தில்லியில் கடும் கோடையில் நாளுக்கு ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ மின்வெட்டு ஏற்பட்டாலே பத்திரிகைகள் கிழி கிழி என்று கிழித்து விடும். அடுத்த நாள் முதல்வர் எப்படியோ மின்சாரத்தை எங்கிருந்தாவது கடன்வாங்கி சமாளிப்பார். ஒருவாரம் நிலைமை சீரடையும். மீண்டும் ஓரிரு மணி நேர மின்வெட்டு.... மீண்டும் பத்திரிகைகளில் இருட்டடிப்பு பற்றிய செய்திகள். மீண்டும் சுதாரித்தல். இதுதான் தலைநகரம். அதுவும் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலோருக்கு இன்வெர்டர் இருப்பதால் மின்வெட்டு பெரியதொரு பிரச்சினையே இல்லை. எப்போதாவது மாதத்தில் ஒருமுறை முழுநாள் மின்தடை ஏற்பட்டால்தான் இன்வெர்டரும் காலியாகும். குளிர்காலத்தில் இந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் தமிழகம்... பிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு மின்வெட்டுகளையும் சந்தித்துக் கொண்டு முந்தைய ஆட்சியை சகித்துக் கொண்டு எப்படி இருந்தார்கள் தமிழர்கள் என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இப்போதும் நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றம் ஏற்பட சாத்தியமும் இல்லை.
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நேரத்தில் என சுழற்சி முறையில் மின்வெட்டு. காலையில் இரண்டு மணி நேரம், பிற்பகல் இரண்டு மணி நேரம், மாலை அல்லது இரவில் இரண்டு மணி நேரம் - ஆக நாளுக்கு ஆறு மணி நேரம் நிச்சயமாக மின்சாரம் கிடைக்காது. ஒரே ஒரு ஆறுதல் - எப்போது மின்சாரம் இருக்காது என்பது முன்பே தெரிந்திருப்பது. இது நகரங்களில்.
கிராமங்களில் இந்தக் கவலை ஏதும் இல்லை. பல இடங்களில் நாளுக்கு 5 அல்லது 6 மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும் என்றான் என் நண்பன் ஒருவன்.
காலை 6-8 அல்லது 7-9 அல்லது மாலை 7-9 மின்தடை இருக்கின்ற ஊர்களில் வீடுகளில் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. யார் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும், எந்தப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்பவர்களாக இருந்தாலும் காலை நேரம் முக்கியமானது, பரபரப்பானது, இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கோ மிகமிக முக்கியமானது. அதேபோல மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும்
இன்று தமிழகப் பெண்கள் தமிழ்ப் பாரம்பரியப் பெண்களாக மாறி விட்டார்கள் என்று சொல்லலாமா... பின்தூங்கி முன் எழுகிறார்களோ....
இந்தப் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று தோன்றுகிறது. அதுவும் வேலைக்குப் போகிற, மணமான பெண்களுக்கு இன்னும் சிரமம். வேலைக்கும் போகிற, குழந்தைகளும் இருக்கிற பெண்களுக்கு மிக மிக சிரமம்.
ஆனால் பெண்கள் இதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று கேட்டால்... ஊஹூம்... உணர்வதெங்கே, இப்படியொரு சிந்தனைகூட அவர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தினரின் வேலைப் பளு, ஆட்சியாளர்களின் திறனின்மையால் மேலும் அதிகரித்திருக்கிறது. ஆனால் யாரும் இதன் பரிமாணத்தைப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
அதனினும் பெரிய அபாயமாக இப்போது தெரிவது - கூடங்குளம் வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்கிற நடுத்தரவர்க்க மனப்பான்மை. நான் போன ஊர்களில் எல்லாம் யாரேனும் ஒருவர் இப்படிக் கூறுவதைக் கேட்டு அதிர்ந்து வருகிறேன். ஓரிருவருடன் விவாதித்துப் பார்த்தேன். விவாதங்களோ உண்மைகளோ அவர்களுடைய மனப்பதிவுகளை மாற்ற முடியாது என்பது புரிந்து போனபின் விவாதிப்பதை விட்டு விட்டேன்.
கூடங்குள எதிர்ப்பாளர்களைவிட கூடங்குள ஆதரவாளர்கள் உண்மையிலேயே அபாரமாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதுவும் கோவை-திருப்பூர்-ஈரோடு போன்ற தொழில்துறை மாவட்டங்களில் இந்தப் பிரச்சாரம் தீவிரமாகவே பயன் தந்திருக்கிறது. அப்துல் கலாம் இவர்களுடைய வாதங்களுக்கு மிக அருமையான கருவியாகி விட்டார். அப்துல் கலாம் விஞ்ஞானி அல்ல என்று யாரும் சொன்னால் உதை வாங்காமல் தப்பிப்பது பெரிய விஷயம்தான்.
திருப்பூரில் கூடங்குள ஆதரவு உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே வைத்திருந்த முக்கிய விளம்பரப் பலகையில் அப்துல் கலாம் சிரித்துக்கொண்டே சொல்கிறார் - கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது.
அப்துல் கலாம் என்கிற நேர்மையான மனிதர் மீது மக்களுக்கு இருக்கிற மோகமும், அதன் காரணமாக அவர் கூறுவதை நம்புவதும் ஒருபக்கம் இருக்கட்டும். கூடங்குளம் வந்தால் தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற பொதுக்கருத்து எப்படி உருவானது என்பது புரியவில்லை. அதுவும் எந்த விவாதமும் இன்றி இக்கருத்து மக்கள் மனங்களில் நிலைபட்டு விட்டதாகத் தோன்றுகிறது. கூடங்குளம் மின்நிலையத்தில் கிடைக்கும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 930 மெவா தருவதாக இருந்ததை வியாபாரி மன்மோகன்சிங் கொஞ்சம் கொசுறு சேர்த்து 1000-ஆகத் தருவதாக அறிவித்திருக்கிறார்.
2009 கணக்கின்படி, தமிழகத்தின் நிறுவப்பட்ட மின்உற்பத்தித் திறன் 10200 மெ.வா. - இது மத்திய அரசிடமிருந்து பெறுவதையும் சேர்த்து. காற்றாலை போன்ற புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்வளங்கள் வாயிலாகக் கிடைப்பது 4000 மெ.வா. இதே கணக்கின்படி சராசரியாக 12 சதவிகிதப் பற்றாக்குறை உள்ளது. கூடங்குளம் இயங்கினாலும் முதல் யூனிட்டில் கிடைக்கப்போவது 1000 மெ.வா. ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது யூனிட்டிலிருந்து இன்னொரு 1000 மெ.வா. ஆக, இரண்டு யூனிட்டுகளும் இயங்கத் துவங்கினாலும், தமிழகத்துக்குக் கிடைக்கப்போவது 1000 மெவா மட்டுமே. அதையும் தமிழக அரசு என்ன கிராமப் புறங்களுக்கா வழங்கப்போகிறது... நகரங்கள்தானே அனைத்து அரசுகளுக்கும் செல்லப்பிள்ளைகள்... நகரங்களுக்குக் கிடைத்ததுபோக மிச்ச சொச்சம்தானே இதர பகுதிகளுக்குக் கிடைக்கும்.
இவை பற்றியெல்லாம் பெரிய விவாதம் எதுவும் இல்லாமலே கூடங்குளம் வந்தால் மின்பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டது. பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதி மக்களின் வேதனைகளோ குரல்களோ இவர்களை எட்டவும் இல்லை, எட்டினாலும் இவர்களை அது பாதிக்கவும் செய்யாது. இதுதான் எதார்த்த உண்மை.
சரி, ஒரு வேளை கூடங்குளம் என்பது கோவைக்கு அருகே இருக்கிற வாலாங்குளம் அல்லது பழனி அருகே இருக்கிற மடத்துக்குளம் ஆக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். ஊஹூம். ஒன்றும் ஆகியிருக்காது. கூடங்குளம் பகுதியில் போராடுகிற மக்கள் திரள் அளவில் பாதி என்ன, பத்து சதவிகிதம்பேர் கூட இங்கே போராட முன்வந்திருக்க மாட்டார்கள்.
அமராவதி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிற ஏராளமான காகித ஆலைக் கழிவுகளால் ஆற்று நீரும் சுற்றுப்பகுதிகளும் பலப்பல பத்தாண்டுகளாக மாசுபட்டு வந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். மதுக்கரை சிமென்ட் ஆலையிலிருந்து புகையுடன் கரியும் வெளியேற, வீடுகள் எல்லாம் காசில்லாமலே சாம்பல் வண்ணம் பூசிக்கொண்டபோதும் அதற்கெதிராக பெரும் போராட்டம் எதுவும் நிகழ்த்தாதவர்கள், திருப்பூரிலும் ஈரோட்டிலும் சாயப்பட்டறைகள் நொய்யலையும் சுற்றுப்பகுதிகளையும் முற்ற முழுக்க விஷமாக்கியபின்பும், சாயப்பட்டறைகள் மூடப்பட்டு வேலைகள் குறைந்து போனதற்காக வருந்துகிறார்களே அன்றி சுற்றுச்சூழல் மாசுக்காக வருந்தாதவர்கள் இந்தத் தொழில்துறை நகர மக்கள். இந்தப் பகுதியில் அணுமின் நிலையம் வந்திருந்தால் இவர்கள் நிச்சயம் அதற்கெதிராகக் குரல் எழுப்பியிருக்க மாட்டார்கள்.
இரும்பையும் இரும்புச் சாதனங்களையும் அதிகம் அதிகம் கையாண்டு இந்தத் தொழில்துறை நகர மக்களின் இதயங்களும் இரும்பாகி விட்டதோ...
இன்னுமொரு ஆச்சரியமும் எனக்கு உண்டு - இத்தனை மின்பிரச்சினைகளுக்கும் இடையே, இந்தப் பிரச்சினையால் முக்கியமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் மின்சாரம் கிடைத்த வேளைகளில் தொலைக்காட்சி மெகா தொடர்களில் எப்படி முழுகிக் கிடக்கிறார்கள்....
யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.