில் எழுதுகிற அளவுக்கு நேரம் ஒதுக்க முடியாத வாழ்க்கைப் பணிச்சூழல். எழுதினால் தொடர்ந்து எழுத வேண்டும், வருகிற பின்னூட்டங்களுக்குப் பதிலளிக்க வேண்டும், நான் ஏதேனும் எழுதப்போக, யாரேனும் சாடினால் அவர்களுக்குப் பதிலடியும் கொடுக்க வேண்டும், இதெல்லாம் நமக்கு ஆகிற காரியமா...

அத்துடன், நான் நல்ல வாசகன்தான். படைப்பாளன் அல்ல என்று எனக்கே தெரிந்த உண்மையும் என்னைத் தடுத்தது. தன் குழந்தையின் சிறு சாதனைக்கும்கூட அன்போடு அணைத்து உச்சிமோந்து முத்தம் கொடுக்கும் தாய்-தந்தையைப் போல, நல்ல எழுத்தைப் படித்ததும் அந்தப் புத்தகத்துக்கு நெகிழ்ச்சியோடு முத்தம் கொடுக்கும் வாசகன்தான் நான்.

இவற்றுக்கிடையேதான் இன்று அக்டோபர் 1 மாலை திடீரென்று தோன்றியது - அக்டோபர் 2ஆம் தேதி என் வலைப்பூவைப் பகிரங்கப்படுத்தலாம் என்று.  இதற்கு முந்தைய பதிவுகள் பலதரப்பட்டவை - பகத்சிங்கின் நூல், விளையாட்டு உலகம், தில்லியின் உலகப் புத்தகக் கண்காட்சி, நூல் அறிமுகங்கள். இவையே பெரும்பாலும் என் முகத்தைக் காட்டிவிடும்.

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதேனும் முக்கியக் காரணம் உண்டா... இருக்கு, ஆனா இல்லை. ஏதேனுமொருநாள் இதைச் செய்ய வேண்டும், அது காந்தி பிறந்த நாளாக இருக்கட்டும் என்பதுதான் காரணம். அத்துடன், காந்தி எனக்கு எப்போதும் ஒரு புதிராக, ஒரு ஆதர்சமாக, கேள்விகள் எழுப்புபவராக, இருப்பவர்.

சுமார் நாற்பது-நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் எனக்குக் கிடைத்த பரிசு - சத்திய சோதனை. பள்ளிப் பருவத்திலேயே தீவிர வாசகனாக - கவனிக்கவும், தீவிர வாசகன்தானே தவிர தீவிர எழுத்துகளின் வாசகன் இல்லை - இருந்தாலும் சத்தியசோதனை என் மூளைக்கு எட்டவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துப் பயணங்களின்போது படிப்பதாகப் பாவனை காட்டுவதற்கு அந்த நூல் சில காலம் பயன்பட்டது. அதற்கும் சில ஆண்டுகள் கழித்துக் காணாமல் போனது.

வாழ்க்கையின் ஓட்டத்தினூடே பலஆண்டுகள் பலதையும் படித்து, குழம்பி, தெளிந்து, படித்து, தெளிந்து, குழம்பி... 1992இல் எது இந்து தர்மம் (What is Hinduism) என்ற நூலை பிழைதிருத்தம் செய்யப் படிக்கும்போது காந்தி கொஞ்சம் பிடிபட ஆரம்பித்தார். 1996இல் துவங்கி இன்றுவரை முடிக்கப்படாமல் என்னிடமே இழுத்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் சிந்தனைகள் (Mind of Mahatma) என்னும் நூலை திரும்பத் திரும்பப் படித்து, பிழைதிருத்தி, செப்பனிட்டு வந்த காலத்தில் காந்தியை இன்னும் கொஞ்சம் புரிய முடிந்தது. இடைப்பட்ட காலங்களில் தொழில்முறையில் காந்தியைப்பற்றி இன்னும் பல நூல்கள் படிக்கக் கிடைத்தன. காந்தியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் இதுவும் ஒன்று.

கிட்டத்தட்ட இதே காலத்தில், பென்னேஸ்வரன் யதார்த்தாவை முனைப்பாக நடத்திய இறுதி ஆண்டுகளில் முறைப்பெண் நாடகத்தில் எனக்கும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பஞ்சாயத்துக்காரர் பாலுத்தேவராக கதர் ஜிப்பா அணிந்தேன். அதற்குப் பிறகு கதர் ஜிப்பாக்களே என் மேலாடைகளாக மாறின.  சட்டை-பான்ட்-கோட்டு என்று அணிந்து வந்தவன் கதர் மேலாடை அணியத் துவங்கியதற்குக் காரணம் காந்தி.கடும் குளிர் காலத்தில்கூட ஷூ-சாக்ஸ் அணியாமல் இருக்க இன்று பழகிப்போனதற்குக் காரணம் காந்தி.

இதுவும் ஒருவகையில் வேடம்தான் என்பதும் எனக்குத் தெரியும். கதர்தான் அணிய வேண்டுமென்றால் சட்டையே அணியலாம் இல்லையா... என் உடல்வாகுக்கு சட்டை - அதிலும் கதர் சட்டை - அணிந்தால், ஏற்கெனவே என்னை வேகமா காத்தடிச்சா பறந்து போயிடுவாரு என்று கிண்டல் செய்து மகிழும் தில்லிவாழ் எனதருமைத் தமிழ்ப்பெருமக்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்து விடும். அவர்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பை மறுக்கும் ஆயுதம்தான் கதர் ஜிப்பா. இப்போது ஜிப்பா என் அடையாளமாகி விட்டது. (அத்துடன், ஜிப்பா அறிவுஜீவிகளின் அடையாளம் அல்லவா !) நான் அணிவது கதர் ஜிப்பா என்பது பலருக்கும் தெரியாது என்பதுதான் என் வருத்தம். சிலர் முஸ்லிம் ஜிப்பா என்று நினைக்கிறார்கள்.


காந்திக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கே தெரிய வந்தது. மெலிந்த தேதம் என்பது என்னை அறிந்த எவருக்கும் சட்டென ஞாபகம் வந்து விடும். அது மட்டும் ஒற்றுமைகள் அல்ல. 1994 அல்லது 1996 உலகப் புத்தகக் கண்காட்சியின்போது அதில் காந்திதான் மையக் கருத்தாக இருந்தார். சிறுவன் காந்தி, இளைஞர் காந்தி, நமக்கு அடையாளமாகிப்போன பொக்கைவாய் காந்தி என பல புகைப்படங்கள் ஆளுயரப் படங்களாக ஒரு அரங்கில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இந்தப்படமும் ஒன்று. முழு உருவப் படம் ஒன்றும் இதே போல இருந்தது. காந்தி மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த படம் அது.  நான் அதன் முன்னே நின்றிருந்தேன். திடீரென்று ஒரு நண்பர் என்னை அப்படியே நிற்கச் சொன்னார்.  அவருடைய காமிராக் கண்களுக்கு சில ஒற்றுமைகள் புலப்பட்டிருக்கின்றன. மேடான நெற்றி, கோணல் மூக்கு, யானைக்காது, நீளக்கைகள்... (ஜிப்பாவைக் கழற்றினால் எலும்புகள் துருத்திய மார்புக்கூடும் தெரிந்திருக்கும் !) அவ்வளவுதான்... அன்று புத்தகக்கண்காட்சியில் என் நண்பர்கள் மத்தியில் இதுதான் பேச்சாக இருந்தது.

என்னடா இது... பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் மொழியாக்கத்தை முதல் பதிவாக வெளியிட்டவன் காந்தியைப் பற்றி எழுதுகிறானே என்று உங்களில் சிலர் குழம்பலாம். குழப்பங்கள் ஏற்பட்டால்தானே தெளிவு பிறக்கும் என்றெல்லாம் குழப்ப மாட்டேன். பகத்சிங்கை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காந்தியில் புரிய வேண்டியது இன்னும் நிறையவே இருக்கிறது. சொல்லப்போனால் காந்தியை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்பதே என் கேள்வி.

எப்போதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. உற்சாகமாக இருப்பது போல நடியுங்கள், அப்புறம் அதுவே பழக்கமாகி விடும் என்று எங்கோ எதிலோ படித்ததுதான் என் பதிலாக இருக்கும். அதே போல, காந்தி திடீர் உந்துதலில் ஒரு வேடம் அணிந்து கொண்டார். அதுவே அவருடைய அடையாளமாக ஆகிப்போனது. அந்த அடையாளத்துக்கென அவர் வகுத்துக்கொண்ட கொள்கைகளின்படி வாழ்வது அவர் ஏற்றுக்கொண்ட வழியாயிற்று. நானும் ஒரு வேடம் அணிந்தேன். அந்த வேடம் நான் பலகாலமாகப் போற்றி வந்த சில கொள்கைகளை இன்னும் வலுவாகப் போற்ற வேண்டியவனாக ஆக்கி விட்டது. இப்போது எனக்கு வேட உணர்வு அறவே இல்லை. நான் எப்படித் தோன்றுகிறேனோ அப்படியே இருக்கிறேன். ஒரே ஒரு குறை எனக்குள் இருக்கிறது - அந்தக் குறையையும் நீக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்கூட என்றாலும் இன்னும் எத்தனை காலம் என்னைப் பீடித்திருக்கும் அந்தக் குறை என்பது தெரியாது. சிகரெட்... சிகரெட் பற்றி ஒரு தனிப்பதிவு எழுதவும் உத்தேசம் உண்டு. வில்ஸ் பவரை வெற்றிகொள்ளும் வில் பவர் எனக்கு இல்லை. மனிதர்களை அவரவர் குறைகளோடுதான் ஏற்க வேண்டும் - இதில் என்னோடு நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கதருக்கும் எனக்கும், என் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவுகள் உண்டு. இவற்றைப்பற்றி பிறிதொருநாள் பதிவுகளில் எழுதுவேன் என்று நம்புகிறேன். இது சுயபுராணம் அல்ல, மூன்றாண்டுகளுக்கு முன் பதிந்து, மறைக்கப்பட்டு இப்போது வெளிவருவதால் அவசியப்படுகிற முன்னுரை - என்னுரை.